மார்ச் 3 ஒலிக்கட்டும் நமது குரல் இந்தியா முழுமையும் கேட்கும்படி!

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

கருஞ்சிறுத்தை

இடஒதுக்கீடு ஆதிக்கக் கும்பலுக்கு எதிரானது ஒன்றும் இல்லை!

ஈராயிரம் ஆண்டுகளாக இடஒதுக்கீட்டை அமல்படுத்தி வந்தவர்கள் அவர்கள் தான்!

யாருக்கு எந்த இடம் என்ற ஒதுக்கீடு!

கருவறைக்கு உள்ளே நான்! கோயிலுக்கு உள்ளே அவன்! கோயில் தெருவுக்கும் வெளியே அவன்!

ஊருக்கு மத்தியில் நான்! எனக்குக் காவலாய் இவன்! எல்லோருக்கும் ஏவலாளாய் அவன்!

கதிர் அறுக்கும் அரிவாள் எடுக்க அவன்! ஆக்கிக் கொடுக்க அவள்! கொட்டித் திங்க நான்! மலமெடுக்க இன்னொருவன்!

ஆயுதம் எடுக்க இவன்! அணிகலன் விற்க அவன்! ஆதிக்கம் செய்ய நான்!

குப்பையாக்க நான்! குப்பை எடுக்க அவன்!

என்று காலம் காலமாக அவர்கள் செய்த இடஒதுக்கீடு இப்படித் தான்!

அதை மாற்றியடித்தது தான் திராவிட இயக்கம் செய்த வரலாற்றுப் பெரும்புரட்சி!

அதிகாரப் பீடங்களில்
ஆக்கிரமிப்புப் பார்ப்பனர்கள்

காலம் காலமாய் தாங்கள் செய்து வைத்த ஆதிக்க  இடஒதுக்கீடு இனித்த அவாளுக்கு, அதே இடங்களை எல்லோருக்கும்  பிரித்துக் கொடுத்த ‘சமூகநீதி இட ஒதுக்கீடு’ பிடிக்குமா?

எத்தனைப் போராட்டங்கள்? எத்தனைத் தடைகள்? சமூகநீதி அவ்வளவு எளிதில் கிடைத்துவிடவில்லை நமக்கு! சமூகநீதி போதிய அளவிலும் கிடைத்துவிடவில்லை நமக்கு!

பருக்கையைப் பகிர்ந்துவிட்டு, இன்னும் எவ்வளவு கொட்டுவது என்று கேட்கிறார்கள் இறுமாப்போடு!

அதிகாரப் பீடங்களை எல்லாம் ஆக்கிரமித்துக் கொண்டு, ஆபீஸ் பியூன் வேலையை மட்டும் அள்ளிக் கொடுக்கலாம் என்று நினைக்கிறார்கள்.

2018 முதல் 2023 வரை உயர்நீதிமன்றங்களுக்கு 575 நீதிபதிகள் நியமிக்கப்பட்டனர்.

பிற்படுத்தப்பட்டோர் (OBC) 67, பட்டியல் ஜாதியினர் (SC) 17, பட்டியல் பழங்குடியினர் (ST) 9 பேர், சிறுபான்மையினர் 18 பேர் மட்டுமே!

ஏட்டுச் சுரைக்காய்தான்!

ஆனால், 464 பேர் உயர்ஜாதியினர்; அதில் மிகப் பெரும்பாலானோர் பார்ப்பனர்கள். ஒட்டுமொத்த நீதிபதிகள் நியமனத்தில் நாட்டின் பெரும்பான்மை மக்களான பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் அனைவருக்கும் சேர்த்து பிரதிநிதித்துவம் வெறும் 17% மட்டுமே!

உயர்நீதித் துறையில் இட ஒதுக்கீடு முற்றிலும் கிடையாது!

இப்போதுதான் அது குறித்துப் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.

ஆனால், அய்.ஏ.எஸ், அய்.பி.எஸ், அய்.எஃப்.எஸ் உள்ளிட்ட அதிகாரமிக்க குடிமைப் பணிகளில் மண்டல் கமிஷன் அமல்படுத்தப்பட்டது முதலே பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு உண்டு! ஆரம்ப காலம் தொட்டே பட்டியல் ஜாதியினருக்கும், பட்டியல் பழங்குடியினருக்கும் இடஒதுக்கீடு உண்டு! ஆனால், எல்லாம் ஏட்டுச் சுரைக்காய்தான்!

இடஒதுக்கீட்டுக்குப் பின்பற்ற வேண்டிய நடைமுறையையே தலைகீழாகச் செய்து இட ஒதுக்கீட்டின் பலனை அபகரிக்கப் பார்த்தார்கள் ஆதிக்க ஜாதியினரான பார்ப்பனர்கள்!

முதலில் பொதுப் போட்டி எனப்படும் General Categoryகளை மதிப்பெண் அடிப்படையில் நிரப்ப வேண்டும். அதன் மூலம், உயர் மதிப்பெண்கள் பெற்ற ஒடுக்கப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், உயர்ஜாதியினர், சிறுபான்மையர் உள்பட எல்லா சமூகத்தவரும் அதில் இடம் பெறலாம்.

அதற்குப் பிறகுதான் இடஒதுக்கீட்டு இடங்கள் நிரப்பப்பட வேண்டும். இதன்மூலம் அதிக மதிப்பெண்கள் பெற்ற இடஒதுக்கீட்டுப் பிரிவினர், பொதுப் போட்டியில் சென்றுவிடுவர். அதற்கடுத்த மதிப்பெண்கள் பெற்றவர்கள் இடஒதுக்கீட்டின் மூலம் இடம்பெறுவர். இதுதான் இடஒதுக்கீட்டின் தத்துவம்.

ஆனால், 1993-க்குப் பிறகு மண்டல் கமிஷன் அடிப்படையில் இடஒதுக்கீடு பிற்படுத்தப்பட் டோருக்கும் கிடைத்த பிறகு, எப்படி சூழ்ச்சி செய்தார்கள் என்பது நினைவிருக்கிறதா?

முதலில் இடஒதுக்கீட்டுப் பிரிவினரை நிரப்பு வார்கள். அதன் மூலம் அதிக மதிப்பெண்கள் பெற்ற OBC, SC, STகள் அவரவர்க்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக்குள்ளேயே முடக்கப்படுவார்கள். அதன் பிறகு பொதுப் போட்டியை நிரப்புவதன் மூலம், பொதுப் போட்டி என்பதை ஏகபோகமாக உயர்ஜாதியினரைக் கொண்டே நிரப்பி விடுவார்கள். அதாவது 50% இடங்களையும் உயர் ஜாதி இடங்கள் போல ஆக்கிவிடுவார்கள்.

அதுமட்டுமல்ல, இந்தப் பொதுப் போட்டி  என்பதை ஆங்கிலத்தில் Open Competition என்று குறிப்பிட வேண்டும். சுருக்கமாக OC என்று சொல்வார்கள். இந்த OC-க்குப் பார்ப்பனர்கள் எப்படி புது வியாக்கியானம் கொடுத்து எழுதத் தொடங்கினார்கள் தெரியுமா? Other Communities (அதாவது இட ஒதுக்கீடு பெறும் OBC, SC, ST அல்லாதோர்) என்பதாக இட்டுக்கட்டி, அதையே வழக்கத்திற்குக் கொண்டுவர முனைந்தனர்.

இவை ஒவ்வொன்றையும் கவனித்து, புரிந்து, அவற்றுக்கெதிராக மக்கள் மன்றத்திலும், நீதிமன்றத் திலும் வாதாடி வாதாடித் தான் இன்று இவையெல்லாம் மாற்றப்பட்டிருக்கின்றன.

ஆனால், இப்போதும் ‘எவ்வளவு இட ஒதுக்கீடு பின்பற்றப்படுகிறது?’, ‘எத்தனை பேர் அதன்படி நியமிக்கப்பட்டுள்ளனர்?’ என்பன போன்ற எந்தத் தகவலையும் வெளிப்படையாக – முழுமையாக வெளியிடாமல் அரைகுறையாகவே தருகிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு!

ஒன்றிய அரசின் பதுங்கல்!

கேரளாவைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலங்களவை உறுப்பினர் ஜான் பிரிட்டஸ் கேட்ட கேள்விகள் என்ன? அதில் குறிப்பாக, இடஒதுக்கீடு குறித்த மூன்றாவது கேள்வி என்ன?

(C) the number and representation of Scheduled Castes, Scheduled Tribe and Other Backward Classes in these services, service-wise and category-wise, as on date?

இன்றைய தேதியில், சேவை வாரியாகவும், பிரிவு வாரியாகவும், இந்தச் (IAS, IPS, IFS) சேவைகளில் பட்டியல் ஜாதியினர், பட்டியல் பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் எண்ணிக்கை மற்றும் பிரதிநிதித்துவம் எவ்வளவு? என்பதுதான் கேள்வி.

ஆனால், ஒன்றிய அரசு இதற்கு நேரடியாகப் பதில் கொடுத்திருக்கிறதா?

உண்டா, இல்லையா? வெட்டொன்று துண்டு இரண்டு என்று பதில் சொல்ல வேண்டியதுதானே!

உண்மை விளம்பிகள், உத்தம புத்திரர்கள் மடியில் இருப்பதை அவிழ்த்துக் காட்ட வேண்டியதுதானே!

வெளிப்படையான அரசாங்கம் என்றார்களே! எங்கே புள்ளிவிவரம்?

அவரின் மற்ற A, B, D ஆகிய கேள்விகளுக்குத் தனித் தனியாகப் பதில் அளித்திருக்கிறார் ஒன்றிய இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்.

மொத்தம் அங்கீகரிக்கப்பட்டுள்ள இடங்கள் இத்தனை; மாநில வாரியாக ஒதுக்கப்பட்டுள்ள கேடர்கள் இத்தனை; நிரப்பப்படாமல் உள்ள இடங்கள் இத்தனை என்று சொல்லியிருக்கிறார்கள்.

அதிலேயும் நாட்டின் நிர்வாகத்திற்கும், அமைதிக் கும், அயலுறவுக்கும் முக்கியமான இந்த அய்.ஏ.எஸ், அய்.பி.எஸ், அய்.எஃப்.எஸ் இடங்களில், IAS -18.9% இடங்களும், IPS – 9.9% இடங்களும், IFS – 32.2% இடங்களும் நிரப்பப்படாமலேயே இருக்கின்றன என்றால், எப்படி இந்த நாட்டில் நிர்வாகம் சரியாக நடக்கும்?

அய்ந்தில் ஒரு பங்கு அய்.ஏ.எஸ். பணியிடங்கள் காலியாக உள்ளன என்பது நிர்வாகத்திற்குக் கேடு இல்லையா?

சரி, மிக முக்கியமான இட ஒதுக்கீடு குறித்த கேள்விக்கு உரிய பதில் எப்படி இருந்திருக்க வேண்டும்?

“மொத்த இடங்கள் இத்தனை – அதில், OBC, SC, ST பிரிவினர் இத்தனை” என்று பளிச்சென்று பதில் அளிக்க வேண்டியது தானே!

புள்ளி விவரம் எங்கே?

ஆனால், ஒட்டுமொத்த இடங்களைச் சொன்ன ஒன்றிய இணை அமைச்சர், அதில் பிற்படுத்தப்பட் டோர், தாழ்த்தப்பட்டோர் எவ்வளவு பேர் எனச் சொல்லவில்லை.

மாறாக, வேறு ஒரு புள்ளிவிவரம் கொடுத்தார். 2020 முதல் 2024 வரை எத்தனை ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி பிரிவினர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்று!

எனில், 2020 முதல் 2024-ஆம் ஆண்டுவரை மொத்தம் எத்தனை இடங்கள் நிரப்பப்பட்டன என்ற புள்ளிவிவரம் எங்கே?

அதில், பொதுப் போட்டியில் (General Category) தேர்ந்தெடுக்கப்பட்ட உயர்ஜாதியினர், இதர பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் ஜாதியினர், பட்டியல் பழங்குடியினர் எவ்வளவு பேர்? இடஒதுக்கீட்டின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மேற்சொன்ன ஓபிசி, எஸ்சி, எஸ்டி பிரிவினர் எவ்வளவு பேர்?

இந்த விவரங்களை ஏன் சொல்லவில்லை? அப்படிச் சொன்னால்தானே விகிதாச்சாரம் சரியாக இருக்கிறதா என்று பார்க்கலாம்.

இந்தியாவில் பள்ளி மாணவிகளின் விகிதம் என்ன என்று கேட்டால், உலக மக்கள் தொகை இவ்வளவு, கடந்த ஆண்டு பள்ளிகளில் சேர்ந்த ஆறாம் வகுப்பு மாணவிகளின் எண்ணிக்கை இவ்வளவு என்று மட்டும் கணக்குச் சொல்வது கேள்விக்கு விடையாகுமா?

அரைகுறையாக அவர் சொன்ன புள்ளி விவரங்களைக் கொண்டு எதை மறைக்கப் பார்க்கிறார்கள்?

இந்தியாவின் அதிகாரமிக்க பதவிகளில் இடஒதுக்கீடு அடியோடு மறுக்கப்பட்டிருக்கிறது என்ற பேருண்மையை மூடி மறைக்கப் பார்க்கிறார்கள்!

இந்தியாவின் அதிகாரப் பிடி இன்னும் பார்ப் பனர்களின் கைகளில் தான் இருக்கிறது என்ற சுடும் உண்மையை ஒளிக்கப் பார்க்கிறார்கள்!

இந்தியாவின் திட்டங்களை வகுக்கும் பிரதமர் அலுவலகத்தின் அய்.ஏ.எஸ். அதிகாரிகளில் 90 விழுக்காட்டுக்கும் மேல் பார்ப்பனர்களும், உயர்ஜாதியினரும் தான் என்கிறார்கள் தகவலறிந்த வட்டாரத்தினர்.

வெளிவந்து கொண்டே
இருக்கும் உண்மைகள்

வெளிப்படையாக அறிவிக்குமா ஒன்றிய அரசு?

இந்தக் கேள்விகளுக்கு விடை என்ன?

தீர்வு என்ன?

தோண்டத் தோண்ட இன்னும் உண்மைகள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன.

இவற்றையெல்லாம் தமிழ்நாடு தான் கேட்க முடியும்! அதற்குத் தான் சமூகநீதி சார்ந்த தெளிவு இருக்கிறது!

அதிலும், திராவிடர் கழகமும் அதன் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் அவ்ர்களும் தான் இந்தப் பிரச்சினையை மக்களிடம் கொண்டு செல்ல முடியும்!

போராட்டக் களத்திற்கு எல்லோரையும் அணி சேர்க்க முடியும்! போராட்டத்தில் வெற்றியையும் ஈட்ட முடியும் என்பது 48 ஆண்டுகால வரலாறு!

மீண்டும் வரலாறு உங்களை அழைக்கிறது! வாரீர் தோழர்களே! மாவட்டந்தோறும் நடக்கும் ஆர்ப்பாட்டங்களில் ஒன்றிய அரசின் அலுவலகங் களுக்கு முன் உங்கள் குரல் எழட்டும்! இந்தியா முழுமைக்கும்  உள்ள ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் செவிகளில் அந்தக் குரல் விழட்டும்!

ஒன்றியத்தை ஆளும் பார்ப்பனிய அதிகாரக் கும்பல் வீழட்டும்! வீழட்டும்!

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *