இந்தியாவின் மிக உயரிய பதவிகளுக்கான தேர்வாகக் கருதப்படும் யு.பி.எஸ்.சி தேர்வில், எழுத்துத் தேர்வை விட நேர்முகத் தேர்வு என்பது எப்போதும் விவாதத்திற்குரிய ஒன்றாகவே இருந்து வருகிறது.
“திறமைக்கு மட்டுமே மதிப்பு” என்ற முழக்கத்திற்குப் பின்னால், தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடிச்சமூக மாணவர்கள் எவ்வாறு திட்டமிட்டுப் பின்தள்ளப்படுகிறார்கள் என்பது குறித்த தரவுகள் அதிர்ச்சியளிக்கின்றன.
எழுத்துத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தில் வரும் பார்ப்பனர் அல்லாத மாணவர்கள், நேர்முகத் தேர்வில் மட்டும் மிகக் குறைவான மதிப்பெண்களைப் பெறுவது தொடர்கதையாக உள்ளது. எழுத்துத் தேர்வில் ஒருவரது அறிவுத்திறன் நிரூபிக்கப்பட்ட பிறகும், நேர்முகத் தேர்வில் மட்டும் அவர்கள் ‘தகுதியற்றவர்களாக’ மாற்றப்படுவது எப்படி? இது தற்செயலானதா அல்லது திட்டமிடப்பட்டதா என்ற கேள்வி எழுகிறது.
கீழ்த்தட்டு – கிராமப்புற மாணவர்களுக்குப் பின்னடைவு
நேர்முகத் தேர்வு என்பது வெறும் அறிவைச் சோதிக்கும் தளம் மட்டுமல்ல; அது ஒருவரது ஆளுமையைச் சோதிப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், இங்கே ‘ஆளுமை’ என்பது ஜாதிப் பின்னணியைக் கொண்டே அளவிடப்படுகிறது. ஆங்கிலப் புலமை மற்றும் மேல்தட்டு உச்சரிப்புக்குக் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படுவது கிராமப்புற மற்றும் ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்குப் பின்னடைவை ஏற்படுத்துகிறது. தேர்வு வாரியத்தில் உள்ள உறுப்பினர்களில் பெரும்பாலானோர் பார்ப்பனச் சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கும்போது, அங்கு மறைமுகமான பாகுபாடு நிலவுகிறது.

பார்ப்பன ஆதிக்க லாபி
பொதுப் பிரிவில் வரக்கூடிய தகுதியுள்ள பார்ப்பனரல்லாத மாணவர்களை நேர்முகத் தேர்வில் குறைவான மதிப்பெண் அளிப்பதன் மூலம், அவர்களை மீண்டும் அந்தந்த இடஒதுக்கீடு பிரிவிற்குள்ளேயே தள்ளும் போக்கு நிலவுகிறது. இதன் மூலம் பொதுப் பிரிவில் உள்ள இடங்கள் அனைத்தும் குறிப்பிட்ட ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கே (பார்ப்பன ஆதிக்க லாபி) சாதகமாக மாற்றப்படுகின்றன.
கடந்த காலத் தரவுகளை ஆய்வு செய்தால், நேர்முகத் தேர்வில் 50%-க்கும் குறைவான மதிப்பெண்கள் பெறுபவர்களில் பெரும்பாலானோர் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களாகவே இருக்கின்றனர். அதே சமயம், எழுத்துத் தேர்வில் பின்தங்கியிருந்தாலும் நேர்முகத் தேர்வில் அதீத மதிப்பெண்கள் பெற்று அய்ஏஎஸ் (IAS) ஆகுபவர்கள் பெரும்பாலும் பார்ப்பனப் பணியா சமூகப் பின்னணி கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

“திறமை” என்பது ஒரு வெற்றிடத்தில் உருவாவது அல்ல; அது வாய்ப்புகளையும் சமூகப் பின்னணியையும் சார்ந்தது. யு.பி.எஸ்.சி நேர்முகத் தேர்வு முறையில் வெளிப்படைத்தன்மை கொண்டுவரப்பட வேண்டும். நேர்முகத் தேர்வு வாரியத்தில் அனைத்துச் சமூக பிரதிநிதித்துவமும் உறுதி செய்யப்படாதவரை, “திறமை” என்ற பெயரால் நடக்கும் இந்த நயவஞ்சகமான ஏய்ப்பு முறையைத் தடுக்க முடியாது. சமூக நீதி என்பது வெறும் எண்களில் மட்டுமல்ல, அதிகாரப் பகிர்விலும் இருக்க வேண்டும்.
