தொண்டறக் குடும்பத்துடன் ‘விடுதலை’ ஞாயிறு மலரின் ஒரு நேர்காணல்!-வி.சி.வில்வம்

7 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

அது என்ன தொண்டறக் குடும்பம்?

கழகத்திற்காகத் தொண்டு செய்வது, களப்பணியில் ஈடுபடுவது, தொடர் நன்கொடைகள் வழங்குவது – இதுவே தொண்டறக் குடும்பத்தின் அடையாளங்கள்! அதிலும் தங்கள் பிள்ளைக்குத் “தொண்டறம்” என்றே பெயரும் வைத்துவிட்டார்கள். சிறு வயதில் சிறப்பான பெயரை வைத்துவிடுவார்கள்.

ஆனால் அதற்கேற்ப வாழ்வது எல்லாருக்கும் சாத்தியமான ஒன்றல்ல! ஆனால் இங்கே மகள் தொண்டறம், அம்மா செல்வி, அப்பா பெரியார் மாணாக்கன் ஆகிய மூவருமே தொண்டு உள்ளத்தோடு வாழ்கிறார்கள். இம்மூவரையும் விடுதலை ஞாயிறு மலருக்காகச் சந்தித்தோம்!

அம்மா வணக்கம்! தங்கள் பெயர், ஊர், இளம்வயது வாழ்க்கைக் குறித்துக் கூறுங்கள்?

எனது பெயர் செல்வி. வயது 59 ஆகிறது. சொந்த ஊர் மதுரை அருகே பாண்டிகோயில். அம்மா பொன்னுத்தாய், அப்பா முனியசாமி. எங்கள் வீட்டில் 3 சகோதரிகள், 2 சகோதரர்கள். நான் 5 ஆம் வகுப்பு வரை படித்திருக்கிறேன். இயல்பான குடும்பம். இந்தச் சூழலில் 18 வயதில் எனக்குத் திருமணம் முடிந்து, மூன்றே மாதங்களில் விவாகரத்துக் கேட்கும் நிலை வந்துவிட்டது.

எங்கள் குடும்பம் பழுத்த ஆன்மிகக் குடும்பம். எங்கள் அப்பாவின் சகோதரி தீவிர நாத்திகக் குடும்பம். அவர்களின் பெயர் திருமகள். ஆமாம்! திருமகள் – இறையன் எனது அத்தை மாமா ஆவர்.

18 வயதில் திருமணம் முடிந்து, மூன்றே மாதத்தில் விவாகரத்து என்பது அதிர்ச்சியாக உள்ளதே?

ஆமாம்! எங்களுக்கும் பேரிடியாக இருந்தது. அதுசமயம் மதுரையில் இருந்த என்னை, திருமகள் அத்தை சென்னைக்கு அழைத்து வந்துவிட்டார்கள். அதன் பிறகு அவர்களுடன் பெரியார் திடல் செல்வது, நிகழ்ச்சிகளில் பங்கேற்பது எனப் பெரியார் கருத்துகள் என்னுள் மெதுவாக வரத் தொடங்கியது. 1984 ஆம் ஆண்டு இயக்கப் போராட்டம் ஒன்றில் பங்கேற்க புதுடில்லி வரை சென்றேன். “இந்தியா கேட்” அருகே ஒருநாள் சிறையில் வைத்து விடுவித்தார்கள்.

இப்படியாக அய்ந்து ஆண்டுகள் சென்னை வாழ்க்கை முடிந்து, மீண்டும் மதுரைக்கே சென்றுவிட்டேன். சிறுவயதில் மற்றொரு அத்தையான சரோஜா அவர்கள் வீட்டில் தான் வளர்ந்தேன்.

மாமா மகாமுனி அவர்கள் பாண்டிகோயில் பூசாரியாக இருந்தார். விவாகரத்துப் பெற்று 15 ஆண்டுகள் ஆன நிலையில், எனக்கு மறுமணம் செய்ய வேண்டும் என திருமகள் அத்தை, இசையின்பன், பரிமளம் ஆகியோர் வலியுறுத்தினர். அப்போது தான் சேகர் என்பவர் எங்கள் குடும்பத்திற்கு அறிமுகமானார். இதோ… என் அருகில் இருக்கிறாரே, இவர்தான் என் இணையர்.

அய்யா வணக்கம்! உங்களைக் குறித்து அறிமுகம் செய்து கொள்ளுங்கள்?

என் பெயர் சேகர். சொந்த ஊர் வந்தவாசி அருகில் மேட்டுக்குறிச்சி.

என் அப்பா ஆண்டுதோறும் திருத்தணி வரை காவடி எடுத்துச் செல்வார். நானும் அவர் பின்னாடியே “அரோகரா, அரோகரா” என்று சொல்லிக் கொண்டே சிறிது தூரம் செல்வேன். இப்படியான சூழலில் சமூகக் கருத்துகள் என்னுள் உருவாகத் தொடங்கியது. மேல்நிலை வகுப்பில் நான் தேர்ச்சி பெறவில்லை. எனவே ஏதாவது வேலை கிடைக்குமா எனக் காத்திருந்தேன். இந்நிலையில் செய்யாறு பகுதியில் திருச்சிற்றம்பலம் என்பவர் படிகலிங்கம் எனும் பெயரில் துணிக்கடை வைத்திருந்தார். அவர் கடையில் ‘கல்லா’ பெட்டியின் மேல் பெரியார் புத்தகங்களை வைத்திருப்பார். அதை 25 காசு, 50 காசு கொடுத்து வாங்கி வருவேன்.

அப்படி ஒருமுறை புத்தகம் வாங்கச் சென்ற போது, அங்கு வந்திருந்த வேல்.சோமசுந்தரம் அய்யா என்னைக் குறித்து விசாரித்து, அவர்கள் வீட்டிற்கு வரச் சொன்னார்கள். அப்போது எனக்கு 19 வயது. அவர்கள் வீட்டிற்கும், அவர்கள் நடத்திய தாமரை மருத்துவமனைக்கும் சென்றேன். அங்கு பழைய விடுதலை மற்றும் உண்மை இதழ்களை எனக்குக் கொடுத்தார்கள். அப்போது ‘விடுதலை’ படிக்கத் தொடங்கி, 40 ஆண்டுகளாக சந்தாதாரராக இருக்கிறேன்.

இயக்கத்திற்கு நீங்கள்
எப்போது வந்தீர்கள்?

1995ஆம் ஆண்டு, சென்னை பல்லவன் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராகப் பணி கிடைத்தது. ஒருநாள் கடற்கரை சாலையில் போகும் போது, அங்கு கூட்டம் ஒன்று நடந்து கொண்டிருந்தது. பக்கத்தில் சென்று பார்த்தால், அது பாரதிதாசன் பிறந்தநாள் பொதுக்கூட்டம்.

“தமிழனே இது கேளாய்” என்கிற தலைப்பில் கலைஞர் உரையாற்றிக் கொண்டிருந்தார். ஆசிரியர் அவர்களும் மேடையில் இருந்தார்கள். அவர்கள் இருவரின் பேச்சும் எனக்குள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் மடிப்பாக்கத்தில் திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. ஆசிரியர் அவர்களும் அதில் கலந்து கொண்டார்கள். அப்போது யாருமே எனக்கு அறிமுகம் இல்லை. எனினும் அக்கூட்டத்தில் நான் பங்கேற்றேன்.

ஆசிரியர் பேசும்போது, “நமது வருமானத்தில் வரும் தொகையில் சிறிதளவு பொதுத் தொண்டிற்குச் செலவு செய்ய வேண்டும்”, எனக் கூறினார்கள். அது என் மனதில் பசுமரத்தாணி போல பதிந்துவிட்டது. அன்று முதல் நன்கொடைக் கொடுத்து வருகிறேன்.

எத்தனை ஆண்டுகளாகக் கொடுக்கிறீர்கள்? மொத்தம் எவ்வளவு கொடுத்திருப்பீர்கள்?

1995இல் வேலைக்குச் சேர்ந்தது முதல், பெரியார் பெருந்தகையாளர் நிதியாக மாதம் ரூபாய் 100 கொடுத்து வருகிறேன். 31 ஆண்டுகளாக இப்போதும் தொடர்கிறேன். இதுதவிர விடுதலை வைப்பு நிதிக்கு மாதம் 1000, விடுதலை வளர்ச்சி நிதி ரூபாய் 100, விடுதலை நாளிதழ் சந்தா ஆறு மாதக் கட்டணம் ரூ.1000, ‘உண்மை’ மாதமிருமுறை இதழ் ஒரு ஆண்டுக் கட்டணம் ரூ.900, ‘பெரியார் பிஞ்சு’ மாத இதழ் ஒரு ஆண்டுக் கட்டணம் ரூ 600 என மாதந்தோறும் ரூபாய் 3700 வழங்கி வருகிறோம். இவையனைத்தும் வாழ்விணையர் செல்வி, எங்கள் மகள் தொண்டறம் மற்றும் எனது பெயரில் வழங்கி வருகிறோம்.

அதுமட்டுமின்றி, தமிழர் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், ‘பெரியார் உலகம்’ நிதி அறிவித்தது முதல், ஆண்டிற்கு ரூபாய் 25 ஆயிரம் வழங்கி வருகிறோம். ஆசிரியரின் பிறந்த நாளான டிசம்பர் 2 ஆம் தேதி இந்த நன்கொடையை வழங்குவோம்.

இதுவரை 13 ஆண்டுகள் கொடுத்துள்ளோம். அன்னை மணியம்மையார் அறக்கட்டளைக்கு நிதி சேகரித்த போது, ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் (LIC) 21 ஆண்டுகள் சேகரித்த ரூபாய் ஒரு இலட்சம் பணத்தை வழங்கினோம்.

இதுவரை சற்றொப்ப 20 இலட்சங்கள் கொடுத்திருப்போம்.

விவாகரத்து பெற்ற பெண்ணைத் திருமணம் செய்ய வேண்டும் என்கிற முடிவை எப்போது எடுத்தீர்கள்?

அந்தச் சிந்தனைக்கும் காரணம் ஆசிரியர் தான்! “நமது வருமானத்தில் வரும் தொகையில் சிறிதளவு பொதுத் தொண்டிற்குச் செலவு செய்ய வேண்டும்”, என ஆசிரியர் சொன்னதைப் போல, இளைஞர்களுக்குப் பத்துக் கட்டளைகளை ஆசிரியர் வகுத்துக் கொடுத்தார். அதில் கூறியவாறே விவாகரத்து பெற்ற மகளிரைத் திருமணம் செய்ய முடிவு செய்தேன்.

அந்தக் காலகட்டத்தில் அடிக்கடி பெரியார் திடல் வருவேன். ஆனால் யாரும் பெரிதாக அறிமுகம் இல்லை. இந்நிலையில் எனது திருமண நோக்கத்தை அய்யா இறையன், அம்மா திருமகள் இருவரிடமும் தெரிவித்தேன். அதுசமயம் சேகர் என்கிற எனது இயற்பெயரை, பெரியார் மாணாக்கன் என மாற்றிக் கொண்டேன். இது இறையன் அவர்கள் பயன்படுத்திய புனைப்பெயர் ஆகும்.

தங்களின் திருமண நோக்கம்
எப்போது நிறைவேறியது?

இதுதொடர்பான தகவல்களை எனது இணையர் செல்வி கூறுவார். “எனக்கு விவாகரத்து ஆன நிலையில், மற்றொரு திருமணத்திற்கு நான் தயாராக இல்லை. எனக்கு வயது 33 ஆகியிருந்தது. சேகர் என்கிற பெரியார் மாணாக்கரை எனக்குத் திருமணம் செய்ய பெரியவர்கள் முடிவு செய்திருந்தார்கள். அவர் பேருந்து ஓட்டுநர் என்று தெரிந்ததும், இவருக்குப் புகை மற்றும் மதுப் பழக்கம் இருக்குமோ என்று எண்ணினேன்.

இந்நிலையில் மாப்பிள்ளை ஊரான வந்தவாசி, மேட்டுக்குறிச்சி கிராமத்திற்கு திருமகள், பார்வதி, மனோரஞ்சிதம், மாட்சி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தச் சென்றனர். பெரியார் மாணாக்கனுக்குப் பாட்டி மட்டும் தான் அப்போது இருந்தார். மேற்கூறிய நான்கு மகளிரும் கழுத்தில் தாலி அணியாததால், “தாலி அறுத்த பெண்கள் எப்படி திருமணம் பேச வரலாம்?”, எனப் பாட்டி சத்தம் போட்டுள்ளார். அதுமட்டுமின்றி எனது பேரன் திருமணம் செய்யப் போகும் பெண்ணுக்கு இது இரண்டாவது திருமணமா?”, என்றும் கோபமாகக் கேட்டுள்ளார்.

இறுதியில் என்னதான் ஆனது?

ஓட்டுநர் என்று முதலில் நான் சாதாரணமாக நினைத்துவிட்டேன். பிறகுதான் தெரிந்தது பெயருக்கேற்ற பெரியார் தொண்டர் இவரென்று! தனது கொள்கைப்படி தான் திருமணம் நடக்கும் என வீட்டில் உறுதியாகக் கூறிவிட்டார். அதன் பிறகு ஒரே மாதத்தில் பெரியார் திடலில் நடைபெற்ற புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாளில் (29.04.1998), எங்கள் வாழ்க்கை ஒப்பந்த நிகழ்வை  ஆசிரியர் அவர்கள் நடத்தி வைத்தார். இரண்டு மாலைகள் மட்டுமே வாங்கினோம். வேறு எந்தச் செலவுகளும் கிடையாது.

அய்யா, பெரியார் மாணாக்கன் அவர்களே! உங்கள் திருமணத்தை, பின்னாளில் குடும்பத்தில் ஏற்றுக் கொண்டார்களா?

இளம்வயதிலேயே எனது தந்தையை நான் இழந்துவிட்டேன். எனது அம்மாவை “விதவை” என அழைத்து நிறைய சங்கடங்களை இந்தச் சமூகம் கொடுத்தது. நிறைய இடங்களில் புறக்கணிப்பும் செய்தனர். பின்னர் அம்மாவும் மறைந்துவிட, பாட்டி மட்டுமே இருந்தார். உடன்பாடு இல்லாத காரணத்தால் அவர் திருமணத்தில் பங்கேற்கவில்லை. பின்னாளில் சுமூக நிலை ஏற்பட்டது.

திருமணம் முடிந்து மடிப்பாக்கத்தில் இருந்த நாங்கள், பிறகு வீடு கட்டி பூந்தமல்லி சென்றுவிட்டோம். எங்களுக்கு ஒரே ஒரு மகள் மட்டுமே! அவர் பெயர் தொண்டறம். தற்போது இதழியல் (Journalism) படித்து வருகிறார். ஆசிரியர் தம் பேச்சில் அடிக்கடி “தொண்டறம்” என்கிற சொல்லைப் பயன்படுத்துவார்கள். அதை மனதில் வைத்தே இந்தப் பெயரை நாங்கள் வைத்தோம்”, என பெரியார் மாணாக்கன் கூறினார்.

நாமும் அதை மனதில் வைத்தே இந்நேர்காணலுக்கு இந்தத் தலைப்பை இட்டோம்! ஒரு இயக்கக் குடும்பம் எப்படி ஒரு தலைவனையொட்டியே இயங்கும் என்பதற்குத் தொண்டறம், செல்வி, பெரியார் மாணாக்கன் போன்றோரே சான்று!

நேர்காணல்: வி.சி.வில்வம்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *