உலகம் இன்று செயற்கை நுண்ணறிவு (AI), விண்வெளி ஆராய்ச்சி மற்றும் ரோபோட்டிக்ஸ் என தொழில்நுட்பத்தின் உச்சத்தை நோக்கிப் பாய்ந்து கொண்டிருக்கிறது. பள்ளி மாண வர்கள் கைகளில் கணினிகளும், ஆய்வகக் கருவிகளும் இருக்க வேண்டிய இந்த காலத்தில், குஜராத் மாநிலம் வடோதராவில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் நடந்த நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வடோதரா அரசுப் பள்ளி ஒன்றில், ‘‘மாணவர்கள் அனைவரும் களிமண்ணால் ‘சிவலிங்கம்’ செய்து கொண்டு வர வேண்டும்’’ எனப் பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமின்றி, அவ்வாறு கொண்டு வரப்பட்ட சிவலிங்கங்களை வரிசையாகக் காட்சிப்படுத்தி, அதில் மிகச் சிறப்பாகச் செய்த மாணவர்களுக்குப் பரிசுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்தச் செயல் பல கேள்விகளையும் விவாதங்களையும் எழுப்பியுள்ளது:
வளர்ந்த நாடுகளின் மாணவர்கள் ஏஅய் (AI) மூலம் புதிய மென்பொருட்களையும், அறிவியல் மாதிரிகளையும் (Models) உருவாக்கிக் கொண்டிருக்கும் வேளையில், இந்திய அரசுப் பள்ளிகளில் மத அடையாளங்களை உருவாக்குவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவது ஆரோக்கியமான முன்னேற்றமா?
அந்தப் பள்ளியில் இந்து மாணவர்கள் மட்டுமின்றி, முஸ்லீம் மற்றும் கிறித்தவ மாணவர்களும் வேறு மத மாணவர்களும், மத நம்பிக்கையற்றவர்களும் பயில் கின்றனர். ஒரு மதச்சார்பற்ற நாட்டின் அரசுப் பள்ளியில், அனைத்து மத மாணவர்களையும் குறிப்பிட்ட ஒரு மதத்தின் அடையாளத்தைச் செய்யக் கட்டாயப்படுத்துவது அரசியல் சாசனத்திற்கு முரணானது.
மாணவர்களின் கற்பனைத் திறனை வளர்க்க ஓவியப் போட்டிகளோ அல்லது அறிவியல் கண்டுபிடிப்புகளோ நடத்தப்பட வேண்டும். அதற்குப் பதிலாக, ஒரே மாதிரியான மதச் சின்னங்களைச் செய்யச் சொல்வது அவர்களின் பரந்த சிந்தனைத் திறனைக் குறுக்கிவிடும் அபாயமாகும்.
கல்வி நிலையங்கள் என்பவை மதப் பரப்புரை செய்யும் இடங்கள் அல்ல; அவை மாணவர்களின் பகுத்தறிவை, அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் கூடங்கள்! 21-ஆம் நூற்றாண்டின் சவால்களை எதிர்கொள்ள மாணவர்களுக்குத் தேவைப்படுவது தொழில்நுட்ப அறிவும், அறிவியல் தேடலுமே தவிர, இதுபோன்ற மூடச் சடங்கு சார்ந்த பயிற்சிகள் அல்ல.
பள்ளிக் கல்வி என்பது மாணவர்களிடையே ‘அறிவியல் மனப்பான்மை’யையும், ‘வேற்றுமையில் ஒற்றுமை’யையும் வளர்ப்பதாக அமைய வேண்டுமே தவிர, குறிப்பிட்ட ஒரு மதத்தின் அடையாளங்களை முன்னிறுத்துவதாக இருக்கக் கூடாது என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.
இந்திய அரசமைப்புச் சட்டம் 51A(h) என்ன சொல்லுகிறது? ‘‘அறிவியல் மனப்பான்மை (Sceintific Temper), மனிதநேயம் (Humanism), ஆய்வு செய்யும் உணர்வு (Spirit of Inquiry) மற்றும் சீர்திருத்த எண்ணம் (Reform) ஆகியவற்றை வளர்ப்பது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமை’’ என்று வலியுறுத்துகிறது.
இதற்கு நேர் எதிராகக் கற்பனைக் கடவுளின் உருவத்தைக் களி மண்ணால் செய்து கொண்டு வர வேண்டும் என்று ஆசிரியர்கள் வலியுறுத்துவதும், அதன்படி மாணவர்கள் செய்து கொண்டு வருவதும், அவற்றுள் சிறந்ததற்குப் பரிசுகள் வழங்குவதும், எதிர்காலத்தை நிர்மாணிக்கும் மாணவர்களின் மூளைக்குள் களிமண்ணைத் திணிப்பது கிரிமினல் குற்றமல்லவா!
‘வேறு எதைச் செய்தாலும் மன்னிக்கலாம்; அறிவைக் கெடுக்கும் எதையும் மன்னிக்கவே முடியாது’ என்பார் அறிவுலக ஆசான் தந்தை பெரியார்.
வட மாநிலங்களில் தந்தை பெரியார் போன்ற தலைவர்களோ, திராவிடர் கழகம் போன்ற சமூகப் புரட்சி இயக்கமோ இல்லாததால் இத்தகைய மூடத்தனங்கள் கொடி கட்டிப் பறக்கின்றன.
சிவன் என்பவன் யார்? சிவனைப் பார்த்தவர் யார்? யாரோ எந்தக் காலத்திலோ உளறிக் கிறுக்கியது எல்லாம் கடவுளா? சிவன் உருவத்தைக் களிமண்ணால் செய்த மாணவர்கள், யார் இந்த சிவன் என்று தெரிந்து கொள்ள புராணங்களைத் தேடிச் சென்றால், அவர்களின் புத்தி என்னாவாகும்! அறியாமையும், ஆபாசமும் தானே கைகோத்துக் கூத்தாடும்! வெட்கக்கேடு!
