சென்னை, மார்ச்.6 இந்தியாவின் நான்கு மிகப்பெரிய பொருளாதார மாநிலங்களில், கடந்த 4 ஆண்டுகளில் மகாராட்டிர மாநிலம் மிகக்குறைந்த பொருளாதார வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. தமிழ்நாடு மராட்டிய மாநிலத்தை பின்னுக்குத்தள்ளி முதலிடத்தில் செல்லும் வளர்ச்சியை எட்டியுள்ளது.
2024-2025 நிதியாண்டில் மகாராட்டிராவின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி ரூ.42,67,771 கோடி என்று கணிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், வளர்ச்சி விகிதத்தின் அடிப்படையில் பார்த்தால் கருநாடகம், குஜராத் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களை விட இம்மாநிலம் பின்தங்கியுள்ளது.
கர்நாடகம் முதலிடம்
கரோனா காலத்திற்குப் பிந்தைய சூழலில் (2021-2022 முதல் 2024-2025 வரை), கருநாடக மாநிலம் சுமார் 65 சதவீத வளர்ச்சியுடன் முதலிடத்தில் உள்ளது. பெங்களூரை மய்யமாகக் கொண்ட தகவல் தொழில்நுட்பம் மற்றும் சேவைத் துறைகளின் அசுர வளர்ச்சியே இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. கருநாடகத்தின் ஜிஎஸ்டிபி ரூ.17,02,227 கோடியிலிருந்து ரூ.28,09,063 கோடியாக உயர்ந்துள்ளது.
இரண்டாவது இடத்தில் குஜராத்
தொழில்துறை மற்றும் உற்பத்தித் துறையில் வலுவாக உள்ள குஜராத் மாநிலம், 48 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்து இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. அந்த மாநிலத்தின் பொருளாதார மதிப்பு ரூ.18,79,826 கோடியிலிருந்து ரூ.27,90,000 கோடியாக அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டிற்கு மூன்றாவது இடம்
இப்பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ள தமிழ்நாடு, சுமார் 47% வளர்ச்சியை எட்டியுள்ளது. 2021-2022-இல் ரூ.21,36,351 கோடியாக இருந்த தமிழ்நாட்டின் ஜிஎஸ்டிபி, 2024-2025-இல் ரூ.31,55,096 கோடியாக உயர்ந்துள்ளது. இதன் மூலம், ஒட்டுமொத்தப் பொருளாதார அளவில் மகாராட்டிராவுக்கு அடுத்தபடியாகத் தமிழ்நாடு ஒரு நெருக்கமான போட்டியாளராக உருவெடுத்துள்ளது.
