அனைத்து மக்களுக்கும் ஏற்புடைய மொழிக் கொள்கையை வகுப்பதும் அதைச் செயல்படுத்துவதும் அரசின் கடமை. அம்மொழிக்கொள்கை மொழி, சமூகம், அரசியல் முதலான தொடர்புடைய துறைகளின் ஆய்வு முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு, துறை வல்லுநர்களின் கருத்திற்கேற்ப அமைதல் பொது நடைமுறை. 2021-இல் ஒன்றிய அரசு பாரதிய பாஷா சமிதி (இந்திய மொழிக்குழு) எனும் உயர்நிலைக்குழு ஒன்றை அமைத்தது. இக்குழு, பல மொழிக் குடும்பங்கள் பயன்பாட்டில் உள்ள இந்தியாவில் அனைத்து இந்திய மொழிகளும் பாரதீய பாஷா பரிவார் (இந்திய மொழிக் குடும்பம்) என்ற ஒரே மொழிக் குடும்பத்தைச் சார்ந்தவை; அம்மொழிகளுக் கெல்லாம் சமஸ்கிருதமும் இந்தியப் பண்பாட்டுத் தொடர்புமே அடிப்படைகள் என்னும் கருத்தியலை முன்வைத்துப் பெரும் பரப்புரையைக் கல்விப்புலத்தில் மேற்கொண்டு வருகிறது. பல்லாண்டுகளாக இந்தியாவில் நிலவிவரும் பன்மொழித்துவமும் இந்திய மொழிகளுக்கிடையிலான ஒற்றுமைக் கூறுகளும் இதற்கான சான்றுகள். பாரதீய மொழிக் குடும்பம் என்பது பின்னோக்கி இழுப்பதல்ல; மீள்கண்டுபிடிப்பு என்பதுதான் இக்கருத்தியலை முன்வைப்போரின் வாதம். ‘உண்மை அதுவல்ல’ என்பதற்கு இந்த இரண்டு நூல்களிலும் ஏராளமான சான்றுகள் உள்ளன.
சமிதியும் பரிவாரும்
பாரதீய பாஷா சமிதி, நேஷனல் புக் ட்ரஸ்ட் (1) Bharatiya Bhasha Pariwar- A New Framework in Linguistics (2) Collected Studies on Bharatiya Bhasha Pariwar – Perspectives and Horizons என்ற இரண்டு நூல்களை 2025-இல் வெளியிட்டுள்ளது. இந்திய மொழிகள் அனைத்தும் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவை எனும் கருத்தியலை விளக்கும் ஒரு மொழியியல் செயல்திட்டத்திற்கான நூல்கள் இவை. இக்கருத்தியலைப் பரப்புவதற்கு ஒன்றிய அரசின் நிதி உதவியுடன் பல கருத்தரங்குகளை (2021 முதலே) இந்தியா முழுவதும் உள்ள மத்தியப் பல்கலைக்கழகங்களிலும், அய்அய்டி மற்றும் பல கல்லூரிகளிலும் பெரும் பொருட்செலவில் நடத்தி வருகிறார்கள். மொழியியல் தொடர்பாக ஏதோ இரண்டு நூல்கள் வெளிவந்துள்ளன; கல்விப் புலத்தில் சில கருத்தரங்குகள் நடக்கின்றன என்று இச்செயல்திட்டத்தைப் புறந்தள்ளிவிட முடியாது. புதிய கல்விக்கொள்கையின் தொடர் செயன்மையாக 2021 நவம்பரில் ஒன்றிய அரசின் கல்வித்துறையின்கீழ் ‘பாரதீய பாஷா சமிதி’ எனும் இந்த உயர்மட்டக் குழு உருவாக்கப்பட்டு அதன் தலைவராக சமஸ்கிருத அறிஞர் சாமு கிருஷ்ண சாஸ்திரி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தலைமையில் செயல்படும் குழு இந்திய மொழிகளின் வளர்ச்சிக்கான சாத்தியக்கூறுகளைக் கண்டறிந்து அதற்கான வழிமுறைகளை ஒன்றிய அரசுக்குப் பரிந்துரைக்கும். ‘பாரதீய பாஷா சமிதி’ பல கூட்டங்களையும் கருத்தரங்குகளையும் ஒருங்கிணைத்து மேற்கண்ட இரண்டு நூல்களையும் உருவாக்கியுள்ளது. அவற்றில் இரண்டாவது நூலில் பாரதீய மொழிக் குடும்பம்-குறிக்கோள் (Mission Bharatiya Bhasha Pariwar) என்ற தலைப்பின்கீழ் குறிப்பிட்டுள்ள பரிந்துரைகளில் ஒன்று: கல்வித் திட்டத்தில் இந்திய மொழித் தத்துவத்தை ஒருங்கிணைத்து பாரதீய மொழிக் குடும்பம் தொடர்பான கருத்தாக்கத்தை விரைவாக (மாணவர்களிடம்) வளர்த்தெடுக்க வேண்டும். இரண்டு: பிளவுபடுத்தும் மொழி வகைப்பாடுகளை விட ஒன்றிணைக்கப்பட்ட இந்திய மொழி மரபை ஊக்குவிக்கும் மொழிக்கொள்கைகளை அடையாளம் கண்டு ஊக்குவிக்க வேண்டும் (பக். 10).
‘சமஸ்கிருதம் பேசுவோர் இந்நாட்டின் பூர்வகுடிகளே’ என்று நிறுவுவதற்குச் சான்றுகளை அடுக்குவதே இரண்டு நூல்களிலும் ஊடுபாவாக உள்ளது இந்நூல்கள் மொழிப் பகுப்பாய்வு மூலமாக வகைப்படுத்தப்பட்டுள்ள ஒப்பிலக் கணக் கொள்கை குடும்ப மொழிமாதிரிகள், மூலமொழி மீட்டுருவக்கம் ஆகியவற்றைக் கேள்விக்குள்ளாக்குகின்றன.
ஒரு நூலை எழுதியவர்[கள்], நூல் எழுதப்படும் காலம், வெளியீட்டு நிறுவனம் அனைத்திலும் அரசியல் உள்ளது என்பது நாம் அறிந்ததே. Bharatiya Bhasha Pariwar – A New Framework in Linguistics (நூல்-1) எனும் இந்நூல் தனிப்பட்ட ஒருவரால் எழுதப்பட்டதல்ல: கட்டுரைகளின் தொகுப்பும் அல்ல. உள்ளடக்கம் எழுதியோர். திருத்தப் பணி செய்தவர்கள், மதிப்பாய்வு செய்தோர் என 26 பேரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இவர்கள் மட்டுமன்றி, உள்ளடக்கத்திற்கு உதவி செய்தோர் என்று மேலும் 42 ஆளுமைகளுக்கு நன்றி கூறப்பட்டுள்ளது. வழக்கமான அறிமுக உரை, முன்னுரை அணிந்துரைகளோடு ‘ஏற்பிசைவு’ (endorsement) என்ற வகையில் ஆறு ஆளுமைகள் இக்கருத்தியலுக்குத் தங்களுடைய ஆதரவைப் பதிவு செய்துள்ளனர். இவையெல்லாம் இந்நூலை உருவாக்க பாஷா சமிதி செய்துள்ள மெனக்கெடல்களை உணர்த்துவதோடு ஓர் அரசு நிறுவனம் வெளியிடும் நூலுக்கு இந்த அளவுக்கு ‘அணைகட்டல்’ ஏன் என்ற கேள்வியும் எழுகிறது.
பாரதிய மொழிக்குடும்பம் எனும் கருத்தியல்
376 பக்கங்களில் அமைந்துள்ள முதல் நூலில் ‘பாரதிய மொழிக் குடும்பம்’ எனும் கருத்தியல் விளக்கப்படுகிறது. முன்னுரையில் ‘இந்தியாவில் ஆரியரும் கதையாடல்களும்’ எனும் இயல் மட்டுமன்றி, வேதகாலச் சான்றுகள். மானிடவியல், தொல்லியல், பழைய இலக்கியங்கள், கணிதம், வானசாஸ்திரம் என்று பல்துறைச் சான்றுகள் எடுத்துக்காட்டப் படுகின்றன. ‘பாரதீய மொழிக் குடும்பம்: இந்தியா ஒரே மொழிப்பரப்பு’ என்ற 4ஆவது இயலும் ‘இந்திய மொழிகளின் பொது இயல்புகள்’ எனும் + இயலும் இந்திய மொழிகளுக்கிடையிலான ஒற்றுமைக் கூறுகளை விரிவாக விளக்குகின்றன.
வெவ்வேறு ஆய்வாளர்கள் எழுதிய 26 கட்டுரைகள் அடங்கிய இரண்டாவது நூலும் முதல் நூல் போல அதே ஆறு ஆளுமைகளின் ஏற்பிசைவுடன் 355 பக்கங்களில் அமைந்துள்ளது. இக்கட்டுரைகள் பல்வேறு மொழிகளுக் கிடையிலான ஒற்றுமைக் கூறுகளை விளக்குகின்றன. இரண்டு நூல்களிலும் பாஷா சமிதியின் தலைவர் சாமு கிருஷ்ண சாஸ்திரி “About Bharatiya Bhasha’ என்ற தலைப்புடன் நான்கு பக்கங்களில் இக்கருத்தியல் யல் குறித்து விளக்கியிருக்கிறார். இத்தலைப்பில் ‘பாஷா” எனும் சொல் ‘ஒருமை’யில் இருப்பது கவனம் பெறுகிறது. பலநூறு மொழிகள் புழக்கத்தில் உள்ள இந்தியாவில் அவர் எந்த மொழியை மனதில்கொண்டு இப்படி எழுதுகிறார் என்ற கேள்வியும் எழுகிறது. கேள்விக்கான விடையை நாம் முதல் நூலின் பக்கங்கள் தோறும் காணமுடியும். விடை சமஸ்கிருதம். சாஸ்திரி கூறுகிறார்: இந்தியாவில் பலமொழிகள் உள்ளன. ஆனால் அவற்றிற்கெல்லாம் குடும்பம் ஒன்றுதான்; அதுவே பாரதிய மொழிக்குடும்பம் (நூல் 1: xx).
இந்தியா முழுவதும் பேசப்படும் மொழிகள் ஒரே மொழிக் குடும்பத்தைச் சார்ந்தவை எனும் கருத்தியலுக்கு ஆதாரமாக வைக்கப்படும் நூலில் கருத்துகளை/வாதங்களை இடம்பெற்றுள்ள சில சொற்றொடர்கள் (மொழிபெயர்த்து) மூலம் விளக்குவது எளிது.
“மொழியைப் பிற நாடுகளில் கருத்துப் பரிமாற்றத்திற்கான ஊடகமாகக் கருதும் நிலையில் இந்தியாவில் தெய்வீகமாகப் பார்க்கிறோம்” (1:xvii). சிவபெருமானின் உடுக்கையில் சமஸ்கிருதமும் தமிழும் பிறந்த கதைகள் உண்டு; அகத்தியர்தான் தமிழுக்கு முதலில் இலக்கணம் எழுதினார் எனும் கூச்சல் அண்மையில் பெருஞ்செலவில் இந்தியாவெங்கும் எழுப்பப்பட்டது. மொழியைத் தாயாகவும் தெய்வமாகவும் பார்ப்பது மரபில் உண்டு. மொழி எப்போது, எப்படித் தோன்றியது என்பதை விளக்க பல கோட்பாடுகள் உள்ளன. இருப்பினும் எந்தக் கோட்பாடும் மொழியின் தோற்றத்தைப் பற்றி அறுதியிட்டுக் கூறவில்லை.
“பெரும்பான்மை மொழி, மொழிச் சிறுபான்மையினர், ஆதிக்க மொழி, ஒதுக்கப்பட்ட மொழி போன்ற பயன்பாடுகள் உள்நோக்கத்தோடு மிகக் கனமேறிய ஆபத்தான பிரிவினையை உருவாக்குபவையாகும். …. இவையெல்லாம் காலனிய கருத்தாக்கக் கட்டமைப்புகள்… குறுகிய நோக்கம் கொண்ட மொழி அடையாளங்களும் போலியான பெருமையும் இந்தியர்களிடையே ஒருவருக்கொருவர் வெறுப்பை உருவாக்குவன.. இந்திய இரத்தத்திலும் மனதிலும் அரசியலி செலுத்தியுள்ள காலனிய விஷக் கட்டமைப்புக்கு எதிரான ஒரு பரிகாரமே ‘இந்திய மொழிக்குடும்பம்’ (xix)”. “வேற்றுமையை வலியுறுத்துவதல்ல பாரதீய மொழிக் குடும்பக் கருத்தாக்கம்; ஒற்றுமை வழியே ஒரு பண்பாட்டுத் தொடர்ச்சியை வலியுறுத்துகிறது (1-9). இந்திய அரசியலமைப்புச் சட்டம் 350-இன்படி 1957-இல் இந்தியாவின் சிறுபான்மை மொழிகளின் வளர்ச்சிக்கென தனி ஆணையம் அமைக்கப்பட்டுச் செயல்பாட்டில் உள்ளதைக்கூட எதிர்க்கிறார்களோ? “இந்திய மொழிகளின் தோற்றத்திற்கு எப்படிபட்ட பகுப்புகள் செய்திருந்தாலும் நாம் ஒரு தேசிய மற்றும் பண்பாட்டுத் தளத்தில் ஊன்றிய சிந்தனையின் அடிப்படையில் பாரதீய மொழிக் குடும்பம் என்ற ஒற்றைத்தன்மை உடையது என்பதை அங்கீகரிக்கவேண்டும்”. இதற்கு ஆதரங்களாக மேற்கூறிய வகையில் மொழிப்பொதுமைகள், இலக்கியத்தின் பேசுபொருள், தொல்லியல், மெய்யியல், மானிடவியல் முதலிய பல்வேறு கோணங்களில் ஒற்றைத்தன்மை உள்ளதாக வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன.
மொழிக்கூறுகள் ஒன்றிணைதலும் பொதுமைக்கூறுகளும்
வேத கால சமஸ்கிருதத்திலும் மூல திராவிட மொழிகளிலும் கண்டறியப்பட்டுள்ள பொதுவான மொழிக்கூறுகள் இவ்விரண்டு மொழிச் சமூகங்களும் கி.மு.4000-லேயே தொடர்பில் இருந்துள்ளன என்பதற்கும் ஒன்றுக்கொன்று மொழிக்கூறுகளைக் கடன் வாங்கியுள்ளன என்பதற்கும் சான்றுகளாகும். ஆனால் இந்நூல் இந்தோ-ஆரிய மொழிகளும் திராவிட மொழிகளும் ஒரு பொதுவான பழைய மொழியிலிருந்து (common ancestral language) உருவாகியிருக்கவேண்டும் என்று வாதிடுகிறது. திராவிட மொழிகளில் மூத்த மொழியான தமிழில் சமஸ்கிருதத்தின் ஆதிக்கம் தொடங்கிய காலகட்டத்தை அறுதியிட்டுக் கூற முடியாது. வையாபுரி பிள்ளை “வடமொழியும் தமிழும்” எனும் கட்டுரையில் கி.மு. 1000 க்கு முன்பே இத்தொடர்பு ஏற்பட்டுவிட்டது என்கிறார். தொல்காப்பியர் காலத்திற்கு முன்னரே சமஸ்கிருதம், பிராக்ருதம் முதலிய மொழிகள் தமிழகத்தில் குறிப்பிட்ட நிலையிலிருந்த மக்களிடம் வழங்கி வந்துள்ளது. இந்திய மொழிகளுக்கிடையில் கொண்டு-கொடுக்கல் இருந்து வந்துள்ளது என்பதை யாரும் மறுக்கவில்லை. குறிப்பாகச் சமஸ்கிருதத்திலிருந்து மற்ற மொழிகள் கடன் வாங்கி உள்ளன என்பதற்குத் தற்பவம்/தற்சமம் என்ற கொள்கைகளைக் குறிப்பிடலாம். எனவேதான் தமிழின் ஒலி அமைப்பிற்கு ஏற்ப வடசொற்களைப் பயன்படுத்தவேண்டும் என்று ‘வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ’ என விதி வகுத்துத் தமிழுக்கு ஒரு பாதுகாப்பு வளையத்தை உருவாக்கித் தமிழிற்கென தனி அடையாளத்தைத் தக்க வைப்பதற்கு வழிவகுத்தார். ரிக் வேதத்தில் 40-க்கும் மேற்பட்ட திராவிட வேர்ச்சொற்கள் இருப்பதாகவும் சமஸ்கிருதத்தின் பல்வேறு இலக்கண இலக்கியங்களில் 750-க்கும் மேற்பட்ட திராவிடச் சொற்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும் டி.பரோவின் ஆய்வைச் சுட்டிக்காட்டி இந்திய மொழிகள் எனும் நூலில் ச.அகஸ்தியலிங்கம் (2000:84-80) குறிப்பிடுகிறார். எனவே இந்தியாவில் மொழித்தொடர்பு மிக நீண்ட காலமாக இருந்துவந்துள்ளது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. படித்தவர்கள் மத்தியில் இருமொழியம் (bilingualism) நிலவிவந்துள்ளது என்பதிலும் அய்யமில்லை.
நீண்டகால மொழித்தொடர்பின் விளைவே மொழிக்கூறுகள் ஒன்றிணைதல் (Linguistic Convergencej, மேற்குலகைச் சேர்ந்த ஆய்வாளரான எம்.பி. எமனோ 1956இல் பல எடுத்துக்காட்டுகளுடன் எழுதிய “India as a Linguistic Area எனும் கட்டுரையில் இந்தியா என்பது ஒரு மொழிப்பரப்பு என்பதைத் தெளிவுபடுத்தியவர். இந்தோ-ஆரியன், திராவிடம், முண்டா, திபெத்தோ பர்மன், ஆகிய நான்கு மொழிக்குடும்பங்களோடு அந்தாமான் மொழிகுடும்பமும் உள்ளது. இந்திய மொழிகளுக்கிடையில் நாவளை ஒலிகள் (ட,ண,ள) நான்கு மொழிக்குடும்ப மொழிகளிலும் உள்ளன. சமஸ்கிருதத்தில் உள்ள ஒருமை, இருமை, பன்மைக்கு மாறாக இந்தியாவில் பேசப்படும் பிற இந்தோ-ஆரிய மொழிகளிலும் மற்ற மொழிகளிலும் ஒருமை-பன்மை மட்டுமே உள்ளன. பெரும்பான்மையான இந்திய மொழிகளிலும் பெயர்-செயப்படுபொருள்-வினைமுற்று என்ற வகையிலேயே வாக்கிய அமைப்பு உள்ளது. இந்தியா ஒரு மொழிப்பரப்பு என்ற கோட்பாட்டைக் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்யும் மொழியியலாளர்கள் மொழிகளுக்கிடையில் மேலும் பல பொது மொழிக்கூறுகளை எடுத்துக் காட்டுகிறார்கள்.
ஒப்பிலக்கணமும் மொழிக்குடும்பமும்
மனித இனம் தங்களது கருத்துகளையும் உணர்வுகளையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள உருவாக்கிய மொழி ஒரு சமூகத்தின் அடையாளமாகவும் அச்சமுகத்தின் பண்பாட்டுப் பெட்டகமாகவும் உள்ளது. ஒரு குறிப்பிட்ட மொழியின் அமைப்பைப் புரிந்து கொள்ளவும் பிற மொழிகளுடன் அம்மொழிக்கு உள்ள தொடர்புகளை அடையாளம் காண்பதற்கும் வெவ்வேறு காலகட்டங்களில் பல்வேறு வகையான ஆய்வுகள் நடந்த வண்ணம் உள்ளன.
‘மொழிக்குடும்பம்’ என்பது மொழிகளுக்கிடையில் உள்ள இன உறவைக் குறிக்கும் ஒரு கலைச்சொல். ஆனால் பாரதிய மொழிக்குடும்பம் கீழ்க்கண்டவாறு பல்வேறு வகைகளில் அலங்கரிக்கப்படுகிறது:
‘பாரதீய மொழிக்குடும்பக் கருத்தாக்கம் மொழிக்கூறுகள், சடங்குகள், உலகக் கண்ணோட்டம் ஆகியவற்றில் கட்டுண்டுள்ளது’ (1-8); ‘இக்கொள்கை வெறும் அமைப்பில் மட்டும் கவனம் கொள்ளாது வரலாற்று உணர்வையும் ஆன்மிக அதிர்வுகளையும் உள்வாங்கி மொழியை vak, mantra, and sabda ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது’ (1-8); ‘ஒரு பண்பாட்டின் தொடர்ச்சிதான் இந்தப் பாரதீய மொழிக் குடும்பம். இந்திய மொழிச்சூழல் பரப்பைத் தொடர்ந்து ஓடிகொண்டிருக்கும் ஒரு நதிக்கு ஒப்பிடலாம்; அந்நதியில் சில பிரியும்; சில இணைந்து புத்துயிரூட்டும். இதுபோன்ற நதிக்கு ஒப்பானதுதான் சமஸ்கிருதம், பிராகிருதம், திராவிட மொழிகள், முண்டா மொழிகள் 1-7),
சர் வில்லியம் ஜோன்ஸ் (கி.பி. 1746-1794) என்னும் ஆங்கிலேய நீதிபதி கல்கத்தா ராயல் ஆசியாடிக் சொசைட்டி யில் 1786இல் படித்தளித்த கட்டுரையில் சமஸ்கிருதம், அய்ரோப்பிய மொழிகளான இலத்தீன், கிரேக்கம் ஆகிய மொழிகளோடு நெருங்கிய தொடர்புடையது என்பதைச் சான்றுகளோடு எடுத்துக்காட்டினார். சர் வில்லியம் ஜோன்ஸின் கட்டுரை மொழிகளின் வரலாற்றுமுறை ஆய்வில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இதைத் தொடர்ந்து உலகின் பல்வேறு மொழிகளை ஒப்பிட்டு ‘மொழிக் குடும்பம்’ எனும் கருத்தாக்கம் உருவானது. எளிதில் மாறுபடாத இலக்கண அமைப்புகளின் அடிப்படையிலேயே மொழிகள் ஒப்பிடப்பட வேண்டும் என கிறிஸ்டின் இராஸ்க் (1787-1832) வலியுறுத்தினார். ஏனெனில் சொற்கள் எளிதில் மாறக்கூடியவை; அவை வாங்கப்பட்டனவும் ஆகலாம் என இராஸ்க் சுட்டிக் காண்பித்தார். ஜேக்கப் கிரிம் (1785-1863), விஞ்ஞான நோக்கில் பல மொழிகளை ஒப்பிட்டு இந்தோ – அய்ரோப்பிய மொழிகளில் ஒலிமாற்றங்களுக்கான சில வழிமுறைகளை உருவாக்கினார். அவ்விதிகள் கிரிம்ஸ் விதிகள் (Grimam’s Law) என்று அழைக்கப்படுகின்றன. எடுத்துக்கட்டாக, லத்தின் மொழியில் ஒரு சொல்லின் முதல் ஒலியாக வரும் ‘p’, ஆங்கிலம் உள்ளிட்ட ஜெர்மானிய மொழிகளில் ‘f’ என வரும், (pather > father). இம்மாற்றம் ஒரு ஒழுங்கமைதிக்கு உட்பட்டு நிகழும். ஆகஸ்ட் ஷெலங்கர் (1821-1868) இன உறவு மொழிகளின் வளர்ச்சி மற்றும் பிரிவு நிலையை உருவகப் படுத்திக் காண்பிக்க இயற்கை அறிவியலில் நிகழ்வது போல வளர்ச்சி, சிதைவு, மாற்றம் ஆகியவற்றை மொழிகளுக்கும் பொருத்திப் பார்க்க முடியும் என்பதின் அடிப்படையில் ‘மொழிக் குடும்ப மரம்” (language family tree) எனும் கோட்பாட்டை உருவாக்கினார். ஹம்போல்ட் (1767-1835) மொழி ஓர் இயங்கும் செயல் என்றும் மாறிக்கொண்டே இருப்பது என்றும் வலியுறுத்தினார்.
வரலாற்று மொழியியல் கோட்பாடுகளை ஏற்றுக்கொண்டு உலக ஆய்வாளர்கள் போற்றும் வகையில் ஒப்பிலக்கண ஆய்வுகளை மேற்கொண்ட இந்திய மொழி ஆய்வாளர்கள் பலர். அவர்களுள் சுனித் குமார் சாட்டர்ஜி (Indo-Aryan and Hindi-1942), சுகுமார் சென் (A Comparative Grammar of Middle Indo-aryan-1960), பி.எச். கிருஷ்ணமூர்த்தி (The Dravidian Languages-2003), பி. எஸ். சுப்ரமணியம் (Dravidian Comparative Grammar-2008), செ.வை. சண்முகம் (Dravidian Nouns: A Comparative Study-1971) ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
வரலாற்று மொழியின் அடுத்த கட்டமாக, ஒரு மொழிக்குடும்பத்தின் மூல வடிவத்தைக் கண்டடையும் வளர்ச்சி ஏற்பட்டது. அம்மூலவடிவம் அனுமானமே தவிர அவ்வடிவம் உண்மையில் ஒரு சமூகக்குழு பேசிய மொழி அல்ல என்று வரலாற்று மொழியியலாளர்கள் தெளிவு படுத்தியுள்ளனர். வரலாற்று மொழியியல் இன்று மரபியல், தொல்லியல், மானிடவியல் ஆய்வுகளுக்குத் துணையாக விளங்குகிறது.
வரலாற்று மொழியியலுக்கு எதிராக பாரதீய மொழிக் குடும்பக் கருத்தாளர்கள் முன்வைப்பவை: “ஒப்பிலக்கணமும் வரலாற்று மொழியியலும் பயனுள்ளவையே என்றாலும் அதுவெளிச்சத்தைத்தருவதாக இருக்கவேண்டும்; இந்திய மொழிகளின் உயிரோட்ட இயல்பைத் திரிப்பதாக அமைந்துவிடக் கூடாது (1.6) மொழியியல் ஆய்விற்கு வரலாற்று மொழியியல் நெறிமுறைகளை அளித்திருந்தாலும் அதுவே இந்திய மொழிகளைக் குறைத்துச் சித்தரிக்கக் காரணமாயிற்று (1.7). மேற்கத்திய மொழியியல் இந்தோ-ஆரியன் – திராவிடம்; வட இந்திய மொழிகள் – தென்னிந்திய மொழிகள்: செவ்வியல் மொழிகள் -ஆதிவாசி மொழிகள் என்ற வகையிலான எதிரிணைக் கருத்தாக்கங்களுக்கு வலுச் சேர்த்ததன் மூலம் மிகப் பெரிய கேடு செய்துள்ளது (1.8). மூல இந்தோ-அய்ரோப்பிய மொழிக் கோட்பாட்டை நிறுவியுள்ளவர்கள் இந்த மூல மொழியின் வடிவத்தைப் பேசிய மக்கள் கூட்டம் இரான் மற்றும் இந்தியாவிற்குள் குடியேறியவர்கள் என்ற கருத்தை முன்வைக்கிறது”. இக்கோட்பாடே அய்யத்திற்குரியது என்று பாரதீய மொழிக் குடும்பக் சுருத்தாளர்கள் புறந்தள்ளுகின்றனர். ‘மொழியியல் அடிப்படையில் பார்த்தால்கூடகிளைமொழிகள் இல்லாத, அம்மொழியின் ஒலிகள் எப்படி உச்சரிக்கப்பட்டன (வரலாற்று மொழியியல் ஒலியன்களையே மீட்டுருவாக்கம் செய்கிறது) என்று கூற இயலாத இம்மொழி உண்மையாக இருக்க வாய்ப்பில்லை’ என்ற வாதமும் முன்வைக்கப்படுகிறது. முன் பத்திகளில் கூறியதுபோல வரலாற்று மொழியியல் ஆய்வாளர்கள் இவ்விமர்சனங்களுக்கெல்லாம் கடந்த நூற்றாண்டிலேயே உரிய விளக்கம் அளித்துள்ளனர்.
இந்தோ-அய்ரோப்பிய மொழிக்குடும்பக் கருத்தாக்கத்தை ஏற்றுக்கொண்டால் சமஸ்கிருத மொழியைப் பேசிய ஒரு சமூகக்குழு வெளியிலிருந்து வந்தவர்கள் எனும் கருத்தாக் கமும் இணைந்தே வரும். மொழிக்குடும்பக் கருத்தாக்கத்தை மறுப்பதற்கு அந்த ஆய்வு முறையியலையே மறுதலிக்க வேண்டும். அதற்கு வலிந்து கூறப்படும் காரணங்களாகவே இவற்றைக் காணவேண்டும். சான்றுகளின் அடிப்படையில் முறையான ஒப்பிலக்கண ஆய்வு நெறிமுறைகளைப் பின்பற்றிக் கட்டமைக்கப்பட்டுள்ள மொழியியலாளர்கள் ஏற்றுக்கொண்டுள்ள ஒரு கோட்பாட்டை, ஆய்வுவழி மறுக்காமல் அரசியல் சமூகக் காரணங்களுக்காக மட்டும் மறுதலிப்பதை ஆய்வுலகம் ஏற்பதில்லை.
மொழி இழப்பு
‘இந்தியப் பன்மொழித்துவம் ஒரு வகுப்பு, சாதி, நிலப்பரப்பு சார்ந்து அல்லாமல் பயன்பாட்டு அடிப்படையில் இயங்கி வந்துள்ளது; எனவே மொழிகள் அழிந்து விடும் என்றோ அடையாளம் இல்லாமல் போய்விடுமென்றோ யாரும் கவலை கொண்டதில்லை’ என்ற வகையில் மேலோட்டமான பல ‘கருத்துகள்’ இந்நூல்களில் விரவிக் கிடக்கின்றன. பொதுமக்களின் ஒத்துழைப்புடனும் மொழியியலாளர்கள் உதவியுடனும் 2011-2013இல் மக்கள் மொழிக் கணக்கெடுப்பை மேற்கொண்டு 780 மொழிகளை அடையாளம் கண்டு அவற்றிற்குச் சுருக்க இலக்கணங்களை உருவாக்கியுள்ள கணேஷ் தேவி கடந்த 50 ஆண்டுகளில் மட்டும் 220 மொழிகள் அழித்துபோய்விட்டன என வருத்துகிறார் (டைம்ஸ் ஆஃப் இண்டியா – ஆக.9) இந்தியாவில் 197 மொழிகள் அழியும் நிலையில் உள்ள மொழிகளாக அடையாளம் காணப்பட்டு மைசூரிலிலுள்ள இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம் 117 மொழிகளை ஆவணப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதைப் பாரதிய மொழிக் குடும்பக் கருத்தாளர்கள் பொருட்படுத்தவில்லை.
சமஸ்கிருதம்-திராவிடம்
இந்தோ-ஆரிய மொழிகளின் பிறப்பிடம் இந்தியா (1-89) என்பது இந்நூல்களின் ஒரு முக்கியமான இழையோட்டம் ‘பாரம்பரியமாக சமஸ்கிருதம் பெரும்பான்மையான இந்திய மொழிகளின் தாய் என்று கருதப்பட்டு வந்துள்ளது. திராவிட மொழிகள் என்று சொல்லப்படும் மொழிகளில்கூட பண்பாட்டளவிலும் மொழிவழி வெளிப்பாட்டிலும் சமஸ்கிருதம் பின்னிப் பிணைந்துள்ளதுள்ளது’ (1-27), தொல்காப்பியர் தமிழின் தனித்துவத்தை உறுதிப்படுத்தியிருந்த போதும் சமஸ்கிருத-தாய் கருத்தாக்க விதை சுமார் 1000 ஆண்டுகளுக்குமுன் வீரசோழியத்தின் தாதுப்படலத்தில் “சொல்லிற்கெல்லாம் வடநூலே தயாகி நிகழ்கின்றமையின் அங்குள்ள வழக்கெல்லாம் தமிழுக்கும் பெறும்’ என்று விதைக்கப்பட்டு விட்டது. அது குறிப்பிட்ட இடங்களில் வளர்ந்து 17-ஆம் நூற்றாண்டில் சுப்ரமணிய தீட்சிதர் என்பவரால் எழுதப்பட்ட பிரயோகவிவேகத்தில் ‘….யாம் இந்நூலுள் பெரும்பான்மையும் தற்சமம் தற்பவங்களால் கூறினோம். இப்பெரும்பான்மையும் கூறியது யாதுபற்றி எனின், வட மொழிக்கும் தமிழ் மொழிக்கும் இலக்கணம் ஒன்று என்பது அறியாது, சம்ஞாபேதத்தாலும் பாடை வேற்றுமையாலும் இகழ்ந்து வேறு என்பாரை நோக்கி என்க’ என்ற வகையில் வெளிப்பட்டது. சமஸ்கிருத-தாய் கருத்தாக்கம் வரலாற்று மொழியியல் ஆய்வின் விளைவால் 19-ஆம் நூற்றாண்டில் பிரான்ஸிஸ் எல்லீஸ் வொயிட் ராபர்ட் கால்டுவெல் (1856)ஆகியோரின் ஆய்வுகளால் உடைபட்டது. “இது ஒரு இலட்சியக் கொள்கைதான் என்றாலும் ‘திராவிட மொழிகள்’ எனும் சொல்லாடலுக்கு மாற்றாக ‘தென்னிந்திய மொழிகள்’ எனும் துல்லியமான சொல்லாடல் பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில் எதிர்மறை இன உணர்வுகளால் நிரப்பப்பட்ட ‘ஆரியன்’ எனும் சொல்லுக்கு எதிராக அதே எதிர்மறைக் கருத்துகளால் அய்ரோப்பியர்களால் கற்பனையாக ‘திராவிடம்’ எனும் சொல் உருவாக்கப்பட்டு இனம் என்பதைச் சுமந்துவந்துள்ளது” (1-27). இத்தொடர்கள் மூலம் ‘திராவிடம்’ எனும் சொல்லுக்கு இந்நூலை உருவாக்கியவர்கள் கொண்டிருக்கும் எதிர்மறை மனநிலை வெளிப்படையாகத் தெரிகிறது.
இரண்டாவது நூலின் ஒரு கட்டுரையில் (சைலேந்திர குமார் சிங் & புரெந்த்ர பிகாஷ் தேபேஷ்), ‘கால்டுவெல் மொழி அடையாளத்திற்கு அடித்தளமிட்டார்; இதை அக்காலத்தில் நாம் ஏற்றுக் கொண்டோம்; ஆனால் இந்தியப் பண்பாட்டில் அது மிக மோசமான ஒரு தருணம். அத்தருணத்தை ஒரு மொழிக் கொள்ளை (linguistic loot) அடிக்கப்பட்ட தருணமாகவே கருத வேண்டும் (2-79) என்ற வாக்கியத்தில் சிலருக்குத் திராவிடக் கருத்தாக்கம் எவ்வளவு வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதைக் காட்டுகிறது. இக்கட்டுரையில், ‘வரம்பின்றிக் கடன் வாங்குவதால் (சமஸ்கிருத மொழியிலிருந்து) மொழித் தேய்மானம் ஏதும் நடைபெறுவதில்லை; அதுவே சமூக எதார்த்தம் என்று கூறப்படுகிறது (2-83), சமஸ்கிருதக் கலப்பினால் உருவான மணிப்பிரவாளத்தைப் பற்றியும் சமூக அரசியல் காரணங்களால் தமிழின் மேற்குக் கிளைமொழி தனிமொழியான வரலாறும் இம்மொழியியலாளர்களுக்குத் தெரியாது போலும், தமிழிலும் இடைக்கால உரையாசிரியர்கள் வரம்பின்றிச் சமஸ்கிருத்ததை வலிந்து திணித்ததும் தமிழ் மொழி வரலாற்றுப் பக்கங்களில் உள்ளன.
தமிழ் மொழியியலுக்குப் பல பங்களிப்பைச் செய்துள்ள எல்.இராமமூர்த்தி எழுதியுள்ள ‘Conceptualization in Tolkaappiyam’ எனும் கட்டுரையில் “தொல்காப்பியர் சமஸ்கிருத-பிராகிருதத் தாக்கத்தைத் தவிர்த்து, தமிழுக்குத் தனித்துவமான அடையாளத்தைத் தந்துள்ளார் எனும் தாமஸ் டிரபுட்மனின் கருத்துகளை வழிமொழிகிறார். அதேவேளையில் பேச்சுதான் பண்பாட்டு வெளிப்பாட்டிற்கு அடிப்படை என்ற பாரதிய மொழிக் குடும்பத்தின் பொது மரபைத் தொல்காப்பியர் பிரதிபலித்துள்ளார்’ (2-348)” என்று கூறுவது வியப்பளிக்கிறது. மேலும், சமஸ்கிருத இலக்கண மரபுகளுக்கும் தொல்காப்பியமரபிற்கும் உள்ள ஒற்றுமைகளைச் சுட்டிக்காட்டி “(இந்தியாவில்) வெவ்வேறு மொழிகள் ஒரு பொதுவான அறிவுமரபுக்குப் பங்களிப்புச் செய்கின்றன. அதுமட்டுமன்றி. பண்பாட்டுத் தொடர்புக்கான ஒரு தனித்துவப் பண்புடையது மொழி எனும் கருத்தாக்கப் புரிதலின் ஒற்றுமையே பாரதீய மொழிக் குடும்பத்திற்கு முதுகெலும்பாகச் செயல்படுகிறது’ (2-354) என்று கூறுவதன் மூலம் இந்தியப் பொது இலக்கண மரபையும் ‘பாரதீய மொழிக் குடும்பம்’ எனும் கருத்தியலையும் இராமமூர்த்தி ஒன்று எனக் கருதுவதாகத் தோன்றுகிறது. சமஸ்கிருத மொழியின் இலக்கண மாதிரிகளை எடுத்துக்கொண்டு தமிழ் மொழிக்கு இலக்கணம் உருவாக்கிய காரணத்தாலேயே இருமொழிகளும் ஒரே மொழிக்குடும்பமாகி அது பாரதிய மொழிக் குடும்பமாகிவிடுமோ?
இந்தியாவிற்குள் ஆரியர்கள் வருகை/படையெடுப்பு குறித்த எதிர்நிலைக் கருத்துகள் அதற்கான பல்துறைச் சான்றுகள், இந்தியாவின் பூர்வகுடிகள் யார் என்ற கேள்விக் கான மறுமொழிகள், பல்லாண்டுகளாக நிலவும் பண்பாட்டு ஒற்றுமை பற்றியெல்லாம் இந்நூலில் இடம்பெற்றுள்ள வாதங்கள் தனித்தனியாக விவாதிக்கப்பட வேண்டியவை.
‘A New Framework in Linguistics’ என்ற துணைத் தலைப்புடன் அமைந்துள்ள 376 பக்க நூல் எந்தப் புதிய மொழிப் பகுப்பாய்வு நுட்பங்களையும் முன்வைக்கவில்லை. பாரதிய மொழிக் குடும்ப ஆய்வு முறையையும் தெளிவுபடுத்தவில்லை. திராவிட மொழிகளை, அதிலும் குறிப்பாகத் தமிழை எதிர் நிறுத்தியே முதல் தொகுதி எழுதப்பட்டுள்ளது. ‘திராவிடம்’ ‘கால்டுவெல்’ எனும் பெயர்களே இந்திய மொழிக் குடும்பக் கருத்தாளர்களுக்கு வெறுப்பையும் எரிச்சலையும் உருவாக்குவதை முதல் நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் பார்க்கமுடியும். சமஸ்கிருதம் பேசிய சமூகக்குழு இந்தியாவின் பூர்வகுடிகள் என்ற கருத்தாக்கத்திற்கு ஏற்ற/ஒத்துப் போகிற வாதங்கள்/சான்றுகள் மட்டுமே முன்வைக்கப்பட்டுள்ளன. அண்மைக் காலமாக அடிக்கடிக் கேட்கும் காலனிய நீக்க முயற்சி என்பதற்கு நூல் முழுவதும் Eurocentric, non-native divisive, missionary, externally derived categories, externally imposed, imported taxononmy எனும் பயன்பாடுகளைக் கட்டலாம். இந்நூலில் பயன்படுத்தப்படும் நிலம்சார் மொழியியல் (areal linguistics), இந்தியா ஒரு மொழிப்பரப்பு (India as a Linguistic Area) முதலிய மொழியியல் வகைப்பாடுகளும் அய்ரோப்பியர்கள் உருவாக்கியவைதான் என்பதை இக்கருத்தாளர்கள் அடையாளம் கண்டதாகத் தெரியவில்லை.
தேசத்தந்தை மகாத்மா காந்தி இணைப்பு மொழியாக முன்வைத்த இந்தி-உருது சேர்ந்த இந்துஸ்தானியை ஏற்காததோடு, ஒருவருக்கொருவர் புரிந்துகொள்ளக் கூடிய (mutual intelligibility) நிலையில் ஒரே மொழியாகப் புழங்கிவந்த ஹிந்தியையும் உருதுவையும் வெவ்வேறு மொழிகளாக மாற்றியவர்கள்தான் இப்போது வெவ்வேறு மொழிக்குடும்பங்களை ‘ஒரே மொழிக்குடும்பம்’ என்று கூறுகிறார்கள். அரசியல் அதிகாரத்தில் இருப்பவர்கள் மொழிப் பயன்பாட்டையும், மொழி வரலாற்றையும் தங்களது கருத்தியல்களுக்கு ஏற்ப மாற்ற முயல்வது புதிதல்ல. ஆனால் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பே இற்றுப்போன ‘சமஸ்கிருத-தாய்’க் கொள்கையைப் புதிய கட்டமைப்பு என்ற பெயரில் ‘மொழிக்கூறு பொதுமைகள்’, ‘உணர்வொற்றுமை’, ‘பண்பாட்டுத்தொடர்பு’ ‘இந்தியர்களின் ஆத்மாவில் நிறைந்திருக்கிறது’ போன்ற மயக்கும் சொற்களால் மீண்டும் திணிக்க முயல்வதுதான் வேடிக்கை. மொழியியல் கோட்பாடுகளின்படி ஏற்கவியலாத ‘பாரதிய மொழிக் குடும்ப’ கருத்தியலுக்குச் சில மொழியியலாளர்களும் துணைபோவதைக் கெடுவாய்ப்பென்று கூறுவதா? சந்தர்ப்பவாதம் என்பதா?
நன்றி: ‘காக்கைச் சிறகினிலே’, மார்ச் 2026
