மாணவர்களுக்காக தந்தை பெரியார் நினைவேந்தல் சொற்பொழிவு ஆண்டுதோறும் நடத்துவதற்கு ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கப்படும்!
சட்டமன்றத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை, ஏப்.12 மாணவர்களுக்காக தந்தை பெரியார் நினைவேந்தல் சொற்பொழிவு ஆண்டுதோறும் நடத்து வதற்கு ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கப்படும் என இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சட்டமன்றத்தில் அறிவித்தார்.
சட்டப்பேரவையில் நேற்று (11.4.2023) இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்குப் பதிலளித்து உரை யாற்றிய இத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டதாவது:
வடக்கே இருந்து வந்து –
நம்மை யாரும் வென்றது கிடையாது!
தமிழ் நாட்டின் அரசியல் அரங்கு நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்டது. சேர, சோழ பாண்டியர்கள் காலத்திலே இருந்து இங்கே தமிழர்கள்தான் விளையாடி, வென்றிருக்கி றார்களே தவிர, வடக்கேயிருந்து வந்து இங்கு யாரும் வென்ற வரலாறு கிடையாது. தமிழ்நாட்டிற் கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் அப்படி யொரு தனிச் சிறப்பு உண்டு.
இப்போதுகூட யார், யாரோ தமிழ்நாட்டை வெல்ல லாம் என்று நினைக்கிறார்கள், அதற்கான முயற்சியையும் அவர்கள் செய்கிறார் கள். அவர்களின் விளையாட்டு இந்திய ஒன்றியத்தின் எந்த மாநிலத்தில் வேண்டுமானா லும் எடுபடலாம். ஆனால், தமிழ்நாட்டில் என்றுமே எடுபடாது. அதற்கான காரணம், தமிழ்நாட்டிற்குக் கிடைத்திருக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் என்கிற வலுவான அணியும், அந்த அணியை வழிநடத்திக் கொண்டிருக்கக்கூடிய நம்முடைய முதலமைச்சர் முத்து வேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் கேப்டனும் தான்.
எங்களுக்குத் கிடைத்த பயிற்சியாளர்கள்
வேறு எவருக்கும் கிடைத்ததில்லை!
அதோடு மட்டுமல்ல; எங்கள் அணிக்குக் கிடைத்த ஒப்பற்ற பயிற்சியாளர்கள் (Coaches) தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், இன மான பேராசிரியர் அன்பழகன் அவர்கள் இப்படிப்பட்ட Coaches எந்த அணிக்கும் கிடைத்ததில்லை.
எந்த அணி நமக்கு எதிரான அணி என்றும், யாரோடு நாங்கள் எந்த நேரத்தில் மோத வேண்டும் என்றும் எங்களுக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறார் தந்தை பெரியார் அவர்கள்.
எப்படி ஒற்றுமையோடும் கடமை, கண்ணியம் கட்டுப்பாட்டோடும் ஓர் அணி விளையாட வேண்டும் என்று எங்களுக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறார் பேரறிஞர் அண்ணா அவர்கள்.
எந்தப் பந்தை அடிக்க வேண்டும். எந்தப் பந்தை அடிக்கக் கூடாது என்று எங்களுக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறார் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள். எப்போது பொறுமையாக defense விளையாட வேண்டும், எப்போது முன்னேறிச் சென்று சிக்ஸர் அடிக்க வேண்டும் என எங்களுக்குச் சொல்லிக் கொடுத்து வருகிறார் எங்களுடைய அணித் தலைவர் எங்களுடைய முதலமைச்சர் அவர்கள்.
அவர் சொல்லிக் கொடுப்பதோடு மட்டும் நிற்காமல், அவ்வப்போது சிக்ஸர் அடிக்கிறார்.
அண்மையில் ஆன்லைன் ரம்மிக்கு எதிரான மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கச் செய்தது என்று நேற்று ஒரு சிக்ஸர் அடித்தார்.
டெல்டாவில் வரவிருந்த நிலக்கரிச் சுரங்கத்தைத் தடுத்து நிறுத்தி இன்னொரு சிக்ஸர் என நம் அணியின் கேப்டன் முதலமைச்சர் அவர்கள் இரண்டு சிக்ஸர்களை அண்மையில் விளாசியுள்ளார்கள்.
மாவட்ட விளையாட்டு வளாகங்கள் நிறுவப்படும்!
பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் ஆரோக்கியமான, சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை ஏற்படுத்துவதையும், சமூகத்தில் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி கலாச்சாரத்தை வளர்ப்பதையும் அரசு நோக்கமாக கொண்டுள்ளது. தனிநபர், குழு விளையாட்டு, தனிப்பட்ட பயிற்சி மற்றும் போட்டி நிகழ்வுகளில் பங் கேற்க ஏதுவாக புதிதாக உருவாக்கப்பட்ட தென்காசி, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல் பட்டு, மயிலாடுதுறை மாவட்டங்களில் ரூ.90 கோடி மதிப் பீட்டில் அனைத்து வசதிகளுடன் கூடிய திறந்தவெளி மற்றும் உள் விளையாட்டரங்கங்களை உள்ளடக்கிய மாவட்ட விளையாட்டு வளாகங்கள் நிறுவப்படும்.
2023 ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு பொன்விழாவை சிறப்பித்திடும் வகையில் அனைத்து ஊராட்சிகளுக்கும் ‘டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின்’ கீழ் ரூ42 கோடி செலவில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படும்.
சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு விளை யாட்டரங்கம், நேரு உள் விளையாட்டு அரங்கம், மேயர் ராதாகிருஷ்ணன் ஆக்கி விளையாட்டரங்கம், நுங்கம் பாக்கம் டென்னிஸ் விளையாட்டரங்கம் மற்றும் வேளச்சேரி நீச்சல் குள வளாகம் ஆகிய அய்ந்து முக்கிய விளையாட்டரங்கங்கள் ரூ25 கோடி செலவில் மறு சீரமைத்து மேம்படுத்தப்படும்.
நாட்டிலேயே முதன் முறையாக ரூ6 கோடி மதிப் பீட்டில் விளையாட்டு அரங்கங்களில், பிரத்யேக பாரா விளையாட்டு மைதானங்கள் உருவாக்கப்படும்.
விளையாட்டு மேம்பாட்டுக்காக பொதுமக்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுடன் இணைந்து ‘ஜிழி சாம்பியன்ஸ் அறக்கட்டளை’ அமைக்கப்படும்.
மாமல்லபுரத்தில் உலக சர்ஃபிங் லீக் போட்டிகள் நடத்த ரூ2 கோடியே 68 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப் படும்.
2023 சென்னை ஸ்குவாஷ் உலகக் கோப்பை நடத்து வதற்கு ரூ.1 கோடியே 50 லட்சம் நிதி ஒதுக்கப்படும்.
செங்கல்பட்டு மாவட்டம் நீர்பெயரில் அமைந்துள்ள தேசிய மாணவர் படை நிரந்தர முகாமில் உட்கட்ட மைப்புப் பணிகள் மேற்கொள்ள ரூ.1 கோடி நிதி ஒதுக்கப்படும்.
மாணவர்களுக்காக தந்தை பெரியார் நினைவேந்தல் சொற்பொழிவு ஆண்டுதோறும் நடத்துவதற்கு ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கப்படும்.
விளையாட்டு அறிவியல் குறித்த பன்னாட்டு அள விலான கருத்தரங்கம் நடத்துவதற்கு ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கப்படும்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு ஒலிம்பிக் நீர் விளையாட்டுக்கான அகாடமி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
ஆசிய ஆக்கி ஆடவர் சாம்பியன்ஷிப் 2023 சென்னையில் நடத்துவதற்கு நிதி உதவி வழங்கப்படும்.
ஏடிபி சென்னை ஓபன் டூர் 2023 சென்னையில் நடத்துவதற்கு நிதி உதவி வழங்கப்படும்.
‘நம்ம ஊரு விளையாட்டு திடல்’ பெயரில் ஊராட்சி களிலும் விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்படும்.
‘தமிழ்நாடு விளையாட்டுக் கொள்கை’
தமிழ்நாட்டில் முதற்கட்டமாக கொளத்தூர், சேப் பாக்கம், வாணியம்பாடி, காங்கேயம், சோழவந்தான், திருவெறும்பூர், வைகுண்டம், பத்மநாதபுரம், ஆலங் குடி மற்றும் காரைக்குடி ஆகிய 10 சட்டமன்ற தொகுதியில் அமையவிருக்கும் சிறு விளையாட்டு அரங்குக்கு ‘முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கம்’ என பெயரிடப்படும்.
‘தமிழ்நாடு விளையாட்டு கொள்கை’ கொண்டு வரப்படும்.
சென்னையில் உலக தரத்தில் இந்தியாவின் முதல் 6 ட்ராப் ரேஞ்ச் அடங்கிய ட்ராப் மற்றும் ஸ்கீட் துப்பாக்கி சுடுதலுக்கான சிறப்பு அகாடமி அமைக்கப்படும் என அவர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.