இன்றைக்கு இளைய தலைமுறை எப்படி இயங்க வேண்டும்? என்பதற்குத் தமிழர் தலைவரும், ‘தகைசால் தமிழரும்’ தான் முன்னுதாரணமாக நம் முன்னால் இருக்கிறார்கள்
தந்தை பெரியார் கடைசி மணித்துளி வரை,
இந்த இனத்திற்காக, மனித மீட்சிக்காக, சமத்துவத்திற்காக, சகோதரத்துவத்திற்காக, சமூக நல்லிணக்கத்திற்காக உழைத்தது போல, உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்!
சென்னை, மார்ச் 8 இன்றைக்கு இளைய தலைமுறை எப்படி இயங்க வேண்டும்? என்பதற்குத் தமிழர் தலைவரும், ‘தகைசால் தமிழரும்’ தான் முன்னுதாரணமாக நம் முன்னால் இருக்கிறார்கள். இந்த வயதில் கூட. அவர்கள் எவ்வளவோ பணிகளைச் செய்துவிட்டார்கள்; இந்தத் தமிழினத்திற்குச் செய்ய வேண்டிய கடமைகளை எல்லாம் செய்துவிட்டார்கள் என்றாலும் கூட, தந்தை பெரியார் கடைசி மணித்துளி வரை, இந்த இனத்திற்காக, மனித மீட்சிக்காக, சமத்துவத்திற்காக, சகோதரத்துவத்திற்காக, சமூக நல்லிணக்கத்திற்காக உழைத்தது போல, உழைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றார் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகப் பொதுச்செயலாளர் பேராசிரியர் ஹாஜாகனி அவர்கள்.
‘‘மதச்சார்பின்மையைக் குழிதோண்டிப் புதைப்பதா? மதவெறிப் பாடலான வந்தே மாதரம் தேசியப்பாடலா?’ சிறப்புக் கூட்டம்!
‘‘மதச்சார்பின்மையைக் குழிதோண்டிப் புதைப்பதா? மதவெறிப் பாடலான வந்தே மாதரம் தேசியப்பாடலா?’’ என்ற தலைப்பில், கடந்த 18.2.2026 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்ற கண்டனக் கூட்டத்தில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகப் பொதுச்செயலாளர் பேராசிரியர் ஹாஜாகனிஅவர்கள் கண்டன உரையாற்றினார். அவரது உரை வருமாறு:
காலத்தின் தேவையாக, மக்களுக்கு ஒரு கண்விழிப்பாக திராவிடர் கழகம் எக்காலத்திலும் தமிழர்களைத் தட்டி எழுப்புகின்ற இயக்கம் என்பதற்கு இன்றைய அடையாளமாக நடந்து கொண்டிருக்கின்ற இந்தக் கருத்தரங்கம் மதச்சார்பின்மையைக் குழி தோண்டிப் புதைப்பதா – மதவெறி பாடலான வந்தே மாதரம் தேசிய பாடலா? என்ற மய்யக் கருத்திலே நடக்கின்ற இந்தக் கருத்தரங்கத்திற்குத் தலைமை வகித்திருக்கின்ற தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களே,
தன்னுடைய கருத்துகளைப் பதிவு செய்ய வந்தி ருக்கின்ற ‘தகைசால் தமிழர்’ இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்களே, வழக்குரைஞரும், திராவிட முன்னேற்ற கழகத்தின் அமைப்புச் செயலாளருமான எங்கள் பெருமதிப்புக்குரிய அய்யா ஆர்.எஸ்.பாரதி அவர்களே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் நாகை மாலி அவர்களே, எனக்கு முன்னால் உரையாற்றி விடைபெற்றுச் சென்றிருக்கின்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் வீரபாண்டியன் அவர்களே, அருமையானதொரு வரவேற்புரையை ஆற்றி இருக்கின்ற திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே, சிறப்பாக தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கின்ற எங்கள் நெஞ்சமெல்லாம் நிறைந்த திராவிடர் கழகத் துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் அவர்களே, நன்றியுரை நவில இருக்கின்ற வழக்குரைஞர் குமாரதேவன் அவர்களே, நிகழ்ச்சிக்கு வருகை தந்திருக்கின்ற முன்னாள் சட்டமன்ற உறுப்பி னர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் துணைத் தலைவர் சகோதரர் அபூபக்கர் அவர்களே, திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய போர்வாளாக சுழன்று கொண்டிருக்கின்ற மருத்துவர் ஹபீஸ் அவர்களே, என்னோடு நிகழ்விலே பங்கேற்றிருக்கின்ற தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினுடைய இந்த மாவட்ட பொறுப்பாளர் சகோதரர் எழும்பூர் ஜாகிர் அவர்களே, எழும்பூர் யாசின் அவர்களே, அருமைச் சொந்தங்களே!
தமிழர் தலைவர்
ஆசிரியரின் அறிக்கை
ஒரு பாட்டுக்காக இவ்வளவு பெரிய கூட்டமா? என்றால், ஒன்றியத்தை ஆண்டுக் கொண்டிருப்பவர்கள் அவர்கள் பாட்டுக்குப் போகக்கூடியவர்கள் அல்ல; இந்த நாட்டை, தன் பாட்டைக்கு இழுக்கக்கூடியவர்கள். அதனால், ‘வந்தே மாதர’த்தினுடைய வரலாற்றை இன்றைக்கு ‘விடுதலை’யினுடைய முதல் பக்கத்திலே தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மிகச் சிறப்பாக எழுதி இருக்கின்றார்.
ஆகவே, அதை நீங்கள் எல்லாம் படியுங்கள். அதில் சொல்லப்படாத அல்லது குறிப்பாக இவருடைய வஞ்சகம் எப்படி நடக்கின்றது என்பதற்குச் சில செய்தி களை மட்டும் இந்தக் குறுகிய காலத்திலே பதிவு செய்து விடைபெறுவது சரியாக இருக்கும் என்று கருது கின்றேன்.
‘வந்தே மாதரம்’ பாடல் என்பது ஒரு தேசியப் பாடல். அந்தப் பாடலை பாட மறுப்பது தேச விரோதம். தேசப்பற்றுக்கு எதிரானது. முஸ்லிம்கள் எதிர்க்கிறார்கள் என்று சொன்னால், அவர்கள் தேசத் துரோகிகள் என்று ஒரு கருத்தியலை, ஒரு உரையாடலை நிறுவுவதற்காக இந்த வாய்ப்பினை அவர்கள் பயன்படுத்துகிறார்கள். ஆனால், இந்த நாட்டின் விடுதலைக்குப் பாடுபட்டு, பெரும் தியாகங்கள் செய்தவர்களின் ஒரு 10 பேர் பட்டியலைக் கொடுங்கள் என்று சொன்னால்,
ஆர்.எஸ்.எஸ். இயக்கம் சார்பாக யாரையுமே தர முடியாது.
நாக்பூரில் இந்திய தேசியக் கொடி பறந்ததில்லை!
அதேபோல இந்தியா விடுதலை அடைந்து 50 ஆண்டுகளுக்கு மேலாக ஆர்.எஸ்.எஸ்.சின் தலை மையகமான நாக்பூரில் இந்திய தேசியக் கொடி பறந்ததில்லை. ஆனால், இவர்கள் இன்றைக்கு தேசியத்திற்கு உரிமையாளர்களாக, யாரெல்லாம் தேசியவாதிகள் என்று சான்றொப்பம் தரக்கூடிய இடத்திற்குத் தங்களைக் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார்கள் என்று சொன்னால், தந்தை பெரியாரின் பேரறிவை நான் வியந்து பார்க்கின்றேன். அவர் 1938 –களில் எழுதி இருக்கிறார்; ஒரு காலம் வரும், இசையும், நடனமும் எங்களுக்குத்தான் சொந்தம் என்று உயர்ஜாதியினர் உரிமையைக் கொண்டாடுவார்கள். அது இப்பொழுது இசையும், நடனமும் ஒடுக்கப்பட்டவருக்கு இல்லை. அது உயர்ஜாதியினுடைய அடையாளம் என்று பார்க்கக்கூடிய காலம் வந்திருக்கின்றதே, இதை அன்றைக்கே எச்சரித்திருக்கிறார்கள்.
ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் தொடர்பான ஓர் உரையாடல்!
தோழர்களே, ஒரு சம்பவத்தை இங்கே நினைவு கூறுகின்றேன். புதிய தலைமுறை தொலைக்காட்சி தொடங்கிய ஓராண்டில், ஒளிபரப்புக்கு முன் விவாதம் நடந்து கொண்டிருக்கும். தோழர் ஜென்ராம் அவர்கள், நடுநிலை செய்த அந்த விவாதத்திலே தோழர் ஹபீஸ் அவர்களோடு, அண்மையிலே உடல்நலம் கடுமை யாக பாதிக்கப்பட்டு, மருத்துவமனையின் தீவிர கண்காணிப்பில் உயிர் பிழைத்திருக்கின்ற எச்.ராஜா அவர்கள் பங்கேற்றார். எனக்கு எதிராக ‘‘ஆர்ம்டு போர்சஸ் ஸ்பெஷல் பவர்ஸ் ஆக்ட்’’ – ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் தொடர்பான ஓர் உரையாடல். அந்த உரையாடலிலே, ஒரு கட்டத்திலே சொல்கின்றார், ‘‘வந்தே மாதரம் பாடாத தேசத துரோகிகள் இவர்கள் எல்லாம் பேசலாமா?’’ என்று என்னைப் பார்த்துச் சொன்னார்.
நான் சொன்னேன், ‘‘தந்தை பெரியார் வந்தே மாதரத்தை ஏற்றுக் கொண்டவர் இல்லை’’ என்று சொன்னேன்.
அவரே ஒரு தேசத் துரோகிதான் என்றார்.
‘‘அறிஞர் அண்ணாவும் ஏற்றுக்கொண்டதில்லை’’ என்று சொன்னேன்.
அறிஞர் அண்ணாவும், தேசத் துரோகிதான் என்று சொன்னார்.
‘வந்தே மாதரம் ‘முஸ்லிம் அனிஹிலேஷன்’ –‘பிரண்ட் லைன்’ இதழில் கட்டுரை
அடுத்ததாக, நீங்கள் சட்டமன்ற உறுப்பினர் ஆவதற்கு வாய்ப்பளித்த கலைஞர் அவர்கள் கூட, வந்தே மாதரம் என்றால், ‘வந்தே ஏமாற்றுகிறோம்’ என்று எழுதிக் கொடுத்திருக்கிறாரே. அவரைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்? என்று சொன்னபோது, எங்களோடு சேரும்போது திருந்திவிட்டார் என்று சொன்னார். அப்படி எதாவது உங்களுக்கு கடிதம் கொடுத்திருக்கிறாரா? சாவர்க்கர் கொடுத்த மாதிரி, ஏதும் கொடுத்திருக்கிறாரா? என்று கேட்டபோது, அவர்கள் செய்த சாதனை – அந்த உரையாடலின் பகுதியை ஒளிபரப்பாமல் தடுத்ததுதான். இப்படிப்பட்ட சூழ்ச்சிக்காரர்கள். ‘‘வந்தே மாதரத்தை எதிர்க்கிறோம்’’ என்பதல்ல. நான் ஒன்று சொல்கின்றேன், ‘வந்தே மாதரம் ‘முஸ்லிம் அனிஹிலேஷன்’ என்று ‘பிரண்ட் லைன்’னில் ஒரு கட்டுரை வந்திருக்கின்றது. முஸ்லிம்களை அழித்தொழிப்பதற்கான ஒரு பாடல். அது கதை என்ன? ‘ஆனந்தமடம்’ பங்கிம் சந்திர சட்டர்ஜியால் எழுதப்பட்டது. அதிலே பவானந்தன் என்ற ஒரு கதாநாயகன், மகேந்திரன் என்பவரை நீ தேசப்பணிக்கு வா என்கின்றான். மகேந்திரன் வர மறுக்கின்றான். இந்த நாட்டில் முஸ்லிம் ஆட்சி நடக்கின்றது, அதை ஒழிக்க வேண்டும் என்கின்றான். மகேந்திரன் கேட்கிறான், ‘‘ஏன் ஒழிக்க வேண்டும்?’’ நம்முடைய மதம் போய்விட்டது, பண்பாடு போய்விட்டது. ஆச்சாரங்கள் அழிந்துவிட்டன. இவையெல்லாம் மீண்டும் வாழ வேண்டும் என்று சொன்னால் இந்த நாட்டில் இருக்கக்கூடிய முஸ்லிம்களை ஒட்டுமொத்தமாக அழிக்க வேண்டும்; முஸ்லிம் ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்று சொல்கின்றான்.
மகேந்திரன் அதை ஏற்க மறுக்கிறான். அவனை ஒரு மடத்திற்குள் அழைத்துச் செல்கின்றான். அங்கே விஷ்ணுவுடைய சிலை இருக்கின்றது. அதன் மடியிலே, ஒரு பெண் சிலை இருக்கின்றது. இது யார்? என்று கேட்டால், இதுதான் பாரததேவி. நாமெல்லாம் அவருடைய புத்திரர்கள் என்று சொல்லும்பொழுது, உன்னால் எப்படி இத்தனை முஸ்லிம்களையும் அழிக்க முடியும் என்றபோது, அந்த ‘வந்தே மாதரம்’ பாடல் ஒலிக்கின்றது, அதைப் பாடிக் காட்டுகிறான். அதாவது ஏழு கோடி குரல்கள் முழங்கும் பொழுது, 14 கோடி கைகளிலே கூரிய வாள் இருக்கும்பொழுது, பாரததேவி பலவீனமாக மாட்டாள். முஸ்லிம்களின் அழித்தொழிப்பு – இனப்படுகொலை. இதை இன்றைக்கு இருப்பவர்கள் ஏற்று போற்றுவதிலே, அதைச் சட்டமாக இயற்றுவதிலே என்ன ஆச்சரியத்தைப் பார்த்துவிட முடியும்?
குஜராத்திலே இவர்கள் என்ன செய்தார்கள்? பள்ளிவாசல்களை எல்லாம் இடிக்கிறார்கள், முஸ்லிம்கள் சிதறி ஓடுகிறார்கள். அவர்களுடைய சொத்துகளைப் பங்கிட்டுக் கொடுக்கிறார்கள். இன்னும் படை அதிலே கூடுகின்றது. இதெல்லாம் ‘ஆனந்த மடம்’ நாவலிலே வரக்கூடிய காட்சிகள். நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும், 18 ஆம் நூற்றாண்டிலே வங்காலத்திலே முஸ்லிம் ஆட்சி நடந்ததா, நடந்தது. அதற்கு எதிராக புரட்சி நடந்ததா, நடந்தது. ஏனென்றால் பஞ்சம் தலைவிரித்து ஆடியது. அங்கே சன்னியாசி புரட்சி என்று ஒன்று நடந்தது; பக்கீர்மார்கள் புரட்சி என்றும் நடந்தது.
வெள்ளையாட்சிக்கு வால்பிடித்த, பிரிட்டிஷாரைப் பாராட்டிய ஒரு நாவல்தான் ‘ஆனந்த மடம்’
இஸ்லாமிய பக்கீர்களும் புரட்சி செய்தார்கள்; சன்னியாசிகளும் புரட்சி செய்தார்கள். சன்னியாசி புரட்சியை முன்னிறுத்தி, ஏதோ முஸ்லிம்கள் எல்லாமே அந்த ஆட்சி ஏற்றுக் கொண்டது போல காட்டுகிறார்கள். அடுத்ததாக, அந்த நவாபின் ஆட்சியை வீழ்த்தி விட வேண்டும் என்று சொன்னால், அடுத்து யாருடைய ஆட்சி என்றால், மக்களாட்சி அவர்கள் பரிந்துரைக்கவில்லை. வெள்ளையர்களின் ஆட்சி சிறந்தது. வெள்ளையர்கள் ஆட்சி தொடர வேண்டும் என்று கருத்தியலை ‘ஆனந்தமடம்’ நாவல் வாயிலாக வைக்கிறார்கள்.
வெள்ளையாட்சிக்கு வால்பிடித்த, பிரிட்டிஷாரைப் பாராட்டிய ஒரு நாவல்தான் ‘ஆனந்த மடம்’ என்று சொன்னால், பிரிட்டிஷாரிடமிருந்து விடுதலை அடைந்த ஒரு தேசம், எப்படி அவர்களைப் போற்றி பாடுகின்ற ஒரு பாடலை தேசியப் பாடலாகக் கொண்டாட முடியும்?
நம்முடைய ‘ஜனகணமன’ என்பது ஏற்றுக்கொள்ளப் பட்ட ஒரு தேசிய கீதம். அதற்கு முன்னதாக, தோழர் கவிஞர் கலி.பூங்குன்றன் சொன்னது போல, அது 59 வினாடி. இதற்கு மூன்று மணித்துளிகள் செலவழிக்க வேண்டும் என்று சொன்னால், நீங்கள் எந்தத் தேசியத்தைப் பெரிதாகக் காட்டுகிறீர்கள்? ‘கல்ச்சுரல் நேஷனலிசம்’ என்று சொல்லக்கூடிய கலாச்சார தேசியத்தைக் கொண்டு வந்து, கொல்லைப்புற வழியாக புகுத்துகின்ற வேலைதானே! நான் கேட்கின்றேன், ‘‘இது வேண்டாம் என்று சொன்னால், எது? என்று கேட்டால், இந்திய நாட்டினுடைய தேசியப் பாடலாக இருக்கத் தகுதியுடைய பாடல் எது? காந்தியார்,‘‘பார்வா சிறையிலே நான் அடைக்கப்பட்டிருந்த போதெல்லாம், இந்தப் பாடல் எனக்கு உணர்வூட்டியது’’ என்று சொன்ன பாடல், சுபாஷ் சந்திர போஸ் ஏற்று போற்றிய பாடல் – ‘‘சாரே ஜகான்சே அச்சா, ஹிந்துஸ்தான் ஹமாரா’’ என்ற பாடல் ‘‘அல்லாமா இக்பால்’’ எழுதிய பாடல். அந்தப் பாடலைப் பற்றி சொல்ல வேண்டும் என்று சொன்னால், இந்தியாவில் எந்த சர்ச்சையும் இல்லாமல், எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு பாடல் அது.
அந்தப் பாடலை ஏன் பின்னுக்குத் தள்ளுகிறீர்கள்? தேசப் பாடலான, தேசியப் பாடலான உலகிலேயே சிறந்த நாடு என்னுடைய நாடு. நாங்கள் இந்த நாட்டின் புல்புல் பறவைகள். எங்கள் இதயங்கள் எங்கே இருந்தாலும், அது இந்தியாவை நோக்கித்தான் துடித்துக் கொண்டிருக்கும். மதங்கள் வேறுபடலாம், ஆனால், எங்கள் மனிதம் ஒன்றுதான். எங்கள் உணர்வு கொண்டுதான் என்று அனைவரையும் அரவணைத்து எழுதப்பட்ட ‘‘சாரே ஜகான்சே அச்சாதான்’’ இன்றைக்கும் ராணுவ தேசிய கீதமாக இருந்து கொண்டிருக்கின்றது. அந்தப் பாடலை பின்னுக்குத் தள்ளிவிட்டு, ‘வந்தே மாதர’த்தை முன்னுக்குக் கொண்டு வருகிறவர்கள், எதற்கு கொண்டு வருகிறார்கள்? இது மத வெறுப்பை வளர்க்கின்றது. பலிகளை வளர்க்கின்றது. படுகொலையை நியாயப்படுத்துகின்றது. படுகொலைச் செய்வதும், பலிகளைக் கொண்டு வருவதும், வெறுப்புகளை வளர்ப்பதும், கலவரங்களை ஏற்படுத்துவதும் தான் இவர்களுடைய அரசியல் நிகழ்ச்சி நிரல் என்பதனாலே, அதைக் கொண்டு வந்து புகுத்த நினைக்கிறார்கள்.
நமக்குத் தமிழ்த்தாய் வாழ்த்து இருக்கின்றது. இன்றைக்குக் காலையிலே ‘‘திராவிட களஞ்சியம்’’ தொகுப்பை முதலமைச்சர் அவர்கள் வெளியிட்டார்கள். திராவிட இயக்க கவிதைகளை தொகுத்து அளித்திருக்கின்றேன். அதனுடைய பதிப்பாசிரியர் பணியை மாண்புமிகு முதலமைச்சர் எனக்குத் தந்தார்கள். அந்தப் பணியை செவ்வனே நிறைவேற்றி, காலையிலே வெளியிட்டு, இன்று நம்முடைய தமிழர் தலைவரிடம் வாழ்த்தைப் பெற்றிருக்கின்றோம். அதில் கலைஞர் அவர்கள், ‘நீராரும் கடலுடுத்த தொடங்கி, வாழ்த்துதுமே’ என்ற இடத்திலே முடித்தார். அதில், என்னவெல்லாம் இருந்தது? ‘பல்லுயிரும் பல்உலகும் படைத்தளித்து துடைக்கினுமோர் தெலு எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பது போல் கன்னடமுங் கலிதெலுங்கும் கவின் மலையாளமும், துளுவும் உன் உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும், ஆரியம் போல் உலக வழக்கழிந்தொழிந்து சிதையா உன் சீரிளமை திறன் வியந்து, செயன் மறந்து வாழ்த்துதுமே’ என்ற வரியை பெருந்தன்மையோடு கலைஞர் நீக்கினார்.
அடுத்து, ‘வள்ளுவம் செய் திருக்குறளை மறுவற நன்கு உணர்ந்தோர்கள் உள்ளுவரோ, மனுவாதி ஒரு குலத்துக்கு ஒரு நீதி’ என்று கேட்டார்கள். மனுநீதியை, சமஸ்கிருதத்தை எதிர்த்து எழுதப்பட்டது என்றாலும் கூட, எல்லோரும் வாழ்கின்ற ஒரு நாட்டிலே, எல்லோருக்கும், இணக்கமான வரிகளைதான் வைக்க வேண்டும், யார் மனத்தையும் புண்படுத்தக் கூடாது என்ற உன்னதமான கொள்கை கொண்ட திராவிட தத்துவம் எங்கே? அதனுடைய பிரதிநிதியாக கலைஞர் அவர்கள், அந்தத் தமிழ்த்தாய் வாழ்த்தைத் தேர்ந்தெடுத்தார்கள். ஆனால், காந்தியார், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், எம்.என்.ராய் உள்ளிட்ட பேரறிஞர்கள் எல்லாம் இணைந்து, இந்தப் பாடலை நீக்க வேண்டும். இதைப் பாடியே தீர வேண்டும் என்று சொன்னால், முதல் சரணத்தைத் தான் பாடலாம் என்று சொல்லும் அளவுக்கு, ஒரு சர்ச்சைக்குரிய பாடலை, இன அழிப்பைத் தூண்டக்கூடிய பாடலை இன்றைக்குக் கொண்டு வருகிறார்கள் என்று சொன்னால், இவர்கள் அரசியலமைப்புச் சட்டத்திற்கு ஆபத்தைக் கொண்டு வருகிறார் என்று சொன்னார்கள். இல்லை, இந்த நாட்டில் இன்னொரு இனப்படுகொலையை நடத்துவதற்கு, இந்த நாட்டை மதவெறிக்காடாக மாற்றுவதற்காக, இரத்த குளத்தை நிரப்பி, வெற்றித் தாமரையைப் பறிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக அதைக் கொண்டு வருகிறார்கள். அதற்கு எச்சரிக்கை விடுத்து, இந்தச் சதிகளை முறியடிப்பதற்காக, திராவிடர் கழகம் எடுத்திருக்கின்ற இந்த முன்முயற்சிக்கு, எங்கள் மனமார்ந்த நன்றிகளை, நல்வாழ்த்துகளை, பாராட்டுகளை, ஒத்துழைப்பைத் தெரிவிக்கின்றோம்.
எங்கள் நம்பிக்கைப்படி
நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகள்!
ஒன்றை சொல்லி விடைபெறுகின்றேன், நடந்து வரும்போது சொன்னோம்; இன்றைக்கு இளைய தலைமுறை எப்படி இயங்க வேண்டும்? என்பதற்குத் தமிழர் தலைவரும், தகைசால் தமிழரும் தான் முன்னுதாரணமாக நம் முன்னால் இருக்கிறார்கள். இந்த வயதில் கூட. அவர்கள் எவ்வளவோ பணிகளைச் செய்துவிட்டார்கள்; இந்தத் தமிழினத்திற்குச் செய்ய வேண்டிய கடமைகளை எல்லாம் செய்துவிட்டார்கள் என்றாலும் கூட, தந்தை பெரியார் கடைசி மணித்துளி வரை, இந்த இனத்திற்காக, மனித மீட்சிக்காக, சமத்துவத்திற்காக, சகோதரத்துவத்திற்காக, சமூக நல்லிணக்கத்திற்காக உழைத்தது போல, உழைத்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு, ரமலான் தொடங்குகின்ற நேரத்திலே, எங்கள் நம்பிக்கைப்படி நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகளைக் கூறி விடைபெறுகின்றேன், நன்றி!
– இவ்வாறு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகப் பொதுச்செயலாளர் பேராசிரியர் ஹாஜாகனி அவர்கள் கண்டன உரையாற்றினார்.
