அ.தி.மு.க.வின் முன்னோடிகளில் ஒருவரும், முன்னாள் முதலமைச்சருமான ஒ.பன்னீர்செல்வம் தி.மு.க.வில் இணைந்துள்ளது, மிகவும் வரவேற்கத்தக்கது!
தமிழர் தலைவர்
ஆசிரியர் அறிக்கை
தமிழர் தலைவர்
ஆசிரியர் அறிக்கை
- அ.தி.மு.க.வின் முன்னோடிகளில் ஒருவரும், முன்னாள் முதலமைச்சருமான ஒ.பன்னீர்செல்வம் தி.மு.க.வில் இணைந்துள்ளது, மிகவும் வரவேற்கத்தக்கது! தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை
- வரவேற்கத்தக்க ஒன்று!
- தவிர்க்க இயலாதது மட்டுமல்ல, தடுமாற்றங்களைத் தாண்டிய ஒரு சிறந்த முடிவு
- தி.மு.க.வுடன் இணைந்து ஒரே அரசியல் கட்சியாக செயல்பட விரும்பினார் எம்.ஜி.ஆர்.
- உரிமைக்குக் குரல் கொடுத்து, உறவுக்குக் கை கொடுப்பதற்கு இதுதான் சரியான அரசியல் வழி!
அ.தி.மு.க.வின் முன்னோடிகளில் ஒருவரும், முன்னாள் முதலமைச்சருமான (மூன்று முறை) சகோதரர் ஒ.பன்னீர்செல்வம் அவர்கள் தி.மு.க.வில் இணைந்துள்ளது, மிகவும் வரவேற்கத்தக்கது! தி.மு.க. என்ற அரசியல் கோட்டையை நாளும் வலுப்படுத்தி, தமிழ்நாடு தலை நிமிர்ந்த மண்ணாக – மானமும், அறிவும் நிறைந்த மண்ணாக – உரிமைக்குக் குரல் கொடுத்து, உறவுக்குக் கை கொடுப்பதற்கு இதுதான் சரியான அரசியல் வழி முறையாகும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
வரவேற்கத்தக்க ஒன்று!
அ.தி.மு.க.வின் முன்னோடிகளில் ஒருவரும், முன்னாள் முதலமைச்சருமான சகோதரர் ஒ.பன்னீர்செல்வம் அவர்கள், தனது தோழர்களுடன் சென்னை அண்ணா அறிவாலயத்தில், ‘திராவிட மாடல்’ ஆட்சியின் ஒப்பற்ற முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்களைச் சந்தித்து, தி.மு.க.வில் இன்று (27.2.2026) காலை இணைந்துள்ளது, மிகவும் வரவேற்கத்தக்க ஒன்றாகும்.
அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘‘தாய்க் கழகத்தோடு நான், திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேருவதில் மகிழ்ச்சியடைகிறேன். என்னை இணைத்துக் கொண்டுள்ள தி.மு.க. தலைவருக்கு நன்றி’’ என்று சொல்லியிருப்பது சரியான அரசியல் முடிவாகும்.
தவிர்க்க இயலாதது மட்டுமல்ல, தடுமாற்றங்களைத் தாண்டிய ஒரு சிறந்த முடிவு
திராவிடர் இயக்கத்தை அழிக்க ஆர்.எஸ்.எஸ். – ஆரிய சக்திகள் படுவேகமாக முயலும் காலகட்டத்தில், திரு.ஒ.பி.எஸ். அவர்கள் எடுத்த முடிவு தவிர்க்க இயலாதது மட்டுமல்ல, தடுமாற்றங்களைத் தாண்டிய ஒரு சிறந்த முடிவாகும்.
அ.தி.மு.க. என்பதே மதிப்பிற்குரிய எம்.ஜி.ஆர். அவர்களால் – பல்வேறு சூழ்நிலைகள் காரணமாகப் பிரிந்து, ஆட்சியைக் கைப்பற்றி நடத்திய ஒன்று என்றாலும், அதனை வயப்படுத்தி, பல கூறுகளாக்கி, பலவீனப்படுத்துவதில் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. பல வியூகங்களை மேற்கொண்டு வந்துள்ளது.
இதில் எடப்பாடி பழனிசாமி அவர்கள், ஜெயலலிதா அம்மையார் அவர்கள் ‘லேடியா – மோடியா?’ என்று கேட்டதைக்கூட ‘வசதி’யாக மறந்துவிட்டு, அந்தக் கட்சியை ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.வின் ‘எடுப்பார் கைப்பிள்ளையாக்கி’, திசை மாற்றம் செய்து, பலவீனப்படுத்தி வருகிறார்.
இதற்குமுன் இணைப்பது, பிரிப்பது, கலைப்பது, பிறகு இறுதியில் விழுங்கி, அடையாளம் தெரியாமல் ஆக்குவதை ஆர்.எஸ்.எஸ். – பி.ஜே.பி. ‘‘அரசியல் சித்து’’ விளையாட்டாகவே செய்து வரும் நிலையில், தொடக்கத்தில் எப்படியிருந்தாலும், இறுதியில் ஒரு தெளிவான உறுதியான முடிவினை திரு.ஒ.பி.எஸ். எடுத்தது சரியானதாகும்.
தி.மு.க.வுடன் இணைந்து ஒரே அரசியல் கட்சியாக செயல்பட விரும்பினார் எம்.ஜி.ஆர்.
அ.தி.மு.க.வின் நிறுவனர் எம்.ஜி.ஆர். அவர்களே, தேர்தலில் இரண்டாவது முறை வெற்றி அடைந்த பிறகு, தி.மு.க.வுடன் இணைந்து ஒரே அரசியல் கட்சியாக செயல்பட விரும்பி, என்னை அழைத்து, அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் கலைஞர் அவர்களிடத்தில் பேசக் கேட்டுக்கொண்டு, நமது கலைஞரும் அதற்கு இசைந்து, நேருக்கு நேர் சந்தித்துப் பேசினேன்.
(ஒரிசா, பிஜு பட்நாயக் அவர்களும் இதையே வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.)
இடையில், அன்றைய ஒன்றிய அரசும், சில அ.தி.மு.க. இரண்டாம் கட்டத் தலைவர்களும் அந்த முயற்சியை நிறைவேறவிடாமல் தடுத்ததில், அப்போது வெற்றி கண்டனர்.
எனவே, ‘‘என்ன, ஓ.பி.எஸ். தி.மு.க.வில் சேருவதா?’ என்று கேட்பவர்களுக்கு, நாம் மேலே கூறியுள்ள தகவலே சரியான பதிலாக அமையும் என்றே நினைக்கிறேன்.
திராவிட இயக்கம் நாளும் கொள்கை, லட்சிய ரீதியாக, அதன் தலைவரின் கடும் உழைப்பாலும், உள்ள உறுதி யாலும் நாளும் நெருப்பாற்றில் நீந்தினாலும், அயர்வின்றிக் களத்தில் நின்று வென்று வருகிறார்.
உரிமைக்குக் குரல் கொடுத்து, உறவுக்குக் கை கொடுப்பதற்கு இதுதான் சரியான அரசியல் வழி!
அரசியலில் கொள்கை எதிரிகள் யார்? கொள்கை நண்பர்கள் யார்? என்று அடையாளங்கண்டு கொண் டால்தான், களப் போராட்டத்தில் கடமையாற்றுவதில் வெற்றி காண இயலும் என்று துல்லியமாக உணர்ந்து, தி.மு.க. என்ற அரசியல் கோட்டையை நாளும் வலுப்படுத்தி, தமிழ்நாடு தலை நிமிர்ந்த மண்ணாக – மானமும், அறிவும் நிறைந்த மண்ணாக – உரிமைக்குக் குரல் கொடுத்து, உறவுக்குக் கை கொடுத்து நிமிர்ந்து நிற்பதற்கு இதுதான் சரியான அரசியல் வழி முறையாகும்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
27.2.2026
