“நாம் திராவிடர், தமிழர்” என்கின்ற உணர்ச்சி நமக்கில்லாமல் செய்வதற்கு ஆக, ஆரிய கலாச்சாரத்தை நமக்குள் வலியப்புகுத்த, வடவர் ஆதிக்கத்துக்கு உட்பட்ட நம் சர்க்கார் துணிவு கொண்டு “இந்தி (சமஸ்கிருதமும் இந்தியும் ஒன்றுதான் என்று 10 ஆண்டுக்கு முன்பு சி.ஆர். சொல்லி இருக்கிறார்; அப்படிப்பட்ட) மொழியை (நம்) குழந்தைகள் கட்டாயப் பாடமாகப் படிக்க வேண்டு”மென்று சர்க்கார் தந்திரமாக ஏற்பாடு செய்துவிட்டனர். இந்த மாதிரியான காரியத்தை 10 ஆண்டுகளுக்கு முன்பு அரசாங்கத்தைப் பற்றி இருந்த காங்கிரஸ் ஆட்சியில் இன்றைய கவர்னர் ஜெனரலான டாக்டர் சி. ராஜகோபாலாச்சாரியார் முதல் மந்திரியாக இருந்த காலத்தில் இதுபோலவே அதாவது இந்தியைக் கட்டாயப் பாடமாக ஆக்கிச் செய்த உத்தரவையும் நடத்தையையும் நாம் எதிர்த்துப் போராடி ஆண் பெண் உட்பட 1200 பேர் வரை சிறை சென்று சிலர் மாண்டு மறைந்து அல்லல் பட்டு அதை மாற்றினோம். இப்போது 10 ஆண்டிற்குப் பின் அதே காரியத்தை மறுபடியும் அதே காங்கிரஸ்காரர்கள் சுதந்திர சர்க்கார் என்னும் பேரால் செய்து இருக்கிறார்கள். நாமும் அப்போது செய்த காரியத்தையே செய்ய வேண்டியதைத் தவிர வேறு வழியில்லை என்கின்ற நிலைக்கு சர்க்காரால் கொண்டு வரப்பட்டு விட்டோம்.
காங்கிரஸ் சர்க்கார் அன்று இருந்த நிலையைவிட இன்று அதிகமான சர்வாதிகாரமான எதேச்சை சுதந்தரத்தோடு, அதிகாரத்தில் இருக்கிறார்கள். நாமும் அன்றைய நிலைமையை விட எவ்வளவோ அதிகமான உணர்ச்சி, கட்டுப்பாடு, பலதரப்பட்ட மக்களின் ஆதரவு முதலியவைகளோடு இருக்கிறோம். சீக்கிரத்தில் எதிர்ப்பும், அடக்கு முறையும் ஆன போராட்டம் ஏற்படலாம். ஆதலால், தமிழ்நாடு முழுவதிலும் உள்ள திராவிடர் கழகங்கள் ஒவ்வொன்றும் உடனடியாக ஒரு நிர்வாகக் கமிட்டிக் கூட்டம் கூட்டி, அதில் இந்தி எதிர்ப்புக் கமிட்டி என்பதாக (ஆக்ஷன் கமிட்டி) ஒரு கமிட்டி நியமித்து கொள்ளுவதோடு, அத்தகவலைத் தலைமைக் காரியாலயத்துக்கும் அனுப்பி விட வேண்டும். திராவிடர் கழகத்தார் அல்லாத பிற கட்சி கமிட்டிகள் அல்லது கூட்டம் இருந்தாலும் அவற்றுள் இந்தி கட்டாய நுழைப்பை எதிர்க்கிறவர்கள் இருந்தால் அவர்கள் உடனே ஒரு கூட்டம் கூடி செயல் கமிட்டி என்பதாக ஒரு கமிட்டி ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். செயலில் இறங்கும்படி தலைமை ஸ்தாபனத்தின் வேண்டு கோள் வந்தவுடன் கட்டுப்பாடாய், ஒழுங்காய், செயலில் இறங்கத் தயாராயிருக்க வேண்டும். இந்த இந்தி எதிர்ப்புக்காகச் செய்யப்படும் எந்தக் காரியமும் வெளிப்படையாய், நாணயமாய் செய்யப்பட வேண்டியதாகையால் செயலில் இறங்குபவர்கள் ஒவ்வொருவரும் நாணயமும், ஒழுக்கமும் “இராணுவ”க் கட்டுப்பாட்டிற்கு அடங்கி நடக்கும் தன்மையும் கொண்டவர்களாகவே இருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.
02.08.1948இல் சென்னை மவுண்ட் ரோடு மிரான்சாயபு வீதி 1ஆம் நெம்பர் கட்டிடத்தில் திராவிடர் கழக நிர்வாகக் கமிட்டி கூடுமாதலால் அதற்குள் விபரம் தெரியும்படி ஆங்காங்குள்ளவர்கள் செய்தால் நலமாயிருக்கும்.
குடிஅரசு – வேண்டுகோள் – 31.07.1948
