சுத்திகரிக்கப்பட்ட ஆர்.ஓ. தண்ணீர் சத்தானதா? ஆபத்தானதா?

4 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

குடிநீரை நமக்குச் சுத்தப்படுத்தித் தரும் ஆர்.ஓ. (RO) முறை தான் பிரபலமாக இருக்கிறது. இருப்பினும், இந்த ஆர்ஓ தண்ணீரை நாம் குடிக்கும் போது அது உடலில் சில பல பிரச்சினைகளை ஏற்படுத்தலாம் எனப் பலரும் சொல்கிறார்கள். இது உண்மை தானா… இதனால் உடலில் எதாவது சிக்கல் ஏற்படுமா என்பது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்!

இன்றைய காலகட்டத்தில் இந்தியக் குடும்பங்களில் எரிவாயு அடுப்பு, குளிர்சாதனப் பெட்டிகளுக்கு இணையாக “வாட்டர் பியூரிஃபையர்” எனப்படும் நீர் சுத்திகரிப்பானும் அத்தியாவசியப் பொருளாகிவிட்டது. இப்போது எல்லாம் பெருநகரங்களில் அனைத்து வீடுகளிலும் இந்த வாட்டர் பியூரிஃபையர்களை நம்மால் பார்க்க முடிகிறது.

ஆர்.ஓ. (Ro) தொழில்நுட்பம்

அதில் குறிப்பாக ஆர்.ஓ. தொழில்நுட்பத்தின் கீழ் இயங்கும் வாட்டர் பியூரிஃபையர்களே மிகவும் பிரபலமானது. அது குடிநீரில் உள்ள அசுத்தங்கள், மைக்ரோ உலோகங்கள் உள்ளிட்ட மாசுகளை அகற்றி, தண்ணீரைக் குடிக்கப் பாதுகாப்பானதாக மாற்றுகிறது. இருப்பினும், ஆர்.ஓ. சுத்திகரிப்பு முறையில் நீரில் உள்ள நன்மை தரும் தாதுகளும் நீக்கப்படுவதாகவும் அது சில எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் பல ஆண்டுகளாகச் சந்தேகங்கள் உள்ளன. அதாவது ஆர்.ஓ. நீர் அருந்துவது தாதுப் பற்றாக்குறை அல்லது எலக்ட்ரோலைட் ஏற்றத்தாழ்வுகளுக்கு வழிவகுக்கும் என்று பலரும் கவலைப்படுகின்றனர். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!

பிரச்சினை இல்லை

இம்முறையினால் வடிகட்டுதல் சில தாதுகளைக் குறைக்கலாம் என்றாலும், பெரும்பாலானவர்களுக்கு இது ஒரு பெரிய உடல்நலப் பிரச்சினையை உருவாக்குவதில்லை.. குறிப்பாக அவர்கள் சீரான மற்றும் சத்தான உணவைப் பின்பற்றும்போது இது எந்தவொரு பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றே நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஆர்.ஓ. நீர் சுத்திகரிப்பு முறையில் பாக்டீரியா, வைரஸ்கள், கரைந்த உப்புகள், நீரில் உள்ள உலோகங்கள் மற்றும் பிற தீங்கு விளைவிக்கும் அசுத்தங்கள் நீக்கப்படும். இதற்காகத் தண்ணீரை செமி பெர்மியபிள் மெம்ப்ரன் (semi-permeable membrane) வழியாகச் செலுத்துவார்கள். நிலத்தடி நீரில் அதிக அளவு மாசு இருக்கும். அதுபோன்ற இடங்களில் குடிநீர் தரத்தை மேம்படுத்துவதில் இந்த செயல்முறை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

வடிகட்டும் முறை

இந்த வழிமுறையில் தண்ணீரைச் சுத்தமாக வடிக்கட்டிவிடும். ஆனால், அதற்கு மாசு மற்றும் சத்துகளுக்கு இடையே வித்தியாசம் தெரியாது. மாசையும் வடிகட்டும். கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற சில இயற்கையான தாதுகளை வடிகட்டும். அதாவது ஆர்.ஓ. செயல்முறை, தண்ணீரை மாசு இல்லாத ஒன்றாக மட்டும் மாற்றாது. மாறாகச் சத்து இல்லாத ஒன்றாகவும் மாற்றிவிடும்.. இது “அதிகப்படியான தூய்மை” காரணமாகவே ஆர்.ஓ. நீரை ஆரோக்கியமற்றது எனப் பலரும் கருதுகிறார்கள்.. இருப்பினும், வல்லுநர்கள் கருத்து இதில் வேறு விதமாக இருக்கிறது.

ஆர்.ஓ. முறை தாதுகளை நீக்கினாலும் கூட அந்த தாதுகளை நம்மால் பிற உணவுகளில் இருந்து ஈஸியாக எடுத்துக் கொள்ள முடியும். நமது உடலுக்குத் தேவையான தாதுகளில் மிகச் சிறிய பகுதி மட்டுமே குடிநீர் மூலம் கிடைக்கிறது. அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களில் பெரும்பாலானவை நாம் தினமும் உண்ணும் உணவுகளிலிருந்து கிடைக்கின்றன. எனவே, ஆர்ஓ நீரினால் சத்துக்கள் பற்றாக்குறை ஏற்படும் என்பது தவறான பார்வை என்கிறார்கள் மருத்துவர்கள்.!

உணவுகள்

தண்ணீர் மூலம் நமக்கு மிகக் குறைந்த அளவில் கிடைக்கும் கால்சியம், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுகளை எளிதாக உணவில் இருந்தே பெறலாம். பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் புரத ஆதாரங்கள் அடங்கிய சீரான உணவை ஒருவர் எடுத்துக் கொண்டால், அவர்களின் ஊட்டச்சத்துத் தேவைகள் பூர்த்தி செய்யப்படுகின்றன.

பால், தயிர், பனீர் போன்ற பால் பொருட்கள் மூலம் கால்சியம் சத்து தேவையைப் பூர்த்தி செய்ய முடியும்.. ராகி (கேழ்வரகு), எள், பாதாம் மற்றும் கீரை வகைகளும் நமக்கு சிறந்த ஆதாரங்களாகும். வலுவான எலும்புகள் மற்றும் பற்களைப் பராமரிப்பதில் கால்சியம் முக்கியப் பங்கு வகிக்கிறது. அத்துடன் நரம்பு மற்றும் தசை செயல்பாட்டையும் ஆதரிக்கிறது.

கவலை வேண்டாம்

மெக்னீசியம் நிறைந்த உணவுகளில் பூசணி விதைகள், முந்திரி மற்றும் பாதாம் போன்ற நட்ஸ் முக்கியமானவை. ஓட்ஸ் மற்றும் பழுப்பு அரிசி போன்ற முழு தானியங்கள், பருப்பு மற்றும் கொண்டைக்கடலை போன்ற பயறு வகைகள், மற்றும் பச்சைக் கீரை வகைகளும் மெக்னீசியத்தை வழங்குகின்றன. பொட்டாசியம் நிறைந்த உணவுகளாக வாழைப்பழம், இளநீர், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, பயறு வகைகள், பீன்ஸ் மற்றும் கீரை வகைகள் ஆகியவை உள்ளன. பொட்டாசியம் நீரின் சமநிலையை ஒழுங்குபடுத்தவும், இதயச் செயல்பாட்டை ஆதரிக்கவும் உதவுகிறது. எனவே, ஆர்.ஓ. தண்ணீரால் சத்துக்கள் போகும் என்ற கவலை வேண்டாம்!

எலக்ட்ரோலைட்

அதேபோல உடலில் எலக்ட்ரோலைட் சமநிலையைப் பாதிக்கக்கூடும் என்ற மற்றொரு கவலையும் இருக்கிறது. இருப்பினும், பெரும்பாலான நபர்களுக்கு இந்த பிரச்சினை ஏற்பட வாய்ப்பில்லை என்று மருத்துவர் நந்தா விளக்குகிறார். நமது உடலில் சிறுநீரகங்கள், ஹார்மோன்கள் மற்றும் உணவு எனச் சிக்கலான முறை மூலமாகவே எலக்ட்ரோலைட் பராமரிக்கப்படுகிறது. உடலுக்குத் தேவையான எலக்ட்ரோலைட்களும் உணவு மூலமாகவே பிரதானமாகக் கிடைப்பதால் ஆர்.ஓ. தண்ணீர் அதற்குக் காரணமில்லை.

சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால்.. ஆம் ஆர்ஓ முறை தண்ணீரில் இறுக்கும் சத்துகளையும் சேர்த்தே வடிகட்டுகிறது. இருப்பினும், அதனால் நமது உடலுக்கு எந்தவொரு பிரச்சினையும் வந்துவிடாது. அதையும் தாண்டி ஆர்.ஓ. முறை நமது குடிநீரைப் பாதுகாப்பானதாக மாற்றுகிறது. உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் மாசுக்களை அகற்றுகிறது. இது ஒட்டுமொத்த நலவாழ்வுக்கு அத்தியாவசியமானது. எனவே, ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது ஆர்.ஓ. வாட்டர் பாதுகாப்பானதாகவே இருக்கிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *