திருச்சி, மார்ச் 5- பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் அய்ந்தாம் வகுப்பு மாணவி சி.ஷிபா, தற்காப்புக் கலைகளில் தேசிய அளவில் பல்வேறு சாதனைகளைப் படைத்துப் பள்ளிக்கும் மாவட்டத் திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
தேசிய அளவில் முதலிடம்
ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கிக்பாக்சிங் (Kickboxing) போட்டியில் பங்கேற்ற மாணவி ஷிபா, தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ‘தேசிய கிக்பாக்சிங் சாதனையாளர்’ (National Kickboxing Achiever) விருதைத் தட்டிச் சென்றுள்ளார்.
சிலம்பத்தில் நீலப் பட்டை
தற்காப்புக் கலைகளின் தாயகமான சிலம்ப விளையாட்டில், 1969 முதல் இயங்கி வரும் ‘தென்னிந்திய தற்காப்புக் கலை பயிற்சி மய்யத்தின்’ மூலம் பயிற்சி பெற்று வரும் இவர், தற்போது ‘ஏ’ கிரேடுடன் நீலப் பட்டை (Blue Belt) தகுதியைப் பெற்றுள்ளார்.

இவரது விடாமுயற்சியைப் பாராட்டி, அந்த மய்யத்தின் சார்பில் ‘2026-ஆம் ஆண்டின் சிறந்த அர்ப்பணிப்புள்ள மாணவி’ (Best Dedicated Student) என்ற விருதும் வழங்கிக் கவுரவிக்கப்பட்டுள்ளார்.
பள்ளி நிர்வாகம் பாராட்டு
அய்ந்தாம் வகுப்பு படிக்கும் போதே தேசிய அளவில் தடம் பதித்துள்ள மாணவி ஷிபாவிற்குப், பள்ளியின் தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணித் தோழர்கள் உள்ளிட்டோர் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
பெண் குழந்தைகள் தற்காப்புக் கலைகளைக் கற்பது அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும் என்பதற்கு மாணவி ஷிபாவின் இந்த வெற்றி ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும் எனச் சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.
தற்காப்புக் கலைகளில் சிறந்து விளங்கும் இம்மாணவி, வருங்காலத்தில் பன்னாட்டு அளவில் பதக்கங்களை வென்று நாட்டிற்குப் பெருமை சேர்ப்பார் எனவும் பயிற்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
