திருப்புவனம், ஏப்.12- சிவகங்கை மாவட்டம், கீழடியில் 2 ஏக்கர் பரப்பளவில் ரூ18.43 கோடியில் கட்டப்பட்ட நவீன அருங்காட்சியகத்தை பொதுமக்கள் பார்வைக்கு கடந்த மார்ச் 5ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மார்ச் மாதம் முழுவதும் பார்வையாளர்கள் இலவசமாக அனுமதிக்கப்பட்டனர். மார்ச் மாதம் 25 நாட்களில் 65 ஆயிரத்து 432 பேர், கீழடி அருங்காட்சியகத்தை நேரில் கண்டு ரசித்துள்ளனர். ஏப்ரல் 1ஆம் தேதி முதல் பெரியவர்களுக்கு ரூ30, சிறியவர்களுக்கு ரூ15 மற்றும் மாணவர்களுக்கு ரூ5 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.
இதேபோல் வெளிநாட்டு பார்வையாளர்களில் பெரியவர்களுக்கு ரூ50, சிறியவர்களுக்கு ரூ30, காட்சிப் பதிவு கேமரா பயன்படுத்த ரூ100 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. அதன்பின்னர் கடந்த 10 நாட்களில் 32 ஆயிரம் பேர், கட்டணம் செலுத்தி அருங்காட்சியகத்தை கண்டு ரசித்துள்ளனர். இந்தியாவிலேயே திறக்கப்பட்ட 35 நாட்களில் அருங்காட்சியகத்தை ஒரு லட்சம் பேர் கண்டு ரசித்தது சாதனையாக கருதப்படுகிறது. தற்போதும் தினமும் பள்ளி மாணவ, மாணவிகள் அருங் காட்சியகத்தை பார்வையிட வந்த வண்ணம் உள்ளனர்.