2047-ஆம் ஆண்டிற்குள் ‘வளர்ந்த இந்தியா’ (Viksit Bharat) என்ற இலக்கை எட்ட, கல்வி முறையில் புரட்சிகரமான மாற்றங்கள் அவசியமாகின்றன என்று கூறிக் கொண்டு அந்த மாற்றத்தின் ஒரு முக்கிய அங்கமாக மாநில உரிமைகளை மேலும் பறிக்கும் ‘விக்சித் பாரத் சிக்ஷா அதிஷ்டான்’ என்ற ஒன்றை ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ளது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும் வகையில் பண்டைய கலாச்சாரம் மற்றும் நவீன அறிவியலையும் இணைத்து உயர் கல்வியின் தரத்தை உயர்த்துதல், சேர்க்கை விகிதத்தை உயர்த்துதல், தற்போது 28 சதவீதமாக உள்ள உயர் கல்வி சேர்க்கை விகிதத்தை 2035-க்குள் 50 சதவீதத்திற்கு மேல் உயர்த்துதலாம். (தமிழ்நாடு ஏற்கெனவே இந்த விகிதாசாரத்தை எட்டி விட்டதே!)
பட்டதாரிகளை வேலை தேடுபவர்களாக மட்டும் உருவாக்காமல், மற்றவர்களுக்கு வேலை வாய்ப்பளிக்கும் ‘ஸ்டார்ட்-அப்’ தொழில்முனைவோராக மாற்றுதல். ஒரே நாடு, ஒரே கல்வி, ஒரே அமைப்பு என்பதுதான் இவர்களின் திட்டமாம்!
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நிலவும் கல்வி முறை வேறுபாடுகளைக் களைந்து, நாடு முழுவதும் சமத்துவமான மற்றும் தரமான கல்வியை உறுதி செய்ய ‘விக்சித் பாரத் சிக்ஷா அதிஷ்டான் 2025’ மசோதா கொண்டு வரப்பட்டுள்ளதாம்!
‘பிரிவு செயல்பாடு ஒழுங்குமுறை கவுன்சில்’ படிப்புகளுக்கான அனுமதி மற்றும் நிர்வாகத்தை கவனிக்குமாம். ‘தரக் கட்டுப்பாட்டுக் கவுன்சில்’, பாடத் திட்டங்களை உலகத் தரத்திற்கு உயர்த்துவதை உறுதி செய்யுமாம். ‘அங்கீகார கவுன்சில்’ கல்வி நிறுவனங்களின் வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்பாட்டை ஆய்வு செய்யுமாம்.
படிக்கும் காலத்திலேயே 6 மாத கால கட்டாயத் தொழிற்பயிற்சி மூலம் வேலை வாய்ப்புத் திறன் அதிகரிப்பாம்!
கல்வி நிறுவனங்களின் முறைகேடுகளை எதிர்த்து மாணவர்கள் எளிதில் முறையிட வலுவான நிர்வாக அமைப்பு இத்திட்டத்தின் நோக்கமாம்.
ஒரே நாடு, ஒரே கல்வி அமைப்பின் மூலம் மாநில அரசுகளின் கல்வி நிர்வாகப் பணிச்சுமை கணிசமாகக் குறையுமாம். ஒன்றிய அரசின் கீழ் வரும் இந்த அமைப்பே தரம் மற்றும் அங்கீகாரங்களைக் கவனித்துக் கொள்வதால், மாநிலங்கள் தங்கள் கவனத்தை அடிப்படை உள்கட்டமைப்பு மற்றும் இதர வளர்ச்சிப் பணிகளில் முழுமையாகச் செலுத்த முடியுமாம்.
தேசியக் கல்விக் கொள்கையின் உயிர்நாடியாகத் திகழப்போகும் ‘விக்சித் பாரத் சிக்ஷா அதிஷ்டான்’, இந்திய கல்வி நிறுவனங்களை முழுமையாக ஒன்றிய அரசின் கீழ் கொண்டு வருவதால் இது இந்தியாவின் வருங்காலத் தூண்களான மாணவர்களை உலகத் தரத்திற்கு உயர்த்துவதுடன், 2047-இல் ‘வளர்ந்த இந்தியா’ என்ற கனவை நனவாக்க உறுதுணையாக இருக்கும் என்றெல்லாம் சொல்லப்படுகிறது.
‘கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வர வேண்டும்’ என்ற உரத்த முழக்கம் மாநிலங்களில் – அதிலும் குறிப்பாக, தமிழ்நாட்டில் உரிமை முழக்கம் வெடித்துக் கிளம்பியுள்ள ஒரு கால கட்டத்தில், ‘ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்’ என்ற பாணியில், ‘இந்தியா முழுமைக்கும் ஒரே கல்வி’ என்று கூறுவதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியமில்லாத ஒன்றே!
எல்லா மாநிலங்களுமே ஒன்று சேர்ந்து, ஒன்றிய பிஜேபி அரசு உத்தேசத் திட்டத்தை ஆதரித்தாலும் தமிழ்நாடு தனித் தன்மையுடன் நின்று ஓங்கி எதிர்ப்புக் குரல் கொடுக்கும் – பீரங்கியாக வெடிக்கும்!
‘தேசிய கல்வித் திட்டம்’ என்ற ஒன்றைப் பிஜேபி அரசு கொண்டு வந்த நிலையில் அதனை ஏற்க மறுத்து, தமிழ்நாட்டுக்கான சமச்சீர் கல்வித் திட்டம்தான் செயல்பாட்டில் இருந்து வருகிறது.
இந்தியா என்பது ஒரே நாடல்ல; இது ஒரு துணைக் கண்டம்; பல மொழிகள், பல கலாச்சாரங்கள், பல்வேறு தட்ப வெப்ப நிலைகள் கொண்ட ஒரு துணைக் கண்டத்தில் தாங்கள் நினைக்கிற – தங்கள் வசதிக்கான ஒரு திட்டத்தைத் திணிப்பது என்பது எல்லாம் ஏற்புடையது அல்ல.
மறைமுகமாக ஆர்.எஸ்.எஸ். கொள்கையான ‘ஒரே கலாச்சாரம்’ என்கிற ஹிந்துத்துவாவை திணிக்கும் பார்ப்பனிய வலைப் பின்னல் தான் இதன் பின்னணியில் ஒளிந்து கொண்டிருக்கிறது.
மற்றவர்களைப் பார்த்துப் ‘பிரிவினை சக்திகள்’ என்று கூறும் பா.ஜ.க.தான் இவர்கள் திணிக்க விரும்பும் கல்வித் திட்டத்தின்மூலம் பிரிவினை மனப்பான்மையைத் தூண்டும் ஒரு விஷமமான வேலையில் இறங்கியுள்ளது.
ஆர்.எஸ்.எஸ்., பிஜேபி., சங்பரிவார் வட்டாரங்கள் இது போன்ற நடவடிக்கைகளால்தான் தமிழ்நாட்டில் கால் பதிக்க முடியவில்லை. ஆனாலும், ‘‘என்ன பந்தயம் கட்டுகிறாய், இன்னும் நான் கெட்டுப் போகிறேன்!’’ என்று முடக்குவாதம் பேசுவதன் மூலம் தங்களுக்குத் தாங்களே சவக்குழியை வெட்டிக் கொள்கிறார்கள் என்றுதான் அதற்குப் பொருள்!
