பொது வழிகளில் புலையர்கள் செல்ல திருவாங்கூர் சமஸ்தானத்தில் தடை இருந்தது. அரசும், அரசரும் அதற்கான ஜாதியச் சட்டங்களைக் கடுமையாக அமல்படுத்தின. அந்தச் சட்டங்களை மீறியவர்கள் நம்பூதிரிப் பார்ப்பனர் தூண்டுதலால் நாயர்கள் கடுமையாகத் தண்டித்தனர். இந்தக் கொடுமையை ஒழிக்க வேண்டியே அய்யன்காளி வில்வண்டியை வாங்கினார். கீழ் ஜாதிக்காரர்கள் வில் வண்டியை வைத்துக் கொள்ளக் கூட உரிமை கிடையாது. வில் வண்டிகள் மேல்ஜாதியினரின் பயணத்திற்கு மட்டுமே உரியது.
அய்யன் காளி வில்வண்டி வாங்கிய செய்தி சலசலப்பை ஏற்படுத்தியது. திடீரென்று ஒரு நாள் அய்யன் காளி, “வில்வண்டிப் போராட்டத்தை” நடத்த முடிவெடுத்தார். தன்னுடைய தொண்டர் படையையும் போராட்டத்திற்கு ஏற்பாடு செய்தார். அய்யன் காளி வெள்ளை அரைக்கை பனியனும், வேட்டியும், தலைப்பாகையும் அணிந்து கொண்டார். தங்க நகை அணிந்து கொண்டார். இந்த உடைகள் (வெள்ளை உடை, தலைப்பாகை, வேட்டி) புலையர்கள் அணியத் தடை இருந்தது. தங்க நகைகள் அணியவும் முடியாது.

இந்த ஜாதியச் சட்டங்களை உடைக்கும் வகையில் உடைகள் அணிந்து கொண்டார். கையில் சாட்டைக் குச்சியை எடுத்துக் கொண்டார். அலங்கரிக்கப்பட்ட முரட்டுக் காளைகள், அழகிய வில் வண்டியில் பூட்டப்பட்டன. தன்னுடைய தொண்டர் படையினரை வண்டியின் இரண்டு பக்கங்களிலும் மற்றும் சுற்றுப் புறங்களில் அணிதிரண்டு வர வெள்ளுடையில், தலைப்பாகை கட்டிய கம்பீரத் தோற்றத்தில் அய்யன் காளி தன்னுடைய வில் வண்டியில் ஏறி, சாட்டைக் குச்சியால் மாடுகளை விரட்டியவாறு வெங்கனூர் பொதுச்சாலையை அடைந்தார். ஆணவம் பிடித்த மேல் ஜாதியினர் சற்றும் எதிர்பார்க்காத வகையில் தன் வில் வண்டியை மெதுவாக தன் படையினருடன் ஓட்டிக்கொண்டு சாலையின் உள் நுழைந்தார் அய்யன்காளி. ஒரு பந்தயக் குதிரையைப் போல் அந்த வண்டியைத் தொடர்ந்து பொதுச் சாலையில் புலையர்கள் ஆயுதங்களோடு, வருவதைப் பார்த்து நம்பூதிரிகளும், நாயர்களும் திகைத்துப் போயினர். ஆனால், உடனே அந்த ஊர்வலத்தைத் தடுக்க நாயர் படை அவசரமாக ஆயத்தம் செய்யப்பட்டது. நாயர்கள் திருவாங்கூர் நாட்டில் படை வீரர்களாக இருந்ததால், உடனே ஆயுதங்களோட அய்யன் காளியின் ஊர்வலத்தைத் தடுத்துத் தாக்க ஆயத்தமானார்கள்.
இந்தத் தாக்குதலை அய்யன்காளி எதிர்ப் பார்த்தே இருந்தார். அவரோடு வந்த தொண்டர்களை தாக்குதல் நடந்தால் எதிர்த் தாக்குதல் நடத்த ஆயத்தப்படுத்தியே வைத்திருந்தார். அவரின் ஊர்வலம் பொதுச் சாலையில் ஆரம்பத்தில் ஆரவாரத்தோடு நுழைந்தது. நாயர் கும்பல் அவர்களைத் தாக்க வேகமாக ஆயத்தமானது. அந்தப் பொதுச் சாலையில் “கல்லியூர் சந்திப்பு” என்ற இடம் இருக்கிறது. நாயர்கள் பெருமளவில் அங்கு உடனடியாகத் திரண்டு விட்டனர். சிலர் சந்திப்பின் அனைத்துத் தெருக்களிலும் ஆயுதங்களோடு நின்றனர். செய்தி அய்யன்காளி காதுகளுக்கு எட்டியது.
தனது தொண்டர்களை தாக்குதலை எதிர்கொள்ள ஆயத்தமாக இருக்கும்படி அறிவுறுத்தினார். கல்லியூர் சந்திப்பை அய்யன்காளி நெருங்கிய உடனே நாயர்கள் தாக்குதல் தொடங்கியது. அய்யன்காளியின் சாட்டை நாயர் உடல்களின் மீது ஆவேசமாகத் தாக்கியது. அவரது தொண்டர் படையும், நாயர்களோடு கடுமையாகச் சண்டையிட்டது. ஆனால், அந்த வீர, உரிமைப் போராட்டத்தில் அய்யன்காளியின் படை தோல்வியைத் தழுவி பின்வாங்க நேரிட்டது. அய்யன்காளியின் படையில் கொஞ்சம் குறைவான பேரே இருந்ததால், நாயர்கள் அதிகளவில் கூடிவிட்டதாலும் இந்தத் தோல்வி ஏற்பட அடிப்படைக் காரணமாக அமைந்துவிட்டது. அதுவுமின்றி நாயர்களின் போர்ப் பயிற்சி கீழ் ஜாதிக்காரர்களை அடித்து விரட்ட உதவியது. அய்யன் காளியோடு வந்த ஒடுக்கப்பட்டச் சமூகத்தினர் பல, பல ஆண்டுகளாக அடிமை மனப்பான்மையில் இருந்ததால் ஒருவித பயத்தோடும், தாழ்வு மனப்பான்மையோடும் இந்தச் சண்டையை எதிர்கொண்டனர். இவை அனைத்தும் சேர்ந்து அய்யன்காளியின் மாட்டு வண்டிப் போராட்டம் தோல்வியில் முடியக் காரணமாகி விட்டன. ஆனால், அய்யன்காளி அசரவில்லை.
நாயர் கூட்டத்தைப் பார்த்து உரக்க சூளுரைத்தார். “இதற்கான பதிலடியை இந்த இடத்திலேயே வந்து உங்களுக்கு நான் தருவேன்” என்று உரத்தக் குரலில் கூவினார். ஆனால், புலையர்களை பல நூறு ஆண்டுகள் அடிமைகளாகவே வைத்திருந்த ஆதிக்க ஜாதியினரான நாயர்கள் பேசாமலிருப்பார்களா?
“நீயும், உன் கூட்டாளிகளும் மீண்டும் இந்தத் தெருவிற்கு வந்தால் உங்கள் வம்சத்தையே நாங்கள் அழிப்போம்” என்று அய்யன் காளியைப் பார்த்து, நாயர்கள் (ஜாதி முறைப்படி அவர்களும் சூத்திரர்களே) எதிர் சவால் விட்டனர். அய்யன்காளியும் விட்டாரில்லை. அவர் மீண்டும் உரத்தக் குரலில், “நானும், எனது ஆட்களும் இந்தத் தெருவில் மீண்டும் வந்து பதிலடி கொடுத்து, காது குத்தி, கடுக்கன் அணிந்து உங்கள் எதிரில் வந்து நிற்பேன்” என்று பதில் கொடுத்தார்.
அய்யன்காளி பின்னடைவைச் சந்தித்துத் திரும்பும்போது மற்றொரு இடமான “வெள்ளயாணி முக்கூர் மூவர்” என்னுமிடத்தை அடைந்தபொழுது மீண்டும் நாயர் கும்பல் அவர்களைத் தாக்கியது. வண்டியைத் தடுத்து, காளைகளை அவிழ்த்து, விரட்டியடித்தனர். கடும் கோபம் கொண்ட அய்யன்காளி, அருகிலிருந்த நாயர் வீட்டின் தொழுவத்தில் தன் படைகளைக் கூட்டிக் கொண்டு நுழைந்தார். அங்கிருந்த தொழுவத்திலிருந்த மாட்டினை அவிழ்த்து வந்து வழியெங்கும் அடித்தபடி தன் கோபத்தைத் தீர்த்துக் கொண்டார்.
வில்வண்டிப் பயணம் தொடர்ந்தபொழுது, “புன்னமூடு” என்ற இடத்தில் இருந்த சந்திப்பில் மீண்டும் கலவரம். வண்டியிலிருந்து மின்னல் போல் குதித்த அய்யன்காளி இடியோசை போல் ஓசை எழுப்பியவாறே தன் கையிலிருந்த சாட்டைக் கயிற்றை வீசியவாறே நாயர்களை சுழன்று, சுழன்றுத் தாக்கினார். நாயர்களும் வன்முறைத் தாக்குதலுடன் முன்னேறினார்கள். அய்யன் காளியின் நண்பர்கள் படையும் தீவிரமாகத் தங்கள் தாக்குதலைத் தொடர்ந்தது. இரு தரப்பிலும் பலர் அடிபட்டு வீழ்ந்தார்கள். இந்த முறை அய்யன் காளிப்படை தங்கள் அடிமைத்தன விலங்கை ஒடித்து, மானத்தோடு மனிதர்களாக வாழ வேண்டும் என்று வெறியோடு போராடினர். அவர்களின் ஆவேசத்தின் வேகத்தைத் தாக்குப் படிக்க முடியாமல் நாயர் கூட்டம் உயிருக்குப் பயந்து பின் வாங்கி ஓடியது. எதிரில் வந்த மேல் ஜாதியின் பெரியவர்களான நாயர்கள் அய்யன் காளியிடம் பேச வந்தனர். “இனிமேல் என் மக்கள் பொதுவெளிகளில் நடப்பார்கள். அதுவும் பகல் வேளைகளிலும் நடப்பார்கள். பகல் வெளிச்சத்தில் அவர்களைத் தெருவில் நடக்க அனுமதிக்க வேண்டும். மீறித் தடுத்தால் யாராக இருந்தாலும் அவர்களை எதிர்ப்போம்” என அறைகூவல் விடுத்தார். நிலைமை மோசமாவதைக் கண்ட நாயர்கள் மெதுவாக கலைந்து சென்றனர். அதன்பின் சலங்கை ஒலி முழங்க வெள்ளைக் காளைகள் பூட்டப்பட்ட அந்த வில்வண்டி வெற்றிகரமாக வெங்கனூர் சாலைகளில் தன் வெற்றிப் பயணத்தை மேற்கொண்டது. ஏற்கெனவே சபதமிட்டவாறு அய்யன்காளி காது குத்தி, சிகப்புக்கல் கடுக்கன் அணிந்து, வெள்ளுடையும், தலைப்பாகையும் அணிந்து கம்பீரமாக வெங்கனூர் சாலைகளில் தன் அலங்கார வில் வண்டியில் அடிக்கடி பயணித்தார் என்பது உரிமைப் போர் வரலாறு.
வெங்கனூர் சாவடி நடை ‘புதுவல் கொச்சப்பி” (புதுவல் அவர் வீட்டின் பெயர்) என்பவர் அய்யன்காளியின் நண்பர். தன் வில்வண்டியை ஓட்டுவதற்கு அவரை அய்யன்காளி நியமித்தார். கொம்பு மீசையும், நெடிய உடலும், தேர்ந்த உடற்கட்டும் உடையவர் கொச்சப்பி. அய்யன்காளியின் வில் வண்டிப் போராட்டத்தில் பெரும்பங்கு வகித்தவர் கொச்சப்பி.
அய்யன்காளியின் புரட்சிப் பயணம் திருவாங்கூர் நாடு முழுவதும் காட்டுத் தீயாய் பரவியது. பல இடங்களில் சிறு, சிறு சலசலப்புகளும், சண்டைகளும் கூட நடந்தது. அடிமை ஜாதிகள் புரட்சி செய்வதை ஆரம்பத்திலேயே அடக்கிவிட வேண்டும். இல்லையென்றால் ஜாதியக் கட்டுப்பாடுகள் தகர்ந்து விட்டால் நாடே சீரழிந்துவிடும் என்று உயர் ஜாதியினர் நினைத்து, அந்த உரிமைப் போரை முழுமையாக அடக்க முனைந்தனர். பாதிக்கப்பட்ட அந்த அடிமை மக்கள் அய்யன் காளியை சந்தித்து தாங்கள் படும் இன்னல்களைக் கூற வெங்கனூர் வந்தனர். அவர்களை சந்தித்த புரட்சியாளர் அய்யன்காளி அவர்களுக்கு ஆறுதல் கூறினார். அடிமைத்தனம் ஒழிய வேண்டுமானால் கல்வி முக்கியம் என்று அறிவுறுத்தினார்.
கீழ் ஜாதியினரை, மேல் ஜாதிக்காரர்கள் தெருவில் நடக்கும் உரிமையைத் தர மாட்டார்கள் என்றும், போராட்டமே அதற்கு வழி என்றும் அறிவுறுத்தினார். மாடுகள், பன்றிகள், நாய்கள் கூட நடக்க உரிமை உள்ள தெருக்களில் மனிதர்கள் நடக்க எவ்வளவு போராட வேண்டியிருந்தது திருவாங்கூர் நாட்டில்!
(சான்று: ‘மகாத்மா அய்யன்காளி’ – நிர்மால்யா)
(தொடருவேன்….)
