தேசத்தந்தை அண்ணல் காந்தி அடிகளும் ஸநாதனம் அவருக்குத் தந்த தேசிய அவமானமும்! (2)

9 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

நேற்றைய (14.3.2026) தொடர்ச்சி…

காந்தி – நாராயண குரு சந்திப்பு

மறுநாள் 11ஆம் தேதி காலையில், வைக்கம் சத்தியாக்கிரக ஆசிரமத்தில் தொண்டர்களைச் சந்தித்து, காந்தி பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அவரைச் சந்திக்க தேவசம் அதிகாரிகள் வந்தனர்.

அன்று மாலை 3 மணிவாக்கில் வைக்கத்திலிருந்து காந்தி, ராஜாஜி, வி.வி. எஸ். அய்யர் ஆகியோர் ஆலப்புழாவுக்குப் படகில் கிளம்பினார்கள். ஆலப்புழாவில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்த பொதுக் கூட்டத்தில் காந்தி பேசினார்.

அப்போது கனமழை பெய்யத் தொடங்கியதால், கூட்டம் பாதியிலேயே நின்று போனது. அதன்பிறகு, அன்று இரவு அங்கிருந்து கொல்லத்திற்குப் படகில் சென்றார்.

கொல்லம் படகுத்துறையில், மாவட்ட நீதிபதி நாராயண பாண்டலை, நகராட்சித் தலைவர் பத்மநாபப்பிள்ளை மற்றும் முக்கியப் பிரமுகர்கள் காந்தியை வரவேற்று. கொல்லத்தின் முக்கியத் தெருக்கள் வழியாக அழைத்துச் சென்றனர். மார்ச் 12ஆம் தேதி காலையிலேயே பொதுக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது பேசிய காந்தி, ‘நான் யோசித்த போதும், பண்டிதர்களிடம் கேட்டறிந்த போதும் தீண்டாமை, அணுகாமை போன்ற தற்கால அனுஷ்டானங்களுக்கு ஆதாரம் இல்லை என்று தெரிகிறது. அதனால், இந்துக்கள் இந்த உண்மையை உணர்ந்து, அதற்கேற்றாற்போல் நடந்துகொள்ள வேண்டும். இல்லாவிட்டால், இந்து மதத்திற்கு அழிவுதான். இந்தச் சாபக்கேட்டை ஒழித்துப் போட வேண்டும்’ என்று பேசினார்.

காலை 10 மணிக்கு, கொல்லத்திலிருந்து அரசு வாகனத்தில் காந்தியை வர்கலாவுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு காந்தியைத் திவான் பேஷ்காரும். டபிள்யு.எச். பிட்டுவும், திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் சார்பில் வரவேற்றனர். மகாராணி சேதுலட்சுமி பாயைச் சந்திப்பதற்கு, 12 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. காந்தி அரண்மனைக்குச் சென்றபோது, மகாராணியின் கணவர் பெரியகோவில் தம்புரான் வரவேற்று அழைத்துச் சென்றார். அங்கே எளிமையான அலங்காரம் செய்யப்பட்டிருந்த ஓர் அறையில் மூன்று நாற்காலிகளும், மூன்று ரத்னக் கம்பளங்களும் இடப்பட்டிருந்தன.

அங்கு ரீஜன்ட் மகாராணியை, காந்தி சந்தித்துப் பேசினார். 2 மணி நேரத்திற்கு மேலாக அந்த உரையாடல் நீண்டது. அவர்களுக்குள் நடந்த உரையாடல் எதுவும் அப்போது வெளியே வரவில்லை. அவர்கள் என்ன பேசினார்கள் என்பது எல்லோருக்கும் பெரிய கேள்வியாக இருந்தது.

அதன் பின்னர், 3 மணி அளவில் காந்தி, வர்கலாவிலுள்ள சிவகிரி மடத்திற்கு ராஜாஜி, பெரியார், வி.வி.எஸ். அய்யரோடு, நாராயண குருவைச் சந்திக்கச் சென்றூர். காந்தி சிவகிரி மடத்திற்கு வருகை தரும் செய்தி வெகுதூரம் பரவியது. காந்தி, நாராயண குருவைச் சந்திப்பதைக் காண ஏராளமான மக்கள் கூடியிருந்தனர். நாராயண குருவுக்கு அவரது பக்தர் எம்.கே. கோவிந்ததாஸ் நன்கொடையாக வழங்கிய ஒரு கட்டடம், காந்தியைச் சந்திக்கும் இடமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

காந்தி, ஆசிரமத்திற்குச் செல்லும் பாதையில் வெள்ளை மணல் போடப்பட்டது. கட்டடத்தின் உள்ளே ஒரு மெத்தை போடப்பட்டது. விருந்தினர் களுக்காகக் கதர்த் துணியால் அலங்கரிக்கப்பட்ட சிறப்பு இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அப்போது ஒரு சில ஈழவத் தலைவர்களும், சத்தியாக்கிரகத் தலைவர்களும் மட்டுமே, அங்கு அனுமதிக்கப்பட்டிருந்தனர். காந்தியை வரவேற்க நாராயண குரு முன் கூட்டியே அங்கு வந்திருந்தார்.

காந்தி, சங்கனாசேரி பரமேஸ்வரன் பிள்ளையின் காரில் அங்கு வந்து சேர்ந்தார். அவர்களுக்கிடையேயான வணக்கங்கள் மற்றும் வாழ்த்துகளுக்குப் பிறகு, நாராயண குருவின் சீடர்களில் ஒருவர் ‘அதிதிபூஜை’ செய்து அவர்கள் முன் சாஷ்டாங்கமாக வணங்கினார். பின்னர் காந்தியும், நாராயண குருவும் உரையாடினார்கள்.

‘குருவுக்கு ஆங்கிலம் பேசத் ‘தெரியுமா?’ என்று காந்தி விசாரித்தார். அவருக்குத் தெரியாது என்று கூறப்பட்டது.

கோவில் கருவறை முன் சென்று தொழுவதற்கு காந்தியை அனுமதிக்கவில்லை

‘சமஸ்கிருதம் தெரியுமா?’ என்று காந்தியிடம் குரு கேட்டார். பின்னர் அவர் சம்ஸ்கிருதம் தெரியாது என்று ஒப்புக் கொண்டார். அவர்கள் இருவருக்கும் வழக்கறிஞரும் சட்டசபை உறுப்பினருமான என். குமாரன் மொழிபெயர்ப்பாளராகச் செயல்பட்டார்.

காந்தி: ‘இந்து வேதங்களில் தீண்டாமையைப் பற்றி ஏதேனும் குறிப்பிடப்பட்டுள்ளதா என்று குருவுக்குத் தெரியுமா?”

நாராயண குரு :’இல்லை.’

காந்தி: ‘தீண்டாமையை ஒழிப்பதற்காக வைக்கத்தில் நடைபெற்று வரும் சத்தியாக்கிரக இயக்கம் குறித்து குருவுக்கு ஏதேனும் கருத்து வேறுபாடு உள்ளதா?”

நாராயண குரு : ‘இல்லை.’

காந்தி: ‘சத்தியாக்கிரக இயக்கத்தில் இன்னும் ஏதாவது சேர்க்க வேண்டும் அல்லது மாற்ற வேண்டும் என்று குரு கருதுகிறாரா?”

நாராயண குரு: ‘அது நன்றாக நடக்கிறது என்பதை நான் அறிந்தேன். எந்த மாற்றங்களும் அவசியமில்லை என்று நினைக்கிறேன்.’

காந்தி: ‘பின்தங்கிய வகுப்பினரின் பிரச்னைகளைப் போக்க, தீண்டாமையை ஒழிப்பதைத் தவிர, வேறு என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதைக் குறித்த உங்கள் கருத்தை அறிய விரும்புகிறேன்.

நாராயண குரு: ‘அவர்களுக்குக் கல்வி மற்றும் செல்வம் இருக்க வேண்டும். அவர்களும் மற்றவர்களைப் போல முன்னேற வாய்ப்புகள் இருக்க வேண்டும்.’

காந்தி: ‘வன்முறையற்ற சத்தியாக்கிரகம் பயனற்றது என்றும்,நமது உரிமைகளை நிலைநாட்ட பலத்தைப் பயன்படுத்த வேண்டும் என்றும் சிலர் கூறுகிறார்கள். உங்கள் கருத்து என்ன?”

நாராயண குரு: ‘பலத்தைப் பயன்படுத்துவது நல்லது என்று நரன் நினைக்கவில்லை.’

காந்தி: ‘சிலர் நாம் மத மாற்றத்தை நாட வேண்டும் என்றும், அதுதான் சுதந்திரத்தை அடைவதற்கான சரியான வழி என்றும் கூறுகிறார்கள். அதற்குக் குரு அனுமதி அளிக்கிறாரா?”

நாராயண குரு: ‘மதம் மாறுபவர்கள் சுதந்திரம் பெறுவது தெரிகிறது. இவற்றைப் பார்க்கும்போது, மத மாற்றம் நல்லது என்று மக்கள் நினைப்பதைக் குறை கூற முடியாது.’

காந்தி: ‘மற்ற மதங்களின் நிலை அப்படி இருக்கட்டும். ஆன்மீக விடுதலைக்கு இந்துமதம் போதுமானது என்று குரு கருதுகிறாரா?’

நாராயண குரு: ‘ஆன்மீக விடுதலைக்கு இந்துமதம் போதுமானது. ஆனால் மக்கள் சுதந்திரத்தை (விடுதலையை) அதிகமாக விரும்புகிறார்கள்.

காந்தி: அது, தீண்டாமையால் ஏற்படும் அடிமைத்தனத்தைப் பற்றியது இல்லையா?

நாராயண குரு: ‘இல்லை.’

காந்தி: ‘ஆன்மீக விடுதலைக்கு மதமாற்றம் அவசியம் என்று குரு கருதுகிறாரா?’

நாராயண குரு: ‘ஆன்மீக விடுதலைக்கு மத மாற்றம் அவசியமில்லை.

காந்தி: ‘பின்தங்கிய வகுப்பினரிடையேயும் தீண்டாமை இல்லையா? குருவின் கோவில்களில் அனைவருக்கும் நுழைய அனுமதி உள்ளதா?’

நாராயண குரு :’அனைவருக்கும் அனுமதி உண்டு. புலையர் மற்றும் பறையர் சமூகங்களைச் சேர்ந்த குழந்தைகள் சிவகிரியில் மற்றவர்களுடன் தங்கிப் படிக்கின்றனர். அவர்கள் மற்றவர்களுடன் பிரார்த்தனைகளில் பங்கேற்கின்றனர்’

காந்தி: ‘மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.’

காந்தியும், நாராயண குருவும் ஜாதி, மதம் குறித்த தங்கள் நிலைப்பாடுகளை விவாதித்தனர். நாராயண குருவின் அதீத ஆன்மீகமும், மனித விடுதலையும், காந்தியை வெகுவாக ஈர்த்தது. அந்த வகையில், உரையாடல் தொடர்ந்தது.

காந்தி தீண்டாமையை எதிர்த்தாலும், வர்ணாசிரம முறையை நம்பினார். ஒரே மரத்தின் இலைகளின் அளவுகளில் உள்ள வேறுபாட்டை உதாரணம் காட்டி, வெவ்வேறு வர்ணங்கள் (மக்களின் வகுப்புகள்) இயற்கையாகவே இருப்பதாகக் காந்தி கூறினார். நாராயண குரு, அதே உதாரணத்துடன் இலைகளின் அளவுகள் வேறுபட்டிருக்கலாம். ஆனால், அவை அனைத்தும் ஒரே மாதிரியான சுவை கொண்டவை என்று பதிலளித்தார்.

அன்று காந்தி, சிவகிரியில் ஓய்வெடுத்தார். அங்கு தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. சாரதா மடத்தில் மாலை நேரப் பிரார்த்தனையில் அவர் பங்கேற்றார். அங்கு, நாராயண குருவால் இயற்றப்பட்ட ‘தெய்வதஷகம்’ பிரார்த்தனைப் பாடலை அனைத்துச் ஜாதி மாணவர்களும் பாடுவதைக் கண்டார். அதன், அர்த்தத்தைக் கற்றுக்கொண்டார். பிரார்த்தனைகளுக்குப் பிறகு, காந்தி மாணவர்களிடம் பேசினார். அவர்கள், உபநிஷத வசனங்களைச் சரளமாக ஓதுவதைக் கண்டு அவர் வியந்தார்.

மறுநாள் காலை மார்ச் 13 அன்று, நாராயணகுரு காந்தியைச் சந்தித்தார். சிவகிரி மடத்தின் அழகையும் தூய்மையையும் காந்தி பாராட்டினார். அன்றும் காந்தியைக் காணப் பெரிய கூட்டம் கூடியிருந்தது. இருவரும் ஒரே மேடையில் அமர்ந்திருந்து மக்களிடம் உரையாற்றினர். அப்போது காந்தி, நூற்பு மற்றும் நெசவு கற்றுக்கொள்ளுமாறு மக்களுக்கு அறிவுறுத்தினார். வைக்கம் சத்தியாக்கிரகம் பற்றியும் பேசினார்.

‘ரீஜன்ட் மகாராணி, வைக்கத்திலுள்ள கோவில் வீதிகள் மற்ற சாலைகளைப்போல அனைத்து மக்களுக்கும் திறந்து விடப்பட வேண்டும் என்று கருதுகிறார். தனிப்பட்ட முறையில் விருப்பம் இருந்தபோதிலும், மகாராணி என்ற நிலையில், பொதுமக்களின் கருத்தையும் அவர் அறிய வேண்டியதிருக்கிறது’ என்று காந்தி கூறினார். உரையின் முடிவில், காந்தி அறிவுறுத்தியதைப் பின்பற்றுமாறு நாராயண குரு மக்களிடம் கேட்டுக் கொண்டார்.

பின்னர், வர்கலாவிலிருந்து திருவனந்தபுரத்துக்குக் காந்தி கிளம்பினார். அப்போது அவர், அரசு விருந்தினராகத் தங்க வேண்டும் என இளைய மகாராணி சார்பில் திவான் எழுதிய கடிதம் அவருக்குக்குக் கிடைத்தது. மேலும் அவர், இளைய மகாராணி சேதுபார்வதிபாயைச் சந்தித்துப் பேசினால், வைக்கம் வீதிகளைத் திறப்பதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாக, அப்போது தகவல்களும் வெளிவந்தன. பெரியாருடன் பேசிய பிறகு, காந்தி இளைய மகாராணியைச் சந்தித்தார்.

அப்போது இளைய மகாராணி, ‘பாதைகள் திறக்கத் தயாராக உள்ளன. ஆனால் நடமாடும் சுதந்திரம் கிடைத்தவுடன் கோவில் நுழைவுச் சத்தியாக்கிரகம் தொடங்குவேன் என்று ஈ.வெ. ராமசாமி நாயக்கர் கூறியுள்ளார். இதுபோன்ற சத்தியாக்கிரகங்களை நடத்தக்கூடாது என்று அறிவுறுத்த வேண்டும். கோவிலுக்குள் நுழையக் கோரிப் போராட்டம் நடத்த மாட்டோம் என உறுதி அளித்தால், நடமாடும் சுதந்திரத்தை இப்போதே பிறப்பிக்கலாம்’ என்று தெரிவித்தார்.

கட்டுரை

அப்போது பெரியாரும் இளைய மகாராணி சேது பார்வதி அரண்மனைக்கு வந்தபோது, ‘இளைய மகாராணியின் திட்டத்திற்கு நான் என்ன பதில் சொல்ல வேண்டும்’ என்று காந்தி அவரிடம் கேட்டார்.

அதற்குப் பெரியார், கோவிலுக்குள் நுழைவதே எங்கள் இலக்கு. நடமாடும் சுதந்திரம் வழங்கப்படுவதால், தீண்டாமை ஒழிந்துவிடாது. இந்தத் தீய பழக்கத்தை ஒழிக்கப் போராடி வருகிறோம். ஆனால், இப்போது போராட்டம் கோவில் நுழைவுக்காக அல்ல, அதற்கு மக்களைத் தயார்ப்படுத்திய பின்னரே நடத்தப்படும்’ என்று சொன்னார். அதனைத் தொடர்ந்து ‘கோவில் நுழைவு இப்போது இல்லை’ என காந்தி, இளைய மகாராணியிடம் தெரிவித்தார்.

அதன் பிறகு, திருவனந்தபுரத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் காந்தி, முன்பு பேசியது போலவே தீண்டாமை, அணுகாமை குறித்தும் மகாராணிகளிடம் பேசிய கருத்துகளைக் குறித்தும் விரிவாகப் பேசினார். அதன் முக்கிய அம்சமாக உயர்ஜாதி இந்துக்களிடம், பொது வாக்கெடுப்பை நடத்த வேண்டும்; அதில் கிடைக்கும் முடிவுக்குச் சத்தியாக்கிரகிகள் சார்பாக, தான் கட்டுப்படுவதாகவும் தெரிவித்தார். பின்னர் நெய்யாற்றின்கரை, களியக்கா விளை, குழித்துறை எனப் பல்வேறு இடங்களில் பேசிய காந்தி, கன்னியாகுமரிக்குச் சென்றார்.

கட்டுரை

மார்ச் 14 அன்று கன்னியாகுமரிக்கு வந்தடைந்த காந்தி, முக்கடல்கள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தின் படிக்கட்டுகளில் நின்று கடலை ரசித்தார். அப்போது, ஒரு பெரிய அலை எழும்பி வந்து காந்தியை முழுவதும் நனைத்தது. உடனே அவர் சிரித்துக் கொண்டு, ‘சமுத்திரத் தாய் என்னை நீராட்டி வரவேற்கிறாள் போலும்’ என்று சொன்னார்.

காந்தி, அதன்பிறகு கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்குத் தரிசனத்திற்குச் சென்றார். கோவில் நடை மாலை 5:30 மணிக்கே திறக்கப்படும். ஆனால், அவர் 4 மணிக்கே சென்று விட்டார். கோவில் கருவறை முன் சென்று தொழுவதற்கு காந்தியை அனுமதிக்கவில்லை. கடல் தாண்டிச் சென்று வந்தவர்கள். தீட்டானவர்கள் என்று அக்காலகட்டத்தில் திருவிதாங் கூர் கருதியது. தாழ்த்தப்பட்ட ஜாதியினருக்கும் அங்கு கோவிலில் நுழைய அனுமதி இல்லை என்றதும் அவருக்கு மிகுந்த மனவருத்தத்தைக் கொடுத்தது. பின்னர் காந்தி, கோவில் வெளிச்சுற்று முழுவதும் வலம் வந்தார்.

கட்டுரை

‘கோவில் நுழைவுப் போராட்டம்’ என்ற இப்புத்தகத்தின் ஆசிரியர் எழுத்தாளர் ராம்தங்கம் (எ) த.ராமு அவர்களுக்கு 2025ஆம் ஆண்டுக்கான பாரதிதாசன் இளம் படைப்பாளர்களுக்கான விருது தமிழ்நாடு அரசால் நேற்று (14.3.2026) அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு நமது வாழ்த்துகள்!
– கி.வீரமணி

‘சூரியன் மறையும் காட்சியைப் பார்த்து விட்டுப் போகலாம்’ என்று அவர் தங்கியிருந்த அரசு விருந்தினர் மாளிகையில் சொன்னார்கள். தொடர்ச்சியான பயணத் திட்டங்களால், அவரால் சூரிய அஸ்தமனத்தைக் காண முடியவில்லை. அதன்பின்னர், நாகர்கோவிலுக்குச் சென்றார்.

கட்டுரை

காந்தியின் வருகையை முன்னிட்டு நாகர்கோவில் நகரமே. திருவிழாக் கோலமாகக் காட்சி தந்தது. அதற்கான ஏற்பாடுகளை டாக்டர் எம்.இ. நாயுடு முன்னின்று நடத்தினார். அங்கு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற காந்திக்கு நாகர்கோவில் நகராட்சியினர், பொதுமக்கள், ஸ்காட் கிறிஸ்தவக் கலாசாலை மாணவர்கள் எனப் பலரும் வரவேற்பும், பண முடிப்பும் அளித்தனர். அதன்பிறகு பேசிய காந்தி, தீண்டாமையினால் ஏற்படும் தீமைகளைப் பற்றியும், இந்துமதத்தில் காணப்படும் தீமைகளைக் கண்டித்தும் உரையாற்றினார்.

கட்டுரை

‘கன்னியாகுமரிக்குச் சென்று வந்தேன். கோவிலைப் பார்த்தேன். அனைவரும் கோவிலில் நுழைய முடியாது என்று தெரிய வந்தபோது, என் இதயம் வருத்தம் அடைந்தது. மனிதர்களை வேறுபடுத்திப் பார்க்கும் கடவுளை நான் நம்ப மறுக்கிறேன். அந்தக் கறையை முழுவதுமாக நீக்கும்வரை அமைதியில் கரைந்து விடக்கூடாது என்று, உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். இந்து மதத்தின் பிரிக்க முடியாத பாகமாகத் தீண்டாமை இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டால், மதத்தை விட்டு விலகுவேன்’ என்று பேசினார்

கூட்டம் முடிந்ததும் அன்று இரவே காந்தி, திருவனந்தபுரத்துக்குப் போய்ச் சேர்ந்தார். அவரின், கன்னியாகுமரி வருகை தொடர்பாக ‘கன்னியாகுமரியின் தரிசனம்’ என்ற தலைப்பில் நவஜீவனில் ஒரு கட்டுரையும் எழுதினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *