திருச்சி, மார்ச் 10- பெரியார் மருந்தியல் கல்லூரியில் தமிழ்நாடு அரசின் தேசிய நெடுஞ்சாலைத் துறையின் சார்பாக “சாலை போக்குவரத்து விதிகள் மற்றும் பாதுகாப்பு” குறித்த சிறப்புக் கருத்தரங்கம் 03.032026 அன்று காலை II மணியளவில் கல்லூரி அரங்கத்தில் நடைபெற்றது.
பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா.செந்தாமரை வரவேற்புரையாற்றினார். நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் திருச்சி சாலை பாதுகாப்பு துறையின் கோட்டப் பொறியாளர் ஆர்.புவனேஷ்வரி சாலை விதிகளை பின்பற்றாததால் ஏற்படும் உயிரிழப்புக்கள் குறித்து மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து உதவி கோட்டப் பொறியாளர் டி.கோமதி தமது சிறப்புரையில் தாம் பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் கல்வியை முடித்ததாக பெருமிதத்துடன் தெரிவித்ததோடு விலைமதிக்க முடியாத மனித உயிர்களை கவனக்குறைவாலும் அலட்சியத்தாலும் இழக்கக்கூடிய பேராபத்துதான் நாள்தோறும் சாலைகளில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என்றும் மாணவ சமுதாயம் இதில் அதிகமாக பாதிக்கப்படுவதாகவும் உரையாற்றினார். ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனங்களை இயக்குவது, தலைக்கவசம் அணியாமல் பயணம் செய்வது, சீட் பெல்டினை தவிர்ப்பது போன்ற காரணங்களால் உயிர்ச்சேதம் ஏற்படுவதாகவும் தலைக்கவசம் அணிந்திருப்பவர்களும் அதனை சரியான முறையில் அணியாததால் விபத்தின்போது மிகப்பெரிய பாதிப்பிற்கு ஆளாவதாகவும் உரையாற்றினார்.
தலைக்கவசம்தான் உயிர்க்கவசம்!
தலைக்கவசம்தான் உயிர்க்கவசம் என்றும் அதனை அணியாமல் வாகனங்கள் ஓட்டுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றும் கூறினார். மேலும் சாலைகளில் எதிர்பாரத விபத்து ஏற்படும்போது அணுக வேண்டிய தொலைபேசி எண்கள் மற்றும் நெடுஞ்சாலை போக்குவரத்துத் துறையின் பாதுகாப்பு விதிகள் மற்றும் அதனை சரியாக பின்பற்றாதவர்களுக்கு கிடைக்கக்கூடிய அபராதங்கள் குறித்து தெள்ளத்தெளிவாக ஒளிப்படக்காட்சியின் மூலம் விளக்கினார். உதவிப் பொறியாளர் எஸ்.கார்த்திகா கலந்து கொண்டு சிறப்பித்த இந்நிகழ்ச்சிக்கு துணை முதல்வர் முனைவர் கோ. கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார். பேராசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் என 400க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பயனடைந்த இந்நிகழ்ச்சியினை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பேராசிரியர் ஏ.ஜெசிமா பேகம் சிறப்பாக ஒருங்கிணைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
