* பெரியார் – அம்பேத்கர் – சிங்காரவேலர் விரும்பிய சமூகக் கல்வி; அதற்குள்தான் விடுதலைக் கல்வி – பகுத்தறிவுக் கல்வி – சுயமரியாதைக் கல்வி – சமதர்மக் கல்வி – மானுடக் கல்வி!
* கல்விதான் எல்லை தாண்டும் – கல்விக்கு எல்லை இல்லை, நாடு இல்லை, மொழி இல்லை, இனமில்லை, கண்டமில்லை!
திராவிடர் கழகமே ஒரு கல்விக் கூடம்தான்! நாள்தோறும் நம்மிடம் இருக்கிற ‘விடுதலை’ நாளிதழ் சமூகக் கல்வியை போதிக்கிற ஒரு பல்கலைக் கழகம்தான்!
சென்னை, மார்ச் 3 பெரியார் – அம்பேத்கர் – சிங்காரவேலர் விரும்பிய சமூகக் கல்வி; அதற்குள்தான் விடுதலைக் கல்வி – பகுத்தறிவுக் கல்வி – சுயமரியாதைக் கல்வி – சமதர்மக் கல்வி – மானுடக் கல்வி! கல்விதான் எல்லை தாண்டும். கல்விக்கு எல்லை இல்லை, நாடு இல்லை, மொழி இல்லை, இனமில்லை, கண்டமில்லை! திராவிடர் கழகமே ஒரு கல்விக் கூடம்தான்! நாள்தோறும் நம்மிடம் இருக்கிற இந்த ‘விடுதலை’ சமூகக் கல்வியை போதிக்கிற ஒரு பல்கலைக் கழகம்தான் என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் அவர்கள்.
‘‘மதச்சார்பின்மையைக் குழிதோண்டிப் புதைப்பதா? மதவெறிப் பாடலான வந்தே மாதரம் தேசியப்பாடலா?’ சிறப்புக் கூட்டம்!
‘‘மதச்சார்பின்மையைக் குழிதோண்டிப் புதைப்பதா? மதவெறிப் பாடலான வந்தே மாதரம் தேசியப்பாடலா?’’ என்ற தலைப்பில், கடந்த 18.2.2026 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள்
எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்ற கண்டனக் கூட்டத்தில்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் அவர்கள் கண்டன உரையாற்றினார்.
அவரது கண்டன உரை வருமாறு:
தோழர்களே, வந்தே மாதரம் தேசியப் பாடலா? என்கிற கேள்வி எழுப்பி, கண்டன முழக்கமிடுகிற இந்த நிகழ்வின் தலைவர், இனமான பேராசிரியர், திராவிடர் கழகத்தின் தலைவர், அறிவும், விடுதலை வேட்கையும் சுமந்த ஒருவர், எப்படி களமாட வேண்டும் என்பதற்கு நம் முன் சாட்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிற தோழர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களே,
திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய அமைப்புச் செயலாளர் வழக்குரைஞர் ஆர்.எஸ்.பாரதி அவர்களே, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்களே, தோழர் நாகை மாலி அவர்களே, மனிதநேய மக்கள் கட்சி பேராசிரியர் ஹாஜா கனி அவர்களே, கவிஞர் கலி பூங்குன்றன் அவர்களே, தோழர்களே, நண்பர்களே அனைவருக்கும் வணக்கம்!
அரசியலமைப்புச் சட்டத்தின் மீது தொடுக்கப்படுகிற தாக்குதல்
இன்றைக்கு ‘வந்தே மாதரம்’ பாடலைப் பாட வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறது ஒன்றிய அரசு. பிரதமரே அதை முன்மொழிகிறார். சட்டப்படி, சட்டத்தில் அப்படி ஏதும் இல்லை. சட்டப்படி இது பிழை – சட்டத்தின் மீது தொடுக்கப்படுகிற தாக்குதல். அதிகாரபூர்வமாக ஒரு தேசிய பாடல் இருக்கிற பொழுது, தேடிப் பிடித்து இன்னொரு பாடலை கட்டாயப்படுத்துவது என்பது, அரசியலமைப்புச் சட்டத்தின் மீது தொடுக்கப்படுகிற தாக்குதல்.
இந்தியாவின் பன்முகத்தைச் சிதைக்கிற இந்தச் செயலைத் தேடித் தேடி ஒன்றிய அரசு இன்றைக்கு முன்மொழிகிறது.
எந்த நாட்டிலும் நிலவாத ஒரு நாடாளுமன்ற ஜனநாயகம் நம்முடைய நாட்டில் நிலவுகிறது
நண்பர்களே, தோழர்களே! நாடு என்றுமில்லாத வகையில், பெரும் நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறது. உலகத்தில் வேறு எந்த நாட்டிலும் நிலவாத ஒரு நாடாளுமன்ற ஜனநாயகம் நம்முடைய நாட்டில் நிலவு கிறது. சட்டத்தின் ஆட்சி முறை நிலவுகிறது. பன்முகம் நிலவுகிறது. அந்தப் பன்முகத்தின் அடித்தளமாக மதச்சார்பின்மை நிலவுகிறது. உலகத்தில் வேறு எந்த நாட்டிலும் இவ்வளவு சிறப்பில்லை. ஆயிரம் ஜாதிகள் இருக்கும்; ஆனால், இந்திய ஜாதி என்று ஒரு ஜாதியைச் சொல்ல முடியாது. ஆயிரம் மதங்கள் இருக்கும்; இந்தியாவிற்கு என்று ஒரு மதம் இல்லை. அதேபோன்று பல ஆயிரம் மொழிகள் இருக்கும்; இந்தி யாவிற்கென்று ஒரு மொழி இல்லை. நாட்டிற்குள் ஆயிரம் இருக்கும்; ஆனால், நாட்டிற்கென்று சார்பின்மை இல்லை. மதச்சார்பின்மையினு டைய உச்சம் இது. இதை குறி வைக்கிறார் நாட்டின் பிரதமர், ஆர்.எஸ்.எஸ். – பி.ஜே.பி. கருத்தியல். அதுதான் பேராபத்து. இந்திய அரசியலமைப்புச் சட்டம் மிகத் தெளிவாக சொல்கிறது. ஒருவர் கடவுள் உண்டு என்றால், கடவுள் இல்லை என்று சொல்ல எனக்கும் உரிமை உண்டு. அரசியலமைப்புச் சட்டம் வழங்கி இருக்கிற உரிமை இது.
குறைந்தபட்ச அறிவுள்ளவர்கள் கூட ஏற்க முடியாது!
எனவே, அதைத் தகர்க்கிற செயலை திட்டமிட்டே செயல்ப டுத்துகிறது ஒன்றிய அரசு. இந்தியாவின் பன்முகத்தின் அடித்த ளமாக இருக்கிற மதச்சார்பின்மையை தகர்த்து விட்டால், பன்மு கம் சிதைந்துவிடும். பன்முகம் சிதைந்துவிட்டால், இந்தி யாவில் ஆர்.எஸ்.எஸ். கருத்தியல் ஆட்சிக்கு வர முடியும். இதை
ஆழமாக நம்புகிறார்கள். எனவே, எது பகுத்தறிவோ, எதுஅறிவியலோ, எது விடுதலையோ, எது ஒற்றுமையோ அதைச் சிதைப்பதில் மும்முரமாக இன்றைக்குச் செயல்படுகிறது ஆர்.எஸ்.எஸ். – பி.ஜே.பி. இதற்கு நாட்டின் பிரதமரே தலைமை தாங்குகிறார். அறிவுக்குப் புறம்பானவற்றை நாடாளுமன்றத்திலேயே முன்மொழி கிறார் நாட்டின் பிரதமர். அது தான் பேரதிர்ச்சி. ‘வெல்த் கிரியேட்டர்ஸ்’ முதலாளிகள் என்கிறார். இந்த நாட்டில் உருவாக்கப்படுகிற செல்வங்கள் யாவற்றுக்கும் முத லாளிகள் தான் காரணம் என்கிறார். இதை குறைந்தபட்ச அறிவுள்ளவர்கள் கூட ஏற்க முடியாது. ‘‘ஆழ்கடலில் மூச்சடக்கி முத்தெடுப்பது தொழிலாளி. கட்டித் தங்கத்தை வெட்டி எடுப்பது தொழிலாளி. சாலை போடுவது, ஆலைகளை இயக்குவது, கட்டடங்கள் கட்டுவது, காண்கிற பொருள்கள் எல்லாம் உருவாக்குவது தொழிலாளி. இயற்கை மரண தூக்கத்தில் இருக்கிறது’’ என்று மார்க்ஸ் சொல்லுவார். இயற்கையை மரண தூக்கத்தில் இருந்து உழைப்புதான் தட்டி எழுப்புகிறது. இயற்கை தாய் – உழைப்பு தந்தை. இரண்டுக்கும் பிறக்கிற செல்வம் தான் காணுகிற பொருள் யாவும்.
தந்தை பெரியார் எழுதிய தலையங்கம்!
எனவே. இயற்கையுடன் வினை புரிந்து, உழைப்பு வினை புரிகிறது, இயற்கையோடு. வினை புரிந்து வருகிற அந்தச் செல்வங்கள் தனியார் மடியில் இருக்கிறது. எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னால் தந்தை பெரியார் எழுதிய தலையங்கம் இது. உயிரைக் கொடுத்து உழைப்பவன் செல்வங்களைக் கொண்டு வருகிறான். அந்தச் செல்வம் அப்படியே ஆடாமல், அசையாமல் தனியார் மடியில் இருப்பது. கடவுள் மறுப்பு மட்டுமல்ல, சாஸ்திர சம்பிரதாயங்கள் மட்டுமல்ல, பெண்ணடிமை மட்டுமல்ல, கண் முன்னால் திகழ்கிற இந்தக் கொள்ளையும், சுரண்டலும் கூட பகுத்தறிவுக்கு எதிரி என்று தமிழ் மண்ணில் ஆழமாக எழுதிய மேதை அவர். இதற்கு எதிராக இன்றைக்குக் கேள்வியை நாம் தான் எழுப்ப முடியும்; நாம் தான் எழுப்ப வேண்டும். எனவே, அறிவுக்கு பொருந்தாததை நிறைய சொல்ல முடியும்.
ஆஸ்திரேலியாவில் அறிவியலாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு பிரதமர் பேசுகிறார். ‘‘அதிலும் உடற்கூறு அறிவியலில், இந்தியா எப்பொழுதோ முன்னேறிவிட்டது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலே இதில் முன்னேறிவிட்டது. ஒரு மனிதன் தலையை வெட்டி, அங்கே யானைத் தலையை நிறுவி அதை வெற்றிகரமாக – அந்த சிகிச்சையை உலகுக்களித்தவர்கள் நாங்கள் தான்’’ என்று சொல்கிற அளவுக்கு அறிவுக்கு எதிரான ஒரு துணிச்சலுடன் நம்மு டைய பிரதமரால் முன்மொழிய முடிகிறது.
கல்வியாளர்கள், சிந்தனையாளர்கள் பெரியார் பக்கம் திரும்பாமல், அந்தத் தைரியம் வராது!
எனவே, இதை எதைக் கொண்டு எதிர்ப்பது? தந்தை பெரியார் சொன்னது போன்று, அரசியல் இயக்கங்களுக்குப் பெரும் கடமைகள் இருக்கின்றன. அரசியல் தலைவர்களுக்குக் கடமை இருக்கிறது. யாவற்றையும் விட கல்விக்குத் தான் பெரும் கடமை இருக்கிறது. கல்வி உரையாடல் செய்ய வேண்டும். ஜாதியை, மதங்களைக் கேள்விக்குள்ளாக்க வேண்டும். இன்றைக்கும் கூட கல்வி முறைகளுக்கு அந்தத் துணிச்சல் வரவில்லை. கல்வியாளர்கள், சிந்தனையாளர்கள் பெரியார் பக்கம் திரும்பாமல், அந்தத் தைரியம் வராது. ஆண் உயர்வு – பெண் தாழ்வு – இது ஆழமாக இருக்கிறது மனித மனங்களில் கட்டமைத்திருக்கிறது. நான் பிறப்பால் உயர்வு – இன்னொருவன் பிறப்பால் தாழ்வு. செல்வவளங்கள் கடவுள் அளித்தது. ‘எல்லாம் விதி’ இது ஆழமாக இருக்கிறது; ஆழ்மனங்களில் ஆழமாக இருக்கிறது. இது எப்படி உலர்ந்து, உதிர்வது? இது, அய்.பி.எஸ்., அய்.ஏ.எஸ்., அய்.எஃப்.எஸ். படித்தவர்களிடம் இருக்கிறது. மருத்துவர்களிடம் இருக்கிறது, அதுதான் ஆச்சரியம். அப்படி என்றால். அந்தக் கல்வியே கேள்வி! இது எப்பொழுது, உலர்ந்து உதிரும்?
புதிய சிந்தனை இல்லாமல், ஒரு புதிய நாட்டை உருவாக்க முடியாது: தந்தை பெரியார்!
பெரியார் சொல்கிறார், தனக்குத்தானே உரையாடல் செய்து, தன்னை தோல் உரித்துக் கொள்ளாமல், இந்தத் தடித்த தோல்களை உரித்துக் கொள்ளாமல், ஆதிக்கத் தோல் இருக்கிறது, சுரண்டல் தோல் இருக்கிறது, பெண்களை அடக்கி ஒடுக்கிற தோல் இருக்கிறது, மதவெறித் தோல் இருக்கிறது. இந்தத் தோலை தனக்குத்தானே உரையாடல் செய்து உரித்துக் கொள்ளாமல், ஒரு புதிய சிந்தனைப் பிறக்காது. இந்தப் புதிய சிந்தனை இல்லாமல், ஒரு புதிய நாட்டை உருவாக்க முடியாது என்று அந்த மேதை, எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னால், அழுத்தமாக எழுதினார்.
திராவிடர் கழகமே
ஒரு கல்விக் கூடம்தான்
அந்த உரையாடலை கல்வி தொடங்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இன்று இல்லாவிட்டால், நாளை அத்தகைய கல்வியை நாம் முன்மொழிய வேண்டும். பெரியார் விரும்பிய அந்தச் சமூகக் கல்வி; டாக்டர் அம்பேத்கர் விரும்பிய அந்தச் சமூகக் கல்வி, சிங்காரவேலர் முன்மொழிந்த அந்தச் சமூகக் கல்வி. அதற்குள்தான் விடுதலைக் கல்வி; அதுதான் பகுத்தறிவுக் கல்வி; அதுதான் சுயமரியாதைக் கல்வி; அதுதான் சமதர்மக் கல்வி; அதுதான் மானுடக் கல்வி. அந்தக் கல்விதான் எல்லை தாண்டும். அத்தகைய கல்விக்கு எல்லை இல்லை, நாடு இல்லை, மொழி இல்லை, இனமில்லை, கண்டமில்லை; மானுடத்தை வேண்டி நிற்கின்ற அந்த மகத்தான கல்வியை நாம் பற்றி நிற்க வேண்டிய அவசியம் இருக்கிறது. திராவிடர் கழகமே ஒரு கல்விக் கூடம்தான். நாள்தோறும் நம்மிடம் இருக்கிற இந்த ‘விடுதலை’ சமூகக் கல்வியை போதிக்கிற ஒரு பல்கலைக் கழகம்தான். எனவே, அதுதான் நமது பேராயுதம். ‘விடுதலை’, ‘ஜனசக்தி’, ‘முரசொலி’, ‘தீக்கதிர்’ இந்தப் பேராயுதங்களை முன்பை விட நாம் அதிகமாக மக்களிடத்திலே கொண்டு செல்லவேண்டிய அவசியம் இருக்கிறது. நிறைவில் நாம் தான் வெல்வோம். அறிவியலும், பகுத்தறிவும், சமதர்மம் தான் உலகை வெல்லும், உலகை ஆளும் என்று சொல்லி, இந்த நல்ல முயற்சிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில குழுவின் சார்பில் வாழ்த்துகளைச் சொல்லி விடைபெறுகிறேன்!
நன்றி, வணக்கம்!
இவ்வாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் கண்டன உரை யாற்றினார்.
