இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பீடிகையில் உள்ள அடிப்படைக் கூறுகளைக் காப்பாற்ற, தமிழ்நாடு போராடுகிறது!
‘குரலற்றவர்களின் குரலாக’ இருப்பது பெரியார் மண்ணான தமிழ்நாடு தான்; இந்தியாவிற்கே வழிகாட்ட வேண்டும்!
வத்தலக்குண்டு, மார்ச் 9 ‘‘இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பீடிகையில் உள்ள அடிப்படைக் கூறுகளைக் காப்பாற்ற, தமிழ்நாடு போராடுகிறது’’ என்றும், குரலற்றவர்களின் குரலாக இருப்பது பெரியார் மண்தான்! தமிழ்நாடு தான்!’’ என்றும், ‘‘தமிழ்நாடு தான் இந்தியாவிற்கே வழிகாட்ட வேண்டும்’’ என்றும் வத்தலக்குண்டு பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் சுட்டிக்காட்டி உரையாற்றினார்.
‘‘2026 சட்டப்பேரவை தேர்தலும் –
நமது கடமையும்!’’ – பொதுக்கூட்டம்!
திண்டுக்கல் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில், ‘‘உலக மகளிர் நாள் – மார்ச் 8’’ மற்றும் ‘‘2026 சட்டப்பேரவை தேர்தலும் – நமது கடமையும்’’ எனும் தலைப்பில் நேற்று (8.3.2026) மாலை 6 மணியளவில், மதுரை சாலையில் வத்தலக்குண்டு ஸ்டேட் பேங்க் அருகில் உள்ள, பெரியார் திடலில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்டத் துணைச் செயலாளர் இரா.ஜெய பிரகாஷ் தலைமையேற்று உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் மு.ஆனந்த முனிராசன் அனைவரையும் வரவேற்று சிறப்பித்தார். திராவிடர் தொழிலாளர் கழகச் செயலாளர் மு.நாகராசன், நிலவை ஒன்றிய இணைச் செயலாளர் எம்.முத்துக்குமார், தேனி பகுத்தறிவாளர் கழகத் தோழர் அ.மோகன், மாவட்ட தலைவர் இரா.வீரபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்துச் சிறப்பித்தனர். பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநில தலைவர் முனைவர் வா.நேரு, மாநில மகளிர் பாசறை துணைச் செயலாளர் பாக்கியலெட்சுமி, மாநில ஒருங்கிணைப்பாளர் ஊ.ஜெயராமன், பழனி சட்டமன்ற உறுப்பினரும் – திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான அய்.பி.செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை ஏற்று உரையாற்றினர். மாநில ஒருங்கிணைப்பாளர் ஒரத்தநாடு இரா.குணசேகரன் நிகழ்ச்சியை ஒருங்கி ணைத்து நெறிப்படுத்தியும், இயக்கப் புத்தகங்களை பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தி, வாங்கிப் பயன்படுத்த வேண்டுகோள் விடுத்தும் உரையாற்றினார். கழகச் சொற்பொழிவாளர் தஞ்சை இரா.பெரியார் செல்வன் தொடக்க உரையாற்றினார்.
பி.எஸ்.எஸ். அவர்களும்,
சுயமரியாதை இயக்க மாநாடும்!
நான் நீண்ட நாட்களுக்கு பின்பு வத்தலக்குண்டில் பேச வந்திருக்கிறேன். வத்தலக்குண்டு என்பது சாதாரண மண் அல்ல. இது நீதிக்கட்சி மண்! சுயமரியாதை மண்! அன்றைக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் பி.எஸ்.சோமசுந்தரம். பி.எஸ்.எஸ். என்பதில் இருக்கும் ‘பி’ என்பதை, அன்றைக்கு ஆங்கிலத்தில் பத்தலக்குண்டு என்று தான் எழுதுவார்கள். இன்றைக்குக் கூட இங்கே வந்து ஒரு தோழர் என்னை சந்தித்தார். ‘‘சென்னையில் பி.எஸ்.எஸ். அவர்களின் நூற்றாண்டை கொண்டாடும்போது, நீங்கள் பேசினீர்கள். நானும் அங்கே இருந்தேன். அவருடைய பிள்ளை அய்யப்பன் இன்று மருத்துவராக இருக்கிறார்’’ என்று பழைய நினைவுகளைச் சொன்னார். அந்த பி.எஸ்.சோமசுந்தரம் அவர்கள்தான், 80 ஆண்டுகளுக்கு முன்பு, வத்தலக்குண்டுவில் சுயமரியாதை இயக்க மாநாடு நடத்தியவர்! அப்படிப்பட்ட மண்ணில் தான் இப்போது நாம் பேசிக்கொண்டு இருக்கிறோம்.
(தமிழர் தலைவர் ஆசிரியர் உரையிலிருந்து, வத்தலக்குண்டு, 8.3.2026)
மூன்று புத்தகங்கள் அறிமுகம்!
தஞ்சை மகளிரணி – மகளிர் பாசறை மாநில மாநாட்டில் வெளியிடப்பட்ட ‘பெண்கள் முன்னேற் றத்திற்கு தந்தை பெரியார் செய்தது என்ன?’, ‘பெண் ஏன் அடிமையானாள்?’, 50 ஆம் பதிப்பு, ‘அறிஞர் அண்ணாவின் கடைசி கடிதம்’ ஆகிய மூன்று புத்தகங்களை, மாநில மகளிரணிச் செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி அறிமுகம் செய்து உரையாற்றினார்.
சிறப்பு அழைப்பாளர்கள்
தி.மு.க. தோழர்கள் வழக்குரைஞர் அணித் தலைவர் மு.அன்பழகன், ஒன்றிய செயலாளர் கே.பி.முருகன், ஒன்றியச் செயலாளர் என்.கனிக்குமார், ஒன்றியச் செயலாளர் பெ.கனகதுரை, பேரூர் கழகச் செயலாளர் சின்னத்துரை, தமிழ்நாடு உழவர் இயக்க அமைப்பாளர் பெ.ச.உலகநம்பி, ம.தி.மு.க. ஒன்றியச் செயலாளர் வால்டர்ராஜா, சி.பி.எம். ஒன்றியச் செயலாளர் ஸ்டாலின் ராஜா, காங்கிரஸ் கட்சி வட்டாரத் தலைவர்கள் காமாட்சி, கோகுல்நாத், பேரூராட்சி தலைவர் சிதம்பரம் வி.சி.க. ஒன்றியச் செயலாளர் பாக்யராஜ், திராவிட வெற்றிக் கழக மாவட்டச் செயலாளர் மருது ஆறுமுகம், ஒன்றிய அமைப்பாளர் ஆட்டோ சுந்தர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

புதிய நூல்களை வெளியிட்டார்
தமிழர் தலைவர் ஆசிரியர்
பழனி சட்டமன்ற உறுப்பினரும் – திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான
அய்.பி. செந்தில்குமார், கழகத் தலைவருக்குப் பொன்னாடை அணிவித்து மரியாதை செய்தார். கழகத் தலைவரும் அவருக்குப் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார். பொதுக்கூட்டத்திற்கான பதாகைகளை வடிவமைப்பு செய்த மகாமுனிக்கு ஆசிரியர் சிறப்பு செய்தார். தொடர்ந்து, ‘வந்தேமாதரம் வாழ்த்துப் பாடலா? வசைப்பாடலா?’, ‘முதல் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் – வரலாற்றைத் திரிப்பது யார்?’ ஆகிய இரண்டு நூல்களை, கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வெளியிட, பழனி சட்டமன்ற உறுப்பினர் அய்.பி. செந்தில்குமார் பெற்றுக் கொண்டதோடு, 100 புத்தகங்களையும் வாங்கிக் கொண்டார்.
அடுத்து, நிலக்கோட்டை ஒன்றிய இளைஞரணித் தலைவர் தோழர் ராஜ்குமார் – கவுசல்யா இணையர்களின் பெண் குழந்தைக்கு ஆசிரியர் அவர்கள், ‘‘அறிவுச்செல்வி’’ என்று, பலத்த கைதட்டல்களுக்கு இடையே பெயர் சூட்டினார். முன்னதாக தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் படங்களுக்குத் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், மாலை அணிவித்து மரியாதை செய்தார். நிறைவாக கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரையாற்ற அழைக்கப்பட்டு, பேசினார்.
தமிழர் தலைவர் ஆசிரியர் உரை
அவர் தனது உரையை, மேடையில் இருக்கும் ஆளுமைகளையும், முன்னிலை ஏற்று சிறப்பித்துக் கொண்டிருக்கும் தோழர்களையும் விளித்துப் பேசுகின்ற போது, பழனி சட்டமன்ற உறுப்பினரும் – திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான அய்.பி.செந்தில்குமார் பற்றி சிறப்பித்துப் பேசினார். அதாவது, ‘‘நாங்கள் திண்டுக்கல்லுக்கு வந்தாலும், பழனிக்கு வந்தாலும், நம்முடைய மாண்புமிகு அமைச்சர் அய்.பி. அவர்கள் கலந்து கொள்வார்கள். அதற்கு அடுத்தபடியாக இளம் சிங்கமாக இருக்கக் கூடிய; போர் வீரராக இருக்கக்கூடிய கொள்கை வீரர் அய்.பி.செந்தில்குமார் அவர்கள், தவறாமல் கலந்து கொண்டு ஓர் அருமையான உரையைத் தந்திருக்கிறார். பதவிக்காக இளைஞர்கள் பலர் வருவார்கள். ஆனால், இவர் கொள்கைக்காக பக்குவப்படுத்தப்பட்டு இருப்பவர், அய்.பி.எஸ். என்று சொல்லக்கூடிய நமது செந்தில் குமார் அவர்கள்’’ என்று கூறிவிட்டு, ‘‘சில அய்.பி.எஸ்.கள் வேறு கட்சிக்குள் இடையில் வந்தார்கள். இப்போது காணாமல் போய்விட்டார்கள். இந்த அய்.பி.எஸ். என்றைக்கும் கொள்கையோடு இருக்கக்கூடியவர்’’ என்று சிறப்பித்து பேசிவிட்டு, அய்.பி.எஸ். என்ற பெயரை, இன்னார் என்பதை குறிப்பிடாமல், சிலேடையாகப் பேசியதும், மக்கள் புரிந்து கொண்டு, வெடிச் சிரிப்புடன் கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

தொடர்ந்து பேசும்போது, ‘‘இன்று மகளிர் நாள்’’ என்று குறிப்பிட்டு, திராவிட இயக்கம் மகளிருக்காகச் செய்த பல்வேறு சாதனைகளை பட்டியலிட்டுப் பேசினார். தொடக்கத்தில் கூட்டத்தை முன் வரிசையில் ஆண்கள் மட்டுமே அமர்ந்திருந்ததையும், மகளிர் அதிகமாக வந்த போது, உட்கார்ந்திருந்த ஆண்கள் தாமாக எழுந்து பெண்களுக்கு வழி விட்டதையும் சுட்டிக்காட்டி, ‘‘மகளிர் உரிமை நாளில் இந்தச் சம்பவம் மிக, மிக முக்கியமானது’’ என்றும், ‘‘இது எதனால் நடந்தது? எப்படி வந்தது?’’ என்று கேள்வி கேட்டு, சுயமரியாதை இயக்கமும், தந்தை பெரியாரும் நூறாண்டு காலமாக விதைத்த விதைகள் தான் இதற்குக் காரணம்’’ என்று சுட்டிக்காட்டினார்.
திராவிடர் இயக்கம் போட்டுத் தந்த அடிக்கட்டுமானத்தின் மீது செய்த மகத்தான சாதனை!
மேலும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தனது உரையில், ‘‘நூறாண்டுகளுக்கு முன்பு ஆசிரியர்கள், மக்கள் தொகை கணக்கெடுக்கும் போது, பெண்களிடம் தங்கள் கணவனின் பெயரை கேட்பதற்குள் அவர்கள் படாத பாடுபட்டு விடுவார்கள்’’ என்றும், ‘‘‘பழனிச்சாமி’ என்று கணவனின் பெயரைச் சொல்வதற்குள் போதும் போதும் என்றாகிவிடும்’’ ஆனால், இன்றைக்குப் பெண்களின் நிலை என்ன? இதோ, திண்டுக்கல் மாவட்டம் வாடிப்பட்டியில் எளிய குடும்பத்தில் பிறந்த ஒரு பெண், டி.என்.பி.எஸ்.சி. குருப் 1 தேர்வில் வெற்றி பெற்று திண்டுக்கல் மாவட்டத்திற்கே துணை ஆட்சியராக வந்திருக்கிறார். அவர், ‘‘நான் முதல்வன்’’ திட்டத்தின் மூலம் பயின்று யு.பி.எஸ்.சி. தேர்வில் இந்திய அளவில் இரண்டாம் இடத்தைப் பெற்றிருக்கிறார். 100 ஆண்டுகளில் திராவிடர் இயக்கம் போட்டுத் தந்த அடிக்கட்டுமானத்தின் மீது செய்த மகத்தான சாதனை இது’’ என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டதுடன், ‘‘அதைச் செய்தது இந்தத் ‘திராவிட மாடல்’ அரசின் நாயகர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் தான்’’ என்று அழுத்தம் திருத்தமாக குறிப்பிட்டு விட்டு, ‘‘இதை இன்றைய பழனிசாமிகள் உணர வேண்டும்’’ என்றதும், மக்கள் மெய்சிலிர்த்துப் போயினர். தொடர்ந்து, ‘‘இதனாலேயே இந்த ‘திராவிட மாடல்’ அரசு மறுபடியும் வந்துவிடக்கூடாது என்று சிலர் சூழ்ச்சி செய்து கொண்டிருக்கின்றனர்’’ என்று நடப்பு நிலையையும் சுட்டிக் காட்டினார்.

‘‘இந்து மதம் எங்கே போகிறது?’’
ஏன் இப்படிப்பட்ட சூழல் நிலவுகிறது என்பதை மக்களுக்கு விளக்குவதற்காக இந்திய அரசியலமைப்புச் சட்ட புத்தகத்தையும், மனுதர்ம புத்தகத்தையும் கையில் வைத்துக்கொண்டு விளக்கினார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் அதன் வரைவுக் குழுவின் தலைவராக இருந்த சட்ட மாமேதை பாபாசாகேப் அண்ணல் அம்பேத்கர் அவர்கள், அதன் பீடிகையில் அய்ந்து அம்சங்களாக, ‘இறையாண்மை’, ‘சமதர்மம்’, ‘மதச்சார்பின்மை’, ‘ஜனநாயகம்’, ‘குடியரசு’ என்று சேர்த்து இருந்ததையும், அதைக் குழிதோண்டிப் புதைப்பதற்காக இன்றைய ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. அரசு முயன்று கொண்டிருப்பதையும் எடுத்துரைத்தார். அதைச் சிதைப்பதற்குக் காரணமாக – மூலமாக இருப்பது தான் மனுதர்மம் என்றும் விவரித்தார். அதைத்தொடர்ந்து, மனுதர்மம் எப்படி மனிதர்களை பேதப்படுத்தியது என்றும், பெண்களுக்கு எதிரான என்னென்ன சிந்தனைகளைக் கொண்டிருக்கிறது என்றும், அக்னி ஹோத்திரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் எழுதிய, ‘‘இந்து மதம் எங்கே போகிறது?’’ என்ற புத்தகத்தில் இருந்து தரவுகளுடன் படித்துக் காட்டி புரிய வைத்தார்.
வருகின்ற சட்டமன்றத் தேர்தல்:
சமதர்மத்துக்கும் – குலதர்மத்துக்கும் இடையில் நடக்கும் ஒரு தத்துவப் போர்!
ஆயிரமாயிரம் ஆண்டுகளாக பெண்களின் நிலை இப்படி அடிமைப்பட்டுக் கிடந்தது என்றும், நூறாண்டுகளுக்கு முன்பு வந்த சுயமரியாதை இயக்கமும், திராவிடர் இயக்கமும் தான் அதை மீட்டுக் கொடுத்திருக்கிறது என்றும் விளக்கினார். அதைத் தொடர்ந்து, ‘‘திராவிட இயக்கத்தின கொள்கைகளை இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக் கொண்டிருக்கிறது’’ என்றும், ‘‘அதை மாற்றி மனுஸ்மிருதியை அரசியலமைப்புச் சட்டமாக மாற்ற வேண்டும்’’ என்றும், ‘‘ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. வும் முயற்சிக்கிறது என்றும், ஆர்.எஸ்.எஸ். சுக்கும், திராவிடர் இயக்கத்துக்கும் இடையே ஒரு பெரும் போர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த பெரும் போர் தான், 2026 இல் நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் ஆகும்’’ என்றும், நடைபெற இருப்பது வெறும் தேர்தல் அல்ல என்பதையும் தாண்டி, இது சமதர்மத்துக்கும் – குலதர்மத்துக்கும் இடையில் நடக்கும் ஒரு தத்துவப் போர் என்பதை ஆழமாக மக்களுக்கு உணர்த்தினார்.

உங்களுக்காக, உங்கள் தலைமுறையினருக்காக…
தொடர்ந்து, Hindu code bill மூலம், பெண்களுக்குத் தகப்பன் சொத்தில் பங்கு வேண்டும் என்று சட்டம் செய்ய முயன்று அம்பேத்கர் தோற்றத்தையும், சுயமரியாதை இயக்கம் அளித்த தீர்மானத்தை முத்தமிழ் அறிஞர் கலைஞர் சட்டமாக்கியதையும் இன்றைய ‘திராவிட மாடல்’ அரசின் நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்கள், மகளிர் உரிமைக்குக் கொண்டு வந்துள்ள பல்வேறு திட்டங்களையும் சுட்டிக்காட்டி, திராவிடர் இயக்கம் மனித சமூகத்தில் சரி பங்காக இருக்கும் பெண்களின் உரிமைக்குப் போராடிய பல்வேறு விஷயங்களையும் சுட்டிக்காட்டி, மகளிர் உரிமை நாளில் பொருள் பொதிந்த ஒரு மாலை நேர, திராவிட தத்துவ வகுப்பாகவும், அதையே, ஒன்றிய அரசின் இடையூறுகளையும் ஆளுநர் போன்ற அடாவடி பேர்வழிகளின் குறுக்கீடுகளையும் சுட்டிக்காட்டி, ‘‘வராது வந்த இந்த அரசை சிக்கெனப் பிடித்துக் கொள்ள வேண்டும். அது எங்களுக்காக அல்ல; முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலினுக்கான அல்ல; கூட்டணி கட்சிகளின் தலைவர்களுக்காக அல்ல; உங்களுக்காக, உங்கள் தலைமுறையினருக்காக’’ என்று அறுதியிட்டுக் கூறி, மக்களுக்கு சரியான வழியைக் காட்டி நிறைவு செய்தார்.
மாவட்ட இளைஞரணித் தலைவர் இரா.சக்தி சரவணன் நன்றி கூறி, நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.
பங்கேற்றோர்
மதுரை புறநகர் மாவட்ட தலைவர் எரிமலை, மாவட்டச் செயலாளர் முத்து கருப்பன், பெரியகுளம் அன்புக்கரசன், மோகன், தேனி மாவட்ட செயலாளர் சுருளி ராஜன், ஆண்டிப்பட்டி ஸ்டார் நாகராசன், கண்ணன், மதுரை மாவட்டத் துணைத் தலைவர் வழக்குரைஞர் ஆனந்தன், கோரிக்கடவு திராவிடச் செல்வன், திண்டுக்கல் நகரத் தலைவர் மாணிக்கம், நகரச் செயலாளர் செல்வம், தாராபுரம் வழக்குரைஞர் சக்திவேல், பொதுக்குழு உறுப்பினர் சதாசிவம், பெரியார் பெருந்தொண்டர் மன்னர் மன்னன், மதுரை அல்லி ராணி, திராவிடர் தொழிலாளர் கழகத் தலைவர் சிவகுருநாதன், செயலாளர் நாகராஜன், ஊற்றங்கரை சரவணன் மற்றும் அனைத்துக் கட்சிகளைச் சார்ந்த தோழர்கள், பொறுப்பாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு, கண்டு, கேட்டு தெளிவு பெற்றனர்.
