பெங்களூரு,ஏப்.13- கருநாடகத்தைச் சேர்ந்த கூட்டுறவு வங்கிகளில் கூட்டாக ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடந்தது அம்பலமாகியுள்ளது. போலி நிறு வனங்களின் பெயரில் வழங்கப்பட்ட காசோலைகளுக்கு பில் ‘டிஸ்கவுன்ட்டிங்’ முறையில் பணம் வழங்கப்பட்டுள்ளது அம்பலமாகியுள்ளது.
வங்கிகளின் வாடிக்கையாளர்களாக உள்ள நிறுவனங்கள் போலி காசோலைகள் மூலம் மோசடி செய்ய கூட்டுறவு வங்கிகள் உடந்தையாக இருந்துள்ளது. அக்கவுன்ட் பேயி காசோலைகளாக அல்லாமல் பேரர் காசோலைகள் வாயிலாக மோசடிகள் நடை பெற்றுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
பேரர் காசோலைகள் மூலம் நடந்த மோசடிகள் வாயிலாக வருமான வரி ஏய்ப்பும் நடந்துள்ளதாக அத்துறை குற்றம் சாட்டி உள்ளது. வாடிக்கையாளரான நிறுவனங்கள் வழங்கும் காசோலைகளுக்கு டிஸ்கவுன்ட்டிங் முறையில் தரும் பணம் கூட்டுறவு சங்க கணக்கில் சேர்க்கப்படுகிறது. மோசடியாக கூட்டுறவு சங்கங்களின் கணக்கில் வரவு வைக்கப்பட்ட பணம், வைப்புத் தொகையாக போடப்பட்டுள்ளது. குறித்த கால வைப்புத் தொகையாக போடப்பட்ட தொகையை உத்தரவாதமாக கொண்டு கடன்களையும் கூட்டுறவு வங்கிகள் பட்டுவாடா செய்துள்ளன.
புகார்கள் வந்ததை அடுத்து கூட்டுறவு வங்கிகளில் வருமான வரி அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். 16 இடங்களில் நடந்த வருமான வரி சோதனையில் மோசடி தொடர்பான ஆவணங்கள், கணக்கில் வராத பணம் ரூ.3.3 கோடி கைப்பற்றப்பட்டன. ரூ.2 கோடி மதிப்புள்ள நகைகளும் வருமான வரித்துறை சோதனைகளில் கைப்பற்றப்பட்டு உள்ளன.
குறிப்பிட்ட சில வாடிக்கையாளர்களுக்கு ரூ.15 கோடி அளவுக்கு கணக்கில் காட்டாமல் கடன் வழங்கியதும் கண்டறியப்பட்டுள்ளது. ரூ.1000 கோடி மோசடியில் பயனடைந்தவர்கள் ஒப்பந்ததாரர்கள், ரியல் எஸ்டேட் அதிபர்கள் என்றும் வருமான வரித்துறை தகவல் தெரிவித்துள்ளது. அரசு ஒப்பந்ததாரர்கள் பலரும் இந்த முறைகேடுகளில் பயனடைந்துள்ளதால் ஆளுங்கட்சியான பாஜகவினருக்கும் தொடர்பு உள்ளதா என விசாரணை நடைபெற்று வருகிறது.