அய்யாவை வாழவைத்த எளிமையின் சின்னம்
துணிவின் அடையாளம் அன்னை மணியம்மையார்!
துணிவின் அடையாளம் அன்னை மணியம்மையார்!
தஞ்சாவூர், மார்ச் 6- எளிமையின் சின்னம் துணிவின் அடையாளம் அய்யாவை பாதுகாத்த தொண்டுள்ளம் கொண்ட தாய் அன்னை மணியம்மையார் என்று பெரியார் செல்வி தஞ்சாவூர் திராவிடர் கழக மகளிர் மாநாட்டில் (21.2.2026) அன்னை மணியம்மையாரின் படத்தைத் திறந்து வைத்து வி.கே.ஆர். பெரியார் செல்வி உரையாற்றினார். அதன் விவரம் வருமாறு:
இந்த வரலாற்று சிறப்புமிக்க, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநாட்டில் அன்னை மணியம்மையார் படத்தை திறந்து வைத்து பேசுவதற்கு வாய்ப்பளித்தமைக்கு தமிழ் தலைவர் ஆசிரியருக்கும், துணைத் தலைவர் கவிஞருக்கும், பொதுச் செயலாளர் அண்ணன் அன்புராஜ் அவர்களுக்கும் எனது நன்றியை முதலில் தெரிவித்துக் கொள்கின்றேன். நமது முன்னோடியான பார்வதி அம்மாவின் பெயரிலே இந்த மாநாட்டு அரங்கம் அமைக்கப்பட்டிருப்பது மிகவும் பொருத்தமாகும். இங்கு திரளாக வந்திருக்கும் மகளிர்த் தோழர்களை பார்த்து உண்மையிலேயே மனம் நெகிழ்கிறேன். உங்கள் அத்தனை பேருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வளவு பேர் கூடி இருப்பதை பார்த்தால் நமது தமிழர் தலைவர் அவர்கள் மிகுந்த உற்சாகம் கொள்வார்கள். அந்த உற்சாகத்திலே அவரின் வயதும் குறைந்து விடும்.
அன்னை மணியம்மையார் என்றாலே எளிமை, துணிச்சல், சகிப்புத்தன்மை, தலைமைப் பண்பு, தலைசிறந்த நிர்வாகி ஆகியவை ஆகும். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் அம்மாவினுடைய சகிப்புத்தன்மையைச் சொல்ல வேண்டும்.
சகிப்புத்தன்மை
இன்றைய காலகட்டத்தில் கூட பொதுவாக பொது வாழ்க்கைக்கு வரும் பெண்கள் அதிக விமர்சனங்களை சந்திக்க வேண்டியுள்ளது. ஆனால் நினைத்துப் பாருங்கள் அம்மா திராவிடர் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்ட ஆண்டு 1943. அதேபோல அன்னை மணியம்மையார் தந்தை பெரியாரை திருமணம் என்ற ஏற்பாடு செய்த ஆண்டு 1949 அப்போது அவருக்கு வயது 30 அந்தக் காலகட்டத்தில் அவர் ஏராளமான ஏச்சுப் பேச்சுக்களையும், தகாத விமர்சனங்களையும், அவமானங்களையும் எதிர்கொண்டுள்ளார். அதை எல்லாம் அன்னை மணியம்மையார் அவர்கள் ஒரு பொருட்டாகவே நினைக்காமல், அதற்கு எதிர்வினை கூட ஆற்றாமல், எதிர்த்துப் பேசாமல் தான் உண்டு, தன் கடமை உண்டு என்ற வகையிலே தந்தை பெரியாரை ஒரு தாயைப் போல கவனித்து அவரைப் பாதுகாத்து வந்தார்.
எளிமை
அய்யாவை திருமணம் செய்து கொண்ட ஏற்பாட்டுக்குப் பிறகு கூட தான் ஒரு தலைவரின் மனைவி என்ற எந்தவொரு செருக்கும் இல்லாமல், எப்போதும் போல அய்யா செல்லும் பொதுக்கூட்டங்களுக்குச் செல்வது, அங்கு ஓரமாக உட்கார்ந்து புத்தகங்களை விற்பது என்று தன் பணியைத் தொடர்ந்தார். கவிஞர் கூட அடிக்கடி சொல்லுவார் – அம்மாவிடம் மொத்தமாக ஒரு நான்கு கறுப்புப்புடவை மற்றும் ரவிக்கை தான் இருக்கும். வெளியூருக்குச் சென்றால் கூட ஒரு கறுப்புப் புடவை கட்டிக்கொண்டு ஒரு துணிப் பையில் மற்றொரு புடவை எடுத்து வருவார் என்று. அப்படி ஒரு எளிமைக்கு எடுத்துக்காட்டாக அம்மா அவர்கள் விளங்கினார்கள். நினைத்துப் பாருங்கள் தோழர்களே, நமக்கெல்லாம் இன்று வரைக் கூட துணிமணிகள், நகை நட்டுகள் போன்ற ஆசைகளை முழுமையாக விட்டு விட இயலவில்லை. ஆனால் அன்றைய காலக்கட்டத்தில் அன்னை மணியம்மையார் அவர்கள் எந்த வித நகை நட்டும் போடாமல், விலை உயர்ந்த துணிமணிகளை விரும்பாமல், ஒரு எளிமையின் சின்னமாகவே அவர்கள் வாழ்ந்தார்கள். பொது வாழ்க்கைக்கு வரும் பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதையும், எவ்வளவு விமர்சனங்கள் வந்தாலும், அதை எப்படி தாங்கிக் கொள்ள வேண்டும் என்பதையும் நாம் அவரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.
தலைமைப்பண்பு
ஒரு மிகப்பெரிய சமுதாய இயக்கத்திற்குத் தலைமை தாங்கிய பெண்மணி என்ற பெருமையும் அம்மாவையே சாரும். தந்தை பெரியார் மறைவுக்குப் பிறகு இந்த திராவிடர் கழகத்திற்குத் தலைவராக பொறுப்பேற்று, கிட்டத்தட்ட நான்கரை ஆண்டுகள் மிகச் சிறப்பாக இந்த இயக்கத்தை வழிநடத்திச் சென்று இருக்கிறார்கள்.
துணிச்சல்
1957ஆம் ஆண்டு நவம்பர் 27 ஆம் நாள் ஜாதியைப் பாதுகாக்கின்ற சட்டப் பிரிவு 24, 25 அய் எதிர்த்து, அய்யாவின் ஆணைக்கிணங்க சட்ட நகலை எரிக்கும் போராட்டத்தில் கலந்து கொண்டு, எண்ணற்றத் தோழர்கள் தமிழ்நாடு எங்கும் கைது செய்யப்பட்டார்கள். தந்தை பெரியார் அவர்களை முன்கூட்டியே கைது செய்து விட்டார்கள். அந்த நேரத்தில் திருச்சி சிறையில் இருந்த பட்டுக்கோட்டை ராமசாமி, மணல்மேடு வெள்ளைச்சாமி ஆகியோர் இறந்து விட்டனர். அவர்களின் உடலைத் தர மறுத்து சிறைக்குள்ளயே புதைத்து விட்டனர் சிறை அதிகாரிகள். அவர்களின் உடலை எவ்வளவோ போராடிக்கேட்டும் கொடுக்காததால், அம்மா அவர்கள் நேரிடையாக காமராசரிடம் சென்று முறையிட்டு, அனுமதி பெற்று, பிறகு அவர்கள் இருவரின் உடலைத் தோண்டி எடுத்துப் பெற்ற பின்பு, ஏராளமான தோழர்களோடு ஊர்வலமாக எடுத்துச் சென்று மரியாதையாக அடக்கம் செய்தார்.
வட இந்தியாவிலே ராவணனை இழிவுபடுத்தும் ராம லீலா என்ற நிகழ்ச்சியை நடத்தக் கூடாது, அதைத் தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும், அவர்கள் அதை நிறுத்தாமல் தொடர்ந்து செய்ததால், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலே தந்தை பெரியார் நினைவு நாளையொட்டி 1974 ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் நாள் ராவண லீலாவை மிகச் சிறப்பாக சென்னை பெரியார் திடலில் , காவல்துறையின் எதிர்ப்பையும் மீறி நடத்தி முடித்தார்கள். அதற்காக அவர் கைது செய்யப்பட்டு பின் விடுதலையானார்.
இந்தியாவில் 1975 ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் நாள் நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டது தமிழ்நாட்டில் கலைஞர் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி 3.1.1976 அன்று கலைக்கப்பட்டது. அப்போது தமிழர் தலைவர் ஆசிரியர் உள்ளிட்டோரைக் கைது செய்தனர்.
மிசா காலக்கட்டத்தில் மிகக் கடுமையான கட்டுப்பாடுகள் பத்திரிகைகளுக்கு விடுக்கப்பட்டிருந்தன. அதில் நமது ஏடான ‘விடுதலை’யும் கடுமையான தணிக்கைகளுக்கு உள்ளானது.
1.2.1976 முதல் ‘விடுதலை’ பத்திரிகை தணிக்கைக்கு உள்ளாக்கப்பட்டது
குறிப்பாக விடுதலையில் தந்தை பெரியார் அவர்கள் என்று போடக்கூடாது என உத்தரவு போட்டார்கள். அதனை மணியம்மையார் அவர்கள் கடுமையாக எதிர்த்தார். அதுவரைப் பொறுத்திருந்த அன்னையார் அவர்கள் எரிமலை ஆனார்கள் கவிஞர் கலி.பூங்குன்றனை அழைத்து தணிக்கை அலுவலகத்துக்கு நீயே போ சம்பந்தப்பட்ட தணிக்கை அதிகாரியை நீயே நேரில் கேள்! எந்த விதியின் கீழ் இந்த தணிக்கையை செய்தீர்கள் என்று கேள்! கடைசியாக ஒன்றைச் சொல். இது பெரியார் வீட்டு பணத்தில் பெரியார் கொள்கையை பரப்புவதற்காக நடத்தப்படும் ஏடு! இதில் பெரியாரின் சிறப்பை குறைக்கும் வகையில் தணிக்கை செய்ய நீ யார்? தந்தை பெரியார் அவர்கள் என்று தான் மீண்டும் மீண்டும் போடுவோம் என்ன செய்ய முடியுமோ அதை செய்து கொள்! காலம் இப்படியே போய்க்கொண்டு இருக்காது என்று எச்சரித்துவிட்டு வா! அரசு வேலை போனால் போகட்டும் நீதான் போக வேண்டும் உனக்கு அதில் சங்கடம் என்றால் சொல். நானே போகிறேன் என்று கவிஞரிடம் அன்னை மணியம்மையார் அவர்கள் தீர்க்கமாக சொல்லிவிட்டார்கள்.
உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அந்த தாய் அனல் மொழியால் ஆணையிட்டார்கள். அதற்கு மேல் அட்டி என்ன? தலைவர் அன்னையார் சொன்னதற்கு மேலும் போகாமல், கீழும் போகாமல் அப்படியே சொல்லிவிட்டு அவர்களின் தணிக்கையை சட்டை செய்யாமல் வெளியிட்டோம் என்று கூறியிருக்கிறார் கவிஞர்.
பெறாமல் பெற்ற பிள்ளைகளின் தாய்
அன்னை மணியம்மையார் அவர்கள் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்தில் வளர்ந்த 53 பெற்றோர்கள் இல்லாத குழந்தைகளுக்குத் தாயாக இருந்து கவனித்து, அவர்களைப்படிக்க வைத்து, ஆளாக்கி, பட்டுப் புடவை, நகை, சீர் சாமான்களோடு நல்ல முறையில் திருமணமும் செய்து வைத்தார்கள். அந்தக் குழந்தைகளுக்கெல்லாம் முன்னொட்டு என்ன தெரியுமா? ஈ.வெ.ரா.ம. (EVRM) அந்த 53 குழந்தைகளுக்கு மட்டும் தாயாக இல்லாமல் தந்தை பெரியாரையும் ஒரு குழந்தையாகவே பாவித்து, ஒரு தாயைப்போல அவருக்கு வேண்டிய அத்தனைப் பணிவிடைகளையும் செய்து 95 வரை கண்ணும் கருத்துமாக பார்த்த தியாகத்தாய் தான் அன்னை மணியம்மையார் அவர்கள்.
தமிழர் தலைவருக்கும் தாயான மணியம்மையார்
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மணியம்மையார் அந்த 53 பிள்ளைகளோடு என்னையும் தன் பிள்ளையாக பாவித்து நன்கு கவனித்துக்கொண்டார்கள் என்று கூறியிருக் கிறார்கள். மேலும் அவருக்குப்பிறகு ஆசிரியர் தான் என்பதை யும் வழிகாட்டி விட்டு சென்றிருக்கிறார் அம்மா.
தலை சிறந்த நிர்வாகி
அன்னை மணியமையார் அவர்கள் தலைமையேற்ற பின்பு தான் பெரியார் பகுத்தறிவு நூலகம் மற்றும் ஆய்வகத்தை நிறுவினார். சுயமரியாதைத் திருமண நிலையத்தை ஏற்படுத்தினார். பெரியார் திடலில் அமைந்துள்ள ஏழெடுக்கு மாளிகையைக் கட்டினார். தந்தை பெரியாரின் சொத்துகள் சூறை போகாமல் இருக்க தக்க நடவடிக்கை எடுத்தார். அதே போல தந்தை பெரியார் தமக்குத் தந்த சொத்துகளையும் சேர்த்து ” பெரியார் மணியம்மை கல்வி அறப்பணிக்கழகம் ” என்ற அறக்கட்டளையை உருவாக்கி பொதுமக்களுக்கே பயன்படுமாறு செய்தார்.
அதேபோல மிக முக்கியமான பொறுப்பினை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு வழங்கினார்கள். அதுதான் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தான் இனி திராவிடர் கழகத்தின் “நிரந்தர பொதுச் செயலாளர்” என்ற அறிவிப்பினை கூட்டத்தில் அறிவித்தார்கள் அம்மா. அன்னை மணியம்மையாரைப் பற்றி புரட்சிக் கவிஞர் இப்படி எழுதி இருக்கிறார்கள்….
“பெரியார் செத்துக் கொண்டிருந்தார், தமிழர் அழுது கொண்டிருந்தார்கள். ஆனால், பெரியாரின் உடம்பை விட்டுப் பிரிந்து போக மூட்டை முடிச்சுகளுடன் காத்திருந்த உயிரைப் ‘போகாதே’ என்று பிடித்து இழுத்து வைத்துக் கொண்டிருந்தவை இரண்டு. ஒன்று, அவரின் பொதுத் தொண்டு, மக்கள் மீது அவர் வைத்த அருள் மற்றொன்று. ஆயினும்,
“காற்று இறங்கி பொதிமாடு போல் பெருத்து தொங்கும், அவர் விதையின் ஒரு பால் ஒட்டிய ஆண் குறியில், முன்னறிவிப்பின்றி வரும் சிறுநீரை உடன் இருந்து களனேந்திக் காக்கும் ஓர் அருந் தொண்டு. பெரியார் வாழட்டும் என்று தன் துடிக்கும் இளமையைப் பெரியாருக்கு ஒப்படைத்த ஒரு பொடிப் பெண்ணை அன்னை என்று புகழாமல் வேறு என்னவென்று புகழவல்லோம்? ”
அறிஞர் அண்ணா அவர்கள் ” நான் அய்யாவுடன் வந்து சேர்ந்தபோது இப்போது எனக்கு என்ன வயதோ, அந்த வயது அய்யாவுக்கு. அப்போதே வயிற்றுக் கோளாறு, பேதியாகும், பொருட்படுத்த மாட்டார். அப்போதே அய்யா இறந்து போயிருப்பார், ஆனால் மணியம்மை வந்த பிறகுதான், அவருக்கு இதிலே ஒரு திருப்பம். மணியம்மையார் அய்யாவை நன்றாக் கவனித்துக் கொண்டார். மணியம்மையார் இல்லை என்றால் நாம் அய்யாவை எப்போதோ பறிகொடுத்து விட்டுப் பரிதவித்திருப்போம். இவ்வளவு நாள் உயிரோடு பார்த்திருக்க முடியாது. அய்யா எவ்வளவு நாள் இன்னும் வாழ்கிறாரோ அவ்வளவுக்கும் நமக்கு நல்லது” என்று கூறியிருக்கிறார்கள். அதேபோல தந்தை பெரியார் அவர்களும் மணியம்மையாரைப் பற்றி இப்படி கூறுகிறார்….
“மணியம்மையார் இயக்கத் தொண்டிற்கென்று என்னிடம் வந்த இந்த 20 ஆண்டில் பல காரியங்களுக்கு, தேவைக்கு உதவி செய்து வந்ததால் என் உடல் பாதுகாப்பு, வீட்டு நிர்வாகம் ஆகியவற்றில் எனக்குத் தொல்லை இல்லாமல் இருக்கும் வாய்ப்பை அடைந்தேன்”
இப்படி அம்மாவின் சிறப்புக்களை நிறைய சொல்லிக் கொண்டே போகலாம். அத்தனைப் பெரு மைக்குரிய அம்மாவின் படத்தை திறந்து வைத்து பேச வாய்ப்பளித்தமைக்கு மீண்டும் நன்றி பாராட்டி விடை பெறுகிறேன். நன்றி வணக்கம்!
இவ்வாறு திராவிடர் கழக மகளிரணி மாநில துணைச் செயலாளர் வி. கே. ஆர். பெரியார் செல்வி உரையாற்றினார்.
