பெண்ணுரிமைக்காகப் போராடிய பிரான்சு நாட்டைச் சார்ந்த சமூகப் போராளி – பெண் விடுதலை இயக்கத்தின் முன்னோடியான ஒலிம்பே டி கோஜஸ் அவர்களின் உயிர்த் தியாகத்தை, ‘உலக மகளிர் நாளில்’ திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கையின் மூலம் வெளிப்படுத்துகிறார்.
இன்று (மார்ச் 8) உலகம் முழுவதும் மகளிர் நாள் கொண்டாடப்படுகின்றது.
பெண்களின் சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் சாதனைகளைக் கொண்டாடுவதற்கும், பாலின சமத்துவத்திற்கான போராட்டத்தை முன்னெடுப்பதற்கும் உலகளவில் இந்நாள் கடைப்பிடிக்கப்படுகின்றது.
1908 ஆம் ஆண்டு நியூயார்க் நகரில் வேலை நேரக் குறைப்பு, சிறந்த ஊதியம் மற்றும் வாக்குரிமை கேட்டு, 15,000 பெண்கள் நடத்திய போராட்டமே மகளிர் நாளின் வித்தாகும்.
1910 இல் கோபன்ஹேகனில் நடந்த மாநாட்டில், கிளாரா ஜெட்கின் என்ற ஆர்வலர், அனைத்து நாடு களிலும் பெண்களுக்கு என ஒரு நாளைக் கொண்டாடும் யோசனையை முன்வைத்தார்.
அய்க்கிய நாடுகள் சபை அறிவிப்பு!
1975 ஆம் ஆண்டு அய்க்கிய நாடுகள் சபை (UNO) மார்ச் 8 தேதியை பன்னாட்டு மகளிர் நாளாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

மகளிர் நாள் என்பது வெறும் கொண்டாட்டமல்ல– அது பாலின பாகுபாடுகளைக் களைந்து, சம உரிமை களை நிலை நிறுத்துதல், கலை, அறிவியல், அரசியல் மற்றும் சமூகத்தின் அனைத்துத் துறைகளிலும் பெண்கள் சாதித்த சாதனைகளை அங்கீகரித்தல், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் உரிமைகள் மீறப்படுவதற்கு எதிராகக் குரல் கொடுத்தல் யாவற்றையும் உள்ளடக்கியது.
விஞ்ஞானிகளுக்கு நேர்ந்த சோகம்!
உண்மைகளை உரத்து ஒலித்த விஞ்ஞானிகளை மதங்கள் துன்புறுத்தின. சூரிய மய்யக் கோட்பாட்டை வெளிப்படுத்திய ஜியோடார் புருனோ (Giordano Bruno) உயிரோடு எரிக்கப்பட்டார்.
பூமி சூரியனைச் சுற்றுகிறது என்று உரைத்த கலிலியோ (Galileo) வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். (‘கலி லியோவுக்கு நடந்த விசாரணை தவறு; ‘தேவாலயம்’ தவறு செய்தது’ என்று 359 ஆண்டுகளுக்குப் பிறகு போப் ஜான் பால் II அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்தார்).
நுரையீரல் வழி இரத்த ஓட்டம் பற்றி எழுதி, மதக் கோட்பாடுகளை விமர்சித்த மருத்துவர் மைக்கேல் செர்வெட்டஸ் (Michael Servetus) உயிரோடு எரிக்கப்பட்டார்.
அறிவியல் மரபைக் கற்றுத் தந்த வானியலாளர் ஹைபதியா (Hypatia) படுகொலை செய்யப்பட்டார். இந்தப் பட்டியல் மிக நீளமானது.
பெண் விடுதலை இயக்கத்தின்
முன்னோடி ஒலிம்பே டி கோஜஸ்
மத அமைப்புகள் விஞ்ஞானிகளை வெட்டி சாய்த்தது போல் பெண்ணுரிமை பேசிய வீராங்கனைகள் இழிவுபடுத்தப்பட்டார்கள்; மிகக் கேவலமாக விமர்சிக் கப்பட்டார்கள்; கொலை செய்யப்பட்டார்கள். மகளிர் நாளில், உலக வரலாற்றில் பெண்ணுரிமைக்காக மிகவும் தொடக்கக் காலத்தில் குரல் எழுப்பிய ஒலிம்பே டி கோஜஸ் பற்றி ‘விடுதலை’ வாசகர்களுக்குத் தெரி விக்கின்றோம்.
‘சோஃபியின் உலகம்’ (Sophie’s World) என்ற புத்தகத்தை எழுதியவர் நார்வேஜிய எழுத்தாளர் ஜோஸ்டீன் கார்டர் (Jostein Gaarder).
இந்தப் புத்தகத்தை 17 ஆண்டுகளுக்கு முன்பு இலக்குவன் தமிழ் எனக்கு அளித்திருந்தார். இந்நூல் உலகப் புகழ்பெற்ற தத்துவ நாவல். 14 வயது சிறுமி சோஃபிக்கு, மேற்கத்திய தத்துவ வரலாற்றை கதையாக விவரிக்கிறது. இந்நூல் தத்துவம், ‘மர்மம்’, கற்பனை கலந்த ஒரு சிறந்த புத்தகம். சாக்ரடீஸ், பிளேட்டோ முதல் நவீன தத்துவவாதிகள் வரை மேற்கத்திய தத்துவ வரலாற்றை, ஒரு ‘மர்மமான’ ஆசிரியர் மூலம் சோஃபி அறிந்து கொள்கிறாள். இந்தப் புத்தகம் 50–க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, பல மில்லியன்களுக்கு மேல் விற்பனை ஆகி உள்ளது. அந்தப் புத்தகத்தில் (பக்கம் 314 & 315) ஒலிம்பே டி கோஜஸ் பற்றி எழுதப்பட்டிருக்கிறது. அதனைப் படித்து விட்டு மேலும் அவரைப் பற்றிய செய்திகளை சேகரித்தோம்.
ஒலிம்பே டி கோஜஸ் பிரான்சு நாட்டைச் சார்ந்தவர். எழுத்தாளர், சிந்தனையாளர், சமூகப் போராளி. பெண் விடுதலை இயக்கத்தின் முன்னோடி – 1748 இல் பிறந்தவர். இளம் வயதில் திருமணம் செய்து கொண்டவர். இளம் வயதிலேயே கணவரை இழந்த வர். அதன்பிறகு பாரிசுக்கு சென்றார். 1789 இல் ‘பிரெஞ்சுப் புரட்சி’ தொடங்கியது. அப்போது மனித உரிமை பற்றி பலர் பேசினார்கள். அக்காலத்தில் வெளியான ‘Declaration of the Rights of Man and of the Citizen’ என்ற ஆவணம் ஆண்களின் உரிமைகளை மட்டும் பேசுகிறது. பெண்களுக்கு அதில் சம உரிமை இல்லை. இதற்கு எதிராக குரல் எழுப்பியவர்தான் ஒலிம்பே டி கோஜஸ்.
திருமணம் ஒரு சம ஒப்பந்தமாக இருக்க வேண்டும் என்று முழங்கியவர்!
1791 ஆம் ஆண்டு அவர் எழுதிய, ‘Declaration of the Rights of Women and of the Female Citizen’ என்ற புத்தகம் பெண்ணுரிமைச் சிந்தனையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆண்களுக்கு உள்ள உரிமைகள் அனைத்தும் பெண்களுக்கு வேண்டும். பெண்களுக்கு வாக்குரிமை, அரசியலில் பங்கேற்கும் உரிமை, சொத்துரிமை, திருமணத்தில் சம உரிமை, விவாகரத்து செய்யும் உரிமை, கல்வி உரிமை தேவை என்று முழங்கினார். திருமணம் ஒரு சம ஒப்பந்தமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அவர் எழுதிய ஒரு நாடகம்:
“L’ Esclavage des Noirs’’ (கருப்பர்களின் அடிமைத்தனம்)
இதில் அடிமை முறையை கடுமையாக விமர்சித்தி ருந்தார்.
ஆணாதிக்க உலகம்!
‘ஜாதி ஒழிப்பு கூட சுலபமாக முடிந்து விடலாம்; பெண்ணடிமை ஒழிப்பு சுலபமாக முடியாது’ என்று தந்தை பெரியார் உண்மை நிலையை உணர்த்தியிருக்கிறார். பெண்ணுரிமை முழங்கிய ஒலிம்பே டி கோஜஸ் அடைந்த இன்னல்கள் ஏராளம். நீதிமன்றத்தில் அரசு வழக்குரைஞர், ‘Criminal Women’ என்று குறிப்பிட்டார். ‘விலைமகள்’, ‘பைத்தியம் பிடித்த பெண்’, ‘பெண் தன்மை அற்றவள்’ என்றெல்லாம் அவதூறுகள் பரப்பப்பட்டன. இழிவு செய்யப்பட்டார்.
ஒலிம்பே டி கோஜஸ் கைது செய்யப்பட்டார்; 1793இல் தூக்கிலிடப்பட்டார். பெண் உரிமைக்காகப் போராடிய ஒலிம்பே டி கோஜஸ் தூக்கிலிடப்பட்டப் பிறகு, பாரிஸ் நகரில் அதிகாரிகள் ஓர் அறிவிப்பை வெளியிட்டனர். அந்த அறிக்கை இரண்டு செய்தி களை உலகிற்கு வெளிப்படுத்தியது. ஒலிம்பே டி கோஜஸ் என்ற புரட்சிப் பெண்ணை அவமதிப்பது, பெண்களுக்கு எச்சரிக்கை விடுப்பது.
அந்த அறிக்கையில் ஆணாதிக்க வன்மம் நிறைந்திருப்பதை உணரலாம்.
“ஒலிம்பே டி கோஜஸ் என்ற பெண் அரசியலில் தலையிட்டு தன் பாலினத்திற்கு ஏற்ற கடமைகளை மறந்து விட்டார்.
அவர் ஒரு ஆண் போல நடந்து அரசியல் காரி யங்களில் தலையிட்டார்.
இயற்கை, பெண்களுக்குக் கொடுத்த கடமைகளை அவர் மீறினார்.
அதன் விளைவாக அவர் தண்டிக்கப்பட்டார்.
இந்த அறிவிப்பு உண்மையில் பெண்களுக்கு ஓர் அச்சுறுத்தல்.
‘பெண் தன் கடமையை மறந்து விட்டார் ‘அதாவது பெண்கள் அரசியல் பேசக்கூடாது; வீட்டு வேலைகளை மட்டும் கவனிக்க வேண்டும் என்ற கருத்து.
‘ஆணைப் போல நடந்து கொண்டார்’ அதாவது அரசியல் பேசுவது ஆண்களுக்கு மட்டும் உரியது என்பதாகும்.
‘இயற்கைக்கு எதிரான பெண்’ என்பதன் பொருள், பெண் அமைதியாக இருக்க வேண்டும்; ஆணுக்குக் கீழ்ப்படிந்திருக்க வேண்டும்; அந்த எல்லைகளை மீறினால், அது இயற்கைக்கு எதிரானது என்று பொருள்.
இவை யாவும் பெண்களை பயமுறுத்தும் முயற்சி.
புரட்சி எரிமலைகளை
மூடி போட்டு மூடி வைக்க முடியாது!
ஒலிம்பே டி கோஜஸ் அவர்களைத் தூக்கிலிட்டதன் மூலம் தற்காலிக வெற்றி கிடைத்திருக்கலாம். புரட்சி எரிமலைகளை மூடி போட்டு மூடி வைக்க முடியாது.
வரலாறு மாறியது. பெண்ணடிமை விலங்குகள் உடைந்தன.
புரட்சியாளர்கள் புதைக்கப்படுவதில்லை; விதைக்கப்படுகின்றார்கள் என்பதே உண்மை. இன்றைக்கு ஒலிம்பே டி கோஜஸ் உயிரோடு இல்லாமல் இருக்கலாம்; அவருடைய கருத்துகள் உலகம் முழுவதும் வலம் வந்து கொண்டிருக்கின்றன என்பதுதான் உலக மகளிர் நாள் செய்தியாகும்.
பிரெஞ்சுப் புரட்சிக்குப் பின்னரும்…
நமது வீர வணக்கத்திற்கும், புகழ் வணக்கத்திற்கும் உரியவர், பகுத்தறிவுச் சிந்தனைக்காக உயிர்த் தியாகம் செய்தவர்; உயிரோடு எரிக்கப்பட்ட ஜியோடார் புருனோ வைப்பற்றி உலகு அறியும். ஆனால், பெண் உரிமை பேசியதாலும், அதற்காகப் போராடியதாலும், சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் பேசிய பிரெஞ்சுப் புரட்சிக்குப் பின்னரும், ஆணாதிக்க சமுதாயமே இன்னமும் என்ப தற்காகக் கொடுத்த விலைதான், பிரான்சு நாட்டு பெருமக ளார் ஒலிம்பே டி கோஜஸ் அம்மையாரின் உயிர் துறப்பு!
அவரைப்பற்றிய கவனம்கூட, வரலாற்றில் இல்லாமல் உள்ளதே!
இது வேதனைக்கும், வெட்கத்திற்கும் உரியதல்லவா?
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
8.3.2026
