சென்னை, மார்ச் 2– மாநகராட்சி சார்பில் பல்வேறு துறைகளின்கீழ் கட்டி முடிக்கப்பட்ட ரூ. 20.93 கோடி மதிப்பிலான 6 முக்கியத் திட்டப் பணிகளைத் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
புதிய திட்டப் பணி
ஆயிரம் விளக்கு சட்டப்பேரவைத் தொகுதி, ராமா தெருவில் உள்ள சென்னை நடுநிலைப் பள்ளியில் ரூ. 3.22 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய கட்டடத்தைத் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (1.3.2026) திறந்து வைத்தார்.
அதைத் தொடர்ந்து, வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலையில் ரூ. 4.10 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கொள்கை மற்றும் ஆளுகைக்கான அனுபவக் கற்றல் மய்யத்தையும் (Experience Learning Centre), மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ், நூர் வீராசாமி தெருவில் ரூ. 1.50 கோடியில் கட்டப்பட்ட பெண்கள் சுகாதார மய்யத்தையும், வெள்ளாளர் தெருவில் ரூ. 4.50 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள அண்ணா திருமண மாளிகையையும் அவர் திறந்து வைத்தார்.
இதையடுத்து, அண்ணா நகர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட அமைந்தகரை சென்னை நடுநிலைப் பள்ளியில் ‘நமக்கு நாமே’ திட்டத்தின்கீழ் ரூ. 4.15 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பள்ளிக் கட்டடத்தையும், அண்ணா சாலையில் ரூ. 3.46 கோடியில் அமைக்கப்பட்டுள்ள ‘கலைஞர் நூற்றாண்டு சமூக நீதிப் பூங்கா’வையும் அவர் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வுகளில் மாநகராட்சி மேயர் பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.கே.மோகன், நா.எழிலன், துணை மேயர் மு.மகேஷ்குமார், மாநகராட்சி ஆணையர் ஜெ. குமரகுருபரன், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறைச் செயலர் சஜ்ஜன்சிங் ரா சவான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
