தஞ்சை மகளிரணி மாநாட்டில் தகடூர் தமிழ்ச்செல்வியின் தலைமை உரை
தஞ்சை, மார்ச் 2– வரலாற்றுக் காரணங்களுக்காகவே பிறப்பெடுத்த – காலத்தின் பிள்ளை தமிழர் தலைவர் என்று 21.2.2026 அன்று தஞ்சை மகளிரணி, மகளிர் பாசறை மாநாட்டில் தகடூர் தமிழச்செல்வி தலைமை உரையாற்றினார்.
தமிழர் தலைவர் அவர்களின் வரலாறு என்பது ஓர் அதிசயமான வரலாறு. ஒன்பது வயதில் தொடங்கி 93 வரையிலும் உறங்கா விழிகளும் ஓயாத பயணங்களுமாய் பொது வாழ்க்கையில் தன்னை ஒப்படைத்துக் கொண்டிருக்கின்ற தலைவர் உலகத்திலேயே தமிழர் தலைவர் மட்டும்தான் .
அவருடைய பொது வாழ்க்கை வரலாற்றை நம்முடைய துணைத்தலைவர் கவிஞர் அவர்கள் ஒரு கவிதை சிற்பமாக வடித்து இருக்கிறார்.
“அது ஒரு கண் மூடாத கடிகாரம்!
காலத்தை தமிழனுக்கு
அறிவித்துக் கொண்டே இருக்கும்!
அது ஒரு கலங்கரை விளக்கம்!
தமிழன் செல்ல வேண்டிய
திசையை தெரிவித்துக் கொண்டே இருக்கும்!
அது ஒரு கண் தூங்க முடியாத மூச்சுக்காற்று!
கொஞ்சம் கண்ணயர்ந்தால்
தமிழனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு விடும்!
அது ஒரு எட்டு மணி நேர சேவகன் அல்ல!
24 மணி நேர முழு ஊழியன்!
அது கொஞ்சம் பராக்கு பார்த்தால்
தமிழனின் இடுப்பு வேட்டிக்கும் ஆபத்து!
அரசியல் ஆசாபாசத்தில் அது பிறக்கவில்லை!
வரலாற்று காரணங்களுக்காகவே
பிறப்பெடுத்த காலத்தின் பிள்ளை அது!!”
இந்த கவிதையின் ஒவ்வொரு வரிகளும் தமிழர் தலைவரின் வரலாற்றை நமக்கு அறிவிக்கின்றது.
மேலும் மேலும் வரலாறுகளை சுமந்துக் கொண்டே செல்லும் ஒரு வரலாற்று வாகனமாக தமிழர் தலைவர் விளங்குகிறார் என்பதை நமக்கு பறைசாற்றும்.
அது ஒரு கண்மூடாத கடிகாரம்!
காலத்தை தமிழனுக்கு தெரிவித்துக் கொண்டே இருக்கும்.
நம் நாட்டில் அகில இந்திய அளவிலான கட்சிகளாக இருந்தாலும் சரி, மாநில அளவிலான கட்சிகளாக இருந்தாலும் சரி, அவைகளுமே மாறி வருகின்ற நிலைப்பாடுகளையும் கொள்கைகளையும் உடையவைகளாக இருக்கும்.
அந்த வகையில் பார்த்தால் காங்கிரஸ் பேரியக்கம் அதனுடைய பழைய நிலைப்பாட்டில் இருந்து சமீப கால நிலைப்பாடு என்பது வேறு விதமாக இருக்கின்றது.
இந்த காலத்திற்கேற்ற மாற்றத்தை தமிழர் தலைவர் அவர்கள் தான் பேசுகின்ற பொதுக்கூட்டங்களிலும் உரைகளிலும் குறிப்பிடுவார்கள்.
காங்கிரஸ் பேரியக்கம் என்று வருகின்ற பொழுது தோழர்கள் பழைய நிலையில் இருக்கின்ற காங்கிரசை கணக்கில் வைத்துக் கொள்ளக் கூடாது.
சோனியா காந்தி, இளம் தலைவர் ராகுல் காந்தி அவர்களுக்கு பிந்தைய காங்கிரஸ் காலகட்டத்தை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அந்த காங்கிரஸின் கால கட்டத்தை நமக்கு தெரிவிக்கின்ற காலக் கடிகாரமாக இருக்கிறார்.
அது ஒரு கலங்கரை விளக்கம்!
தமிழன் செல்ல வேண்டிய திசையை தெரிவித்துக் கொண்டே இருக்கும்!
நம் நாட்டில் இருக்கின்ற அனைத்து இயக்கங்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் மாநில கட்சிகளுக்கும் தமிழர் தலைவர் அவர்கள் அவ்வப்பொழுது, அவர்கள் செல்ல வேண்டிய திசை வழியை காட்டிக் கொண்டே தான் இருந்தார்கள்.
அவர் காட்டிய திசை வழியில் சென்றவர்கள் இலக்கை அடைந்தார்கள்.
அதனை பின்பற்றாதவர்கள் இழப்பை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்
வரலாற்றுக்கேடு
உதாரணத்திற்கு இன்றைய அதிமுகவின் தலைமைக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அன்றே எச்சரித்தார். பாஜகவிடம் நெருங்காதீர்கள். அதேபோல் அவர்களை உங்கள் கட்சிக்குள் உள்ளே அனுமதிக்காதீர்கள் என்று.
ஆனால் அதிமுக தலைமை அதற்குச் செவி மடுக்கவில்லை.
விளைவு!
இன்றைக்கு சிதறுகாய் உடைக்கப் பட்டது போல அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சில்லு சில்லாக உடைக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல பாட்டாளி மக்கள் கட்சியும் இரண்டு துண்டாக உடைக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல வட இந்தியாவில் துவக்கப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி – (கன்சிராம் என்ற ஒரு மிகப்பெரிய சமூக நீதியாளரால் துவக்கப்பட்ட கட்சி – இன்றைக்கு சீர்கெட்டுப் போயிருக்கிறது.
அவர்களுக்கும் கூட தமிழர் தலைவர் அவர்கள் பார்ப்பனர்களை பக்கம் வைத்துக் கொள்ளாதீர்கள் என்ற திசை வழியை காட்டினார்கள்.
அவர்கள் கேட்கவில்லை.
கேட்காததன் விளைவு இன்றைக்கு பாஜக உத்திரப்பிரதேசத்தில் அதிக அளவு இடங்களைப் பிடித்து தொடர்ந்து ஒன்றியத்தில் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.
அரசியல் வரலாற்றில் ஒரு மாபெரும் களங்கமாக அவர்களின் முடிவு மாறிவிட்டது ஒரு மிகப்பெரிய வாய்ப்புக் கேடு
ஒரு கட்சிக்குக் கோடாரி என்பதை சின்னமாக வைக்க வேண்டும் என்றால் அதற்கு தகுதியுடைய ஒரே கட்சி இந்தியாவில் பாஜக மட்டும் தான்!
அந்த அளவிற்கு கட்சிகளை உடைப்பதிலும் பிளப்பதிலும் பாஜக பெயர் போனது!
ஆனால் இவற்றிற்கு எல்லாம் மாறாக இன்றைக்கு ஆளுகின்ற திராவிட மாடல் அரசின் முத்தான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சொல்லுகின்ற பொழுது.
“எங்களை வழி நடத்துவது பெரியார் திடல் தான்!
எங்களுக்கு திசை வழியை காட்டுவதும் தமிழர் தலைவர் தான்!”
என்று அறிவித்து ஒரு மிகப்பெரிய மக்கள் அரசை நடத்திக் கொண்டு வருகிறார்.
தந்தை பெரியாரின் கொள்கை மாணாக்கராகிய நம்முடைய தமிழர் தலைவர் அவர்கள் அறிஞர் அண்ணாவுடனும், அதன்பின் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் இளவல் என்று போற்றப்பட்டு அவருடன் இணைந்தும்,சமூக நீதிக்கான சரித்திர நாயகர் என்று பாராட்டப்பட்ட நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் திசை வழியைக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
ஸநாதனம் என்ற ஒற்றை வார்த்தையாலும், ‘ஒற்றைச் செங்கல் மதுரை எய்ம்ஸ்’ என்று உரத்துச் சொன்னதாலும் ஆரிய கூடாரத்தை கலங்கடித்துக் கொண்டிருக்கும் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் திசை வழி காட்டுகிறார்.
சமூக நீதியின் சரித்திர நாயகர் என்று முதலமைச்சர் அவர்களுக்கு எங்களுடைய ஆசிரியர் அவர்கள் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க பெருமையை அளித்திருக்கிறார்கள்.
ஏன்?
திராவிட மாடல் அரசின் திட்டங்களாக மக்கள் நலத் திட்டங்களை அறிவித்திருக்கின்ற காரணத்திற்காக.
நூற்றுக்கணக்கான திட்டங்களைச் சொல்லலாம்.
எடுத்துக்காட்டிற்காக ஓரிரண்டு திட்டங்களை மட்டும் இங்கே சுட்டிக் காட்டுகிறேன்.
பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மிகவும் போற்றி பாராட்டிய திட்டம் –
நாங்களெல்லாம் பள்ளி சென்று படிக்கின்ற அந்த காலகட்டத்தில், எங்கள் வீடுகளில் எல்லாம் காலை உணவு என்பது பழைய சோறு தான்தந்தை பெரியாரின் கொள்கை
ஒரு சில நேரங்களில் அவற்றில் சோறு இருக்காது. கஞ்சி மட்டும் தான் இருக்கும்தந்தை பெரியாரின் கொள்கை
“கிடைச்சா கஞ்சித் தண்ணி!
கிடைக்காட்டி கொழாத் தண்ணி” என்று நடிகை சாவித்திரி அவர்கள் ஒரு திரைப்படத்தில் பாடுவார்.
அந்தப் பாடலில் வருவது போல கஞ்சித் தண்ணீர் தான் காலை உணவு. நீராகாரம், புளிச்சத் தண்ணி, நீச்சத் தண்ணி என்று அதற்கு பல்வேறு பெயர்கள் உண்டு. அதைக் குடித்துவிட்டுத் தான் பள்ளி செல்ல வேண்டும்.
இன்னும் தோழர் ஜெயராமன் போன்று கிராமங்களில் இருந்து படிக்க வருகிற பிள்ளைகளுக்கு இந்த கஞ்சி கூட கிடைக்காது.
சோளமோ கம்போ இரவில் ஊறவைத்து அவற்றை காலையில் பள்ளி செல்கின்றபோது பாக்கெட்டுகளில் நிரப்பி கொண்டு சென்று, நடந்து போகிற நேரங்களில் அதனை சாப்பிட்டுக் கொண்டே செல்வார்கள்.
இப்படி எல்லாம் இருந்த நிலைகளுக்கு மாற்றாக காலை உணவுத் திட்டம் என்று கொண்டு வந்ததைத் தமிழர் தலைவர் எப்படி பாராட்டாமல் இருப்பார்கள்?
புதுமைப்பெண் திட்டம்!
தமிழ்ப்புதல்வன் திட்டம்!
உயர் கல்வி படிக்கும் மாணவர்களுக்கு ரூ. 1000 உதவித்தொகை.
“பெத்த பிள்ளைகளை படிக்க வைக்க,
அண்டா குண்டா அடகு வச்சு அம்மா தாலியை சேர்த்து வச்சு”
என்று பொதுவுடமை இயக்க கூட்டங்களில் ஒரு பாடல் முழங்கும்.
நிறைய மாணவச் செல்வங்களின் வீடுகளில் இதுதான் நிலை.
அந்த நிலையை மாற்றி அவர்களுக்கு உதவித் தொகையாக ரூ.1000 அறிவித்திருப்பதை எங்களுடைய தமிழர் தலைவர் அவர்கள் எப்படி பாராட்டாமல் இருப்பார்கள்?
எங்கள் இணையர் தோழர் ஊ.ஜெயராமன் அவர்கள் அய்.டி.அய் (ITI) படித்தவர். அவருடைய அப்பா ஊமையன் படிக்காத கைநாட்டு. அவருடைய தாத்தா கள்ளு காரன் என்ற மாரியும் படிக்காத கைநாட்டு .
அய்.டி.அய். படித்த ஊ.ஜெயராமனின் பேரன் சித்தார்த் அம்பேத்கர் கரக்பூரில் அய்.அய்.டி. I.I.T படித்து முடித்து இன்றைக்கு ஒரு செயற்கை நுண்ணறிவு என்ஜினியர்.
இந்த மாற்றத்தைத் தந்தது தான் திராவிட மாடல்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ. 1000.
இன்று 2000 ரூபாய் மகளிர் உரிமைத் தொகை அறிவித்திருப்பதற்கு பார்ப்பன கூடாரங்கள் பதறிப் பொங்குகின்றன.
இந்த உரிமைத் தொகை ஆயிரம் ரூபாயை எடுத்துக்கொண்டு எந்த மகளிரும் சூதாட்ட கிளப்புகளுக்கோ, மதுக்கடைகளுக்கோ, பார்களுக்கோ, டாஸ்மாக் கடைகளுக்கோ செல்வதில்லை. மாறாக நகைக்கடைகளுக்கு சென்று விதவிதமாக நகைகளை மாட்டிக் கொள்வதில்லை. நாங்கள் பலமுறை மகளிர் தோழர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்திருக்கிறோம்.
“இந்த மாதம் கலைஞர் காசு வந்தால் அதோடு 200, 300 சேர்த்து ஒரு மூட்டை அரிசி எடுக்க வேண்டும் என்று தான் பேசிக் கொண்டிருப்பார்கள்.
ரூ.1000 என்பது ஒரு வறுமை நிறைந்த குடும்பத்தின் உணவு தேவையை ஒரு மாதத்திற்கு பூர்த்தி செய்கின்ற ஒரு திட்டம். இது போன்ற திட்டங்களை தந்து கொண்டிருக்கும் திராவிட மாடல் அரசை எங்கள் தமிழர் தலைவர் எப்படி பாராட்டாமல் இருப்பார்கள்?
“அவர் ஒரு கண் தூங்க முடியாத மூச்சுக்காற்று!”
எவ்வளவு பொருள் பொதிந்த கவிதை வரிகள் இவை!
இமை மூடாமல் அந்த மூச்சுக்காற்று விழித்துக் கொண்டே இருப்பதால்தான் சமூக நீதிக்கு எந்த ஓர் ஆபத்து வந்தாலும் அதனை உடனடியாகக் கண்டறிந்து எச்சரிக்கை மணி ஒலிக்கின்ற வரலாறாகத் தமிழர் தலைவர் இருக்கிறார்.
முதன்முதலாக நுழைவுத் தேர்வு என்ற கெடுவாய்ப்பு மாநிலத்திலோ அல்லது ஒன்றியத்திலோ நுழைக்கப்பட்ட பொழுது அதனுடைய ஆபத்துக்களை அன்றே நமக்கு எச்சரித்தார்கள்.
புதிய தேசியக் கல்விக் கொள்கை, ஹிந்தி மொழித் திணிப்பு போன்றவற்றிலும் உடனடியாக எதிர்ப்பு குரல் கொடுத்தார்கள். கண் மூடாத அந்த மூச்சுக்காற்று இங்கே தமிழ்நாட்டில் இருப்பதால்தான் 10% உயர் ஜாதி ஏழைகளுக்கான இட ஒதுக்கீடு என்ற பெயரில் இட ஒதுக்கீட்டை ஒழித்துக் கட்டும் ஒரு கொடிய திட்டம் தமிழ்நாட்டிற்குள் நுழைய முடியவில்லை.
“அது ஒரு முழு நேர ஊழியன்.”
தமிழர் தலைவரின் அண்மை காலப் பயணங்களே இதற்கு ஒரு மிகப்பெரிய சான்றாதாரம்.
இரவோ பகலோ ஓய்வு கிடைக்கிற நேரங்களில் உறங்கிக் கொள்கிறார். மற்ற நேரங்களில் எல்லாம் உழைத்துக் கொண்டே இருக்கிறார்.
இரவு 12 மணிக்கு மேல் எல்லாம் பொதுக்கூட்டங்களைப் போட முடியாது.
அப்படி போடுகின்ற வாய்ப்பு இருந்தால் அந்தக் கூட்டத்திலும் கலந்து கொண்டு பேசுகிற அளவிற்கு ஒரு நாளில் இரவு பகல் என்ற வேறுபாடு இல்லாதது அவருடைய பொது வாழ்க்கை.
“இதுதான் ஆர்எஸ்எஸ்! பாஜக ஆட்சி!
இதுதான் திராவிடம் – திராவிட மாடல் ஆட்சி!” என்ற கருத்தாக்கத்தில் அவர் மேற் கொண்டிருக்கும் பொதுக்கூட்டங்களை ஒட்டிய சுற்றுப் பயணங்களே மிகப்பெரிய சான்றாதாரம்.
வரலாற்றுக் காரணங்களுக்காகவே பிறப்பெடுத்த காலத்தின் பிள்ளை!
சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களின் காலகட்டத்தில், லல்லு பிரசாத் யாதவ், முலாயம் சிங் யாதவ், சரத் யாதவ், சந்திரஜித் யாதவ், சீதாராம் கேசரி, அர்ஜுன் சிங், பிஜூ பட் நாயக், நிதீஷ் குமார், போன்ற சமூகநீதிக் கருத்துடைய தலைவர்களுடெல்லாம் இணைந்து பணியாற்றிய வரலாறு
தமிழர் தலைவரின் வரலாறு.
69% இட ஒதுக்கீடு வரலாற்றின் காரணமாக விளங்கியவர் தமிழர் தலைவர் அவர்கள்.
நீண்ட நாட்கள் கிடப்பில் போடப் பட்டிருந்த மண்டல் கமிஷன் அறிக்கை நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டு, சமூக நீதி காவலர் வி.பி.சிங் அவர்கள் காலகட்டத்தில் ஒன்றிய அரசாங்க வேலைகளில் 27% இட ஒதுக்கீடு என்றும்,
சோனியா காந்தி தலைமையிலான அய்க்கிய முற்போக்கு கூட்டணியின் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான 27 சதவீத இட ஒதுக்கீடு ஒன்றிய கல்வி நிறுவனங்களில் என்று கொண்டு வந்த வரலாறு நம் தமிழர் தலைவர் வரலாறு.
இதற்குக் காரணம் இரட்டை குழல் துப்பாக்கிகளாய்ச் செயல்பட்ட நம்முடைய தமிழர் தலைவரும் முத்தமிழறிஞர் கலைஞரும் ஆவார்கள்!
தமிழர் தலைவரின் அண்மைக்கான கனவு என்பதும், லட்சியம் என்பதும், இலக்கு என்பதும், ஒரு மாபெரும் மக்கள் நல அரசாக வழங்கிக் கொண்டிருக்கின்ற திராவிட முன்னேற்றக்கழக அரசுதான் மீண்டும் 2026லும் அமைய வேண்டும் என்ற வரலாற்றை உருவாக்க வேண்டும். அதற்கு திராவிடர் கழகம் ஒரு மிகப்பெரிய காரணமாகவும் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுகிறார்கள்.
அவர் காட்டும் திசை வழியில் செல்வோம்! வெல்வோம்!!
நன்றி வணக்கம்!
இவ்வாறு தகடூர் தமிழ்ச்செல்வி உரையாற்றினார்.
