உறையூர், மார்ச் 1– திருச்சி டேக்வாண்டோ கூட்டமைப்பின் பரிசு வழங்கும் விழா 15.02.2026 அன்று மாலை 6 மணியளவில் உறையூர் வெக்காளியம்மன் கோயில் மண்டபத்தில் நடைபெற்றது.
இவ்விழாவினை தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு துவக்கி வைத்து சிறப்பித்தார்.
பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா.செந்தாமரை மாணவர்கள் மத்தியில் சிறப்புரையாற்றினார். காங்கிரஸ் சிறுபான்மை துறை அமைப்பின் துணைத் தலைவர் பொறியாளர் பாட்ரிக் ராஜ்குமார், தமிழ்நாடு டேக்வாண்டோ கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கே.ஆர்.சித்தேஷ்வரன் மற்றும் திருச்சி டேக்வாண்டோ கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எம்.கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மாவட்ட அளவில் 14.02.2026 அன்று நடைபெற்ற இப்போட்டியில் தனிநபர் பிரிவில் பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதலாம் ஆண்டு மருந்தியல் பட்டயப்படிப்பு மாணவிகள் எம்.ரம்யா மற்றும் ஏ.சரோஜா தேவி ஆகியோர் தங்கப் பதக்கத்தினையும், மாணவி எம்.ரோஷினி, மாணவர் எஸ்.தீபன் மருத்துவ ஆய்வுக்கூட தொழில் நுட்பநர் துறை மாணவிகள் பூ.சோனாலி, ம.பேபி ஷாலினி, த.புவனா ஆகியோர் வெள்ளிப் பதக்கத்தினையும் வென்றதுடன் மாணவி ௧.நந்தினி தேவி வெண்கலப் பதக்கத்தினையும் தட்டிச் சென்றார்.
இத்தகைய சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு 15.02.2026 அன்று நடைபெற்ற திருச்சி டேக்வாண்டோ கூட்டமைப்பின் பரிசு வழங்கும் விழாவில் பதக்கங்களும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பரிசு வென்ற மாணவிகளுக்கு கல்லூரியின் நிர்வாகத்தினர், முதல்வர் முனைவர் இரா.செந்தாமரை, பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.
