சென்னை, மார்ச் 8 தமிழ்நாட்டில் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற 60 பேரில் 55 பேர் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றவர்களாவர்.
யு.பி.எஸ்.சி சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் 6.3.2026 அன்று வெளியானது. இதில், அகில இந்திய அளவில், மதுரையைச் சேர்ந்த ராஜேஸ்வரி சுவே 2-ஆவது இடத்தையும், ராஜா மொய்தீன் 7-ஆவது இடத்தையும் பிடித்து தமிழகத்திற்குப் பெருமை சேர்த்துள்ளனர். இவர்கள் தமிழ்நாடு அரசின் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் போட்டி தேர்வுகளுக்கான வழிகாட்டுதல் மற்றும் பயிற்சி பெற்றவர்களாவர்.
சுமார் பத்து ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் அகில இந்திய அளவில் முதல் 10 இடங்களுக்குள் இடம்பிடித்துள்ளனர். இந்த ஆண்டு ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற 55 பேர் சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் 39 பேர் தமிழ்நாடு அரசின் அகில இந்திய குடிமைப் பணி தேர்வுப் பயிற்சி மய்யத்தில் தங்கிப் பயின்று, மாதந்தோறும் உதவித்தொகை பெற்று வந்தவர்கள்.
சென்ற ஆண்டு ‘நான் முதல்வன்’ திட்டத்தின் உதவியுடன் தமிழ்நாட்டில் 57 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்த ஆண்டு தமிழ்நாடு முழுவதிலும் இருந்து மொத்தம் 60-க்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அகில இந்திய அளவில் 2-ஆவது இடத்தை பிடித்த ராஜேஸ்வரி கடந்த எட்டு ஆண்டுகளாக யு.பி.எஸ்.சி தேர்வுக்குத் தயாராகி வருகிறார். மேலும் தனது 6-ஆவது முயற்சியிலேயே அவர் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
மேலும், இவர் குரூப்-1 தேர்வில் தேர்ச்சி பெற்று தற்போது துணை ஆட்சியராகப் பணியாற்றி வருகிறார். தொடர்ந்து, 7-ஆவது இடத்தை பிடித்த ராஜா மொய்தீன் 3-ஆவது முயற்சியிலேயே தேர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.
