அன்னையாரைப் போற்றுவோம்!

5 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

திராவிட இயக்க வரலாற்றில் அன்னை மணியம்மையாருக்கென்று தனி அடையாளமும்,  தன்னிகரற்ற அத்தியாயமும், முத்திரையும் உண்டு.

அவருடைய தந்தையார் மானமிகு கனகசபை தந்தை பெரியாரின் பெருமைமிகு சீடர். தந்தையை இழந்த அவர் வந்து சேர்ந்த இடம் தந்தைபெரியாரிடம் (1943).

சிறுவயது முதல் தந்தை பெரியாரின் கொள்கைபால் ஈர்க்கப்பட்டவர். தந்தை பெரியாரின் செவிலியராக, அவர் உடல் நலனைப் பாதுகாக்கும் தாயாக –  தந்தை பெரியார் மறைவிற்குப் பிறகு, அவர் கண்ட இயக்கத்தை வழி நடத்தும் தலைவராக பீடு நடை போட்டவர் அன்னை மணியம்மையார்.

அவர் கழகத் தலைவராக இருந்தது நான்காண்டுகள் தான் என்றாலும், அந்தக் காலகட்டத்தில் அவர் இயக்கத்தை வழி நடத்திய பாங்கு தனித் தன்மையானது.

தந்தை பெரியார் முதலாண்டு நினைவையொட்டி, அவர் நடத்திக் காட்டிய இராவண லீலா (25.12.1974) இனமான வரலாற்றில் என்றும் நிலைத்து நின்று மலைக்க வைக்கக் கூடிய ஒன்றாகும்.

ஒவ்வோராண்டும் தசரா பண்டிகையின்போது டில்லி ராம்லீலா மைதானத்தில் குடியரசு தலைவர் – பிரதமர் முன்னிலையில் இராவணனின் உருவத்தை எரித்துக் குதூகலித்ததுண்டு.

எந்த நேரு அவர்கள் ‘இராமாயணம் என்பது ஆரியர் திராவிடர் போராட்டம்’ என்று சொன்னாரோ, அதே பிரதமர் நேரு  ராம்லீலா நிகழ்ச்சியில் குடும்பத்தாருடன் கலந்துகொண்டு, இராவணனின் உருவப் பொம்மையை எரிக்கப்படுவதைக் கண்டு களித்ததை எப்படி நியாயப்படுத்த முடியும்?

அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில்தான் இராவண லீலாவை நடத்திக் காட்டினார் அன்னை மணியம்மையார். இராமன், சீதை, இலட்சுமணன் உருவங்களுக்கு அன்னையாரே தீ மூட்டினார்! அப்பப்பா! பெரியார் திடலில் நிரம்பி வழிந்த மக்கள் கடல் ஆர்ப்பரித்து ‘தந்தை பெரியார் வாழ்க!’ ‘அன்னை மணியம்மையார் வாழ்க! என்று ஒலித்த முழக்கம் அதுவரை பெரியார் திடல் கேட்டறியாதது– கண்டறியாத உணர்ச்சிக் கடல்!

(இந்த நிகழ்ச்சிக்கு முதல் நாள் மாலை அன்றைய கழகப் பொதுச் செயலாளர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்களும் மற்றும் கழகப் பொறுப்பாளர்களும் முன் கூட்டியே கைது செய்யப்பட்டனர்).

சென்னை கீழமை நீதிமன்றத்தில் (Metropolitan Magistrate Court, Egmore)

அய்.பி.சி. 153ஏ 295ஏ பிரிவுகளின்கீழ்  அன்னை மணியம்மையார் உட்பட 12 பேர்களுக்கு ஆறு மாதத் தண்டனை விதிக்கப்பட்டது!

அன்னை மணியம்மையார் மேல் முறையீடு செய்தார். மாவட்ட செஷன்ஸ் நீதிபதி திரு. பி. சோமசுந்தரம் கீழமை நீதிபதியின் தண்டனையை ரத்துசெய்தார் (11.10.1976).

‘இராவண லீலா மத உணர்ச்சியைப் புண்படுத்த வில்லை. கருத்தியல் – சமூக நடவடிக்கை’ என்று தன் தீர்ப்பில் குறிப்பிட்டார் செஷன்ஸ் நீதிபதி.

மேல்முறையீடு செய்து, இந்தத் தீர்ப்பைப் பெறுவ தற்குக் காரணமாக இருந்த அன்னை மணியம்மையார் அவர்கள்  இதன் மூலம் ‘பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்வது சட்டப்படி தவறானது அல்ல’ என்ற உரிமையைப் பெற்றுத் தந்தார்.

நெருக்கடி நிலை 1975 ஜூன் 25 அன்று பிரகடனப் படுத்தப்பட்டாலும், முத்தமிழ் அறிஞர் கலைஞர் தலைமையிலான தி.மு.க. ஆட்சியைக் கலைத்தது 31.1.1976 – அன்றே! அன்று இரவே திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் உட்பட தமிழ்நாட்டில் திராவிடர் கழகத்தின் முக்கிய பொறுப்பாளர்களும் கைது செய்யப்பட்டனர்.

நெருக்கடி நிலை காலத்தில் – வருமான வரித் துறையினரின் தொல்லை, ‘விடுதலை’ ஏட்டுக்குத் தணிக்கை போன்ற பல பிரச்சினையான தொல்லைகள் இறுக்கிப் பிடித்த நிலையிலும், அவற்றிற்கெல்லாம் ஈடு கொடுத்து நிமிர்ந்து நின்றவர் அன்னை மணியம்மையார்.

இயல்பாகவே அம்மா அவர்கள் போராட்டக் குணம் கொண்டவர்! தோற்றத்தில் அமைதியானவர் – எளிமையின் வடிவம்!

திருச்சி மருத்துவமனையில் கைவிடப்பட்ட குழந்தைகளை எடுத்து வளர்த்து ஆளாக்கிய அந்தத் தாயுள்ளம்– தொண்டறத்தின் தூய்மையை – எல்லையை என்னவென்று சொல்லுவது!

அந்தக் குழந்தைகளுக்கெல்லாம் தமிழில் பெயர் சூட்டி, முன்னொட்டாக ஈ.வெ.ரா.ம.  (E.V.R.M.) என்று வைத்தது உலக வரலாறு கண்டிராத ஒன்றாகும்.

அன்னை மணியம்மையாரின் குறிப்பிடத்தக்க அருஞ் செயல் ஒன்று – அதனை தி.மு.க. தலைவர் மானமிகு கலைஞர் அவர்கள் தனது ‘நெஞ்சுக்கு நீதி’ தன் வரலாற்று நூலில் (மூன்றாம் பாகம் 91) இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

‘‘கழகத்தின் செயற்குழுக் கூட்டத்தை பொருளாளர் பேராசிரியர் முன்னின்று கூட்டி விட்டார். பொறுப்புகளிலிருந்து விலகிய நானும், நாவலரும் அந்த செயற்குழுக் கூட்டத்தில் முதலில் கலந்து கொள்ளவில்லை – என்னையும், நாவலரையும் கலந்து பேசச் செய்திடும் முயற்சிகள் திராவிடர் கழகத் தலைவர் அன்னை மணியம்மையார் அவர்களாலும், தளபதி வீரமணி அவர்களாலும் எடுக்கப்பட்டு, பெரியார் திடலில் நாங்கள் இருவரும் கலந்து பேசினோம். இளமைக் காலந்தொட்டு இலட்சியப் பிணைப்பால் ஆழமாக வேரூன்றியிருந்த நட்பு எங்கள் இருவரையும் கண்ணீர் வடிக்கச் செய்தது. பேராசிரியர் அவர்கள் மற்றும் கழகத்தின் மூத்த தலைவர்களான மன்னை நாராயணசாமி, அன்பில் தர்மலிங்கம், சி.வி.எம். அண்ணாமலை ஆகியோர் அன்று மேற்கொண்ட மிகச் சிரமமான பணி வெற்றி அளித்து, நானும், நாவலரும் செயற்குழுக் கூட்டத்திற்குச் சென்றோம். எங்களின் பதவி விலகலை திரும்பப் பெற வேண்டுமெனச் செயற்குழு தீர்மானம் நிறைவேற்றியது. செயற்குழு முடிவை அறியவும், எங்கள் அறிவிப்பைக் கேட்கவும் சென்னை அரசினர்த் தோட்டம் சட்டமன்றக் கழக அலுவலகத்திற்கு முன்னால் பல்லாயிரம் பேர் திரண்டு இருந்தனர். அந்தக் கூட்டத்தின் மத்தியில் ஒரு மேசையைத் தூக்கிப் போட்டு அதில் ஏறி நின்று நானும், நாவலரும் பேசினோம்’’ என்று நெஞ்சுக்கு நீதியில் குறிப்பிட்டுள்ளார் மானமிகு கலைஞர் அவர்கள். அம்மா அவர்களுக்கு கலைஞர் அவர்கள் நன்றிக் கடிதமும் எழுதினார்.

தந்தை பெரியார் உடல்நிலையைக் கண்ணிமையெனக் காத்து, தமிழ்நாட்டு மக்களுக்குத் தந்தை பெரியாரின் தொண்டு கிடைப்பதற்குக் காரணமாக இருந்த அன்னையார் தன் உடல் நலனைப் பேணிக் கொள்ளவில்லை என்பது மிகப் பெரிய சோகமாகும்.

பத்து தடவைக்குமேல் இருதய பாதிப்புக்கு ஆளாகி 1978 மார்ச் 16 அன்று சென்னைப் பொது மருத்துவமனையில் கண் மூடினார்.

அவர்கள் மருத்துவமனையில் இருந்தபோது, கழகத்தின் பொதுக் குழுவை அவசரமாகக் கூட்டி (25.12.1977) தன்னுடைய பொறுப்பிலிருந்து உடல்நிலை காரணமாக விலகி, அப்பொறுப்பை ஆசிரியர் கி.வீரமணி ஏற்க வேண்டும் என்று அறிவித்தார் – அதனைக் கடுமையாக ஆசிரியர் அவர்கள் மறுக்கவே, கழகத்தின் நிரந்தரப் பொதுச் செயலாளர் ஆசிரியர் கி.வீரமணி என்ற தீர்மானத்தைப் பொதுக் குழு நிறைவேற்றியது.

அன்னையார் வரலாறு அரியதோர் பெட்டகம்! அவர்களின் பிறந்த நாளில், சில நிகழ்வுகளை நினைவுபடுத்துவது கழகத்தினருக்கு மட்டுமல்ல, நாட்டு மக்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நல் எண்ணத்தில்தான். உலகிலேயே ஒரு நாத்திக இயக்கத்திற்கு தலைமை தாங்கிய ஒரே பெண்மணி– வீராங்கனை நமது அருமை அன்னையார் அவர்களே! அவரை அவரின் 107ஆவது பிறந்த நாளாகிய இன்று போற்றுவோம்!

அவரின் தியாக வழியில் நடந்துகாட்டுவோம்!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *