தனது எஜமானர்களின் குரலாக செயல்படும் சி.பி.அய். அதிகாரிகளின் செயல்பாடுகள் அம்பலமாயின

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

டில்லி மேனாள் முதலமைச்சர் கெஜ்ரிவால் மீதான
வழக்குத் தள்ளுபடி – தனி நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கதே!

தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை

டில்லி யூனியன் பிரதேச மேனாள் முதல் அமைச்சர் கெஜ்ரிவால் மீது தொடுக்கப்பட்ட அழி வழக்கில் கெஜ்ரிவால் குற்றமற்றவர் என்று தனி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு வரவேற்கத்தக்கது! தனது எஜமானரான பி.ஜே.பி. ஆட்சியின் குரலாக செயல்பட்டு வரும்
சி.பி.அய். அதிகாரிகளின் செயல்பாடும் அம்பலமானது என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

டில்லி யூனியன் பிரதேச ஆட்சியைக் கைப்பற்றியதோடு, பஞ்சாபிலும் அக்கட்சியின் ஆட்சி, முதலமைச்சர் மான் தலைமையில் அமைந்ததை ஏற்க முடியாத ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. மோடி அரசும், உள்துறை அமைச்சர் போன்றவர்களும், டில்லி அரசு மதுபானக் கொள்கை மூலம் ஊழல் நடத்தியதாகக் கூறி, அமலாக்கத்துறை, சி.பி.அய். மூலம் முதலமைச்சர் கெஜ்ரிவாலையும், அதற்கு முன்பே துணை முதலமைச்சர் சிசோடியாவை கைது செய்து திகார் சிறையில் பல மாதங்கள் அடைத்தும், அவர்களுக்கே உரிய பல அரசியல் “வியூகங்கள்” மூலமும் அவர்களது பெயருக்குக் களங்கத்தையும் ஏற்படுத்தி, அக்கட்சியை அரசியலில் ஜனநாயக நெறிமுறைப்படி சந்தித்து வெற்றி பெறக்கூடிய வழியில் நம்பிக்கை வைக்காமல், அவர்கள் மீது அழி வழக்குகளைப் பதிந்து – பல மாதங்கள் சிறையில் வதியும்படி செய்து மகிழ்ந்தனர்.

ஒன்றிய அரசின் திரிசூலங்கள்!

வருமானவரித்துறை, சி.பி.அய்., அமலாக்கப் பிரிவு என்ற திரிசூலத்தையே எவர் மீதும் பாய்ச்சி, தமது அரசியல் எதிரிகளை ஜனநாயகக் களத்தில் சந்திக்காமல் இப்படிப்பட்ட முறையைக் கையாண்டார்கள்.

அந்த வழக்கை விசாரித்து தீர்ப்புக் கூறியுள்ள டில்லி தனி நீதிமன்றம் எந்த அடிப்படை ஆதாரமும் இன்றி இந்த வழக்கினை – இவர்கள் மீது, சி.பி.அய். தாக்கல் செய்து நடத்தியது? அதிலும் ஒரு அப்ரூவரது வாக்குமூலத்தை அடிப்படை ஆதாரம் போல் ஆக்கி; வழக்கை நடத்தியது, சட்ட விதிமுறைகளுக்கும், அரசியலமைப்புச் சட்டத்திற்கும் எதிரான ஒன்று என்றும் குறிப்பிட்டு, குற்றம் சாட்டப்பட்டு, பல மாதங்கள் சிறையில் இருந்த அவர்கள் அனைவரையும் – ஒட்டுமொத்தமாக விடுதலை செய்தது – சி.பி.அய். என்ற அமைப்பின் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை எப்படி சிதறடித்த ஒன்று என்பதையும், மேல் அதிகார வர்க்க ஆணைகளுக்கு ‘ஆமாம் சாமி’ போட்டு, “ராஜாவை மிஞ்சும் ராஜ விசுவாசிகளாக!” தங்களைக் காட்டிக் கொள்ளும் அத்தகைய சி.பி.அய். அதிகாரிகள் மீது, தக்க சட்டபூர்வ நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும், டில்லி நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருப்பது மிகவும் சரியான நீதித் தீர்ப்பு ஆகும்!

சி.பி.அய். அதிகாரிகள் இப்படிப் பொய் வழக்குகளை ஜோடனை செய்து, அமலாக்கத்துறைக்குத் துணை போகும் நிலையில், இதன்மூலம் அத்துறையும், ஆட்சியினரும் தமிழ்நாடு முதல் அமைச்சர் குறிப்பிட்டுள்ளது போல், இவ்வழக்கைப் பதிந்த ஒன்றிய அரசும் வெட்கித் தலைகுனிய வேண்டாமா?

தன் எஜமானர் குரலாக செயல்படும் சி.பி.அய்

இத்தீர்ப்பு – நியாயத்தராசைச் சரியாகப் பிடித்து துணிவும் தெளிவும் உள்ள வரவேற்கத்தக்க ஒரு தீர்ப்பாக வழங்கப்பட்டிருப்பது சி.பி.அய்., அமலாக்கத்துறை அதிகாரிகள், தமது எஜமானர் குரலாகவே (His Master Voice) தங்களது பணியை நிறைவேற்றும் கடமையை கறை படிந்ததாக்கிக் கொள்ளுவது பரிதாபமே! மற்ற எதிர்க்கட்சியினர் – அமைச்சர்கள், தலைவர்கள் மீது ‘வேட்டையாட’  – அவர்களை மக்கள் அவமதிக்க வேண்டும் என்ற ஆசையுடனும், ஜனநாயக நெறிமுறைகளைக் கைவிட்டு, இப்படி அதிகார துஷ்பிரயோகத்துடன் குறுக்கு வழிகளில் ஈடுபடுவது, மக்கள் மன்றத்திலும் கூட எதிர் விளைவுகளையே அவர்களுக்கு ஏற்படுத்தும்; அவர்கள் ஆசை நிராசயையாக முடியும் என்ற நிதானம் கூட இன்றி நடந்து வருவது – சட்ட நெறி முறைகளை வளைத்துப் ‘பழிவாங்கும் அரசியல் அணுகுமுறை அவர்களுக்கு நினைத்த “வெற்றியை” ஒரு போதும் தராது.

அதிகாரம் – அதிலும் முழு அதிகாரம் எவருக்கும் அதிகமாகவே கெடுமதியைத் தரும் என்பது அரசியல் மூதறிஞர்களின் கருத்தாகும்.

இது ஒன்றிய அமைச்சர்கள், பா.ஜ.க. ஆட்சியாளர்களுக்கும், அவர்களுக்குக் கண்ணை கட்டி ஆடும் “தலையாட்டித் தம்பிரான்களான” அதிகாரிகளுக்கும் ஒரு நல்ல பாடம் ஆகும்.

 

28.2.2026       (கி.வீரமணி)

தலைவர், திராவிடர் கழகம்

 

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *