பாட்னா,ஏப்.12- நாடாளுமன்ற தேர்த லில் பா.ஜ.க.வுக்கு எதி ராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற் சியில் ஈடுபட பீகார் முதல்-அமைச்சர் நிதிஷ் குமார் டில்லிக்கு புறப்பட்டு சென்றார். சோனியா உள்ளிட்ட தலைவர்களைச் சந்திக்க அவர் திட்டமிட்டுள்ளார்.
அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடக்க உள்ளது. இந்தத் தேர்தலில் தொடர்ந்து 3-ஆவது முறையாக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்து ‘ஹாட்ரிக்’ சாதனை படைக்க மத்தியில் ஆளும் பா.ஜ.க. தீவிரம் காட்டி வருகிறது. மாநில வாரியாக வெற்றிக்கனி பறிப்பதற்கான உத்திகளை அந்தக் கட்சி தீவிரமாக வகுத்து வருகிறது. இதற்கு மத்தியில், நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து ஒரே அணியாக போட்டியிடச் செய்வதற்கான நடவடிக்கையில் ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவரும், பீகார் முதலமைச்சரான
நிதிஷ்குமார் தீவிரம் காட்டி வருகிறார்.
ஏற்கெனவே கடந்த ஆண்டு, அவர் டில்லிக்கு சென்று, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், இந்திய கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, சமாஜ்வாடி கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோரைச் சந்தித்துப்பேசினார். எதிர்க்கட்சிகள் ஒன்றுபட வேண்டியதின் அவசி யத்தை விளக்கினார்.
இந்த நிலையில் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியைத் தொடர்வதற்காக நிதிஷ் குமார் நேற்று (11.4.2023) டில்லிக்கு புறப்பட்டுச்சென்றார்.
அவர் காங்கிரஸ் கட்சியின் மேனாள் தலைவர் சோனியா காந்தி, தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராஷ்டிரிய ஜனதாதளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட தலைவர்களைச் சந்திக்க திட்டமிட் டிருக்கிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டுவதில் காங்கிரஸ் முன்னிலையில் இருக்க வேண்டும்; எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டால், பா.ஜ.க.வை எளிதாக வீழ்த்தி விட முடியும் என்று அவர் வலி யுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.