‘வந்தே மாதரம் தேசியப் பாடலா?’ கண்டனக் கூட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைப்புச் செயலாளர் வழக்குரைஞர் ஆர்.எஸ்.பாரதி உரை

9 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

76 ஆண்டுகள் பாடி வருகிற ஒரு பாட்டுக்கு, இப்பொழுது ஒத்துப்பாட்டு எழுவதற்கு தேவை என்ன? அயோத்தியிலே மக்கள் தந்த தீர்ப்பைப் போல, இதற்கும் இந்திய நாட்டு மக்கள் தீர்ப்புத் தருவார்கள்!
பெரியார் திடலில் தொடங்கப்படுகிற இந்த முயற்சி, வெற்றி பெறும்!

சென்னை, மார்ச் 6 எழுபத்தாறு ஆண்டுகள் பாடி வருகிற ஒரு பாட்டுக்கு, இப்பொழுது ஒத்துப்பாட்டு எழுவதற்கு  தேவை என்ன? இந்த 76 ஆண்டிலே இந்தியா வளர்ச்சி பெறவில்லையா? இந்த 76 ஆண்டு காலத்திலே எல்லோரும் இந்த அளவுக்கு வளர்ச்சி அடைந்ததற்குக் காரணம் எது? ஏன், எதற்காகப் புதிய குழப்பம்? ஆக, எல்லோரும் இங்கே சுட்டிக்காட்டியது போல, மோடியினுடைய டப்பா காலி. எந்தவிதமான சாதனையையும் அவர்களால் சொல்ல முடியவில்லை. இப்பொழுது புதிதாக, இந்த ‘வந்தே மாதரத்தை’ எடுத்திருக்கிறார்கள். நிச்சயமாக, அயோத்தியிலே மக்கள் தந்த தீர்ப்பைப் போல, இதற்கும் இந்திய நாட்டு மக்கள் தீர்ப்புத் தருவார்கள். பெரியார் திடலில் தொடங்கப்படுகிற இந்த முயற்சி, வெற்றி பெறும் என்றார் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைப்புச் செயலாளர் வழக்குரைஞர்  ஆர்.எஸ்.பாரதி  அவர்கள்.

Contents

‘‘மதச்சார்பின்மையைக் குழிதோண்டிப் புதைப்பதா? மதவெறிப் பாடலான வந்தே மாதரம் தேசியப்பாடலா?’ சிறப்புக் கூட்டம்!

‘‘மதச்சார்பின்மையைக் குழிதோண்டிப் புதைப்பதா? மதவெறிப் பாடலான வந்தே மாதரம் தேசியப்பாடலா?’’ என்ற தலைப்பில்,  கடந்த 18.2.2026 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்ற கண்டனக் கூட்டத்தில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைப்புச் செயலாளர் வழக்குரைஞர் ஆர்.எஸ்.பாரதி   அவர்கள் கண்டன உரையாற்றினார்.

அவரது உரை வருமாறு:

இந்தச் சிறப்பு வாய்ந்த கண்டனக் கூட்டத்திற்குத் தலைமை ஏற்று நடத்திக் கொண்டிருக்கிறவரும், நிறைவாக  நிறைவுரையாற்ற இருக்கின்றவருமான தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களே, உரையாற்றி அமர்ந்திருக்கிற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் ‘தகைசால் தமிழர்’ பேராசிரியர் காதர் மொகிதீன் அவர்களே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய சட்டப்பேரவை உறுப்பினர் நாகை மாலி அவர்களே, வரவேற்புரையாற்றிய கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே, திராவிடர் கழகத்தினுடைய பொதுச் செயலாளர் அருமைத் தம்பி அன்புராஜ் அவர்களே, இந்தக் கூட்டத்திலே கலந்து கொண்டிருக்கிற முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் அருமைச் சகோதரர் அவர்களே, என்னோடு வருகை தந்திருக்கின்ற திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய செய்தித் தொடர்பாளர் டாக்டர் அபீஸ் அவர்களே, அருமைச் சகோதரர்களே, தோழர்களே! உங்கள் அனைவருக்கும் என்னுடைய பணிவான வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

‘‘எங்கே இருந்தாலும் சரி,
எந்த இடத்திலே இருந்தாலும், முதலில் கிளர்ந்தெழக்கூடியவர் ஆசிரியர் தான்!’’

இந்தக் கூட்டத்தினுடைய நோக்கம், பல பேருக்கு இப்படி ஒரு ஆணை வந்திருப்பது தெரியவில்லை. காரணம் என்னவென்று கேட்டால், இதை ரகசியமாக மட்டுமல்ல, மக்களுடைய பார்வைக்குத் தெரியாமல், ஒன்றிய அரசு மிக ராஜதந்திரமாக இந்தப் பாடலை எப்படியாவது கொண்டு சேர்க்கவேண்டும் என்ற எண்ணத்தில், சட்டப்பூர்வமாக ஆக்கியதே பல பேருக்குத் தெரியவில்லை. அதுதான் வாய்ப்புக்கேடானது. ஆனால், அதே நேரத்தில் இந்த அறிவிப்பு வந்த நேரத்தில், தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நம்முடைய ஆசிரியர் அவர்கள், நாடாளுமன்றத்திலே இந்த அறிவிப்பு வந்த அடுத்த கணமே, கவிஞர் பூங்குன்றன் அவர்கள், என்னோடு தொலைபேசியிலே தொடர்புகொண்டு, ‘‘ஆசிரியர் சுற்று பயணத்தில் இருக்கிறார். இப்படி ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார். திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் நீங்கள் கலந்து கொள்ள வேண்டும்’’ என்று என்னிடத்திலே கேட்ட நேரத்தில், அப்பொழுதுதான் நான் உணர்ந்தேன், ‘‘எங்கே இருந்தாலும் சரி, எந்த இடத்திலே இருந்தா லும், முதலில் கிளர்ந்தெழக்கூடியவர் ஆசிரியர் தான்’’ என்பதை  – அது மட்டுமல்ல, அவர் எந்தப் பிரச்சி னையை கையில் எடுத்தாலும், அது நிச்சயமாக இறுதி வெற்றி நமக்குத்தான் கிடைத்திருக்கின்றது என்பதற்குப் பல்வேறு சான்றுகளை என்னால் சுட்டிக் காட்ட முடியும்.

‘வந்தே மாதரம்’ என்கிற பாடலுக்குப் பலபேருக்கு அதனுடைய பொருள் தெரியாமலே, நம்மை பார்த்துக் கூட நாளைக்குச் சொல்வார்கள். இவர்கள் எல்லாம் ‘தேச விரோதிகள்’ என்று. அதைச் சொல்வது யாரென்றால், இங்கே சொன்னார்களே பார்ப்ப னர்கள் என்று, அவர்கள் கூட இருக்கமாட்டார்கள். நம்மவர்கள் தான் நிறைய பேர் சொல்வார்கள். அங்கே வாடகைக்குப் போயிருக்கக்கூடிய தமி ழர்கள் தான் சொல்வார்கள்.  இன்றைக்கு அந்தக் கூட்டணியில் இருக்கிற தமிழிசை முதலில் கண்டன அறிக்கை வெளியிடுவார். அதற்குப் பெயர் ‘தமிழிசை’ என்று பெயர். இன்றைக்கு நான் இங்கே பேசிவிட்டுப் போனதும்,  நாளைக்கு முதல் அறிக்கையே தமிழிசைதான் விடு வார். அடுத்த நாள் அண்ணா மலை ஒத்து ஊதுவார்; இதை இரண்டும் கேட்டு விட்டு, ‘‘நாம் ஏன் சும்மா இருக்க வேண்டும்’’ என்ப தற்காக, எடுபிடியாக இருக்கிற எடப்பாடியும் ஒத்து ஊதுவார். அது தான் அவர்களிடம் இருக்கக்கூ டிய ராஜதந்திரம்.

இங்கே ஆசிரியர் அவர்கள் 1937 இல் நடந்த நிகழ்ச்சியை சொன்னார். ராஜாஜிதான் முதன் முதலில் தமிழ்நாட்டில் இந்தப் பாடலை சட்டமன்றத்தில் பாட வேண்டும் என்று அறிமுகப்படுத்திய நேரத்தில், தந்தை பெரியார் அவர்கள்,  அதை எதிர்த்துக் குரல் கொடுத்தார்; அவர்தான் அதனை எதிர்த்து எழுதினார். அதே ராஜாஜிதான், முதன் முதலில் ஹிந்தியை தமிழ்நாட்டில் புகுத்தியவரும் அவர்தான். தந்தை பெரியார் அவர்கள், ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தபோது, தாளமுத்து, நடராஜன் மறைவுக்குக் காரணமாக இருந்தது ராஜாஜிதான்.

இந்த மன்றத்திலே இருந்து நான் சொல்கிறேன், 1937 இல் ஹிந்தியை ஆதரித்துப் பேசிய ராஜாஜியை, 1967 இல் ஹிந்தியை எதிர்க்கச் செய்தது, இந்த இயக்கத்திற்குக் கிடைத்த வெற்றியாகும். அதேபோல, இன்றைக்கு இந்த ‘வந்தே மாதரம்’ பாடலை, இங்கே இருந்து நாம் எதிர்க்கிறோம். மிக விரைவிலே அதற்கு முடிவு வரும் என்கிற நம்பிக்கையும் எனக்கு இருக்கிறது. ஏனென்றால், ஆனானப்பட்ட ராஜாஜியே, தன்னை மாற்றிக்கொண்டு நம்முடைய வழிக்கு வந்துவிட்டார் என்றால், இந்த மோடி எம்மாத்திரம்? நாடாளுமன்றத்திலே அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை, நாம் தேசத் துரோகிகள் அல்ல; சொல்லப்போனால் மோடிதான் மிகப்பெரிய துரோகி. இந்தியாவை, டிரம்புக்கு அடகு வைத்துவிட்டார். அதேபோல நம்முடைய எல்லையை சீனாக்காரனுக்குக் காட்டிக் கொடுத்துவிட்டார். இதை யெல்லாம் மூடி மறைப்பதற்காக, ‘வந்தே மாதரம்’ பாடலைப் பாட வேண்டும் என்று கட்டாயமாக்குகிறார்கள்.

இன்னும் நம்முடைய பணி நூறு ஆண்டுகளுக்குத் தேவைப்படுகிறது: கலைஞர்!

எல்லோரும் சுட்டிக்காட்டியதை போல, நாம் ஒன்றும் இந்தப் பாடலுக்கு விரோதிகள் அல்ல. அந்தப் பாடலில் இருக்கிற ஆறு வரிகளில், இரண்டு வரிகளை நாம் எல்லோரும் ஏற்றுக் கொள்கிறோம். மீதி இருக்கக்கூடிய நான்கு வரிகளைப்பற்றி ஆசிரியர் அவர்கள், விளக்கமாக உங்களுக்கு வகுப்பு எடுப்பார். காரணம் என்னவென்றால், ஸநாதானத்தை நாம் எதிர்த்தோம் என்றவுடன், எல்லோரும் பேசினார்கள், எதிர்த்தார்கள். ஆனால், ஏன் எதிர்க்கிறோம்? மனு என்றால் என்ன? மனுதர்மம் என்றால் என்ன? என்பதே இந்த நாட்டு மக்களுக்குத் தெரியாத காரணத்தினால், அதனுடைய தத்துவங்கள் எல்லாம் அவர்களிடத்தில் போய்ச் சேராத காரணத்தினால், எதிர்த்தார்கள். இந்தத் திடலிலே இருந்து,  எங்கள் தலைவர் கலைஞர் அவர்கள் அடிக்கடிச் சொன்னதைப் போல, இன்னும் நம்முடைய பணி நூறு ஆண்டுகளுக்குத் தேவைப்படுகிறது. தந்தை பெரியாரின் கருத்துகள் இன்னும் இளைஞர் மத்தியிலே போய்ச் சேர வேண்டும். இந்த ‘வந்தே மாதரம்’ என்று பாடுகிற பாடலில் இருக்கிற தன்மையை நாம் எதிர்ப்பதனால், நாம் ஹிந்துக்களுக்கு எதிரிகள் அல்ல.

காளி ஒன்றும் நமக்குப்
பங்காளி கிடையாது!

ஆனால், அதே நேரத்தில், அவர்கள் என்ன சொல்வார்கள் தெரியுமா? ஒட்டுமொத்தமாகக் கூட்டம் போட்டுக் காளியை எதிர்க்கிறார்கள் திராவிடர் கழகத்துக்கா ரர்கள் என்று சொல்வார்கள். காளி ஒன்றும் நமக்குப் பங்காளி கிடையாது. இன்னும் சொல்லப்போனால், காளியை நேசிக்கிறவர்கள், காளி சாப்பிடுவதை எல்லாம் சாப்பிடுவது அதிகம் பேர் நம்மாள்கள்தான். அவாள் சாப்பிட மாட்டார்கள். ஆனால், அதையெல்லாம் விட்டுவிடுவார்கள், பொத்தாம் பொதுவாக மக்கள் மத்தியிலே போய் இதைச் சொல்லுவார்கள்.

இந்த நான்கு வரிகளை  நீக்குவதற்குக் காரணம் என்ன? இங்கே எல்லோரும் சுட்டிக்காட்டியது போல, 1937 ஆம் ஆண்டிலேயே ராஜேந்திர பிரசாத் அவர்கள் முன்மொழிந்து, சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்கள் வழிமொழிந்து, அந்தக் காங்கிரஸ் கட்சி கூட்டத்திலே, காரிய கமிட்டியிலே சிறப்பு அழைப்பாளராக காந்தியார் சென்று, அப்பொழுது ஏற்றுக்கொள்ளப்பட்டதுதான். அதற்கு பின்னால் அரசியலமைப்புச் சட்ட வரையறைகள் ஏற்படுத்தப்பட்டு, ராஜேந்திர பிரசாத் அதனுடைய தலைவராக இருந்தார். அவருடைய தலைமையிலே தான் 1947 ஆம் ஆண்டிலிருந்து 1949 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை நடைபெற்ற அரசியலமைப்பு நிர்ணய சபை விவாதத்திலே இந்தப் பாடல் வருகிறது. தேசிய பாடலாக, ‘நேஷனல் ஆந்தமாக’ ரவீந்திரநாத் தாகூர் எழுதியதை ஏற்றுக்கொள்வதா? அல்லது அதேகனம் வங்கத்தைச் சார்ந்த சாட்டர்ஜி எழுதிய ‘வந்தே மாதரப்’ பாடலை ஏற்றுக்கொள்வதா? என்று  மிகப்பெரிய விவாதம் நடக்கிறது. இதையெல்லாம் இன்றைக்கு இருக்கக்கூடிய இளைஞர்கள் படிக்க வேண்டும்.

குலப்பெருமையாலோ, கோத்திர பெருமையாலோ பெரிய பதவிகளுக்கு வந்தவர்கள் அல்ல நம்மவர்கள்!

குறிப்பாக இதைக் கண்டித்துப் பேசுகிறவர்கள் முழுவதும்,  டாக்டராக இருப்பார், இன்ஜினியராக இருப்பார், ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ். அதிகாரியாக இருப்பார். இவர்கள் எல்லாம் நேராக அவர்களுடைய குலப்பெருமையாலோ, கோத்திர பெருமையாலோ அந்தப் பதவிகளுக்கு வந்தவர்கள் அல்ல; இந்த மைதானத்தில் இருந்து கிடைத்ததுதான் அந்த உரிமை என்பதை பல பேர் இப்பொழுது மறந்துவிட்டார்கள். அவர்கள் தான் இப்போது பேசுவார்கள். அவர்கள் எல்லாம் அரசியல் நிர்ணய சபையில் நடைபெற்ற அந்த விவாதத்தைப் படித்துப் பார்க்க வேண்டும்.

அம்பேத்கர் தெளிவாகச் சொல்கிறார், மிகச் சிறப்பாக அதற்குப் பதிலளிக்கிறார். ஏறத்தாழ ஒன்றரை மணி நேரம் விவாதம் நடைபெற்றது. டாக்டர் ராஜேந்திர பிரசாத்  அரசியல் நிர்ணய சபையில், எந்த விவாதத்திற்கும் இவ்வளவு நேரம் உட்கார்ந்தது இல்லை. இந்த விவாதத்தின்போதுதான் முழுமையாக உட்கார்ந்து கேட்டு, நிறைவாக அண்ணல் அம்பேத்கர் அவர்கள் வற்புறுத்தியபடி, தேசிய கீதமாக ‘ஜனகணமன’ என்ற ரவீந்திரநாத் தாகூர் எழுதிய பாடலை ஏற்று கொள்வது என்று அரசியல் நிர்ணய சபையால்  ஏற்றுக்கொள்ளப்பட்டது.

76 ஆண்டுகள் பாடி வருகிற ஒரு பாட்டுக்கு, இப்பொழுது ஒத்துப்பாட்டு எழுவதற்கு  தேவை என்ன?

இந்தப் பாடல், அரசியல் நிர்ணய சபைக்கு  வருவதற்கு இரண்டு நாள்களுக்கு முன்பாக, 1950 ஜனவரி 26 ஆம் தேதியிலிருந்து ‘இந்தியா ரிபப்ளிக்’ என்கின்ற அந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டு, நடைமுறைக்கு வருகிறது. 24 ஆம் தேதி இதைப் பாடியுள்ளார்கள். ஆக, 24ஆம் தேதி டாக்டர் ராஜேந்திர பிரசாத் இதற்கு அனுமதி கொடுத்து, அன்று தொட்டு ஏறத்தாழ 76 ஆண்டுகள் பாடி வருகிற ஒரு பாட்டுக்கு, இப்பொழுது ஒத்துப்பாட்டு எழுவதற்கு  தேவை என்ன? இந்த 76 ஆண்டிலே இந்தியா வளர்ச்சி பெறவில்லையா? இந்த 76 ஆண்டு காலத்திலே எல்லோரும் இந்த அளவுக்கு வளர்ச்சி அடைந்ததற்குக் காரணம் எது? ஏன், எதற்காகப் புதிய குழப்பம்?

ஆக, எல்லோரும் இங்கே சுட்டிக்காட்டியது போல, மோடியினுடைய டப்பா காலி. எந்தவிதமான சாதனையையும் அவர்களால் சொல்ல முடியவில்லை. ஏற்கெனவே ராமனை வைத்து ஓட்டினார்கள். ராமன் கதை ஓடியது. ஆனால், அந்த ராமன் கதையே வெளுத்துப் போய்விட்டது. அதே அயோத்தியில் பா.ஜ.க. தோற்றுவிட்டது என்பது வரலாறு – நாடாளு மன்றத் தேர்தலில். அன்றைக்கு வி.பி.சிங் ஆட்சியை இறக்குவதற்கு, ஒரு ராமனைக் கையில் எடுத்தார் அத்வானி.

ராமன் கோயிலை, பல ஆண்டுகளாகக் கட்டினார்கள். கட்டி முடித்த பிறகுதான் உள்ளூர்காரர்களுக்குத் தெரிந்தது, எவ்வளவு அயோக்கியத்தனம் நடந்தது என்று. ஒரு ராமன் கோயிலை  இடித்ததாக நம் மேல் பழி சொன்னார்கள். அந்த ராமன் கோயில் கட்டுவதற்கு, 300 கோயிலை இடித்திருக்கிறார்கள். உள்ளூரில், 300 கோயிலை இடித்துவிட்டுத்தான் ஒரு ராமன் கோயிலைக் கட்டினார்களா, இல்லையா? ஆக, இதையெல்லாம் அங்கே இருக்கின்றவர்கள் தெரிந்துகொண்ட காரணத்தினால் தான், பி.ஜே.பி.யை அங்கே தோற்கடித்தார்கள்.

பெரியார் திடலில் தொடங்கப்படுகிற
இந்த முயற்சி, வெற்றி பெறும்!

இப்பொழுது புதிதாக, இந்த ‘வந்தே மாதரத்தை’ எடுத்திருக்கிறார்கள். நிச்சயமாக, அயோத்தியிலே மக்கள் தந்த தீர்ப்பைப் போல, இதற்கும் இந்திய நாட்டு மக்கள் தீர்ப்புத் தருவார்கள். பெரியார் திடலில் தொடங்கப்படுகிற இந்த முயற்சி, வெற்றி பெறும் என்று சொல்லி, விடைபெறுகிறேன்!

நன்றி, வணக்கம்!

– இவ்வாறு திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைப்புச் செயலாளர் வழக்குரைஞர் ஆர்.எஸ்.பாரதி அவர்கள் கண்டன உரையாற்றினார்.

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *