புதுடில்லி, ஏப்.14 இந்தியாவின் தினசரி கோவிட்-19 பாதிப்பு பல மாதங்களுக்குப் பிறகு 10,000அய் தாண்டியுள்ளது. ஒன்றிய சுகாதார அமைச்சக புள்ளிவிவரத்தின் படி, கடந்த 24 மணி நேரத்தில் கோவிட்-19 பாதிப்பு 10,158ஆக பதிவாகியுள்ளது. இதன் மூலம் நாட்டில் கோவிட்-19 பாதிப்பு காரணமாக சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 44,998ஆக உயர்ந்துள்ளது.
தினசரி 7,830ஆக இருந்த நிலையில், 13.4.2023 அன்று 30 சதவீதம் உயர்வை கண்டு 10,000அய் கடந்துள்ளது. இதன்மூலம் கடந்த 200 நாள்களில் இல்லாத அளவிற்கு தினசரி கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கை உயர்வு கண்டுள்ளது. XBB.1.16 வகை தொற்று பரவல் காரணமாகவே இந்த பாதிப்பு எண்ணிக்கை உயர்வு கண்டுள்ளதாக சுகாதார நிபுணர்கள் கூறியுள்ளனர்.கடந்த பிப்ரவரி மாதம் XBB..1.16 வகை தொற்று 21.6 சதவீதம் பாதிப்பு ஏற்படுத்திய நிலையில், மார்ச் மாதம் இது 35.8 சதவீதமாக அதிகரித்தது. இந்த எண்ணிக்கை அடுத்த 10-12 நாள்கள் தொடர் உயர்வை காணும் என சுகாதாரத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை, தற்போதைய கோவிட்-19 பரவலால் தீவிர பாதிப்புக்கு ஆளாவோரின் எண்னிக்கை முன்பை காட்டிலும் குறைவாகவே உள்ளது. குறிப்பாக டில்லி, மகாராட்டிரா, அரியானா, கேரளா, உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் தினசரி பாதிப்பு உயர்வை கண்டுள்ளது.