லக்னோ, நவ. 5- உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி யில் நவம்பர் 2 அன்று நள்ளிரவு 1.30 மணிக்கு அய்.அய்.டி. பனாரஸ் பல்கலைக்கழக வளாகத்தினுள், விடுதி மாணவியை இரு சக்கர வாகனத்தில் வந்த மூன்று நபர்கள் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். அதனை காட்சிப்பதிவாக எடுத்து வைத்துக்கொண்டு இதை யாரிடமும் கூறக்கூடாது என்று அந்த மாணவியை மிரட்டியுள்ளனர்.
இந்நிகழ்வு தொடர்பாக கல்வி வளாகத்தின் பாது காப்பு அதிகாரியிடம் அம்மாணவி புகார் அளித்து உள்ளார். இந்த விஷயத்தை அறிந்த பனாரஸ் பல் கலைக்கழக மாணவர்கள் 2000-க்கும் மேற்பட்டோர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டக்களத்தில் மாணவர் ஒருவர் கூறுகையில், ‘‘அய்.அய்.டி. வளாகத்தினுள் பாலியல் வன்முறை நிகழ்வுகள் நடப்பது வாடிக்கையாகி வருகிறது. ஆனாலும் பல்கலைக் கழக நிர்வாகம் இதனைத் தடுப்பதற்கு எந்தவித பாதுகாப்பு நடவடிக்கையும் எடுக்கவில்லை – வேடிக்கை பார்க்கிறது. நாட்டின் புகழ்வாய்ந்த கல்வி நிலையங்களில் ஒன்றாகக் கருதப் படும் வளா கத்தில் இத்தகைய நிகழ்வுகள் நடப்பதும், மாணவிகள் பாதுகாப்பற்ற சூழலை உணர்வதும் அவமானகரமானது” என்று தெரிவித்தனர்.