இதுவே, அவரது பிறந்த நாள் பரிசு – வாழ்த்து உறுதிமொழி!
சமூகநீதிக்கான சரித்திர நாயகர் – சாதனை களின் சரித்திரமாம் நமது மானமிகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களை மீண்டும் முதலமைச்ச ராக்குவோம்! இதுவே அவருக்கான பிறந்த நாள் பரிசு – வாழ்த்து – உறுதிமொழி என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள வாழ்த்து அறிக்கை வருமாறு:
தி.மு.கவின் தலைவர் – சமூகநீதிக்கான சரித்திர நாயகர் – ‘திராவிட மாடல்’ அரசின் தன்னிகரற்ற முதல மைச்சர் மானமிகு மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் மார்ச்சு ஒன்றில் 73 ஆம் ஆண்டில் அடி வைக்கிறார்.
எதிலும் அவர் ‘மார்ச்சு’தான்! கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்று அறிஞர் அண்ணா அவர்கள் தம் கட்சிக்கு மூன்று முத்திரைத் தடங்களைப் பதித்தார்.
அவற்றில் கழக அணிகளோடு ‘மார்ச்’ செய்கிறார். அண்ணா சொன்ன அந்த மூன்றில், கட்டுப்பாட்டுக்கு முதலிடம் கொடுத்தார் அய்யா!
கட்சியை கட்டுப்பாட்டோடு நேர்த்தியாக அணிவகுத்து அழைத்துச் செல்கிறார்!
முத்தமிழ் அறிஞர் கலைஞர் மறைந்த நிலையில், கட்சியை அந்தக் கட்டுப்பாட்டோடு நேர்த்தியாக அணிவகுத்து (March Past) நடத்திச் செல்லும் பாங்கு அசாதாரணமானது!
கட்சியை நடத்துவதானாலும் சரி, ஆட்சியை நடத்துவதானாலும் சரி, அவருக்கே உரிய தலைமைப் பண்பே எல்லாவற்றிலும் வெற்றி மகுடத்தைச் சூட்டி வருகிறது!
கட்சியின் அனைத்து அணிகளும் போட்டிப் போட்டுக்கொண்டு முனைந்து செயலாற்றுகின்றன.
‘‘தி.மு.க. தலைமைப் பொறுப்புக்கு மு.க.ஸ்டாலினை நான் முன்மொழிவேன்’’ என்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் அறிவித்தபோது, அந்த அறிவிப்பு, ‘‘காலச்சிலாசாசனம்’’ என்று வரவேற்று அறிக்கை விடுத்ததை (‘விடுதலை’, 8.1.2013) இப்பொழுது எண்ணிப் பார்த்துப் புளகாங்கிதம் அடைகிறோம். அது நூறு விழுக்காடு துல்லியமானது என்பதை நாடே பார்த்து வியந்து கொண்டுதான் இருக்கிறது.
மக்களின் மனதில் நம்பிக்கைப் பால் வார்த்தவர் நமது முதலமைச்சர்!
முதலமைச்சர் பொறுப்பேற்று கையொப்ப மை காய்வதற்கு முன்னதாகவே, ‘‘வாக்களித்தவர்கள் எக்காரணம் கொண்டும் ஏமாற்றம் அடையக்கூடாது; வாக்குக் கொடுத்த நமது வாய்மையும் பொய்க்கக்கூடாது’’ என்று அய்ம்பெரும் ஆணைகளைப் பிறப்பித்து, எடுத்து வைத்த முதல் அடியிலேயே தமிழின மக்களின் மனதில் எல்லாம் நம்பிக்கைப் பால் வார்த்தவர் நமது முதலமைச்சர்!
இப்பொழுது மட்டுமல்ல, ஆட்சியேற்ற அந்தக் காலகட்டத்திலேயே அதனைப் பாராட்டி மகிழ்ந்தவர்கள் நாம்.
வெறும் ஆட்சிப் பணியல்ல –
தலைசிறந்த தொண்டறமே!
கரோனா உச்சமான காலகட்டம்! ‘‘நம் உயிர் பெரிதல்ல – மக்கள் உயிரைப் பாதுகாப்பதே ஆட்சி யாளர்களின் கடமை’’ என்ற உணர்ச்சியோடு, மருத்துவப் பயனாளர்களையும் நேரில் பார்த்துத் தைரியம் கூறியும், மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்களிடத்தில் எல்லாம் அன்பு முகம் காட்டி, மருத்துவப் பணிகளை விரைவுப்படுத்தி, வெற்றிகரமாக கரோனாவை வெளியேற்றியது – வெறும் ஆட்சிப் பணியல்ல – தலைசிறந்த தொண்டறமே!
தேர்தல் அறிக்கை என்பதெல்லாம் வெறும் சம்பிரதாய சடங்கு என்ற நிலையை மாற்றி, அறிவு நாணயத்தின் வெளிப்பாடு – தேர்தலின் கதாநாயகன் என்று ஆக்கிய பெருமை – தி.மு.க.வையும், அதன் ஒப்பற்ற தலைவரான மானமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களையே சாரும்.
திராவிட இயக்கச் சிந்தனை வழிவந்தவர்
நமது முதலமைச்சர்!
தேர்தலில் போட்டியிடுவது அரசியல் கட்சிகளின் வழமையான போக்குதான். ஆட்சியில் அமர்ந்த நிலையில், பெரும்பாலும் ஆட்சியாளர்களின் சிந்தனையெல்லாம் வேறு மாதிரியாக இருக்கும்.
திராவிட இயக்கச் சிந்தனை வழிவந்தவர் நமது முதலமைச்சர் ஆகையால், வளர்ச்சிப் பணிகளோடும், சமுதாயப் பார்வையோடும், சமூகநீதிப் பார்வையோடும் சட்டங்களையும், திட்டங்களையும் வகுத்துச் செயல்படுவது, அவரின் தனித்தன்மைக்கு அடையாளமாகும்.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், விடியல் பயணத் திட்டம், புதுமைப் பெண் திட்டம், பெண் காவ லர்க்கு சிறப்பு விலக்கு, பெண்கள் பெயரில் பத்திரப் பதிவுக்குக் கட்டண விலக்கு ஒரு விழுக்காடு, தோழி விடுதிகள், மகளிர் சுய உதவிக் குழுக்கள் மேம்பாடு என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.
கொள்கையில் சமரசம் செய்துகொள்ளாதவர்!
எவ்வளவுதான் ஒன்றிய பி.ஜே.பி. அரசு தமிழ்நாட்டிற்கு ஓரவஞ்சனை செய்தாலும், நிதி நெருக்கடியை செயற்கையாக உண்டாக்கினாலும் – அவற்றிற்கெல்லாம் முகம் கொடுத்து, கொள்கையில் சமரசம் செய்துகொள்ளாமல், பொருளாதார வளர்ச்சியில் முதலிடம், தொழில் வளர்ச்சியில் முதலிடம், மருத்துவ வளர்ச்சியில் முதலிடம் என்று ஒன்றிய அரசின் புள்ளி விவரங்களே வெளிப்படுத்தும் வகையில், வெற்றி முரசு கொட்டி வருகிறார்! அனைவருக்கும் அனைத்துமான தமிழ்நாடு (சமூகநீதி, சமத்துவம்), எழில்மிகு மாநகரங்களின் மாநிலம் (நகர உள்கட்டமைப்பு), உயர்தர ஊரகக் கட்டமைப்பு, உயர்ந்த வாழ்க்கைத் தரம்.
– இவை எல்லாம் வாய்ப் பேச்சுகளாக அல்லாமல், செயல் வடிவங்களாக ஆக்கிக் காட்டியது – அவர்தம் ஆளுமைத் திறனே என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.
‘உழைப்பு’ என்றால், ‘ஸ்டாலின்’ என்று முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் சொன்னதற்கு இலக்க ணமாக – ஓயாது சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்து, அவர்களின் குறைகளை நேரிலேயே கேட்டறிந்து செயலாற்றும் திறன் பலபடப் பாராட்டவேண்டியதே!
மாணவர்களுக்குக் காலை உணவுத் திட்டம் பல நாடுகளைக் கவர்ந்துள்ளது – சட்டப் போராட்டம் நடத்தி, மருத்துவ முதுகலைப் படிப்பில் 50 விழுக்காடு இடங்களைப் பெற்றுத் தந்தது சாதாரணமா!
திருச்சியில் 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தி.மு.க. மாநாட்டில், ஏற்றமிகு ஏழு திட்டங்களை அறி வித்ததை அப்படியே செயல்படுத்திய சாதனைக்குச் சொந்தக்காரர் நமது முதலமைச்சர்.
வளமான பொருளாதாரம் –
வளமான வேளாண்மை மற்றும் கிராமப்புற வளர்ச்சி–
அனைவருக்கும் குறையாத குடிநீர் விநியோகம் –
உயர்தர கல்வி மற்றும் மருத்துவம் –
அனைவருக்குமான தமிழ் மற்றும் சமூகப் பாதுகாப்பு என்பது – இந்தியாவையும் தாண்டி, வெளிநாடுகளையும் கவர்ந்து ஈர்த்துள்ளது.
முதலமைச்சரின் ‘‘ஒன்றாய் வெல்வோம்!’’ முழக்கம்!
முதலமைச்சர் கொடுக்கும் ‘‘ஒன்றாய் வெல்வோம்!’’ என்ற முழக்கம், கடைகோடி மனிதனையும் எட்டியுள்ளது.
தேர்தலிலும், அவர் வகுக்கும் வியூகம், கூட்டணிக் கட்சிகளிடம் இணக்கமான அணுகுமுறை, கட்டிக் காக்கும் செயல் திறன், எதிர்முகாம்களில் இருந்தவர்களைக் கூட ஈர்க்கும் ஆற்றல் என்பனவெல்லாம் சாதாரணமான வையல்ல!
கண்ணுக்கு எட்டியவரை எதிரிகளைக் காண முடியவில்லை என்று சொன்ன அரசியல் தலைவர்கள் இருந்திருக்கிறார்கள்.
ஆனால், உண்மையில், நடப்பில் செய்து காட்டிக் கொண்டிருப்பவர் நமது தகைசால் முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள்தான்.
73 ஆம் ஆண்டு பிறந்த நாளில், அவருக்கு அளிக்கும் உண்மையான பரிசும், வாழ்த்தும், பாராட்டும்!
2026 சட்டப்பேரவைத் தேர்தலில், இதுவரை தமிழ்நாடு காணாத பெரு வெற்றியைத் தந்து, மீண்டும் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மானமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களை முதலமைச்சர் ஆசனத்தில் அமர வைப்பதே அவரது 73 ஆம் ஆண்டு பிறந்த நாளில், அவருக்கு அளிக்கும் உண்மையான பரிசும், வாழ்த்தும், பாராட்டுமாகும்.
அந்த வாழ்த்துகளை முன்கூட்டியே கழகத்தின் சார்பில் அளிக்கிறோம்.
நல்ல உடல்நலத்துடன், மக்கள் தொண்டாற்ற வாழிய, வாழியவே!
அன்புடன்,
தலைவர்,
28.2.2026 திராவிடர் கழகம்
