பெங்களூரு, மார்ச் 4- ஒன்றிய – –மாநில உறவுகள் குறித்த தேசிய அளவிலான உரையாடலை மீண்டும் தொடங்க வேண்டும் என்ற தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முயற்சிக்கு கருநாடகாவின் முழு ஆதரவைத் தெரிவித்து அவருக்கு கருநாடக முதலமைச்சர் சித்தராமையா எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
கூட்டாட்சி என்பது வெறும் அரசியல் கோரிக்கை அல்ல – அது நமது அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பாகும். பல ஆண்டுகளாக, நிதி மற்றும் சட்ட விவகாரங்களில் அதிகாரம் ஒன்றிய அரசிடம் குவிக்கப்படுவது, நமது அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் வகுத்த சமநிலையைச் சீர்குலைத்துள்ளது.
மாநிலங்களுக்குத் தரப்பட்டுள்ள பொறுப்புகளை நிறைவேற்ற, அவற்றுக்கு உரிய அதிகாரமும், நிதி சுதந்திரமும் இருக்க வேண்டும். இந்தியாவின் வலிமையே அதன் கூட்டுறவு கூட்டாட்சி, அரசியலமைப்பு மீதான நம்பிக்கை மற்றும் பன்முகத்தன்மையை மதிப்பதில் தான் உள்ளது.
அனைத்து மாநிலங்களும் ஒன்றிணைந்து விவாதிக்கவும், கூட்டாட்சித் தத்துவத்தில் சமநிலையை மீட்டெடுக்கவும் ‘மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில்’ (Inter-State Council) போன்ற ஒரு வலுவான தளத்தை ஒன்றிய அரசு அமைத்துத் தர வேண்டும் என்று வலியுறுத்துவேன்.
இந்தியாவின் ஜனநாயக மற்றும் கூட்டாட்சி கட்டமைப்பை வலுப்படுத்தும் முயற்சிகளில் ஆக்கபூர்வமாகப் பங்களிக்க கருநாடகா தயாராக உள்ளது.
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
ஒன்றிய – மாநில உறவுகள்
கருநாடக முதலமைச்சர் சித்தராமையாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி!
சென்னை, மார்ச் 4- ஒன்றிய – மாநில உறவுகள் குறித்து ஆராய்வதற்காகத் தமிழ்நாடு அரசு அமைத்த உயர்நிலைக் குழுவின் அறிக்கை சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிக்கையின் முதற்பாகத்திற்கு வரவேற்பு தெரிவித்த கருநாடக மாநில முதலமைச்சர் சித்தராமையாவுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ‘எக்ஸ்’ (X) சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது:
“ஒன்றிய – மாநில உறவுகள் குறித்து ஆராய, தமிழ்நாடு அரசு அமைத்த உயர்நிலைக் குழு அறிக்கையின் முதற்பாகம் குறித்த தங்களது வரவேற்புக்கு நன்றி, சித்தராமையா அவர்களே. எங்களது இந்த முன்னெடுப்புக்குத் தாங்கள் அளித்துள்ள அறிவார்ந்த ஆதரவையும், கூட்டாட்சிக் கருத்தியலைப் புதுப்பிக்கும் இந்த முயற்சி ஒரு கூட்டு முயற்சியாக அமைய வேண்டும் எனத் தாங்கள் அங்கீகரித்திருப்பதையும் நான் வெகுவாகப் பாராட்டுகிறேன்.”
மேலும், சித்தராமையாவின் கருத்தை வழிமொழிந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பின்வருமாறு பதிவிட்டுள்ளார்: “பன்முகத்தன்மை கொண்ட இந்தியக் குடியரசின் ஒற்றுமையை ஒற்றைத்தன்மை கொண்டு நிலைக்கச் செய்ய முடியாது, அரசியலமைப்பின் வழியிலான நம்பகத்தன்மை மூலமே அதனைச் செய்ய இயலும்” எனத் தாங்கள் தெரிவித்திருக்கும் கருத்து மிகச் சரியானது என ஆமோதிக்கிறேன்.
ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையிலான அதிகாரப் பகிர்வு மற்றும் உறவுகள் குறித்து ஆய்வு செய்யத் தமிழ்நாடு அரசு ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு ஒன்றை அமைத்திருந்தது. இந்தக் குழுவின் பரிந்துரைகள் மாநில உரிமைகளை மீட்டெடுப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் எனக் கருதப்படும் நிலையில், அண்டை மாநில முதலமைச்சரின் இந்த ஆதரவு தேசிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
கீழடி, ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட அகழாய்வுகளுக்கு அனுமதி தராதது ஏன்?
ஒன்றிய அரசுக்கு சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம்!
மதுரை, மார்ச் 4- நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டு இருப்பதாவது:
கீழடி, ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட 8 அகழாய்வுகளுக்கு 8 மாதங்களாக அனுமதி தராதது ஏன்?
பருவமழை தொடங்கினால் நிதி வீணாகும், ஆராய்ச்சி முடங்கும் எனத் தெரிந்தும் மவுனம் காப்பது ஏன்?
தமிழரின் தொன்மையைத் தடுக்க இடைவிடாது இயங்கும் மோடி அரசு ஒன்றை மறந்துவிட்டது.
எட்டு ஆண்டுகளுக்கு முன்பு உங்களால் கைவிடப்பட்ட கீழடி அகழாய்வுக் குழிகளில் இருந்து தான் தொன்மை நோக்கிய எங்களின் பயணம் பாய்ச்சல் வேகங்கொண்டது.
எகிப்திய பிரமீடுகளிலும் சிகை கொற்றன் சிலிர்த்து நிற்கிறான். இப்பொழுது மீண்டும் தடுக்கிறீர்கள்.
உங்களின் அரசியல் சிறுமைத்தனங்களை எங்கள் வரலாற்றுப் பேரியக்கம் தவிடு பொடியாக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
