லண்டன், பிப். 27- பிரிட்டனில், இறந்த ஒருவரிடமிருந்து கருப்பையை கொடையாகப் பெற்ற பெண்ணுக்கு, ஆண் குழந்தை பிறந்த அரிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அய்ரோப்பிய நாடான பிரிட் டனைச் சேர்ந்தவர், கிரேசு பெல், 30. இவர், ‘மேயர் ரோகிடான்ஸ்கி குஸ்டர் ஹாசர் சிண்ட் ரோம்’ என்ற மிகவும் அரிதான குறைபாடான, கருப்பை இல்லாமல் பிறந்தவர். இதனால் குழந்தை என்பது கிரேசுக்கு எட்டாக் கனியாக இருந்தது.
இந்நிலையில், குழந்தை பெற்றெடுக்கும் அவரது ஆசை ‘வாம்ப் டிரான்ஸ் பிளான்ட் யு.கே.,’ என்ற தொண்டு நிறுவனத்தின் ஆராய்ச்சித் திட்டத்தினால் நிறைவேறியது. கடந்த 2024இல், இறந்த பெண் ஒருவரின் கருப்பை, 10 மணி நேர அறுவை சிகிச்சையின் மூலம், கிரேஸ் பெல்லுக்கு பொருத்தப்பட்டது.
ஆண் குழந்தை
பின்னர் செயற்கை கருத்தரித்தல் முறையில் கிரேஸ் கர்ப்பம் தரித்தார். கடந்த ஆண்டு டிசம்பரில், லண்டனில் உள்ள குயின் சார்லட்டின் மருத்துவமனையில் அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.
ஹியூகோ பவல் என்று பெயரிடப்பட்ட குழந்தை தற்போது நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறது. குழந்தை பிறந்த பிறகு கிரேஸ், ‘இது ஒரு அதிசயம், இது சாத்தியமாகும் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை’ என்று உணர்ச்சி பொங்க கூறியிருந்தார்.
இதற்கு முன், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில், பிரிட்டனில் உயிருடன் இருந்த நன்கொடையாளரிடமிருந்து கருப்பை மாற்றப்பட்டமுதல் பெண், குழந்தை பெற்றெடுத்திருந்தார்.
ஆனால் இறந்த நன்கொடை யாளரிடமிருந்து பெறப்பட்ட கருப்பை மாற்று சிகிச்சைக்குப் பின், குழந்தை பிறந்தது பிரிட்டனில் இது முதல் முறையாகும்.
