ஆளுநர் பதவி தேவையா?

2 Min Read

ஆளுநர் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படு கிறார். குடியரசுத் தலைவரைப் போல அவர் மக்களால் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தேர்தல்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர் அல்லர். 

ஆளுநரின் பதவிக் காலம் பொதுவாக 5 ஆண்டுகள் ஆகும். ஆனால் குடியரசுத் தலைவரின் விருப்பத்தின் போதும், ஆளுநர் பதவி விலகல் செய்து புதியவர் பதவியேற்கும்  வரையும் ஆளுநர் பதவியில் நீடிப்பார்.

ஆளுநராக ஒருவர் நியமிக்கப்படுவதற்கு இந்திய அரசமைப்புச் சட்டம் 2 தகுதிகளை மட்டுமே வழங்குகிறது. இந்தியக் குடிமகனாக இருந்து, 35 வயதை நிறைவு செய்யாதவரை, ஆளுநராக நியமிக்க எந்த நபரும் தகுதியுடையவர் அல்ல.

இந்திய அரசமைப்புச் சட்டம் ஒவ்வொரு மாநிலத்திலும் ஆளுநர் பதவியை வழங்குகிறது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஓர் ஆளுநர் இருக்க வேண்டும் என்றும், சில சந்தர்ப்பங்களில், ஒரே நபர் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு ஆளுநராக நியமிக்கப்படலாம். ஆளுநர் மாநிலத்தின் தலைமை நிர்வாகத் தலைவர்.  ஆனால், அவர் இந்திய குடியரசுத் தலைவரைப் போன்று பெயரளவு அதிகாரத்தை மட்டுமே அனுபவிக்கிறார். மறுபுறம் ஆளுநர் ஒன்றிய அரசின் முகவராகவும் செயல்படுகிறார்.

1974இல், ஷம்ஷேர் சிங் – பஞ்சாப் மாநில வழக்கில் உச்சநீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் கொண்ட அரசமைப்புச் சட்ட அமர்வு அமைச்சர் குழுவின் ஆலோசனையின்படி செயல்பட மறுப்பதற்கு ஆளுநருக்கு உரிமை இல்லை என்று கூறி உள்ளது.

எஸ்.ஆர். பொம்மை வழக்கில் (1994) உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, “ஒன்றிய அரசின் தன்னிச்சையான ஏஜெண்டாக ஆளுநர் செயல்பட முடியாது. அரசின் பெரும்பான்மையைச் சோதிக்கும் ஒரே மன்றம் சட்டமன்றம்தான்” என்று தீர்ப்பளித்தது.

“சட்டமன்றத்தைப் பொருத்த வரையில் ஆளுநரின் பங்கு, அவையை அழைப்பதன் மூலம் முடிவடைகிறது” என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. “மக்கள் பிரதிநிதிகள் மீது, மாநில சட்டமன்றம் மற்றும் அல்லது முதலமைச்சரைத் தலைவராகக் கொண்ட அமைச்சர்கள் குழுவின்கீழ் செயல்படும் நிர்வாக அரசாங்கத்தின்மீது, ஆளுநருக்கு மேலான அதிகாரம் இருக்க முடியாது” என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அரசமைப்புச் சட்டப்படி, ஆளுநர் கட்சி தொடர்பான எந்தவொரு நடவடிக்கையிலும் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும், கூட்டத்தைக் கூட்டுவது முற்றிலும் முதலமைச்சரின் கீழ் உள்ளது.

அரசமைப்புச் சட்ட நிர்வாகத்தின் பாதுகாவலராக செயல்படக் கூடிய ஆளுநர்களின் நியமனம், அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகளுக்கு அரசியல் மற்றும் சட்டரீதியான ஒருமித்தக் கருத்தை உள்ளடக்கிய அரசமைப்புச் சட்டத் திருத்தம் தேவை. அவர் எந்த ஒரு கட்சி அல்லது சித்தாந்தத்துடன் நடந்து கொள்ளக் கூடாது மற்றும் ஒன்றிய அரசின் கட்டளைப்படியின் மட்டும் செயல்படக் கூடாது.

குடியரசுத் தலைவர் ஆட்சி நடந்தால் மட்டுமே. ஆளுநருக்கு என்று சில அதிகாரங்கள் உண்டு.

மற்றபடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி நடக்கும் போது தானடித்த மூப்பாக சண்டமாருதம் செய்யக்கூடாது – முடியாது.

ஆனால் ஒன்றியத்தில் எப்பொழுது பிஜேபி தலைமையில் ஆட்சி அமைந்ததோ அன்று முதல் ஆளுநர்கள் ஒன்றிய அரசின் அரசியல் ஆயுதமாக மாற்றப்பட்டு விட்டனர்.

வெள்ளைக்காரர்கள் ஆட்சியில் ஆளுநர்கள் தேவைப்பட்டு இருக்கலாம். இப்பொழுது நடப்பது குடியரசு ஆட்சி, ஜனநாயக ஆட்சி; இந்த நிலையில் ஆளுநர் பதவி தேவையா என்பது முக்கிய, பொருள் நிறைந்த கேள்வியாகும். 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *