2015 இல் அறிவிக்கப்பட்டு, 2019 இல் பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்ட பீகார் மாநில தர்பங்கா எய்ம்ஸ் மருத்துவமனை, தற்போது ஒரு மிகப்பெரிய நுழைவு வாயிலுடன் மட்டும் காட்சியளிப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஊடகவியலாளரும், சமூக ஆர்வலருமான பர்வேஷ், அந்த நுழைவு வாயிலின் முன் நின்று வெளியிட்டிருக்கும் தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. ‘‘2019 மற்றும் 2024 என இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்களிலும் தர்பங்கா எய்ம்ஸ் கனவு நனவாகிவிட்டதாக, பிரதமர் முழங்கினார். ஆனால், தரையில் ஒரு கட்டடம் கூட இல்லை, வெறும் அலங்கார வளைவு மட்டுமே நிற்கிறது’’ என அவர் சாடியுள்ளார்.
2024 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால், கட்டடங்கள் எழும்பவில்லை. இந்த நிலையில், இரண்டு தேர்தல்களில் தர்பங்கா எய்ம்ஸ் கனவு நனவாகிவிட்டது என்று பிரச்சாரம் செய்தார் ஒரு பிரதமர் என்றால், இவர்களின் மீதான நம்பகத்தன்மையை என்னவென்று சொல்வது!
பீகாரில் இந்த ‘வெற்று நுழைவு வாயில்’ பா.ஜ.க. அரசின் பொய் விளம்பரப் போக்கிற்குச் சான்றாக மாறியுள்ளது.
2019 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்ட மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை ஆண்டுகள் ஏழு கடந்த பிறகும், செயல்பாட்டுக்கு வரவில்லை.
இந்த அவல நிலையை அம்பலப்படுத்தும் வகையில்தான் கடந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையிலிருந்து ஒரு செங்கல்லை எடுத்துக்காட்டி, தமிழ்நாடெங்கும் பிரச்சாரம் செய்தார் மானமிகு உதயநிதி ஸ்டாலின். அதற்கு நல்ல விளைவும் இருந்தது. அடுத்த பொதுத்தேர்தலும் வரும் நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை இன்னும் பகல் கனவுதான்!
மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் படிப்பதாகச் சொல்லிக் கொண்டு, இராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் படித்து வருகிறார்கள்!
என்னே, அவலம்!
– மயிலாடன்
