சென்னை, மார்ச் 14- தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் ரூ.13,077 கோடியில் அமைக்கப்பட்டுள்ள அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார். இன்னும் 2 அல்லது 3 மாதங்களில் 2ஆவது அலகும் மின் உற்பத்தியை தொடங்கி, இரு அலகுகளும் முழு திறனில் செயல்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
அனல்மின் நிலையம்
தமிழ்நாடு மின் உற்பத்தி கழகம் சார்பில், தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் ரூ.13,077 கோடி செலவில் தலா 660 மெகாவாட் மின் உற்பத்தி திறனுடன் 2 அலகுகள் கொண்ட மிக உய்ய (Super Critical) அனல்மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கான கட்டுமானப் பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், கடந்த சில வாரங்களாக முதல் அலகில் சோதனை ஓட்டம் நடைபெற்று வந்தது. இந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக அமைந்து, மின் உற்பத்தி சீராக இருந்ததை தொடர்ந்து, முதல் அலகின் தொடக்க விழா நடைபெற்றது.
முதல் அலகில் மின் உற்பத்தி: சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக, உடன்குடி அனல்மின் நிலையத்தின் முதல் அலகை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து, மின் உற்பத்தியை தொடங்கி வைத்தார். தலைமைச் செயலர் நா.முருகானந்தம், மின்வாரிய நிறுவனங்களின் தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணன், எரிசக்தி துறை செயலர் மங்கத் ராம் சர்மா, இயக்குநர் ஜான் டால்டன் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
உடன்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு மின் உற்பத்திக் கழக மேலாண்மை இயக்குநர் எம்.கோவிந்த ராவ், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா ஆகியோர் கலந்துகொண்டு, அனல்மின் நிலையம் மற்றும் நிலக்கரி இறங்குதளத்தைப் பார்வையிட்டனர்.
உடன்குடி அனல்மின் நிலையம் மிக உய்ய அழுத்த கொதிகலன் மற்றும் அதிக செயல்திறன் சுழலியுடன் (Supercritical Boiler with High Efficiency Turbine) நேர்த்தியாக கட்டப்பட்டுள்ளது.
விரைவில் சோதனை ஓட்டம்: இந்த அனல்மின் நிலையத்தின் முதல் அலகில் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, சில வாரங்களில் 2ஆவது அலகில் சோதனை ஓட்டம் தொடங்கப்பட உள்ளது. அனைத்து சோதனைகளும் முடிந்து, இன்னும் 2 அல்லது 3 மாதங்களில் 2ஆவது அலகும் மின் உற்பத்தியை தொடங்கி, இரு அலகுகளும் முழு திறனில் செயல்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த வளாகத்தில் மேலும் 3 அலகுகள் நிறுவுவதற்கு விரைவில் விரிவாக்கப் பணிகள் தொடங்கப்பட உள்ளன. தற்போது உள்ள 2 அலகுகள் மற்றும் இனி வரவுள்ள 3 அலகுகளுக்கும் நிலக்கரி கொண்டுவர பிரத்யேக கப்பல் தளமும், மூடிய கன்வேயர் அமைப்பும் கட்டப்பட்டுள்ளன.
நடுக்கடலில் கப்பல் தளம்: ஒரே நேரத்தில் 2 அதிகொள்ளளவு கப்பல்களைக் கையாளும் விதத்தில், கரையில் இருந்து 9 கி.மீ தொலைவில் நடுக்கடலில் நிலக்கரி கப்பல் தளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தளத்தில் 2 அதிவேக நிலக்கரி கையாளும் இயந்திரங்கள் உள்ளன. சுற்றுப்புறச்சூழலுக்கு எவ்வித பாதிப்புமின்றி கப்பல் தளத்தில் இருந்து 9 கி.மீ. மூடிய கன்வேயர் பெல்ட் வழியாக அனல் மின் நிலையத்துக்கு, நிலக்கரி கொண்டு வரப்படுகிறது.
அதுமட்டுமின்றி, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக உடன்குடி மின்திட்ட வளாகத்தில் 1.50 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடங்கப்பட்டு, இதுவரை 52 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.
கூடுதல் நிலக்கரியை சேமிக்க 6.80 லட்சம் டன் கொள்ளளவு கொண்ட திறந்த மற்றும் மூடிய நிலக்கரி தளங்கள் உள்ளன. இந்த மின்நிலையத்தின் தேவைகளுக்காக, கடல் நீரில் இருந்து நன்னீர் உற்பத்தி செய்யும் இயந்திரங்கள் உள்ளன. மின்நிலையத்தின் நன்னீர் தேவை அனைத்தும் கடல்நீர் சுத்திகரிப்பான் வழியாகவே பெறப்படுகிறது.
இங்கு உற்பத்தி ஆகும் சாம்பலைச் சேகரித்து, சிமென்ட் ஆலைகள் மற்றும் செங்கல் தயாரிப்பாளர்களுக்கு அளிக்க 4 சாம்பல் குதிர்கள் உள்ளன. இங்குள்ள ஆயிரக்கணக்கான உபகரணங்களைக் கையாள உலகத் தரத்தில் கட்டுப்பாட்டு மய்யம் அமைக்கப்பட்டுள்ளது. கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் தமிழ்நாட்டின் மின் தேவையை பூர்த்தி செய்வதில் உடன்குடி அனல்மின் நிலையம் முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
