இப்போது இருக்கின்ற நோய்க்கெல்லாம் மருந்து, பெரியாரியமும் – மார்க்சியமும்தான்; இரண்டு மருந்தையும் கலந்து கொடுக்கவேண்டும்!
திராவிட இயக்கமும், கம்யூனிச இயக்கமும் கொள்கையளவில் ஒன்றிணைந்தவைதான்!
அணுகுமுறையில் கொஞ்சம் மாறுதல் இருக்கலாம்!
சென்னை, மார்ச் 15 இப்போது இருக்கின்ற நோய்க்கெல்லாம் மருந்து, பெரியாரியமும் – மார்க்சியமும்தான்! இரண்டு மருந்தையும் கலந்து கொடுக்கவேண்டும். இரண்டு இயக்கங்களுக்கும் வித்தியாசமான ஓர் அணுகுமுறை கிடையாது. திராவிட இயக்கமும் சரி, கம்யூனிச இயக்கமும் கொள்கை யளவில் ஒன்றிணைந்தவைதான். அணுகுமுறையில் கொஞ்சம் மாறுதல் இருக்கலாம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நூற்றாண்டு ‘ஜனசக்தி’ மலரை வெளியிட்டார் தமிழர் தலைவர் ஆசிரியர்!
11.3.2026 அன்று சென்னையில் உள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பாலன் இல்லத்தில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நூற்றாண்டு ‘ஜனசக்தி’ மலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. அம்மலரினைத் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வெளியிட, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெற்றுக் கொண்டார். பிறகு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்துரையாற்றினார்.
அவரது வாழ்த்துரை வருமாறு:
மலர் அல்ல – ஒரு வரலாற்று
ஆவணக் காப்பகம்!
எழுச்சியோடும், நெகிழ்ச்சியோடும் நடை பெறக்கூடிய இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவையொட்டி, ‘ஜனசக்தி’ சிறப்பு மலர் என்ற ஓர் அற்புதமான மலர் – மலர் என்று சொல்வ தைவிட ஒரு வரலாற்று ஆவணக் காப்பகம். அந்த ஆவணக் காப்பகத்தை அப்படியே சுருக்கி எடுத்துச் சொன்னால்தான், நம்முடைய இயக்கங்கள் தெளிவாக இருக்க வாய்ப்பாக இருக்கும்.
அப்படிப்பட்ட அருமையான இந்த நிகழ்ச்சிக்குத் தலைமையேற்று உரையாற்றியுள்ள மாநிலச் செயலாளர் தோழர் மு.வீரபாண்டியன் அவர்களே, வரவேற்புரை யாற்றிய மாநில துணைச் செயலாளர் தோழர் எம்.ரவி அவர்களே, மலர் அறிமுக உரையை ஆற்றிய, மலர் தயாரிப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் அன்பிற்குரிய அருமைத் தோழர் டி.எம்.மூர்த்தி அவர்களே,
முற்போக்குச் சக்திகளுக்கு ஒரு பெரிய அரணாகவும், ஊக்கச் சக்தியாகவும் இருக்கக்கூடியவர் அமைச்சர் மா.சு.
எப்போதுமே நம்முடைய இயக்கங்களுக்கு மா.சு. அவர்கள் பெருந்துணையாக இருப்பார்கள். மேயராக இருந்தாலும், அமைச்சராக இருந்தா லும், எந்த நிலையிலும், அவருடைய அந்தப் பணி முற்போக்குச் சக்திகளுக்கு ஒரு பெரிய அரணாகவும், ஊக்கச் சக்தியாகவும் இருக்கக்கூடி யவரும், மலரைப் பெற்றுக் கொண்டவருமான மாண்பமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருமைத் தோழர் மா.சுப்பிர மணியன் அவர்களே,
தொழிற்சங்கத்தின்
மூத்த தலைவர் இரா.குசேலர்
தொழிற்சங்கத்தின் மூத்த தலைவர், அவரைப் பேசவிட்டால், வரலாற்று ஆவணங்களைப் புரட்டிக் கொண்டே இருப்பார். இதுபோன்ற அரங்கம் கிடைத்தால், சுதந்திரமாகப் பேசிக் கொண்டே இருப்பார். நேரக் கட்டுப்பாடு காரணமாகத்தான், அவருடைய உரையைச் சுருக்கமாக முடித்தார். அப்படிப்பட்ட தொழிற்சங்கத் தலைவர் இரா.குசேலர் அவர்களே,
நன்றியுரை கூறவிருக்கக்கூடிய தோழர் பெரியசாமி அவர்களே, இங்கு மத்திய கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினரான தோழர் இரா.முத்தரசன் அவர்களே, மாநிலக் கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினரும், மேனாள் சட்டப் பேரவை உறுப்பினருமான தோழர் பழனிச்சாமி அவர்களே, மேனாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பத்மாவதி அவர்களே, ஆறுமுகம் அவர்களே, தோழர் டி.ராமசாமி அவர்களே, தோழர் சிவபுண்ணியம் அவர்களே, செல்வராஜ் அவர்களே, போராட்டக் களத்தில் என்றைக்கும் நிற்பதற்குத் தயாராக இருக்கக்கூடிய டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் இணையர்களே, லெனின் அவர்களே, என்.சி.பி.எச்.சின் தலைவரும், சிறந்த எழுத்தாளரும், சிந்தனையாளருமான ஸ்டாலின் குணசேகரன் அவர்களே, மற்றும் ஏராளமாகத் திரண்டிருக்கக்கூடிய அருமைத் தோழர்களே!
நன்றி – பாராட்டு – மகிழ்ச்சி!
மலர் வெளியிடுகின்ற வாய்ப்பினை எனக்குக் கொடுத்தமைக்காக உளப்பூர்வமான என்னுடைய நன்றியையும், பாராட்டையும், மகிழ்ச்சியையும் தெரி வித்துக் கொள்கிறேன்.
உறவோடும், உரிமையோடும், மகிழ்வோடும் இம்மலரை வெளியிடுகிறேன்!
தோழமைக் கட்சியிலிருந்தோ அல்லது கூட்டணிக் கட்சியிலிருந்தோ ஒருவரை அழைத்து வந்து, அவர் இந்த மலரை வெளியிடுகிறார் என்று சொல்லக்கூடிய அளவில் இல்லாமல், உறவுக்காரன், கொள்கை உறவுக்காரன் ஒருவனை அழைத்து வந்து, இந்த வரலாற்றை, உறவோடும், உரிமையோடும், மகிழ்வோடும் இந்தப் பணியைச் செய்யக்கூடிய ஒரு வாய்ப்பை இதன்மூலம் கொடுத்திருக்கிறீர்கள்.
பிறக்கும்போதே இரண்டு இயக்கங்களும், இரட்டைக் குழந்தைகள்தான்!
அறிவாசான் தந்தை பெரியார் இயக்கமும், பொதுவு டைமை இயக்கமும் பிறக்கும்பொழுதே உறவோடு பிறந்தன.
1925 ஆம் ஆண்டில்தான் சுயமரியாதை இயக்கத்தைத் தந்தை பெரியார் உருவாக்கினார். அதே காலகட்டத்தில்தான், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும் பிறந்தது. ஆகவே, பிறக்கும்போதே இரண்டு இயக்கங்களும், இரட்டைக் குழந்தைகள்தான்.
வெளிச்சம் தோன்றிய நேரத்தில், அதன் அருகில் இருளும் தோன்றும். இருள் இருந்தால்தான், வெளிச்சத்திற்கு வேலை இருக்கும் என்பதுபோல, அதே காலகட்டத்தில்தான் ஆர்.எஸ்.எஸ். இயக்கமும் தோற்றுவிக்கப்பட்டது.
அப்படிப்பட்ட ஓர் இயக்கம் நூறாண்டு காலத்தைத் தாண்டியிருக்கிறது. எவ்வளவு தியாகங்கள்? கடந்த பாதைகள் எவ்வளவு? எத்தனை பேரை இழந்தி ருக்கின்றோம்? இவற்றையெல்லாம் நிச்சயமாக இளைய தலைமுறைக்கு வரலாற்றில் ஆவணப்படுத்தப்பட வேண்டும்.
நாம் எத்தனை மேடைகளில் பேசினாலும், இங்கே வெளியிடப்பட்ட மலரைப் போன்ற ஆவணங்கள் மிகவும் முக்கியம்.
தந்தை பெரியார் அவர்கள்பற்றி இங்கே ஏராளமாக அனைவரும் சொன்னார்கள்.
திராவிட இயக்கம், இன்றைக்கும் பொதுவுடைமை இயக்கத்தோடு நெருக்கத்தோடு இருப்பது வெறும் அரசியல் உறவல்ல.
மூச்சுக் காற்றைப் போல
மிக முக்கியமானதாகும்!
பொதுவுடைமை இயக்கமான இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி என்று சொன்னால், திராவிட இயக்கம் – திராவிடர் கழகமானாலும், திராவிட முன்னேற்றக் கழகமானாலும், நாங்கள் இணைந்து ஒரு குடும்பமாக இருக்கிறோம் என்றால், அந்த இணைப்பு ஏதோ கூட்டணிக்காக ஏற்பட்ட இணைப்பு அல்ல. பிறந்தபொழுதே இருக்கக்கூடிய மூச்சுக் காற்றைப் போல கொள்கை மிக முக்கியமானதாகும்.
அதனால்தான், மற்றவர்கள் நினைப்பதற்கு முன்னால், சுயமரியாதை இயக்கம் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டத்தில், ‘பச்சை அட்டைக் குடிஅரசு’தான் மிகப்பெரிய ஒரு கருத்துப் புரட்சியை உருவாக்கியது.
முதன்முதலில் ‘குடிஅரசு’ இதழில் வெளியிடப்பட்ட
‘கம்யூனிஸ்ட் மேனிபெஸ்டோ!’
அந்தக் காலகட்டத்தில், ரஷ்யாவில் இருக்கக்கூடிய ‘கம்யூனிஸ்ட் மேனிபெஸ்டோ’ என்று சொல்லக்கூடிய கொள்கை விளக்க அறிக்கையை, முதன்முதலில் தந்தை பெரியார் அவர்கள்தான், ‘குடிஅரசு’ இதழில் வெளியிட்டு, அதன் பிறகுதான் சோவியத் ரஷ்யாவிற்குச் சென்றார்கள்.
இரண்டு தண்டவாளங்களில் பயணம் தொடர்ந்துகொண்டே இருக்கும்!
எனவேதான், இந்த உறவு என்பது, நூற்றாண்டுகளில் பின்னிப் பின்னி வருவது. எனவேதான், நான் மலரில் எழுதும்போதுகூட, ‘‘இரண்டு தண்டவாளங்கள்’’ என்று எழுதினேன். பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கும். அந்தத் தண்டவாளம் ஒருபோதும் தடம்புரளாது. அதில் வேகமாகச் செல்லக்கூடிய அளவிற்குப் பாதுகாப்பான பயணமாக இருக்கும்.
அதுமட்டுமல்ல, இங்கே வருகிறபோது, எவ்வளவோ பேசவேண்டும் என்று நினைத்துக் கொண்டு வந்தேன். ஆனால், குறிப்பிட்ட நேரத்திற்குள் இந்நிகழ்ச்சி முடி வடையவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். ஆகவே, முக்கியமான சிலவற்றை மட்டும் சொல்கிறேன்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் பலரும், அய்யா அவர்களிடத்தில், ஒரு தந்தையிடத்தில் பிள்ளைகள் எப்படி பழகுவார்களோ, அந்த உறவோடு பழகுவார்கள். கொள்கை உறவு என்பது ஒன்று; பாசம் என்பது மிகப்பெரிய அளவில் பாசமாகும். இதை இன்றைய இளைய தலைமுறையினர் தெரிந்து கொள்ளவேண்டும். இந்த இயக்கத்தினுடைய தியாக வரலாறுகள் ஏராளமாகப் பதிவாகி உள்ளன. அந்தப் பதிவுகளையெல்லாம் நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
தந்தை பெரியார் அவர்களும், திராவிடர் கழகமும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும், சுயமரியாதை இயக்க மும் எப்படி இணைந்த ஒன்று என்று பார்த்தோ மேயானால், அந்தக் காலகட்டத்தில், ‘‘இன்றைய ஆட்சி ஏன் ஒழியவேண்டும்?’’ என்று தந்தை பெரியார் அவர்கள் ஒரு தலையங்கத்தை எழுதி, ‘சமதர்மத் திட்டம்’ என்று சொன்னவுடனேயேதான், அந்த சமதர்மத்திற்காக, வெள்ளைக்கார ஆட்சியில், சிறைத் தண்டனை அடைந்தார். அவர் மட்டுமல்ல, பெண்கள் சிறைத் தண்டனையை அடைந்தார்கள் – கண்ணம்மாள் அவர்களுடைய பெயரில் அந்தப் பத்திரிகை இருந்த தால், இந்தியாவிலேயே முதல் முறையாக ஒரு பெண் பத்திரிகையாளர் கைது செய்யப்பட்டு ஒரு கருத்துப் புரட்சிக்கு விலை கொடுத்தார்கள்.
ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவதற்காகத்தான்
நாம் பாடுபடுகின்றோம்!
அன்றும் – இன்றும் தியாக இயக்கங்கள் இந்த இயக்கங்கள்! கருப்பும் – சிவப்பும் சாதாரணமானதல்ல.
அதனால்தான், அய்யா அவர்கள் சொன்னதைப்போல, தேர்தல் காலகட்டமாக இருந்தாலும், தேர்தல் களத்தைத் தாண்டிய நிலையில் இருந்தாலும், கொள்கை உணர்வுக்காக, ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவதற்காகத்தான் நாம் பாடுபடுகின்றோம்.
மருந்து எப்போதும் தேவை,
நோயை ஒழிப்பதற்கு!
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்கள், அந்தக் காலத்திலேயே உலகப் பார்வையோடு, சுயமரியாதை இயக்கத்திலிருந்து வந்த கவிஞர் என்ற முறையில் அவர் சொல்லும்போது,
‘‘புதியதோர் உலகு செய்வோம் – கெட்ட
போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்’’ என்றார்.
இன்னமும் அந்தக் கவிதை தேவைப்படுகிறது. இன்றும் தேவைப்படுகிறது – என்றும் தேவைப்படும். அதுதான் இந்தக் கம்யூனிசத்தினுடைய கொள்கை. மருந்து எப்போதும் தேவை, நோயை ஒழிப்பதற்கு!
இப்போது இருக்கின்ற நோய்க்கெல்லாம் மருந்து, பெரியாரியமும் – மார்க்சியமும்தான்!
நல்வாய்ப்பாக, நம்முடைய மருத்துவ அமைச்சரை இவ்விழாவிற்கு அழைத்திருக்கிறீர்கள். இங்கே மேடையில் அவர் அமர்ந்திருக்கின்றார். ஏனென்றால், இப்போது இருக்கின்ற நோய்க்கெல்லாம் மருந்து, பெரியாரியமும் – மார்க்சியமும்தான்! இரண்டு மருந்தையும் கலந்து கொடுக்கவேண்டும்.
திராவிட இயக்கமும் சரி, கம்யூனிச இயக்கமும் சரி, கொள்கையளவில் ஒன்றிணைந்தவைதான். அணுகுமுறையில் கொஞ்சம் மாறுதல் இருக்க
லாம்.
மருத்துவ மொழியில் சொல்லவேண்டு மென்றால், மருத்துவத்தில் இரண்டு அணுகு முறைகள் உண்டு. இங்கே மருத்துவர்களும் இருக்கிறார்கள்.
ஒன்று, மருந்தால் குணப்படுத்துவது; இன்னொன்று அறுவைச் சிகிச்சையால் குணப்படுத்துவது!
Physician’s Cure என்ற ஒன்று. இன்னொன்று Surgeon Cure.
நோயை மருந்து மூலம் குணப்படுத்த முனைவது Physician’s Cure.
இன்னொன்று, அறுவைச் சிகிச்சை செய்து அந்த நோயைக் குணப்படுத்துவது. இந்த நோயைக் குணப்படுத்துவதற்கு மருந்தினால் முடியாது. ஆனால், அறுவைச் சிகிச்சைக்கு முன்பும், பின்பும் மருந்து தேவைதான்.
மார்க்சியமும் – பெரியாரியரும் – ஒன்று Physician’s Cure ஆக இருந்தால், இன்னொன்று Surgeon’s Cure ஆக இருக்கும். ஒன்று, Surgeon’s Cure ஆக இருந்தால், மற்றொன்று, அறுவைச் சிகிச்சை முடிந்தவுடன், மருந்து கொடுப்பது போன்று இருக்கும்.
ஆகவேதான், இந்த இரண்டு இயக்கங்களும் ஒத்துப் போகக்கூடிய இயக்கங்களாகும்.
கே.டி.கே.தங்கமணி
ஒவ்வொருவரும் பாசத்தோடு பழகுவார்கள், பிள்ளைகள் போன்று. கே.டி.கே.தங்கமணி அவர்கள் இறுதிக் காலகட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சி அலு வலகத்தில்தான் இருந்தார். அவர், சிறு பிள்ளையாக இருந்த காலகட்டத்தில் – அவருடைய தந்தையாருக்கும் – தந்தை பெரியார் அவர்களும், வியாபாரத் தொடர்பு இருந்த காலகட்டத்தில் கிடைத்த வாய்ப்பு.
பாலதண்டாயுதம்
அதேபோன்று, பாலதண்டாயுதம் அவர்கள் தீவிர மான உணர்வுள்ளவர். திருத்துறைப்பூண்டிக்கு பக்கத்தில் இருக்கக்கூடிய கச்சனத்தில், ஜாதி ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டைத் திறந்து வைப்பதற்கு, யாரை அழைக்கலாம்? என்று கேட்ட போது, ‘‘பாலதண்டாயுதத்தை அழைக்கலாம். நான் சொன்னேன் என்று, அவரை அழைத்து வாருங்கள்’’ என்றார் தந்தை பெரியார் அவர்கள்.
ஜாதி ஒழிப்பு மாநாட்டில்…
பாலதண்டாயுதமும் வந்து, ஜாதி ஒழிப்பு மாநாட்டில் உரையாற்றினார். ‘‘நீண்ட காலமாக ஜாதியினுடைய கொடுமை, அந்த வெறி எப்படி இருக்கிறது என்பது எனக்குத் தெரியாது. என்னைக் கைது செய்து, சிறைச்சாலையில் இருந்தபோது, ஒருமுறை பி.டி.ராஜன் அவர்கள், என்னைச் சந்திப்பதற்காக வந்தார். ஏன் அவர் நம்மைச் சந்திக்க வருகிறார்? நமக்கும், அவருக்கும் தொடர்பில்லையே என்று நான் நினைத்தேன். அப்படி யிருந்தாலும், என்னைச் சிறைச்சாலையில் வந்து பார்த்து ஒரு வார்த்தைச் சொன்னார், ‘‘என்னப்பா, நம்ம பிள்ளையாக இருந்துகொண்டு, இப்படி முரட்டுத்த னமாக இருக்கலாமா?’’ என்று. எனக்கு ஒன்றும் புரியவில்லை. பிறகு நீண்ட நேரம் யோசித்த பிறகுதான், ஓகோ, நமக்கென்று ஒரு ஜாதி இருக்கிறதோ, அந்த ஜாதியை ஞாபகப்படுத்தித்தான் சொல்கிறார்’’ என்று தன் அனுபவத்தை நினைவு கூர்ந்து அவர் சொன்னார்.
தோழர் ஜீவா
அதேபோன்று, தோழர் ஜீவா அவர்கள், எப்படி பெரியாரிடத்தில் ஒரு செல்லப்பிள்ளையாக இருந்தார் என்பதற்கு அடையாளம். எத்தனை முறை மாறுபட்டிருந்தாலும்கூட, கடைசிவரையில், ஜீவா அவர்கள் மறைந்த பிற்பாடுகூட, ஜீவா அவர்களின் மகள் திருமணம், பெரியாரே முன்னின்று, திருச்சி பெரியார் மாளிகையில், அறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சரானவுடன் நடத்திய சுயமரியாதைத் திருமணமாகும். அந்தத் திருமணத்திற்கு தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்களும் வந்தார். பெரியார் அவர்கள்தான் அனைவரையும் வரவேற்றார். மற்ற எல்லா ஏற்பாடுகளையும் செய்திருந்தார்.
கொள்கை உறவு என்பதற்கு
ஓர் அடையாளம்!
கொள்கை உறவு என்பதற்கு இந்த இரண்டு இயக்கங்க ளுக்கும் ஓர் அடையாளம் சொல்ல வேண்டுமானால், அந்தத் திருமணத்தில் உரையாற்றிய முதலமைச்சர் அண்ணா அவர்கள், ‘‘இந்தத் திருமணம் செல்லாது என்று சொல்லியிருக்கிறார்கள். சுயமரியாதைத் திரு மணம் சட்டப்படி செல்லும் என்று என்னுடைய ஆட்சியில் செய்து, அதைப் பெரியார் அவர்களிடத்தில் காணிக்கையாக விரைவில் வைப்பேன்’’ என்று சொன்னார்.
அந்தச் சட்டம் எங்கே உருவானது? எங்கே பிரகட னப்படுத்தப்பட்டது? என்றால், இடம் பெரியார் மாளிகை என்றாலும், ஏற்பாடு, ஜீவா அவர்களுடைய மகள் திருமணத்தில்தான் – பொதுவுடைமை நிலை யத்திலேதான்! இப்படி ஒன்றுக்கொன்று சொல்லிக் கொண்டே போகலாம்.
எத்தனையோ நினைவுகள் உண்டு. அவர்களோடு பழகிய அரிய வாய்ப்புகள் உண்டு.
தோழர் நாகை முருகேசன்!
தோழர் தா.பாண்டியன் அவர்கள் வரையில், எத்தனையோ பேரைச் சொல்லலாம். குறிப்பாகச் சொல்லவேண்டுமானால், தோழர் நாகை முரு கேசன் அவர்களைப் பழைய தோழர்களுக்குத் தெரியும்; இன்றைய இளைய தலைமுறையினர் தெரிந்து கொள்ளவேண்டும். முருகேசன் அவர்களுக்கு, அட்ரஸ் என்னவென்றால், C/o பெரியார் திடல்தான். அங்கே தான் இருப்பார். ஒரு பையைத் தோளில் மாட்டிக் கொண்டிருப்பார்.
எப்பொழுதெல்லாம் பிரச்சினைகள் வருகிறதோ, அதுகுறித்து அவரே அறிக்கை எழுதுவார். நான்கு பக்கத்தில் அச்சடித்துக் கொண்டு வருவார், அவருடைய செலவில்! எப்படி அவருக்குப் பணம் வருகிறது என்றால், அவருடைய தியாகிப் பென்ஷனை அதற்காகப் பயன்படுத்துவார்.
இப்படி ஓர் உறவு – நெருக்கமான உறவுள்ள இயக்கங்கள், இரண்டு இயக்கங்களும்!
கொள்கை உறவுக் குடும்பம்!
ஒரு குடும்பம் போன்று இங்கே நாமெல்லாம் சேர்ந்திருக்கின்றோம். இந்தக் குடும்பம் கொள்கைக் குடும்பம் – கொள்கை உறவுக் குடும்பம்.
இந்த நேரத்தில், ஒரே ஒரு சங்கடம் என்னவென்றால், நம்முடைய தோழர் நல்லகண்ணு போன்றவர்களை நாம் இழந்திருக்கின்றோம். இழக்கக் கூடாதவர்களையெல்லாம் நாம் இழந்திருக்கின்றோம். களத்திலே நின்று, நமக்காக வாதாடக் கூடியவர்கள், போராடக் கூடியவர்கள், வழிகாட்டக் கூடியவர்களையெல்லாம் நாம் இழந்தி ருந்தாலும்கூட, முன்பு அவர்கள் காலத்தில் இருந்த கொள்கை எதிரிகளைவிட, இன்றைக்கு மிக ஆபத்தமான கொள்கை எதிரிகள் இருக்கிறார்கள்.
வெறும் ஓட்டு அரசியல் அல்ல; கொள்கை அரசியலாகக் கொண்டு போகவேண்டும்!
எனவேதான், அவர்கள் போட்ட பாதைகளை, செப்பனிட்டுக் கொண்டோ அல்லது பாது காத்துக் கொண்டோ இருந்தால் மட்டும் போதாது. அதைவிட, அதிகமான படையைத் திரட்டி, பாசிசத்தை எதிர்க்கப் போர்க் களம் போன்று நினைத்துக் கொண்டு, அரசியலில் இறங்கவேண்டும். அந்த அரசியல்கூட, வெறும் ஓட்டு அரசியல் அல்ல; கொள்கை அரசியலாகக் கொண்டு போகவேண்டிய அவசியத்தில் இருக்கின்றோம்.
எனவேதான், இந்தக் காலகட்டத்தில், அருமைத் தோழர்களே, பெரியார் இல்லை, அண்ணா இல்லை, கலைஞர் இல்லை. இப்போது அடுத்த தலைமுறையாக – இங்கே உரை யாற்றும்போது சொன்னார்கள், முன்பு அடிகளார் இருந்தார்; அதற்குப் பதிலாக அடுத்த அடிகளார் வந்திருக்கிறார். இது ஒரு தொடர்ச்சி – இந்தக் குடும்பத்தினுடைய தொடர்ச்சி – இதை யாராலும் மாற்றிவிட முடியாது.
நாம் ஒன்றுபடவேண்டும்;
ஒன்றுபட்டு நிற்கவேண்டும்!
ஆகவேதான், நாம் ஒன்றுபடவேண்டும்; ஒன்றுபட்டு நிற்கவேண்டும். இப்போது தோன்றியிருக்கக்கூடிய மிகப் பெரிய அரசியல் அவலங்கள் எல்லாவற்றையும் எதிர்கொள்ளக்கூடிய பக்குவமும், துணிவும், கைம்மாறு கருதாது, பதவியை நோக்காது, புகழைப்பற்றி சிந்திக்காது உழைக்கவேண்டும். அது நம்மைப் போன்ற இந்த இரு தண்டவாளங்களுக்குத்தான் மிக முக்கியமானதாகும் – உரிமையானதாகும்.
எனவேதான், இந்தக் காலகட்டத்தில், இந்த இயக்கங்கள் பாதுகாக்கப்பட்டால் மட்டும் போதாது; பரப்பப்பட்டால் மட்டும் போதாது; இளைஞர்கள், இந்த இயக்கங்களை நோக்கி வரவேண்டும். இன்றைய இளைஞர்களுக்குப் பழைய தலைமுறையின் வரலாறு தெரியவேண்டும். பழைய தலைமுறையையும் காப்பாற்றவேண்டும்; அவர்கள் தந்த சொத்துகளாம், கொள்கைகளையும் காப்பாற்றவேண்டும்.
அதேநேரத்தில், புதிய புதிய பிரச்சினைகளை உருவாக்கிக் கொண்டு வருகின்ற எதிரிகள் – அதிலும், மறைமுகத் திட்டங்களை வைத்துக் கொண்டிருக்கும் எதிரிகளைச் சந்திக்க வேண்டும்.
அவர்கள் விட்ட பணியை நாம் தொடருவோம்; அந்தப் பணியை முடிப்போம்!
அவர்கள் விட்ட பணியை நாம் தொடருவோம். அந்தப் பணியை முடிப்போம் என்ற சூளுரைதான், இந்த நூற்றாண்டு விழாவிற்கு அடுத்த கட்டமாக இருக்கவேண்டும். அதற்கு இந்த மலர் ஒரு நல்ல கருவியாக, ஓர் ஆயுதமாக – வந்த பாதையை, ஒரு சிங்கம் திரும்பிப் பார்ப்பது என்று சொல்லக்கூடிய ‘அரிமா நோக்காக’ இந்த இயக்கங்கள் நூறாண்டு காலத்தில் எப்படி வந்திருக்கின்றன என்று பார்ப்பதற்கு பயன்படும்.
‘Putting Centuries into Capsule’ என்று அருமையான வரிகளைப் பயன்படுத்தினார் பேரறிஞர் அண்ணா அவர்கள், தந்தை பெரியாருடைய பணிக்கு, சுயமரியாதை இயக்கப் பணிக்கு. அதே சொல், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் பொருந்தும்.
போராட்டமும், பிரச்சாரமும்
நம்முடைய மூச்சுக் காற்று!
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாண்டு கால வாழ்க்கையில், மிகப்பெரிய அளவிற்கு, எல்லா தடங்களையும் பதித்திருக்கிறார்கள். எல்லா வாய்ப்புகளையும் அவர்கள் பற்றியிருக்கிறார்கள். போராட்டமும், பிரச்சாரமும் நம்முடைய மூச்சுக் காற்று.
எனவேதான், அவற்றை வலுப்படுத்துவோம். எதிரி களை நாம் சந்திப்போம்; உறவுகளைப் பலப்படுத்துவோம். எதிரிகளை அடையாளம் காண்போம்.
யார் நம்முடைய நண்பர்? யார் நம்முடைய எதிரிகள்? என்று பார்ப்போம் என்று கூறி, வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி கூறி, விடைபெறுகிறேன்.
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
300 ரூபாய் மதிப்புள்ள
‘‘ஜனசக்தி சிறப்பு மலர்’’ 250-க்கு!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பி னரும், மாநில துணைச் செயலாளருமான தோழர் நா. பெரியசாமி நன்றி கூறி நிகழ்ச்சியை முறைப்படி நிறைவு செய்தார். நிகழ்வில் வெளியிடப்பட்ட 300 ரூபாய் மதிப்புள்ள ‘‘ஜனசக்தி சிறப்பு மலர்’’ 250-க்கு, கிடைக்கும் என்று அறிவிப்பு செய்து, தோழர்கள் உரிய விலை கொடுத்து பெற்றுச் சென்றனர்.
நிகழ்வில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டு சிறப்பித்தனர். திராவிடர் கழகத் துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், உடுமலை வடிவேல் ஆகியோர் பங்கேற்றனர்.
மு.வீரபாண்டியன் தலைமையுரை
முன்னதாக, தலைமையேற்று உரையாற்றிய இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், ‘‘தந்தை பெரியாரும், கம்யூனிஸ்ட் இயக்கமும் கொண்டிருந்த தொடர்புகளைக் குறித்தும், ‘‘இந்த உலகம் ஒரு நாள் இடது பக்கம் திரும்பியே தீரும்’’ என்று எப்போதும் சொல்பவர் ஆசிரியர் என்றும், இம்மலரை வெளியிட அவரே பொருத்தமானவர் என்று கருதியே அழைத்ததாகவும்’’ தெரிவித்தார்.
