சென்னை, மார்ச் 2– செயற்கை நுண்ணறிவு மூலம் வெப் டிசைனிங் உருவாக்குதல் குறித்து கிண்டியில் 3 நாள் பயிற்சிக்கு தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளது.
உலகில் ஒவ்வொரு வணிகத் திற்கும் இணையதளம் என்பது இன்றியமையாத தேவையாக உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, தொழில்முனைவோர்களுக்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில், கிண்டியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தில் (EDII-TN), செயற்கை நுண்ணறிவு (ஏஅய்) மூலம் இணையதளங்களை வடிவமைப்பது (Web Designing) குறித்த பயிற்சி மார்ச் 4 முதல் 6-ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
இதில் எச்டிஎம்எல் மற்றும் சிஎஸ்எஸ்-இன் அடிப்படைகள், இணையதள வடிவமைப்பின் முக்கியக் கோட்பாடுகள். செயற்கை நுண்ணறிவு கருவிகளைப் பயன்படுத்தி மிக எளிமையாகவும், வேகமாகவும் இணையதளங்களை வடிவமைக்கும் நவீன முறைகள் கற்றுக் கொடுக்கப்படும்.
நேரடிப் பயிற்சி: பங்கேற்பாளர்கள் நேரடியாகத் தங்களின் சொந்த இணையதளத்தை உருவாக்கி, அதை இணையத்தில் வெளியிடும் நடைமுறைப் பயிற்சி வழங்கப்படும்.
மேலும், இணையதளங்களைத் தேடுபொறியில் முன்னிலைப்படுத்தும் எஸ்இஓ (Search Engine Optimization) முறைகள் பற்றியும் விளக்கமளிக்கப்படும்.
பயிற்சி முடிவில், அய்டி நிறுவனங் களில் வேலைவாய்ப்பு, ஃப்ரீலான்ஸ் (Freelance) முறையில் இணையதள மேம்பாட்டுத் திட்டங்களை மேற்கொள்ளுதல் மற்றும் சிறு தொழில் களுக்கான டிஜிட்டல் சேவை வழங்கும் வணிகத்தைத் தொடங்குதல் போன்ற பல்வேறு வாய்ப்புகள் குறித்து வழிகாட்டப்படும்.
இந்தப் பயிற்சியில் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, கணினி அறிவு கொண்ட, 18 வயது நிரம்பியவர்கள் அனைவரும் பங்கேற்கலாம். இப்பயிற்சிக்கு முன்பதிவு அவசியம்.
தொடர்புக்கு: இணையதளம்: www.editn.tn.gov.in தொலைபேசி எண்கள்: 9360221280, 8668100181
