கழுத்து வலி காரணமும், சிகிச்சையும்! மருத்துவர் தி.செந்தில்குமார் பிசியோதெரபி மருத்துவ நிபுணர், அரசு தேனி மருத்துவ கல்லூரி மருத்துவமனை, தேனி

5 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

இன்றைய வேகமான வாழ்க்கை முறையில் கழுத்து வலி என்பது மிகவும் பொதுவான உடல்நலப் பிரச்சினையாக மாறிவிட்டது. அலுவலக வேலை, கணினி பயன்பாடு, கைப்பேசி பயன்பாடு போன்றவை அதிகரித்ததால் இளம் வயதினரிடமும் கூட கழுத்து வலி அதிகமாகக் காணப்படுகிறது.

குறிப்பாக 40 வயதிற்கு மேல் உள்ளவர்களில் கழுத்து எலும்பு தேய்மானம் எனப்படும் நிலை அதிகமாக ஏற்படுகிறது. மருத்துவ மொழியில் இதை “செர்வைக்கல் ஸ்பாண்டிலோசிஸ்” என்று அழைப்பார்கள். ஆனால் பொதுமக்களுக்கு எளிமையாக புரியும் வகையில் இதை கழுத்து எலும்பு தேய்மானம் என்று சொல்லலாம்.

மனித உடலில் கழுத்துப் பகுதியில் ஏழு எலும்புகள் அமைந்துள்ளன. இந்த எலும்புகள் ஒன்றோடு ஒன்று இணைந்து தலையைத் தாங்கி நிற்க உதவுகின்றன. வயது அதிகரிக்கும் போது இந்த எலும்புகளுக்கிடையே இருக்கும் மென்மையான திசுக்கள் மெதுவாக தேயத் தொடங்குகின்றன. இதன் காரணமாக கழுத்தில் வலி, இறுக்கம் போன்ற பிரச்சினைகள் உருவாகின்றன.

இது மிகவும் பொதுவான பிரச்சினையாக இருந்தாலும், சரியான நேரத்தில் சிகிச்சை மற்றும் உடற்பயிற்சி மேற்கொண்டால் இதை நன்றாக கட்டுப்படுத்த முடியும்.

கழுத்து எலும்பு தேய்மானம் என்றால் என்ன?

நமது கழுத்து பகுதி மிகவும் நுணுக்கமான அமைப்பாகும். இதில் உள்ள எலும்புகள், தசைகள், நரம்புகள் அனைத்தும் ஒன்றோடு ஒன்று இணைந்து செயல்படுகின்றன. எலும்புகளுக்கு இடையே உள்ள மென்மையான தட்டு போன்ற அமைப்பு தலையின் எடையை தாங்கி அதிர்வுகளை குறைக்க உதவுகிறது. வயது அதிகரிக்கும் போது இந்த தட்டு மெதுவாக நீர்ச்சத்தை இழந்து தேய ஆரம்பிக்கிறது.

அதனால், எலும்புகளுக்கு இடையிலான இடைவெளி குறைகிறது. எலும்பின் விளிம்புகளில் சிறிய வளர்ச்சிகள் தோன்றுகின்றன. அருகிலுள்ள நரம்புகளுக்கு அழுத்தம் ஏற்படலாம். இந்த மாற்றங்களின் காரணமாக கழுத்து வலி மற்றும் கைப்பகுதிக்குச் செல்லும் வலி போன்ற பிரச்சினைகள் தோன்றுகின்றன.

கழுத்து எலும்பு தேய்மானம் ஏற்படும் காரணங்கள்

வயது அதிகரித்தல்: இந்த பிரச்சினையின் முக்கிய காரணம் வயது. 45 அல்லது 50 வயதிற்கு மேல் உள்ளவர்களில் இந்த தேய்மான மாற்றங்கள் இயல்பாகவே ஆரம்பிக்கலாம்.

தவறான உட்காரும் பழக்கம்: நீண்ட நேரம் கணினி முன் வேலை செய்வது, முன் குனிந்து உட்காருவது, கைப்பேசியை கீழே பார்த்து நீண்ட நேரம் பயன்படுத்துவது ஆகியவை கழுத்துத் தசைகளுக்கு அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன.

உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கை: நாள்தோறும் உடல் இயக்கம் இல்லாமல் இருப்பது தசைகளை பலவீனப்படுத்துகிறது. இதனால் கழுத்துப் பகுதியின் நிலைத்தன்மை குறைகிறது.

திடீர் காயங்கள்: சாலை விபத்துகள் அல்லது விளையாட்டு காயங்கள் காரணமாகவும் கழுத்து எலும்புகளில் மாற்றங்கள் ஏற்படலாம்.

மன அழுத்தம்: மன அழுத்தம் அதிகமாக இருந்தால் தசைகள் இறுக்கமாகி கழுத்து வலி அதிகரிக்கலாம்.

அறிகுறிகள்: கழுத்து எலும்பு தேய்மானம் ஏற்பட்டவர்களுக்கு பின்வரும் அறிகுறிகள் காணப்படலாம்.

கழுத்து வலி, கழுத்து இறுக்கம், தலையின் பின்புறத்தில் வலி, தோள்பட்டை வலி, கைக்கு செல்லும் வலி, கை விரல்களில் முள் குத்துவது போன்ற உணர்வு, கைப்பகுதியில் பலவீனம், சிலருக்கு தலைச்சுற்றல் அல்லது சமநிலை குறைவு போன்ற பிரச்சினைகளும் ஏற்படலாம்.

இந்த நோய் எவ்வாறு கண்டறியப்படுகிறது?

மருத்துவர் மருத்துவப் பயனாளியின் அறிகுறிகளை கேட்டு உடல் பரிசோதனை மேற்கொள்வார். கழுத்தின் இயக்கம், தசை வலிமை, நரம்புகளின் செயல்பாடு ஆகியவற்றை பரிசோதிப்பார். தேவைப்பட்டால் பின்வரும் பரிசோதனைகள் செய்யப்படலாம்: கழுத்து எலும்பின் படம் (எக்ஸ்-ரே), காந்த அதிர்வெண் படம் (எம்.ஆர்.அய்), கணினி படமெடுப்பு (சி.டி) இந்த பரிசோதனைகள் எலும்பு மற்றும் நரம்பு மாற்றங்களை தெளிவாக காட்ட உதவுகின்றன.

மருத்துவ சிகிச்சை: பெரும்பாலானவர்களுக்கு அறுவை சிகிச்சை தேவையில்லை. மருந்துகள் மற்றும் உடற்பயிற்சி மூலம் இந்த பிரச்சினையை கட்டுப்படுத்த முடியும்.

வலி குறைக்கும் மருந்துகள்: மருத்துவர் சில நேரங்களில் வலி மற்றும் வீக்கம் குறைக்கும் மருந்துகளை அளிக்கலாம்.

தசை தளர்த்தும் மருந்துகள்: கழுத்து தசை இறுக்கம் அதிகமாக இருந்தால் தசைகளை தளர்த்தும் மருந்துகள் கொடுக்கப்படலாம்.

அரிதான சந்தர்ப்பங்களில் அறுவை சிகிச்சை: நரம்புகளுக்கு கடுமையான அழுத்தம் ஏற்பட்டு கை பலவீனம் அதிகரித்தால் சில நேரங்களில் அறுவை சிகிச்சை தேவைப்படலாம்.

உடற்பயிற்சி மருத்துவத்தின் முக்கியத்துவம்: கழுத்து எலும்பு தேய்மான சிகிச்சையில் உடற்பயிற்சி மருத்துவம் மிகவும் முக்கியமான பங்கு வகிக்கிறது.

இதன் மூலம், வலி குறைகிறது. தசைகள் பலப்படுகின்றன. கழுத்து இயக்கம் அதிகரிக்கிறது. நரம்பு அழுத்தம் குறைகிறது. சரியான உடற்பயிற்சி முறைகளை தொடர்ந்து செய்தால் மருத்துவப் பயனாளிகள் தங்கள் இயல்பான வாழ்க்கைக்குத் திரும்ப முடியும்.

உடற்பயிற்சி மருத்துவ சிகிச்சை முறைகள்

மின்சிகிச்சை: சில இயந்திரங்கள் மூலம் மின்தடம் அளித்து வலியை குறைக்க உதவப்படுகிறது.

ஒலி அலை சிகிச்சை: மெல்லிய ஒலி அலைகள் தசை மற்றும் திசுக்களில் ஊடுருவி வலி மற்றும் இறுக்கத்தை குறைக்க உதவுகின்றன.

மெதுவான இழுப்பு சிகிச்சை: கழுத்து எலும்புகளுக்கு இடையில் இடைவெளி அதிகரிக்க உதவும் மெதுவான இழுப்பு முறைகள் பயன்படுத்தப்படுகின்றன.

கைமுறை சிகிச்சை: தசை இறுக்கத்தை குறைக்கவும் மூட்டு இயக்கத்தை மேம்படுத்தவும் நிபுணர்கள் கைமுறை சிகிச்சை வழங்குகின்றனர்.

கழுத்து வலிக்கான முக்கிய உடற்பயிற்சிகள்

தலையை முன் குனியும் பயிற்சி: மெதுவாக தலையை முன்புறம் குனிந்து சில விநாடிகள் வைத்திருக்க வேண்டும்.

தலையை பின்புறம் நகர்த்தும் பயிற்சி: மெதுவாக தலையை பின்புறம் நகர்த்தி கழுத்து தசைகளை நீட்ட வேண்டும்.

பக்கவாட்டில் சாய்வு: தலையை இடது மற்றும் வலது பக்கம் மெதுவாக சாய்க்க வேண்டும்.

கழுத்து திருப்பும் பயிற்சி: தலையை மெதுவாக வலது மற்றும் இடது பக்கம் திருப்ப வேண்டும்.

தோள்பட்டை உயர்த்தும் பயிற்சி: தோள்களை மேலே தூக்கி சில விநாடிகள் வைத்திருந்து பின்னர் தளர்த்த வேண்டும். இந்த பயிற்சிகள் கழுத்து தசைகளை பலப்படுத்தி வலியை குறைக்க உதவுகின்றன.

புதிய முன்னேற்றங்கள்

இன்றைய காலத்தில் உடற்பயிற்சி மருத்துவத்தில் பல புதிய முறைகள் பயன்படுத்தப்படுகின்றன.

தசை இறுக்கத்தை குறைக்கும் ஊசி முறை, மென்மையான திசு சிகிச்சை, ஒளி சிகிச்சை, கணினி வழி பயிற்சி வழிகாட்டுதல். இந்தப் புதிய முறைகள் மருத்துவப் பயனாளிகளின் மீட்பை விரைவாக்க உதவுகின்றன.

45 வயதிற்கு மேல் உள்ளவர்கள் கவனிக்க வேண்டியவை: இந்த வயதிற்கு பிறகு கழுத்து நலனை பாதுகாக்க சில வழிமுறைகள் அவசியம்.

அன்றாடம் நடைப்பயிற்சி, கழுத்து மற்றும் தோள்பட்டை பயிற்சிகள், நீண்ட நேரம் ஒரே நிலையில் அமராமல் இடைவெளி எடுத்து எழுந்து நிற்குதல், கைப்பேசியை கீழே பார்த்து நீண்ட நேரம் பயன்படுத்தாமல் இருத்தல், சரியான தலையணை பயன்படுத்துதல், கழுத்து எலும்பு தேய்மானத்தைத் தடுக்கும் வழிகள், ஒழுங்கான உடற்பயிற்சி, சரியான உட்காரும் நிலை, உடல் எடை கட்டுப்பாடு, ஆரோக்கியமான உணவு, போதுமான ஓய்வு.

இந்த வழிமுறைகளை பின்பற்றினால் கழுத்து வலி மற்றும் தேய்மான பிரச்சினைகளை பெருமளவு குறைக்க முடியும். கழுத்து எலும்பு தேய்மானம் என்பது வயது மற்றும் வாழ்க்கை முறையுடன் தொடர்புடைய ஒரு பொதுவான பிரச்சினையாகும். ஆனால் இது வாழ்க்கையை முடக்கும் நோயாக அல்ல. சரியான நேரத்தில் சிகிச்சை மேற்கொண்டு, மருத்துவர் மற்றும் உடற்பயிற்சி நிபுணர்களின் ஆலோசனைகளை பின்பற்றினால் இந்த பிரச்சினையை எளிதாக கட்டுப்படுத்த முடியும்.

நாம் நமது உடல்நலத்தை பாதுகாக்க அன்றாடம் உடற்பயிற்சி, சரியான உட்காரும் பழக்கம் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைப்பிடிக்க வேண்டும். அப்படிச் செய்தால் கழுத்து வலி போன்ற பிரச்சினைகள் நம்மை அதிகமாக பாதிக்காமல் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும்.

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *