இதுதான் பெரியாரின் – திராவிட இயக்கத்தின் சாதனை!
தஞ்ைச கழக மகளிரணி, மகளிர் பாசறை மாநில மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
தஞ்சை, மார்ச் 2 இங்கிலாந்து நாட்டில் இன்னமும் போராடுகிறார்கள்! தமிழ்நாட்டில் சுயமரியாதைத் திருமணம் சட்ட அங்கீகாரம் பெற்று 60 ஆண்டுகள் ஆகின்றன! இதுதான் பெரியாரின் – திராவிட இயக்கத்தின் சாதனை என்றார் திராவிடர் கழகத் தலை வர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
தஞ்சை: திராவிடர் கழக மகளிரணி,
மகளிர் பாசறை மாநில மாநாடு
கடந்த 21.2.2026 அன்று காலை தஞ்சையில் உள்ள பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் நடைபெற்ற திராவிடர் கழக மகளிரணி, திராவிட மகளிர் பாசறை மாநில மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
27.2.2028 அன்று ‘விடுதலை’யில் வெளிவந்த உரையின் தொடர்ச்சி வருமாறு:
அதற்காக திராவிடர் கழக மகளிரணி, கலைவாணர் அரங்கத்தில் ஒரு விழாவிற்கு ஏற்பாடு செய்து, அவ்விழா விற்கு முதலமைச்சர் கலைஞரை அழைத்து, ‘‘மகளிர் உரிமை காத்த மாண்பாளர்’’ என்று இதே மகளிரணி சிறப்பாகப் பட்டம் கொடுத்தது. அது எவ்வளவு பெருமை.
செங்கல்பட்டு சுயமரியாதை
முதல் மாகாண மாநாட்டுத் தீர்மானம்!
அது மட்டுமல்ல, எந்த நாடாளுமன்றம் மறுத்ததோ, எந்த நாடாளுமன்றத்தில அதற்கு ஆதரவு இல்லையோ, அதே நாடாளுமன்றம் – 2006 ஆம் ஆண்டில், திரா விட முன்னேற்றக் கழகம் ஒன்றிய அரசில் அங்கம் வகி்த்து, இடதுசாரிகளும் அங்கம் வகித்து, ஒருமித்த கருத்துள்ளவர்களை ஒன்றிணைத்து அதன்படி வந்த மிகப்பெரிய ஒரு சமூக மாற்றத்தை நிகழ்த்தியது. பெரிய வெற்றி என்னவென்றால், அகில இந்திய அளவில் பெண்களுக்குச் சொத்துரிமை உண்டு என்ற சட்ட மசோதா நிறைவேறியதுதான். யார் செய்தது? அதற்கு யார் காரணம்? திராவிட இயக்கம் அல்லவா! திராவிட இயக்கத்துக்கு மூலவித்து எங்கே இருந்து வந்தது? தந்தை பெரியார் நடத்திய, செங்கல்பட்டு சுயமரியாதை முதல் மாகாண மாநாட்டுத் தீர்மானம்தான் அதற்கு அடிப்படையாகும்.
ஆகவே நண்பர்களே, இது சாதாரணமானது அல்ல; பெரிய நோய்க்கு சிறிய மருந்து. மருந்து சிறியதாகத்தான் இருக்கும். மருந்தெல்லாம் பெரிய கேப்சூல் இல்லை. அது மாதிரி இந்த இயக்கம் எப்பொழுதுமே பெரிய அளவில் ஆடம்பரமாக இருக்காது. ஆனால், அதனுடைய பணிகள் மிக வேகமாக எல்லா இடத்திலும் சென்று பாயக்கூடிய அளவிற்கு இருக்கும்.
110 ஆண்டுகளுக்கு முன்பு வந்த நீதிக்கட்சி செய்தது!
அதற்கு உதாரணத்தை உங்களுக்குச் சொல்ல வேண்டுமானால், வளர்ந்த நாடுகளிலே கூட பெண்க ளுக்கு வாக்குரிமை கொடுக்கப்படாத நேரத்தில், 110 ஆண்டுகளுக்கு முன்பு வந்த நீதிக்கட்சி ஆட்சி அதை செய்தது. இன்னொரு உதாரணம், உங்க ளுக்கெல்லாம்கூடத் தெரியும் – சுயமரியாதைத் திருமணம் சட்டபூர்வமாக்கப்பட்டது. அதை அண்ணா அவர்கள் செய்தார்.
முப்பெரும் சாதனை என்று, அவர் செய்ததிலே முதலாவதாக சொல்லத்தக்கது சுயமரியாதைத் திருமணம் சட்டபூர்வம். அதை 100 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கியவர் தந்தை பெரியார். செல்லாது என்ற அது மறுக்கப்பட்ட நிலையிலே கூட, ‘‘நீங்கள் அதைப் பற்றிக் கவலைப்படாதீர்கள்; நீங்கள் சுயமரியாதைத் திருமணத்தை நடத்துங்கள்; இன்றைக்கு இல்லாவிட்டாலும், என்னுடைய கொள்கை என்றைக்காவது ஒரு நாள் வெற்றி பெறும். அதில் நம்பிக்கையோடு இருங்கள்’’ என்று தந்தை பெரியார் உறுதியாகச் சொன்னார். சுயமரியாதைத் திருமணங்கள் நடத்தப்படுவது நிற்கவில்லை; உயர்நீதிமன்றத்திலே சப்தபதி, ஏழு அடி, நெருப்பு, யாகம் என்றெல்லாம் காரணம் காட்டி, சுயமரியாதைத் திருமணம் செல்லாது என்று சொன்ன நேரத்தில் கூட அதைப் பற்றிக் கவலைப்படாத பெரியார் தொண்டர்கள் சுயமரியாதைத் திருமணங்களைச் செய்வதை நிறுத்தவில்லை.
ஆனால், இதில் ஒன்று பலபேருக்குத் தெரியாது. இன்னும் சொல்ல வேண்டுமானால், தாய்மார்களுக்குத் தெரியாது. பல தமிழர்களுக்குத் தெரியாது. ‘‘மானமும், அறிவும் மனிதருக்கு அழகு’’ என்று தந்தை பெரியார் சொன்னார். சுயமரியாதைத் திருமணம் செல்லாது என்று உயர்நீதிமன்றம் சொன்னவுடன், பார்ப்பனர்கள், உயர்ஜாதிக்காரர்கள், புரோகித வர்க்கம் சந்தோஷப்பட்டது. ஆனால், அதனுடைய விளைவு நமக்கு எவ்வளவு பெரிய வலியை உண்டாக்கிற்று என்று தெரியுமா? இதை நீங்கள் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆரியத்தால் பறிக்கப்பட்ட மானத்தை, மீண்டும் கொண்டுவந்த இயக்கம் திராவிட இயக்கம்!
சுயமரியாதைத் திருமணம் செய்தவர்களுக்குப் பிறந்த குழந்தைகள், வளர்ந்தவர்கள் ஆனார்கள்; அப்படி வளர்ந்தவர்கள் இந்த இயக்கத்தினால் படித்தார்கள். ஆனால், சுயமரியாதைத் திரு மணத்தின் மூலமாகப் பிறந்தார்கள் என்ற காரணத்தினாலே, அவர்களுக்கு இந்த நாடும், சட்டமும், அதற்கு முன்னால் என்ன பெயர் வைத்து தெரியுமா? Illegitimate Children – சட்டப்படி பிறக்காத ஏதோ வைப்பாட்டிக்குப் பிறந்தவர்கள் என்று நம்மை அவமானப்படுத்தினார்கள். அதைவிட, நம்மைப் பெற்ற தாய்கள் எல்லாம் ‘வைப்பாட்டிகள்’ ஆனார்கள்; இதைச் சொல்லும்போதே நெஞ்சம் கொதிக்கிறது. அதை மாற்றி, ‘‘இல்லை, அப்படிப்பட்டவர்கள் அல்ல; அவர்களும் சட்டப்படி உரிமை பெற்றவர்கள்’’ என்று, அவர்கள் இழந்த மானத்தை, ஆரியத்தால் திட்டமிட்டே செய்யப்பட்ட சதியால், பறிக்கப்பட்ட மானத்தை, மீண்டும் கொண்டுவந்த இயக்கம் திராவிட இயக்கம். பேரறிஞர் அண்ணா அவர்கள் அந்த வெற்றியை, சுயமரியாதைத் திருமணத்தை அறிமுகப்படுத்திய தலைவர் தந்தை பெரியார் அவர்களுக்கு காணிக்கையாக அளித்தார்.
இதுபோல் ஓர் இயக்கம் இந்தியாவிலே, ஏன் உலகத்தில் கண்டது உண்டா?
‘‘இந்த அரசு மட்டும் உங்களிடம் ‘காணிக்கையாக’ வைக்கப்படவில்லை; மாறாக, நீங்கள் உருவாக்கிய சுயமரியாதைத் திருமணம் காலங்காலமாக செல்லாது என்று நீதிமன்றம் சொல்லியது அல்லவா, அதைச் செல்லும் என்று நாங்கள் சட்டம் செய்து இருக்கிறோம். இப்போது நடக்கக்கூடிய திருமணங்கள் மட்டுமல்ல நண்பர்களே, ஏற்கெனவே நடந்த திருமணங்களும் செல்லும். எங்கள் மானம் திரும்பப் பெறப்பட்டது. எங்களு டைய தாய்மார்களுடைய இழிவு துடைக்கப்பட்டது’’ என்கின்ற அளவில் பேரறிஞர் அண்ணா அவர்கள் அறிவித்தார். இதுபோல் ஓர் இயக்கம் இந்தியாவிலே, ஏன் உலகத்தில் கண்டது உண்டா? எங்களுக்கு விளம்பரம் கிடையாது; பூக்கடைக்கு விளம்பரம் தேவையில்லை. போர்க்களத்தில் இருக்கிறவர்கள் விளம்பரத்தைக் கருதி தன்னுடைய கடமையைச் செய்வதில்லை. அதை நன்றாக நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.
இங்கிலாந்து: ‘ரேஷனலிஸ்ட் ஆர்கனைசேஷன்!’
அதே நேரத்தில் பலரும் அறியாத ஒரு செய்தியை இங்கே சொல்ல வேண்டும். இங்கிலாந்திலே 300 ஆண்டுகளாக இருக்கக்கூடிய ஓர் அமைப்பு ‘ரேஷன லிஸ்ட் ஆர்கனைசேஷன்.’ ‘ஆர்.பி. ரேஷனலிஸ்ட் பப்ளிக் அசோசியேஷன்’ – என்பதை இப்போது ‘ஹியூ மனிஸ்ட் அமைப்பு’ (மனித நேயத்துக்கான அமைப்பு) என்று மாற்றி இருக்கிறார்கள். அந்த அமைப்பு எப்படி இருக்கும் என்றால், இதுபோன்று மக்கள் மத்தியில் இருக்க மாட்டார்கள். ஓர் அரங்கத்திற்குள்தான் இருப்பார்கள். அவர்கள் காலாண்டுக்கு ஒருமுறை நடத்துகின்ற இதழ்தான் ‘ஹியூமனிஸ்ட் யூகே.’
மூன்று மாதங்களுக்கு ஒரு முறைதான் வெளிவரும். 300 ஆண்டுகளுக்கு மேலே நடத்துகின்ற அந்த அமைப்பை்பபற்றி ஒரே ஒரு செய்தியை உங்களுக்குச் சொல்ல வேண்டும். இத்தனை ஆண்டுகளாக அங்கே போராடுகிறார்கள் – ‘‘ஹியூமனிஸ்ட் மேரேஜ் கேம்பெய்ன்.’’ அதில் நான் உறுப்பினர் என்பதால், அந்தப் பத்திரிகை எனக்குத் தபாலில் வரும். அந்த இதழைப் பார்த்த எனக்கு அதிசயமாக இருந்தது. இது அறிவார்ந்த அரங்கம். நீங்கள் எல்லாம் நன்றாகக் கவனிக்க வேண்டும். பெரியாருடைய பணி – திராவிட இயக்கத்தினுடைய பணி – ‘திராவிட மாடல்’ ஆட்சியினுடைய சாதனையால் – நமக்கு மானம் திரும்பியது; நாம் எவ்வளவு முன்னேறி யிருக்கிறோம் என்பதற்காகச் சொல்லுகிறேன். நண்பர்களே, இங்கிலாந்து வளர்ந்த நாடு, நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கே அதுதான் வழிகாட்டி – அதுதான் முன்மாதிரி என்று சொல்லக்கூடிய அளவில் இருக்கின்றது.
‘தி இம்பாக்ட் ரிப்போர்ட்’
அந்த நாட்டில் இருந்து வந்திருக்கின்ற இதழில், ‘தி இம்பாக்ட்’ என்று அதற்குத் தலைப்பு கொடுத்தி ருக்கிறார்கள். ‘தி இம்பாக்ட் ரிப்போர்ட்’ – நாங்கள் செய்த கிளர்ச்சி – நாங்கள் ஓர் இயக்கம் நடத்துகிறோம் – அந்த இயக்கத்திற்கு என்ன தாக்கம் ஏற்பட்டிருக்கிறது என்று, அதை விளக்கிச் சுருக்கமாக 2, 3 கோரிக்கைகள் வெற்றி அடையவில்லை. அதைச் சொல்கிறார்,
Our Humanist Marriage Campaign, reached new heights – நான்கூட நினைத்தேன், அதில் வெற்றி பெற்றுவிட்டார்கள் என்று சொல்லப் போகிறார் என்று.
Our Humanist Marriage Campaign, reached new heights in April as two Humanist Couples announced legal action against the UK Government over its continuing failure to grant legal recognition to Humanist Marriage in England and Wales.
இதன் தமிழாக்கம்:
‘‘இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் மனிதநேயத் திருமணத்திற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கத் தவறியதற்காக இங்கிலாந்து அரசாங்கத்திற்கு எதிராக இரண்டு மனிதநேய இணையர்கள் சட்ட நடவடிக்கை எடுப்பதாக அறிவித்திருக்கிறார்கள். இதன்மூலம் எங்கள் மனிதநேய திருமண பிரச்சாரம் ஏப்ரல் மாதத்தில் புதிய உச்சத்தை எட்டியது.’’
பெரியார் இயக்கத்தின்
வெற்றியின் மகத்துவம்!
இதுதான் இதுவரை அவர்கள் எட்டியுள்ள சாதனை! இதுதான் அவர்களுக்கு மகிழ்ச்சி ஊட்டக் கூடியது. அவர்கள் எங்கே நிற்கிறார்கள்? நாம் எந்த இடத்தில் இருக்கிறோம்? பெரியார் எந்த இடத்தில வெற்றி கொடுத்தார் என்று, The Magnitude of the success of the Periyar Movement must be felt and understood in this context. பெரியார் இயக்கத்தின் வெற்றியின் மகத்துவத்தை இங்கே உணரலாம், இங்கே புரிந்து கொள்ளுங்கள்.
அதில் மேலும் சொல்கிறார்,
Terii O’Sullivan and Edd Berrill from Coventry, alongside Nicole Shasha and Rory Booth from Leicester, are fighting to be married in line with the humanist beliefs.
இதன் தமிழாக்கம் வருமாறு:
கோவென்ட்ரியைச் சேர்ந்த டெரி ஓ’சல்லிவன் மற்றும் எட் பெரில் ஆகியோரும், லெய்செஸ்டரைச் சேர்ந்த நிக்கோல் ஷாஷா மற்றும் ரோரி பூத் ஆகியோரும், மனிதநேய நம்பிக்கைகளுக்கு ஏற்ப திருமணம் செய்து கொள்ள போராடுகிறார்கள்.
மேலும் தொடருகிறார்,
This new legal action comes five years after the High Court ruled that the government’s failure to recognise humanist marriages amounted to ‘discrimination’.
இதன் தமிழாக்கம் வருமாறு:
‘‘மனிதநேய திருமணத்தை அரசாங்கம் அங்கீகரிக்கத் தவறியது ‘பாகுபாடு’ காட்டுவதற்குச் சமம் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த அய்ந்து ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தப் புதிய சட்ட நடவடிக்கை வருகிறது.’’
ஏன் பெரியார் உலகமயமாக வேண்டும்?
எங்கே இது? இங்கிலாந்து நாட்டில்! ஆனால், இதை ஒரு நொடிப்பொழுதில், அண்ணா அவர்கள் செய்தார் என்றால், உலக வரலாற்றில் பெரியாரின் பெருமையை நினைத்துப் பார்க்க வேண்டும். ஏன் பெரியார் உலகமயமாக வேண்டும்? இதற்காகத்தான் பெரியார் உலகமயமாக்க வேண்டும்! நன்றாக புரிந்து கொள்ளுங்கள், ஏன் இந்த மகளிர் மாநாடு? ஏன் மகளி ரைக் களத்திலே இறக்குகிறோம்? ஏன், ‘பெண் ஏன் அடிமையானாள்?’ என்பதை இன்னமும் சொல்லிக் கொண்டிருக்கிறோம்? ஏன் இந்தக் கருத்துகள் பரவ வேண்டும்? என்று சொல்லுகிறோம். இதுதான் நண்பர்களே, நீங்கள் மிக முக்கியமாகத் தெரிந்து கொள்ள வேண்டிய, புரிந்து கொள்ள வேண்டிய, அறிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான பகுதியாகும்.
அதற்கடுத்த இதே சங்கதி. மாநாட்டுத் தீர்மானங்களில் அடுத்த கட்டம் போக வேண்டும். தந்தை பெரியார் அவர்களுடைய அணுகு முறை எப்படி இருக்கும் என்றால், படிப்படியாக இருக்கும். முதலல், திருமணம், ஜாதி மறுப்பு திருமணங்கள் – கடந்த வாரத்தில் நடைபெற்ற ஒரு திருமணத்திற்கு, வழக்குரைஞர் அருள்மொழியும் வந்திருந்தார். ஒரு பார்ப்பனர், இன்னொருவர் மற்ற ஜாதி. மணமகன் சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தவர்; மணமகள் வீட்டார், ‘‘நீங்கள் செய்வது எல்லாம் சரிதான். ஆனால், தாலி மட்டும் இருந்தால் நன்றாக இருக்குமே. ஏனென்றால், எங்க சமூகத்தில இருக்கின்றவர்கள் எல்லாம் வருவார்கள்’’ என்றார்.
பார்ப்பனர் இல்லாத திருமணத்தை,
பார்ப்பனர் சமூகத்தில் நடக்கக்கூடிய அளவிற்கு வெற்றி பெற்றிருக்கிறார் பெரியார்!
மணமகன் வீட்டார் கொஞ்சம் தயங்கினர். அவரிடத்தில் நாங்கள் சொன்னோம், ‘‘பரவாயில்லை’’ என்று. நமக்கு முதல் கட்டம் பார்ப்பனர் இல்லாத திருமணத்தை, பார்ப்பனர் சமூகத்தில் நடக்கக்கூடிய அளவிற்கு வெற்றி பெற்றிருக்கிறார் பெரியார்.
பெரியார்தான் சொன்னார், ‘‘கட்டி முடிந்தவுடன் தூக்கி எறிவது அவர்கள் பொறுப்பு, அவ்வளவுதான்’’ என்று.
எத்தனையோ பேர் சினிமாவில், திரைக்காட்சிக்காக தாலிக் கட்டிக் கொள்வது போன்று நடித்துவிட்டு, அதை வசதியாகக் கழற்றி வைத்துவிடுகிறார்கள். அதே மாதிரி ஊடகங்களில் வரும் நாடகங்களில் அதுபோன்று இருக்கிறது. அதனால் இது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. இதற்காக ஒரு நல்ல வாய்ப்பைத் தவற விட வேண்டிய அவசியம் இல்லை. ஆகவே, அதன்படியே செய்யுங்கள் என்று சொன்னோம்; மகிழ்ச்சியான முறையில், அந்தத் திருமணமும் நடைபெற்றது.
இந்த இயக்கம் வளர வேண்டும் என்றால், இந்தக் கொள்கை வளர வேண்டும் என்றால், படிப்படி யாகத்தான் அது நடக்கும். ‘திராவிட மாடல்’ ஆட்சி கூட அப்படித்தான். உடனே நீங்கள் ‘‘நூறுக்கு நூறு இப்படிச் சொல்றீங்களே?’’ ‘‘ஓ, ஸ்டாலின் அவர்கள் அதைச் செய்யவில்லை’’ என்று சொன்னால், திடீர்னு அவர் வந்துவிடவில்லை; பக்குவம் இல்லாதவர் அல்ல அவர். மிகவும் பக்குவப்பட்டவர் அவர்.
மெதுவாக உட்கார்ந்து படுத்தால்தான் அடிபடாது. இன்றைக்கு சில பேர் நேராக அடுத்த முதலமைச்சர் நான்தான் என்று சொல்கிறார்கள் பாருங்கள் – அது, நின்று கொண்டு கீழே விழுவது போன்றதுதான்.
ஒழுங்காக உட்கார்ந்து படுத்தால்தான், அடிபடாது. அது மாதிரி படிப்படியாக வர வேண்டும். கொள்கை வெற்றிகளைப் படிப்படியாகப் பெறக்கூடிய அள விற்குத்தான் தந்தை பெரியாரின் அணுகுமுறை இருக்கும். ‘‘எனக்குப் பெரியார் தந்த புத்திதான் முக்கியம்; சொந்த புத்தி முக்கியம் இல்லை’’ என்று நான் சொல்வதனுடைய விளைவு என்னவென்றால், ‘‘அய்யா 11 மணி ஆகிறது; நல்ல காலம் – அந்த நேரத்திற்குள் தாலியை மட்டும் கட்டினால், வசதியா இருக்கும்’’ என்றார். உடனே மணமகன் வீட்டார், ‘‘அதெல்லாம் முடியாதுங்க’’ என்று சொன்னார்கள்.
இது ஒன்றும் பெரிய பிரச்சினையல்ல. இது ஒரு சாதாரண விஷயம் எங்களைப் பொறுத்தவரையில்! மணமகன் வீட்டார் கொஞ்சம் யோசனை செய்தார்கள். அவர்களுக்கு நான் சமாதானம் சொன்னேன். முதலில் தாலியைக் கட்டச் சொல்லி, அதற்குப் பிறகு மற்ற நிகழ்ச்சிகளை நடத்தினோம்.
எந்தக் காலத்திலும் சுயமரியாதை இயக்கக் கொள்கை அழியாது!
இவ்வளவு தூரம் அவர்கள் நமக்கு விட்டுக் கொடுக்கும்போது, நாம், அவர்களுக்குக் கொஞ்சம் விட்டு கொடுப்பதனால், இந்தக் கொள்கை சாய்ந்துவிடாது, விழுந்து விடாது. இந்தக் கொள்கையை அழிக்க எந்தக் கொம்பனாலும் முடியாது; எந்தக் காலத்திலும் இந்தக் கொள்கை அழியாது.
இம்மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு இருக்கின்றன. இப்போது பழைமை ஸநாதனவாதிகள் என்று சொல்கிறவர்கள், ‘‘சீர்திருத்த திருமணம், சுயமரியாதைத் திருமணம் சட்டப்படிச் செல்லும்’’ என்று சொல்லிட்டாலும், அதற்கு ஒரு கேள்வி கேட்கிறான்; சுயமரியாதைத் திருமணம் இந்து மேரேஜ் கீழேதான் இருக்கும். ‘ஸ்பெஷல் மேரேஜ்’ 30 நாள்களுக்கு முன்னால் அறிவிக்க வேண்டும், நோட்டீசில் போட வேண்டும் என்றெல்லாம் சொன்னது போக, இன்றைக்குக் காலையில் ஒரு செய்தி வந்திருக்கிறது. அந்தச் செய்தி என்னவென்றால், குஜராத்தில் ஒரு சட்டம் கொண்டு வந்திருக்கிறார்கள். என்ன அந்த சட்டம் என்றால், 30 நாள்கள் என்று சொல்வது மட்டுமல்ல; அந்தத் திருமணம் நடக்கவேண்டும் என்றால், அவர்களுடைய பெற்றோர் ஒப்புதல் கொடுத்தால்தான், அந்தத் திருமணத்தை நடத்த முடியுமாம்.
ஆணவக் கொலை செய்யக்கூடிய மனப்பான்மையை நாம் போக்க வேண்டாமா?
என்னய்யா? இதைவிட கொடுமை வேறு இருக்க முடியுமா? பெண் அடிமைத்தனம் என்று வேறு இருக்க முடியுமா? அவர்களுக்கு உரிமை உண்டு என்று ஏன் சொல்கிறோம். 18 வயதானால், ஓட்டு போடுகிற உரிமை உண்டு. அப்படி ஓட்டு போடுகிறவரிடம், ‘‘நான் சொல்கிறவருக்குதான் ஓட்டு போட வேண்டும்’’ என்று, யாரையாவது உங்களால் கட்டாயப்படுத்த முடியுமா? அப்படிச் சொல்வதற்கு உங்களுக்கு உரிமை உண்டா? அது மாதிரி பெண்கள் துணிந்து சொல்ல வேண்டும். இரண்டு பேரும் புரிந்துகொண்டு, திருமணம் செய்வதற்கு ஒப்புக்கொள்கிறார்கள். அதனால்தான் சில பேர், ஆணவக் கொலை வரைக்கும் போகிறார்கள். அந்த ஆணவக் கொலை செய்யக்கூடிய மனப்பான்மையை நாம் போக்க வேண்டாமா? ஆகவேதான் நண்பர்களே, இந்தத் தீர்மானம் மிக முக்கியம்.
எனவே, இதில், நாள் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. நீங்கள் அப்படிக் கொண்டு வந்தாலும், சட்டப்படி அதனைச் செய்ய முடியாது. அதற்காக, திராவிடர் கழகம் அத்தனை முயற்சிகளையும் நாங்கள் எடுப்போம். ஜாதியைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக, அய்யோ, நம்ம ஜாதியை விட்டுப் போகிறதே நம் பெண் என்று, பைத்தியக்காரர்கள் மாதிரி கூலிப்படையைத் தேடுகிறார்கள். சொந்த பிள்ளையை, வளர்த்து, ஆளாக்கி, அந்தப் பிள்ளைக்காக அவ்வளவு கஷ்டப்பட்ட அந்த உணர்ச்சிகள் எல்லாம், உன் ஜாதி வெறிக்கு முன், மதவெறிக்கு முன் போய்விடுகிறதே! அதைத்தான் இன்னமும் நாம் மகளிர் மத்தியிலே, மற்றவர்கள் மத்தியிலே எடுத்துச் சொல்ல வேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கிறது.
இன்னும் நமக்குப் பணிகள் இருக்கின்றன. ஓர் இலக்கை நோக்கி நாம் போகும்போது, அந்த இலக்கு ஒரு கட்டம், இரண்டாவது கட்டம், மூன்றாது கட்டம் என்று நாம் செய்தாக ஆக வேண்டும். நம்முடைய பெற்றோர்களுக்குச் சொல்ல வேண்டும். ஜாதி, ஜாதி, நம்ம ஜாதி பெண், நம்ம ஜாதியை விட்டுப் போனால் என்னாவது? என்று கேட்டால், அவரிடம் நீங்கள் திருப்பிக் கேளுங்கள்!
நோய் வந்தால், மாரடைப்பு வந்ததால், உடனே மருத்துவமனைக்கு போகிறீர்கள் அல்லவா, அங்கே நீங்கள் போகும்போது, ‘‘யாருங்க டாக்டர்? என் ஜாதிக்காரர் இருக்கிறாரா? யாருங்க நர்ஸ்? என் ஜாதிக்காரர் இருக்கிறாரா? யாருங்க ஊசி போடுகிறவர், என் ஜாதிக்காரரா?’’ என்று கேட்பீர்களா?
அட முண்டமே! உனக்கு அறிவு வேண்டாமா? அப்பொழுது தேவைப்படாத உன்னுடைய ஜாதி, திருமணத்தின்போது உனக்குத் தேவைப்படுகிறது? ‘முண்டமே’ என்று கடுமையாகச் சொன்னேன் என்று நினைக்காதீர்கள். ஓர் உடலில், கழுத்திற்கு மேல் இல்லை என்றால், அது முண்டம். வேலை செய்யவேண்டிய விஷயம் அங்கேதான் இருக்கிறது.
‘‘பொதுஜனக் கருத்து’ வேகமாகப் போனால், சட்டம் என்பது பின்னால் நொண்டி அடித்துக் கொண்டு வரும்!’’
ஆகவேதான், இன்னமும் நமக்கு வேலை இருக்கிறது. இன்னமும் திராவிடர் கழகத்துக்கு, திராவிட முன்னேற்ற கழகத்திற்கு வேலை இருக்கிறது. திராவிடர் கழகம் முன்னால் ஓடி ஓடி, அந்தப் பாதையைச் சரிப்படுத்திக் கொண்டு போகும். அண்ணா அவர்கள், சுயமரியாதைத் திருமண சட்டத்தைக் கொண்டு வந்த போது, எதிர்ப்பே இல்லை. அண்ணா கொண்டுவந்த சுயமரியாதத் திருமணம், அதே உயர்நீதிமன்றத்தால் பிறகு சட்டப்படி செல்லும் என்று ஆக்கியது எப்படி? மக்களைப் பக்குவப்படுத்துவோம். ‘‘பொதுஜனக் கருத்து’ வேகமாகப் போனால், சட்டம் என்பது பின்னால் நொண்டி அடித்துக் கொண்டு வரும்’’ என்பது ஒரு பழமொழி. அப்படிப்பட்ட ஒரு பணியை நாம் செய்ய வேண்டும்.
நிறைவாக ஒன்றைச் சொல்லி முடிக்க விரும்புகிறேன்; ‘‘இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்குப் பதிலாக, மனுதர்மத்தைத்தான் அரசியலமைப்புச் சட்டமாக்க வேண்டும். அம்பேத்கருடைய சட்டம் இருக்கக்கூடாது’’ என்றால், மனுதர்மம் அரசியலமைப்புச் சட்டமானால், மகளிர் தோழர்களே, தோழர்களே நீங்கள் நினைத்துப் பாருங்கள், உங்களுக்குப் பழைய நிலைதான் திரும்பும். அந்தப் பழைய நிலை வந்தால், மீண்டும் பெண்ணடிமைத்தனம் வரும்.
பெரியார்தான் கேட்டார், ‘பதிவிரதை என்று ஒரு வார்த்தை வைத்திருக்கிறீர்களே, கற்பு என்று சொல்கிறீர்களே, கற்புக்கரசி என்று ஒரு வார்த்தை சொல்கிறீர்களே, ஏன்டா கற்புக்கரசன் இல்லை?’’ என்று கேட்டார்.
சமூகப் போராட்டம் – பெண்ணுரிமை போராட்டம் தான் வேறு ரூபத்தில் வருகிறது!
இதோ மனுதர்மம், (ஒரு கையில் எடுத்துக்காட்டுகிறார்), இதோ இன்னொரு அரசியலமைப்புச் சட்டம். (மறு கையில் எடுத்துக்காட்டுகிறார்) இப்போது போராட்டமே இதுதான். தேர்தல் போராட்டம் அல்ல நண்பர்களே! வருகின்ற தேர்தல் என்பது, வாக்களிப்பது என்பது சாதாரண போராட்டம் அல்ல; அது சமூகப் போராட்டம் – பெண்ணுரிமை போராட்டம் தான் வேறு ரூபத்தில் வருகிறது.
எனவே, எல்லோரையும் விட தாய்மார்கள், சகோதரிகள் – உங்களுக்குச் சலுகைகள் வந்திருக்கின்றன; உரிமைத் தொகைகள் வந்திருக்கிறது. அய்ந்து பெண்ணைப் பெற்றவர் இப்போது ஆண்டி இல்லை. அந்த அய்ந்து பெண்களும் கல்லூரியில் படித்தால், அந்த அய்ந்து பேருக்கும் 1000 வரும்; ஆக மொத்தம் 5000 ரூபாய் வரும். அப்பன் வீட்டில் இருந்து கூட இவ்வளவு முறையாக வந்தது கிடையாது. அப்படிப்பட்ட ஓர் ஆட்சி ‘திராவிட மாடல்’ ஆட்சி. தொகையை மட்டும் நினைக்காதீர்கள், அதைவிட நமக்கு உரிமை மிக முக்கியம். இவையெல்லாம் ஒரு நொடிப்பொழுதிலே மாறிவிடும்.
ஆதிக்கவாதிகள் மற்ற இடங்களில் செய்து கொண்டிருக்கிறார்கள். உத்தரப்பிரதேசத்தில செய்து கொண்டிருக்கிறார்கள். எங்கெங்கெல்லாம் பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். ஆட்சி இருக்கிறதோ, அங்கெல்லாம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
எனவே, தாய்மார்களே, தோழர்களே! தேர்தலை நீங்கள் ஏதோ வாக்குப் போடுவது, இவ்வளவு நாள் இவருக்குப் போட்டோம்; கொஞ்ச நாள் அவருக்குப் போட்டால் என்னவென்று நினைத்தீர்கள் என்றால், தலையில் கொள்ளிக்கட்டையை எடுத்துச் சொறிந்து கொள்ளக்கூடிய அளவுக்கு மிகப்பெரிய ஆபத்தாக வந்துவிடும்.
இதை நம்முடைய அணியினர், மகளிர் அணியினர், தோழர்கள் வயது வித்தியாசம் இல்லாமல் ஒவ்வொரு வீட்டிற்கும் போய் சொல்ல வேண்டும். அம்மா, இப்படி இருந்த நிலைமை. இப்படி கரண்டி இருந்த இடத்தில், இன்றைக்குக் பெண்கள் கையில் பேனா வந்தது. அது வளர்ந்து, துப்பாக்கி வந்தது. இவ்வளவு உரிமைகள் வந்திருக்கிறது. நம்முடைய பிள்ளைகள் அய்சிஎஸ் அதிகளாக, அய்.ஏ.எஸ்.களாக இருக்கிறார்கள். இந்த மாவட்ட ஆட்சியர் யார்? ஒரு பெண். ஆக, இப்படி எல்லாத் துறைகளிலும் பெண்கள் வந்திருக்கிறார்கள் என்றால், 100 ஆண்டு கால சுயமரியாதை இயக்கம், 110 ஆண்டு கால நீதிக் கட்சி இயக்கம், அதே மாதிரி நீண்ட காலமாக இருக்கக்கூடிய திராவிடர் இயக்கம். அதனுடைய ஆட்சி!
எனவேதான், ‘திராவிட மாடல்’ ஆட்சி மீண்டும் வரவேண்டும், மீண்டும் இந்த ஆட்சி எழ வேண்டும்; வருவார் என்பதில் சந்தேகம் இல்லை என்றாலும், மக்கள் ஏமாந்து விடக்கூடாது என்று சொல்வது, தேர்தல் பிரச்சாரம் அல்ல; ஸ்டாலினுக்காக அல்ல; அல்லது தி.மு.க.வினர் அமைச்சராக வேண்டும் என்று தி.மு.க.காரர்களுக்கு அல்ல; அல்லது மற்றவர்களுக்காக அல்ல நண்பர்களே! நமக்காக, நமக்காக என்பதை மறந்து விடாதீர்கள். நம்முடைய பேரப் பிள்ளைகளுக்கு வாழ்வு தயாராக வேண்டும். நாம் பெற்றிருக்கிற இந்த வாய்ப்பு, நம்முடைய பேரப் பிள்ளைகளுக்குத் தொடர வேண்டுமா, இல்லையா? அதைவிட வேகமாக வளர வேண்டுமா, இல்லையா? அதற்குத்தான் இந்த மாநாடு.
மீண்டும் திராவிட முன்னேற்ற கழகக் கூட்டணி வந்தால்தான்…
எனவே, நம்முடைய அடுத்த திட்டம், இந்தத் தேர்தல் நேரத்தில் யார் அழைக்கிறார்கள், யார் அழைக்கவில்லை என்பதைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். ஒவ்வொருவரும் பெரியார் தொண்டராக, தோழராக, திராவிட இயக்கமாக, ஒவ்வொருவர் வீட்டுக்கும் சென்று, மீண்டும் திராவிட முன்னேற்ற கழகக் கூட்டணி – ஸ்டாலின் என்று ஒப்பற்ற அந்த முதலமைச்சருடைய தலைமையில் மீண்டும் ஆட்சி வந்தால்தான், பெண்ணுரிமை பாதுகாக்கப்படும் என்பதை எடுத்துச் சொல்லி வாருங்கள்!
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
