பெரம்பலூர், மார்ச் 4– கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் மூலம் கடந்த 5 ஆண்டுகளில் 960.44 ஏக்கர் பரப்பிலான நிலங்கள் சீர்படுத்தப்பட்டு விளைநிலங்களாக மாற்றப்பட்டுள்ளன. இதன் மூலம் 668 விவசாயிகள் பயனடைந்துள்ளனர் என்று வேளாண் இணை இயக்குநர் கண்ணன் தெரிவித்தார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து வேப்பந்தட்டை வட்டத்திற்குட்பட்ட பசும்பலூர், திருவாளந்துறை, மலையாளப்பட்டி மற்றும் வி.களத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் வேளாண்மை இணை இயக்குநர் கண்ணன் ஆய்வு செய்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:
விவசாயிகளின் நலன் கருதி வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையில் எண்ணற்ற திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இதில் மிகவும் சிறப்பு வாய்ந்த திட்டமாக கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் கருதப்படுகின்றது. 2021-2022-ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தில் தரிசு நிலங்களை செம்மைப்படுத்தி விளை நிலங்களாக மாற்றப்பட்டு வருகின்றது.
அதனடிப்படையில், ஒரு ஏக்கர் மற்றும் அதற்கும் குறைவாக தரிசு நிலங்களை வைத்துள்ள விவசாயிகளில் 8 நபர் முதல் 15 நபர்கள் வரை சேர்த்து அவர்களின் நிலங்களை ஒரு நிலத்தொகுப்பாக கணக்கிட்டு, அதற்கேற்றாற்போல் நிதி ஒதுக்கீடு செய்து அந்த தரிசு நிலங்கள் செம்மைப்படுத்தப்படுகின்றது. அதேபோல அதிக அளவில் தரிசு நிலங்களை வைத்துள்ள விவசாயிகளுக்கும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகின்றது.
அத்தகைய தரிசு முட்புதர்களை அகற்றி, நிலத்தை செம்மைப்படுத்தி சாகுபடிக்கு ஏற்றவாறு கொண்டு வருவதற்கு அரசின் சார்பில் மானிய உதவிகள் வழங்கப்படுகின்றது. 2021-2022 முதல் 2025-2026 வரை பெரம்பலூர் மாவட்டத்தில் நக்கசேலம், நாரணமங்கலம், வடக்குமாதவி, மலையாளப்பட்டி, வி.களத்தூர், சிறுமத்தூர் ஓலைப்பாடி, சிறுவயலூர், சில்லக்குடி, பசும்பலூர், திருவாளந்துறை, எலந்தலைப்பட்டி, சிறுவாச்சூர், பெரியவடகரை, உள்ளிட்ட கிராமங்களில் 20 தரிசு நிலத்தொகுப்புகள் அமைக்கப்பட்டு ரூ.70 லட்சம் மதிப்பில் 230 விவசாயிகளின் 296.19 ஏக்கர் பரப்பிலான தரிசு நிலம் செம்மைப்படுத்தப்பட்டு தற்போது விவசாயம் செய்யப்பட்டு வருகின்றது.
அதேபோல, 2024-2025 முதல் 2025-2026 வரை தனிநபர் தரிசு நில முட்புதர்களை அகற்றி சாகுபடிக்கு கொண்டு வரும் திட்டத்தில் 238 விவசாயிகளின் 664.25 ஏக்கர் பரப்பிலான தரிசு நிலங்கள் ரூ.25.50 லட்சம் மதிப்பில் சீர்திருத்தம் செய்யப்பட்டு விவசாயம் செய்ய உகந்த நிலங்காக மாற்றப்பட்டுள்ளது.
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் மூலம் கடந்த 5 ஆண்டுகளில் 960.44 ஏக்கர் பரப்பிலான நிலங்கள் ரூ.95.50 லட்சம் மானிய உதவியுடன் சீர்படுத்தப்பட்டு தற்போது விளைநிலங்களாக மாற்றப்பட்டுள்ளன. இதன்மூலம் 668 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.இவ்வாறு அவர் தெரிவித்தார்
