ஜாதி தீண்டாமைப் பாம்பையும், ஆரிய நச்சரவங்களையும் முறியடித்துச் சமத்துவ சமுதாயம் படைப்போம்!
சமத்துவத்திற்கான வாழ்நாள் போராளியாக, தன்னுடைய சிந்தனை, செயல் அனைத்தையும் உலகத்திற்கு அர்ப்பணித்து வாழ்ந்து, ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டத்தின் வடிவமாகவே ஆகிவிட்ட புரட்சியாளர் பாபாசாகேப் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 133ஆம் ஆண்டு பிறந்தநாள் (14.04.2023) அன்று அவரது படத்திற்கும், சிலைக்கும் மாலை போடுவது மட்டும் போதாது! அவரது சீலத்தை (கொள்கையை) நடை முறைப்படுத்த நமது பங்களிப்பு என்ன என்று ஒவ்வொரு அம்பேத்கரிஸ்டும், பெரியாரிஸ்டும், சமூகநீதிப் போராளிகளும் சிந்தித்துச் செயலாற்ற முன்வருவதே அவருக்கு நாம் சூட்டும் உண்மையான மலர் மாலையாகும்.
“அரசியலில் சமத்துவம் வந்துள்ளதே தவிர, சமூகத்திலும் பொருளாதாரத்திலும் எந்த விதமான சமத்துவமும் நிலவவில்லை என்பது வேதனையான ஒன்று” என்ற அவருடைய வாழ்நாள் வேதனை நம்முடைய காலத்தில் மாற்றப்பட வேண்டும் என்ற உறுதியை நாம் ஒவ்வொருவரும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
தந்தை பெரியாரின் பிறந்தநாளை சமூகநீதி நாளாக அறிவித்த திராவிட மாடல் ஆட்சியின் ஒப்பற்ற முதலமைச்சர் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள், டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளையும் சமத்துவ நாளாக அறிவித்துத் தனி சரித்திரம் படைத்துள்ளார்.
ஜாதி தீண்டாமைப் பாம்பு இன்னமும் நம் நாட்டுக் கருவறைகளில் பாதுகாப்பாகப் படமெடுத்து ஆடிக் கொண்டிருக்கிறது. சட்டத்தின் மூலம் அதை இந்த ஆட்சியிலே தடுக்க முயன்றாலும், வேறு இடங்களில் இடம்பெற்றுள்ள ஆரிய நச்சரவங்களால் இன்னமும் பாதுகாக்கப்பட ‘பகீரதப் பிரயத்தனங்கள்’ செய்யப் படுவதால், அதை முறியடிக்கச் சூளுரைத்துக் களமாட வேண்டிய கடமை, சமத்துவ, சமூகநீதிப் போராளிகளுக்கும், அனைத்து முற்போக்கு சக்திகளுக்கும் உண்டு. இதுவே அவரது பிறந்தநாளில் நாம் எடுக்கும் சூளுரையாகும்.
கி.வீரமணி
சென்னை தலைவர்,
13.04.2023 திராவிடர் கழகம்