தி.மு.க. கூட்டணியை பிரிக்க சூழ்ச்சி செய்தவர்கள் படு தோல்வியைத் தழுவி இருக்கிறார்கள்!
சென்னை.மார்ச்.7, “பிரதமர் மோடி ‘நாரி சக்தி’ என்கிறார். ஆனால், பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு உண்டா? எப்போது வரும் என்றாவது உத்தரவாதம் உண்டா? தெரியாது. காரணம், பிரதமரை இயக்குவது ஆர்.எஸ்.எஸ். அந்த ஆர்.எஸ்.எஸ்.சில் பெண்களுக்கு முக்கியத்துவம் கிடையாது” என்று ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வை அம்பலப்படுத்தியும், திராவிட மாடல் அரசு பெண்களுக்கு செய்திருக்கும் திட்டங்களையும், சட்டங்களையும் சுட்டிக்காட்டி, எது நமக்குத் தேவை என்கின்ற கருத்தில், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தத்துவ ரீதியாக உரையாற்றினார்.
மானமும் – அறிவும் மகத்தானது!
சென்னை கிழக்கு மாவட்டம் – துறைமுகம் தொகுதி தி.மு.க. சார்பில், “மக்கள் முதல்வரின் மனிதநேய விழா – 2026” நிகழ்ச்சி மண்ணடியில் உள்ள தம்பு செட்டி தெருவில், 6.3.2026 வெள்ளிக்கிழமை அன்று, மாலை 6 மணி முதல் 9:30 மணி வரை, “மானமும் அறிவும் மகத்தானது! மனிதநேயமே திராவிட மாடலானது!” எனும் கருத்தில் சிறப்பாக நடைபெற்றது. சாலையின் இருபுறமும் தி.மு.கழக கொடிகளும், முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோரின் மின்னொளி முழு உருவ வெட்டுத் தோற்றமும் அமைக்கப்பட்டு, பொதுக்கூட்டம் ஒரு மாநாடு போல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் துறைமுக மேற்குப் பகுதி செயலாளர் எஸ்.முரளி அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். துறைமுகம் கிழக்குப் பகுதிச் செயலாளர் எஸ்.ராஜசேகர் தலைமையேற்று உரையாற்றினார். மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் – சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் – சட்டமன்ற உறுப்பினர் கு.செல்வப் பெருந்தகை, தி.மு.க. செய்தித்தொடர்பு இணை செயலாளர் வழக்குரைஞர் தமிழன் பிரசன்னா ஆகியோர் முன்னிலை வகித்து, திராவிட மாடல் அரசின் சாதனைகளை பட்டியலிட்டு உரையாற்றினர். சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் – இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சட்டமன்ற உறுப்பினர்கள் தாயகம் கவி, ஜோசப் சாமுவேல் உள்ளிட்டோர் முன்னிலை வகித்து சிறப்பித்தனர். கலந்து கொண்ட ஆளுமைகளுக்கு தி.மு.க. மாவட்டக் கழகத்தின் சார்பில், சிறப்பு செய்யப்பட்டது. திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு, தி.மு.க. சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் பி.கே.சேகர்பாபு பொன்னாடை அணிவித்து மரியாதை செய்தார். நிறைவாக தமிழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி உரையாற்றினார்.
திராவிட இயக்கம் என்ன செய்தது?
அவர் தமது உரையை, தமிழ்நாடு முதலமைச்சரின் பிறந்த நாளை மக்கள் முதலமைச்சரின் மனிதநேய விழா என்று கொண்டாட கூடிய வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது என்பதை நினைவூட்டி, “அந்த மக்கள் முதலமைச்சர் தான் இன்று மட்டுமல்ல, நாளையும் அவர்தான் தமிழ்நாட்டை ஆளப்போகிறார்” என்று எடுத்த எடுப்பிலேயே அழுத்தம் திருத்தமாகக் கூறி, மிக பலத்த கை தட்டல்களுடன் தொடங்கினார். தொடர்ந்து முன்னிலை வகித்துப் பேசிய ஆளுமைகளின் பின் சிறப்புகளை கூறி விட்டு, எதிரில் அமர்ந்திருந்த ஏராளமான மகளிர் தோழர்களைப் பார்த்து, “அகமும் முகமும் மலர அமர்ந்திருக்கும் தாய்மார்களே!” என்று விளித்து, உற்சாகத்தை மேலும், மேலும் கூட்டி, மகளிர் உரிமைகளிலிருந்தே தமது உரையை தொடங்கினார். அதாவது, “திராவிட இயக்கம் என்ன செய்தது?” என்று கேட்டுவிட்டு, “அண்ணா; கலைஞர்; இப்போதைய முதலமைச்சர் ஆகியோர் என்ன செய்தனர் என்பதற்கு பெரிய ஆராய்ச்சி எல்லாம் தேவையில்லை என்று குறிப்பிட்டார். அதைத் தொடர்ந்தே, “இங்கே மகளிர் அமர்ந்திருக்கிறனர்.
‘நாரி சக்தி’
ஆண்கள் நின்று கொண்டிருக்கின்றனர். நூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்த நிலை தலைகீழாக இருந்தது. அதை மாற்றிக் காட்டியது தான் திராவிட இயக்கமும் அதன் தலைவர்களும் செய்த மகத்தான சாதனை!” என்று ஒரு பிரகடனம் போல் அறிவித்தார். மக்களிடையே மிகப்பெரிய எழுச்சி ஏற்பட்டு, இரு பாலினரின் பாகுபாடற்ற கைதட்டல்களால் அங்கே பொறி பறந்தது. இதற்கு நேர் எதிரான ஆர்எஸ்எஸ் – பாஜகவை பற்றி குறிப்பிட, ”பிரதமர் தமிழ்நாட்டுக்கு அடிக்கடி வருகிறார் பெண்களைப் பார்த்து, ‘நாரி சக்தி’ என்கிறார். ஆனால், பெண்களுக்கு இட ஒதுக்கீடு உண்டா? அது எப்போது வரும் என்ற உத்தரவாதமாவது உண்டா?” என்று கேள்வி கேட்டு, ஆர்.எஸ்.எஸ். சில், பெண்களுக்கு முக்கியத்துவம் இல்லை என்றும், இந்திய பிரதமர் மோடியை இயக்குவது ஆர்.எஸ்.எஸ். தான் என்றும் பதில் கூறி, அவர் இட ஒதுக்கீடு வழங்காமல் இருப்பதற்கான காரணத்தை பச்சையாக அம்பலப்படுத்தினார்.
‘நான் முதல்வன் திட்டத்தில்….’
ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. கொள்கைகளுக்கு நேர் எதிரான கொள்கை உடைய திராவிடர் இயக்கத்தின் தந்தை, பெரியார் அவர்கள், பெண்களின் கைகளில் இருந்து கரண்டியை பிடுங்கி விட்டு பேனாவைக் கொடுத்தார். அதன் மூலம் கல்வி வேலை வாய்ப்புகள் பெற்று, இன்று யு.பி.எஸ். தேர்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த எளிய குடும்பத்தில் பிறந்து, ‘நான் முதல்வன்’ திட்டத்தில் படித்து, இரண்டாம் இடத்திற்கு வந்திருக்கிறார் ஒரு பெண்! ஏழாம் இடத்துக்கு வந்திருக்கிறார் ராஜா மொய்தீன் என்ற சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்! இந்த சாதனை வட மாநிலங்களில் நடப்பதற்கு சாத்தியம் உண்டா?” என்று வேகமாகக் கேட்டு, ஏன் இந்த ஆட்சி வரவேண்டும் என்று நினைக்கிறோம்? இதற்காகத்தான்!” என்று, நூற்றாண்டுகளின் தரவுகளை தேடாமல்; கூறாமல் நடப்பில் இருக்கும் ஆதாரத்தை சுட்டிக்காட்டி, மக்களுக்கு எளிய வகையில் விளக்கி விட்டார். தொடர்ந்து, “சமூக வளர்ச்சியில் சரி பங்கை செலுத்தி இருக்கக்கூடிய பெண்களின் ஊதியமில்லாத பங்களிப்புக்கு, அங்கீகாரம் கொடுக்கும் வகையில் தான் “கலைஞர் மகளிர் உரிமைத் தொகை” வழங்கப்படுகிறது” என்று அந்தத் திட்டத்தின் அடி ஆழத்தைத் தொட்டுப் பேசினார். பெண்கள் உணர்ச்சி வசப்பட்டு நீண்ட நேரம் கைதட்டினர். தொடர்ந்து பேசிய அவர், ஒன்றிய அரசு பல்வேறு அரசு நிறுவனங்கள் மூலமும், ஆளுநர் மூலமும் அளித்த தொல்லைகளை இடர்பாடுகளை சுட்டிக்காட்ட வந்தவர், “ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. எத்தகைய சூழ்ச்சிகளை செய்தாலும், அதை தமிழ்நாடு முதலமைச்சர் தூள் தூளாக்கி விடுகிறார்” என்று சுட்டிக்காட்டி பேசினார். மேலும் அவர், கல்வி வேலை வாய்ப்புகளில், தமிழ்நாடு அரசு காட்டி வரும் ஈடுபாட்டை மனதாரப் பாராட்டினார்.
மீண்டும் ‘திராவிட மாடல்’
ஆட்சி மலரப் போகிறது
கடந்த மூன்று ஆண்டுகளாக, தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணியை பிரிப்பதற்கு, பல்வேறு சதித்திட்டங்கள் செய்யப்பட்டுள்ளன. அவை அத்தனையும் தோல்வியில் தான் முடிந்துள்ளன என்பதைச் சுட்டிக் காட்டுவதற்கு, ”கடல் வற்றி கருவாடு தின்ன ஆசைப்பட்ட கொக்கு; குடல் வற்றி செத்துப் போய்விட்டது. ஆகவே தி.மு.க. கூட்டணியை அசைக்க முடியாது. காரணம் இது கூட்டணி! அது கூத்து அணி!” என்ற பழமொழி, எதுகை மோனை போன்ற மேடைப்பேச்சையே இலக்கிய நயம் தெறிக்கப் பேசி, மக்களை அளவற்ற ஆனந்தத்தில் ஆழ்த்தினார். இறுதியாக, “எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்களும், உலகளவிலும் நமது முதலமைச்சரைப் பாராட்டுகின்றனர். எனவே, மீண்டும் திராவிட மாடல் ஆட்சிதான் மலரப்போகிறது” என்று உற்சாகமாகப் பேசி தமது உரையை நிறைவு செய்தார். கழகத் தலைவரின் உரை தொடங்கியது முதல் இறுதி வரை உற்சாகம் கரை புரண்டோடியது. அது மக்களிடமும் எதிரொலித்தது குறிப்பிடத்தக்கது.
நிறைவாக தி.மு.க. வட்டக் கழகச் செயலாளர் பாஸ்கர், அனைவருக்கும் நன்றி கூறி, நிகழ்ச்சியை முறைப்படி முடித்து வைத்தார். இந்தியா கூட்டணிக் கட்சிகளின் மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் மற்றும் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த வடசென்னை மாவட்டச் செயலாளர் புரசை அன்புச்செல்வன், புதுவண்ணை செல்வம், திருவொற்றியூர் மாவட்டப் பொறுப்பாளர் மோகன், அரும்பாக்கம் தாமோதரன், ஆனந்தன், உடுமலை வடிவேல், மகேஷ், சுரேஷ் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை கண்டும், கருத்துகளை உண்டும் களித்தனர். நிகழ்ச்சி முடிந்ததும் பா.ஜ.க., த.வெ.க. ஆகிய கட்சிகளில் இருந்து இளைஞர்கள், மகளிர் தி.மு.க. சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் பி.கே.சேகர்பாபு அவர்களின் முன்னிலையில், தி.மு.க. துண்டைத் தோளில் தாங்கி, தங்களை இணைத்துக் கொண்டனர்.
