இரா.முல்லைக்கோ பெங்களூரூ
புரட்சிப் பாவலர் பாரதிதாசன் எழுச்சி மிகு வைர வரியாம்,
“பூட்டிய இரும்புக் கூட்டின் கதவு திறக்கப்பட்டது
சிறுத்தையே வெளியே வா”
என்கிற இலட்சிய நோக்கில் எல்லோரும் வியந்திட 1916ஆம் ஆண்டு சென்னையில் துவங்கப்பட்டது. தென்னிந்திய நலவுரிமைச் சங்கத்தின் தன் சுவை மிகு தென்றல் காற்று அண்டை மாநிலமான கருநாடகத்திலும் வீசத் தொடங்கிய சூழலில், அன்றைய மைசூர் ராஜ்யத்தின் உயர்நீதிமன்ற மாண்பமை நீதியரசர் மேடப்பா அவர்கள், பேராசிரியர் குண்டப்பா போன்றோரின் மீது நீதிக் கட்சியினர் பற்று கொண்டு அதிக ஈடுபாடு கொண்டிருந்தனர். நீதிக்கட்சியின் தலைவராக இனமானத் தலைவர் தந்தை பெரியார் சிறைக் கோட்டத்தில் அடைப்பட்டு இருக்கையிலேயே தேர்வு செய்யப்பட்டு, நாளடைவில் சுயமரியாதை இயக்கமாக வீறு கொண்டு எழுந்து நாடெங்கும் வேகமாக பரவிய போது, அன்றைய சென்னை மாகாண நிர்வாகத்திற்கு உட்பட்ட கோலார் தங்க வயல், பெங்களூர் தண்டு பகுதி தமிழர்கள், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழி பேசுவோர் இடையிலும் புத்துணர்வும் புதிய எழுச்சியும் ஏற்பட்டு, சுயமரியாதைப் பிரச்சாரத்தில் ஈர்க்கப்பட்டோர் ஏராளமானோர். அதிலும் குறிப்பாக தா.ம.அப்பாதுரை, பூ.வ.கொடையரசன், சிட்டி பகுதியைச் சேர்ந்த நாராயணசாமி, பூ.பார்த்தசாரதி, பெரியப்பா, தோழியர் விஜயலட்சுமி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்களாவர்.
சஞ்சலங்கள் வளர்த்தாலும்
சங்கடங்கள் பின் தொடர்ந்தாலும்
கொஞ்சமும் சோர்வறியா தொண்டர்கள்

சுயமரியாதை இயக்கத்தில் பற்று கொண்ட அனைவரும் 1944ஆம் ஆண்டில் மாநகர் சேலத்தில் எழில் கொண்டு நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டில் கலந்து கொண்டு, மாநாட்டில் அறிஞர் அண்ணா அவர்களால் கொண்டு வரப்பட்ட “திராவிடர் கழகம்” பெயர் மாற்றத் தீர்மானத்தால் பெரும் அளவில் கவரப்பட்டு ஆர்வம் மிகுதியுடன் பெங்களூர் திரும்பினர்.
அஞ்சாமை உன்உடைமை!
அறிவே நின் போக்கருவி!
வஞ்சகத்தை வேரறுக்கும்
வல்லமையோடு மேற்கண்ட அனைவரும் பெங்களூர் காட்சிக்குரிய கப்பன் பூங்காவில் ஒன்று கூடி திராவிடர் கழகம் அமைப்பாக உருவாக்கிட முடிவெடுத்து, அன்றைய ‘உப்பு மண்டி’ கிராமம் என்று அழைக்கப்பட்ட இடத்தில் 1946ஆம் ஆண்டில் திராவிடர் கழகக் கிளைய உருவாக்கினார்கள். அவ்விடம் தான் இன்றைய பெரியார் நகர் ஆகும்.
ஊழிப் பெருங்காற்றில்
உலகமே இருண்டாலும்
வாழ்வோம் நம் விழி ஒளியில்!
மேடு பள்ளம் சீர்படுத்தி
மேல் கீழைச் சமப் படுத்தி
நாடு நலம் பேணும்
நம் மானமுள்ள மானுடர்
பொன் விடியல் சூரியனாய்
புதிய ஒளிக்கழகம் கண்டனர்

1946ஆம் ஆண்டில் உப்புமண்டிக் கிராமத்தில் பெங்களூரில் முதல் சுயமரியாதை மாநாட்டை கூட்டி, மாநாட்டிற்கு திரு. எச்.பி.குருவாரெட்டி தலைமையேற்க பூங்கா மாநகராம் பெங்களூரில் எரிமலைக்குச் சரிமலையாய் இழிவு கண்டு பொங்கி எழும், இனமானத் தமிழ் மறவர் எண்ணற்றோர் நிரம்பி நின்றனர்.
கழகமே உயிர் மூச்சு
காலமெல்லாம் உரை வீச்சு என
காவிரி நதிப் பாய்ந்து
வளம் கொழிக்கும்
மாநகரில் குடும்பம் குடும்பமாய் இளம் கழகக் கண்மணிக் காளையர்கள் கூட்டமாய் கூடினர். வடஆற்காடு மவுலி ஜனாப் சர்புதீன் மாநாட்டைத் துவக்கி வைக்க, வி.பாலகிருட்டிணன் வரவேற்றிட, சென்னை மாவட்ட திராவிடர் கழகச் செயலாளர் என்.வி.நடராசன் கழகக் கொடியை உயர்த்திட சிந்தனைச் சிற்பி சி.பி.சிற்றரசு, நாவலர் இரா.நெடுஞ்செழியன், டார்பிடோ சனார்த்தனம், பூ.அ.கொடையரசன், பூ.பார்த்தசாரதி, தோழியர் விசயலட்சுமி ஆகியோர் எரிமலையாய் பேச்சு மொழியால் சரவெடியாய் முழக்கமிட்டு மக்களின் திரட்சியான பேரெழுச்சியை கிளப்பினர்.
மாநாட்டு அடுத்த சூரியோதயத்தின் அழைப்பிதழ் அரங்கமே அதிர்வலையை எழுப்பின. கேடிழைக்கும் ஆரியத்தைக் கிழித்தெறியப் புறப்பட்ட பெரும் படையாய் எழுந்து நின்றனர்.
மாநாட்டு நுழைவுக் கட்டணமோ வெறும் எட்டு அணா என்று இருந்தாலும், பத்தாயிரம் கழகக் கண்மணியினர் களம் கண்ட இயக்க வரலாற்றில் மிகப் பெரிய வரலாற்று இமயமாய் பாங்குற பறைசாற்றப்பட்டு பதியப்பட்டுள்ளது. சிறப்பினும் பெரும் சிறப்பாய் போற்றப்படுகிறது.
சுயமரியாதை மாநாட்டில் தான் மாநாடு நடைபெற்ற அழகோவியம் படைத்த உப்பு மண்டிக் கிராமப் பகுதிக்கு “பெரியார் நகர்” என்ற காவியப் பெயரினைச் சூட்டி வரலாற்று புகழ் மணக்கும் தீர்மானத்தினை ஒருமனதாய் சூட்டி, விண் அதிர கரவொலி எழுப்பி மகிழ்ந்தனர்.
மாநாட்டின் அனைத்துப் பணிகளும் நனி சிறக்க மு.சி.வில்லவன் கோதை, ஆர்.இராகவன், பொ.பழனி, மணி, பி.சுப்பிரமணி, எஸ்.ஜே.உசேன், பு.க.பெருமாள், பி.முனுசாமி, பேராசிரியர் ஆ.பி.தருமலிங்கம் ஆகியோரின் தொண்டு இமய மலையாய் உயர்ந்து நிற்கிறது.
வேர் கிளைத்துக்
கழகத்தில் விழுதுகளை
உருவாக்கி
நேரிய செந்தமிழர்க்கு
நிழல் மரபாய்
விளங்குகின்றது
பெரியார் நகர்
காவியச் சான்றாய்
சரித்திரமாய்!

களம் காணப்பட்டது. இன்றும் இரண்டாம் தமிழ்நாடாய் கருநாடக மண்ணில் “பெரியார் நகர்” பேறு பெற்று விளங்கி வருவதைக் காண முடிகிறது.
மாநாடு நடைபெற்ற இடமான உப்பு மண்டிக் கிராமம் “பெரியார் நகர்” என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநாட்டின் செலவு போக எஞ்சிய நிதியில் பெரியார் நகரில் 79 x 21½ அடி மனை வாங்கி, கட்டிடம் கட்ட தந்தை பெரியார் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது. மு.சி.வில்லவன் கோதை, ஆர்.ராகவன், பழனிமணி, சுப்பிரமணி, உசேன், பு.க.பெருமாள், முனுசாமி, பேரா.அ.மா.தருமலிங்கம் ஆகியோர் கடுமையாக உழைத்து, சிறப்பித்து, திராவிடர் கழக கொள்கை முழக்க சிந்தனைகளை ஆங்கிலம், தமிழ், கன்னடம் மொழிகளில் வெளியிட்டு பரப்புரையை தொடந்து செய்தனர்.
காந்தக் கருவூலமாய்
கருநாடக மண்ணில்
கருத்து மழை பெய்து
களம் கண்டார் பெரியார்
இரண்டு முறை தந்தை பெரியார் அவர்கள் மாபெரும் மாநாடு நடைபெற செய்துள்ளார்.
1956இல் கப்பன் பூங்காவில் தந்தை பெரியார் தலைமையில் பேரா.தருமலிங்கம் முன்னிலையில் 50 சிறப்பு விருந்தினர்கள் அழைக்கப்பட்டனர். ஒரு மாட்டின் தலையைக் கொண்டு வந்து மரத்தில் தொங்கவிடப்பட்டு, இரு சமையல் கலைஞரால் மாட்டுக்கறி சமையல் செய்து ரொட்டி துண்டுடன் தந்தை பெரியார் கைகளால் அனைவருக்கும் வழங்கி, சாப்பிட்டு மகிழ்ந்தனர். இச்செய்தி டெக்கான் ஹெரால்டு, பிரஜாவாணி, சம்யுக்த கருநாடகா போன்ற செய்தித்தாள்களில் வெளிவந்து மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி எழுச்சியூட்டியது.
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அய்யா அவர்கள் பல சமூகநீதி கொள்கை சார்ந்த நிகழ்வுகளில் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்கள். கருநாடகத் தலைவர் மு.சானகிராமன், வி.மு.வேலு அவர்களின் 100 அகவை பெரும் விழாவில் ஆசிரியர் அவர்களின் எடைக்கு எடை காபிக் கொட்டை, பனை வெல்லம், பலவிதமான காய்கறிகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
2018ஆம் ஆண்டு 80 அகவை நிறைந்த கழகத் தோழர்களுக்கு “பெரியார் செம்மல் விருது” வழங்கி பாராட்டப்பட்டது.
கழகத் தோழர்களின் முயற்சியால் ஸ்டெப்பின் சாலைக்கு காமராசர் சாலை என பெயர் மாற்றம் முதலமைச்சர் தேவராஜ் அர்ஸ் அவர்களால் செய்யப்பட்டது.
2025ஆம் ஆண்டு டிசம்பர் திங்களில் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களால் 60 கழகத் தோழகளுக்கு “பெரியார் தொண்டறச் செம்மல் விருது” வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
பல்வேறு தொடர் முயற்சியால் எழுச்சி பெற்றுள்ள கழகம் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா நிறைவு எழுச்சி மாநாடு பிப்ரவரி 28இல் காண உள்ள நிகழ்வில், கழகக் கண்மணிகள் கலந்து கொள்ள அழைக்கிறோம் வாரீர்! வாரீர்!!
