தமிழ்நாட்டில் 50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதி

6 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, மார்ச் 8  தமிழ்நாட்டில் 2030-ஆம் ஆண்டை இலக்காக கொண்டு பல்வேறு தொலைநோக்குத் திட்டங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். தொழில் துறையில் ரூ.18 லட்சம் கோடி முதலீடு, 50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ‘ஸ்மார்ட் வகுப்பறை’, விவசாய சாகுபடி பரப்பு 50 லட்சம் ஹெக்டேராக அதிகரிப்பு என்பது உட்பட பல்வேறு திட்டங்கள் ‘திராவிட மாடல் 2.0’ ஆட்சியில் செயல்படுத்தப்படும் என்று அவர் உறுதியளித்தார்.

தமிழ்நாடு அரசின் ‘உங்க கனவ சொல்லுங்க’ திட்டத்தின் நிறைவாக ‘தமிழ்நாடு 2030 – கனவுகள் மெய்ப்படும்’ எனும் தலைப்பிலான கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மய்யத்தில் 6.3.2026 அன்று நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது: கடந்த 5 ஆண்டுகளில் ஒவ்வொரு துறையிலும் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நலத் திட்டங்களால் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். அரசின் திட்டங்களால் பயனடையாத குடும்பங்களே தமிழ்நாட்டில் இல்லை என்று கூறும் அளவுக்கு ஒவ்வொரு தரப்புக்கும் பார்த்துப் பார்த்து செய்துள்ளோம்.

‘திராவிட மாடல்’ 2.0 ஆட்சி இருக்கும்

அரசியல் ரீதியாக எழுந்த சில நெருக் கடிகளை சமாளித்துதான் பல திட்டங்களை செயல்படுத்தினோம். இந்த ஆட்சியின் சாதனைகளை நம்பி உறுதியாக கூறுகிறேன். அடுத்தும் திமுக ஆட்சிதான். நமது சாதனைகளின் தொடர்ச்சியாக திராவிட மாடல் 2.0 ஆட்சி இருக்கும்.

தி.மு.க. அரசின் சாதனைக் குவியல்கள்!
* 2016-2021 அய்ந்து ஆண்டுகளில் முந்தைய ஆட்சியில் 1 இலட்சம் வீடுகள் தான் கட்டப்பட்டன. ஆனால் 2024-2026 இரண்டே ஆண்டுகளில் 1,79,850 வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டு, மேலும் 1 இலட்சத்து 20 ஆயிரத்து 150 வீடுகள் கட்டப்படுகின்றன.
* கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் மட்டும் அல்ல… இலங்கை தமிழர்களுக்கு ரூ.589 கோடி ஒதுக்கீட்டில் 10,045 நிரந்தர வீடுகள் கட்டுவதற்கு அனுமதிக்கப்பட்டு 7,469 வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டுள்ளன. மேலும் தொடர்ந்து 1 இலட்சத்து 79 ஆயிரத்து 850 வீடுகள் கட்டப்படுகின்றன.
* தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம், ரூ.3,058 கோடியில் 2.63 இலட்சம் வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டுள்ளன. அடுக்குமாடி குடியிருப்புகள் திட்டத்தின்கீழ் ரூ.8,384 கோடியில் 58,211 வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டு; மேலும் 53,467 வீடுகளின் கட்டுமான பணிகள் நடைபெற்றுவருகின்றன.
* இந்தத் திட்டத்தில் ஒரு ஒப்பீடு : 2016-2021 முந்தைய ஆட்சியில் 27,688 வீடுகள் மட்டுமே கட்டப்பட்டன. ஆனால், 2021-2026 திராவிட மாடல் ஆட்சியில் 58,211 வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டு சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
* திராவிட மாடல் அரசு அறிமுகப்படுத்திய அயோத்திதாச பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டத்தில், ரூ.482 கோடி மதிப்பீட்டில் 5,281 உட்கட்டமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
* வழங்கப்பட்ட வீட்டுமனை பட்டாக்கள் : 2021-2026 திராவிட மாடல் ஆட்சியில் 23.56 இலட்சம் ஏழைகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.
* பழங்குடியினர் நலம் நாடும் தொல்குடி திட்டத்தில், ரூ. 221 கோடி மதிப்பீட்டில் 7,674 பழங்குடியின மக்களுக்கு வீடுகள் கட்டப்பட்டுளன.
* ஒற்றைச் சாளர முறை திட்டத்தின்கீழ், 24,446 மனைப்பிரிவு விண்ணப்பங்களுக்கும், 2002 கட்டட அனுமதி விண்ணப்பங்களுக்கு திராவிட மாடல் அரசு அனுமதி வழங்கியுள்ளது.
ஆகமொத்தம், திராவிட மாடல் அரசு 2021 முதல் அய்ந்து ஆண்டுகளில் ரூ.19,694 கோடியில் ஏழைகளுக்காக 4,29,394 வீடுகளைக் கட்டியுள்ளது. ரூ.482 கோடியில் ஆதிதிராவிடர் வாழும் பகுதிகளில் 5,281 கட்டமைப்புப் பணிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. 23.56 இலட்சம் ஏழைகளின் குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.
இப்படி எல்லாருக்கும் எல்லாம் என்னும் தத்துவத்தின்படி திராவிட மாடல் அரசு ஏழை எளிய நலிந்த சமுதாய மக்களின் அடிப்படைத் தேவைகளை எல்லாம் படிப்படியாக நிறைவேற்றி தமிழ்நாட்டிற்குப் பெருமைகளைச் சேர்க்கிறது!

அடுத்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் வளர்ச்சி எப்படி இருக்க வேண்டும் என ஒரு ‘ப்ளூ பிரின்ட்’ தயாரிக்க திட்டமிட்டோம். அதற்காக, தமிழ்நாட்டின் 1.80 கோடி குடும்பங்களிடம் நேரடியாகசென்று, அவர்களது தேவைகளைக் கேட்டறிந்தோம். அதில் முன்னுரிமை அடிப்படையில் ‘தமிழ்நாடு 2030’ எனும் 14 முக்கிய அம்சங்களை அறிவிக்கிறேன்.

2030-ஆம் ஆண்டுக்குள் கிராமப்புறங்களில் ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தின்கீழ் 5 லட்சம் வீடுகள், நகர்ப்புறங்களில் 2 லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும்.

‘நலமுடன் தமிழ்நாடு 2030’ திட்டத்தில் அனைவருக்கும் போதிய மருத்துவக் காப்பீடு கிடைக்க வழிசெய்யப்படும். நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், புற்றுநோயைக் கண்டறிய சிறப்பு முகாம்கள், மாவட்டம்தோறும் மனநல ஆலோசனை மய்யம் அமைக்கப்படும்.

43 லட்சம் உழவர்களுக்கு

விவசாய சாகுபடி பரப்பு 50 லட்சம் ஹெக்டேராக உயர்த்தப்படும். 43 லட்சம் உழவர்களுக்கு மண்வள அட்டைகள் வழங்கப்பட்டு, இயற்கை விவசாயம் 17 ஆயிரம் ஹெக்டேராகவும், உயிர் வேளாண்மை ஒரு லட்சம் ஹெக்டேராகவும் விரிவுபடுத்தப்படும். நுண்ணீர்ப் பாசனம் 21 லட்சம் ஹெக்டேராக விரிவுபடுத்தப்பட்டு, மேற்கு, கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் 1,000 மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் கட்டப்படும். உணவு உற்பத்தி 1.25 கோடி டன்னாக உயர்த்தப்படும். 1.25 லட்சம் உழவர்களுக்கு வேளாண் கருவிகள் வழங்கப்படும்.

அனைத்து அரசு, அரசு உதவிப் பள்ளிக ளிலும் ‘ஸ்மார்ட் வகுப்பறை’ அமைக்கப்படும். ‘வெற்றிப் பள்ளிகள் திட்டம்’ மூலம் 1,000 மாதிரிப் பள்ளிகள் விரிவுபடுத்தப்படும்.

உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை 90 சதவீதத்தை எட்டும் வகையில் கட்டமைப்பு விரிவாக்கப்படும். ‘நான் முதல்வன் 2.0’ மூலம் கூடுதல் திறன் பயிற்சி வழங்கப்படும். ஆராய்ச்சியை அதிகரிக்க தொழிற்கல்வி சிறப்பு மய்யங்கள் நிறுவப்படும். அனைத்து கல்வி நிறுவனங்களிலும் ஏஅய் ஆய்வகம் உருவாக்கப்படும்.

கணினி தொழிற் பயிற்சி

ஜவுளி, தோல் ஆடை, கைவினை, கணினி தொழிற்பயிற்சி உள்ளிட்ட துறைகளில் பயிற்சி வழங்கப்பட்டு, பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூக, பொருளாதார முன்னேற்றம் உறுதிப்படுத்தப்படும். சிறுபான்மையினர் அதிகமாக வசிக்கும் மாவட்டங்களில் திறன் மேம்பாட்டு மய்யங்கள் அமைக்கப்படும்.

வீட்டு மனையற்ற ஆதிதிராவிட, பழங்குடியின குடும்பத்துக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பெண்களுக்கான தொழில் வாய்ப்புகளை பெருக்குவதற்கான திட்டங்கள் விரிவுபடுத்தப்படும்.

கிராம சந்தைகள், விளையாட்டு, நல்வாழ்வு கட்டமைப்புகள் உள்ளிட்ட சிறப்பம்சங்கள் கொண்ட உத்தமர் காந்தி மாதிரி கிராமங்கள் திட்டம் அமல்படுத்தப்படும். முதல்கட்டமாக 10 ஊராட்சிகளில் இப்போதே இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.

50 லட்சம் இளைஞர்களுக்கு
வேலை வாய்ப்பு

தொழில் துறையில் ரூ.18 லட்சம் கோடி முதலீடு, 50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, ஏற்றுமதி 120 பில்லியன் டாலராக உயர்வு ஆகியவை எங்கள் இலக்கு. இதற்காக மாவட்டம்தோறும் நவீன தொழிற்பூங்கா அமைக்கப்படும். அய்டி ஏற்றுமதி ரூ.6 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டு, அத்துறையில் 2 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். ஜவுளித் தொழில் நவீனமயமாக்கப்பட்டு, திருப்பூர், கரூரில் 35 ஆயிரம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் உறுதிப்படுத்தப்படும்.

உள்நாட்டு மீன் உற்பத்தி 4.50 லட்சம் டன், பால் உற்பத்தி 4.50 கோடி லிட்டர், கால்நடை எண்ணிக்கை 3 கோடியாக உயர்த்தப்படும். ஒரு லட்சம் ஏக்கரில் தீவனப் பயிர் சாகுபடி செய்யப்படும்.

நகர்ப் பகுதிகளில் 20 சதவீத பசுமைப் பகுதிகள், பூங்காக்கள் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். கழிவுநீரை முழுமையாக சேகரித்து, சுத்திகரித்து 30 சதவீதம் மறுசுழற்சி செய்யப்படும்.

வெளிநாட்டு வர்த்தக கண்காட்சிகளில், நமது சிறு, குறு தொழில் நிறுவனங்கள் பங்கேற்க வழிசெய்யப்படும்.

நவீன தொழில் நுட்பங்கள்

நவீன தொழில்நுட்பங்களின் உதவியால் பாலங்கள், சாலைகளின் ஆயுள்காலம் நீட்டிக்கப்பட்டு, விபத்துகள் குறைக்கப்படும்.

நெசவுத் தொழிலில் புதிய தொழில் நுட்பங்களை அறிமுகம் செய்து, உற்பத்தியை அதிகரித்து, ஏற்றுமதிக்கு வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும். அனைத்து மாநிலங்களும் சுயாட்சி பெற வேண்டும்.

நாடே சமத்துவபுரமாக மாற வேண்டும் என்பதுதான் எனது மாபெரும் கனவு. நான் அறிவித்த திட்டங்கள் செயல்வடிவம் பெற மாவட்ட வாரியாக தனித்தனி செயல் திட்டங்கள் வகுக்கப்படும். இதையெல்லாம் நனவாக்கி, 2030-இல் தமிழ்நாடு ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்த்தப்படும். இவ்வாறு முதலமைச்சர் பேசினார்.

இந்த நிகழ்வில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, பழனிவேல் தியாகராஜன், தா.மோ.அன்பரசன், எம்ஆர்கே.பன்னீர்செல்வம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

‘திராவிட மாடல் 2.0’-க்கு அடிக்கல்: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (7.3.2026) வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில் கூறியுள்ளதாவது: மார்ச் 6 – அண்ணா ஆட்சியில் அமர்ந்து தமிழினம் தலைநிமிர்ந்த நாள். 1967-இல் அண்ணா தலைமையிலான அமைச்சரவை பொறுப்பேற்று, தமிழ்நாட்டின் எழுச்சிக்கும், தமிழினத்தின் மீட்சிக்கும் விதையூன்றிய நாள்.

அடுத்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான ‘ஸ்டாலின் ஸ்டேட்மென்ட்’- அய் இந்த நாளில் அறிவிக்கிறேன். திராவிட ஆட்சி இந்த மண்ணில் மய்யம் கொண்ட நாளிலேயே ‘திராவிட மாடல் 2.0’-க்கு அடிக்கல் நாட்டுகிறேன்.. உங்கள் அனைவரின் ஆதரவோடும். இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *