சென்னை, பிப்.27 தமிழ்நாட்டு அரசியலில் பெரும் திருப்பமாக, அ.தி.மு.க.வின் முன்னாள் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஒ.பன்னீர்செல்வம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று (27.2.2026) முறைப்படி தி.மு.க.வில் இணைந்தார். அவருடன் அவரது மகனும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவீந்திரநாத் மற்றும் முக்கிய ஆதரவாளர்களும் தி.மு.க.வில் தங்களை இணைத் துக் கொண்டனர். இந்த நிகழ்வின் போது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, பி.கே.சேகர்பாபு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தாய்க் கழகத்தில்
இணைந்த மகிழ்ச்சி!
இணைந்த மகிழ்ச்சி!
தி.மு.க.வில் இணைந்த பின்
ஒ. பன்னீர்செல்வம் செய்தியாளர் களிடம் கூறியதாவது: “பேரறிஞர் அண்ணா ஆரம்பித்த தாய்க் கழகமான தி.மு.க.வில் மன மகிழ்ச்சியுடன் இணைந்துள்ளேன். அண்ணா மற்றும் கலைஞர் காட்டிய வழியில் அனைவரையும் அரவணைத்துச் செல்லும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 5 ஆண்டுகளாக தாயுள்ளத்தோடு சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறார்’’. “ஓர் அரசியல் இயக்கத்தை எப்படி நடத்த வேண்டும் என்ற இலக்கணத்தோடு மு.க.ஸ்டாலின் செயல்படுகிறார். அவரது கடந்த 5 ஆண்டு கால சாதனைகள் மக்களை முழுமையாகச் சென்றடைந்துள்ளன. ஒரு தொண்டனாகவே தி.மு.க.வில் இணைந்துள்ளேன். இந்த இயக்கத் தின் வளர்ச்சிக்காக பாடுபடுவேன்.’’
இவ்வாறுஅவர் கூறினார்.
அ.தி.மு.க.வின் தற்போதைய நிலை குறித்துக் கூறிய அவர், எடப்பாடி பழனிசாமியை கடுமையாகச் சாடினார்: “அரசி யலில் சர்வாதிகாரமாகவும், ஆணவப் போக்கோடும் நடக்கும் எடப்பாடி பழனிசாமியால், இனி அதிமுக எந்தக் காலத்திலும் வெற்றி பெற முடியாது. தென் மாவட்டத் தலைவர்கள் வளர் வதை அவர் தடுப்பதோடு, அவர்களை அழித்தும் வருகிறார். பழனி சாமியால் அ.தி.மு.க. தற்போது அழிவுப்பாதையில் செல்கிறது.”
பழைய கசப்புகள்
“கடந்த காலங்களில் அதிமுகவில் ஏற்பட்ட கசப்பான சம்பவங்களால் பாதிக்கப்பட்டேன். எந்த அழுத்தமும் இன்றி, சுயமாக முடிவெடுத்துத் தான் தி.மு.க.வில் இணைந்துள்ளேன்” என்று செய்தியாளர்களிடையே குறிப்பிட் டுள்ளார்.
இணைப்பை முன்னிட்டு, சென்னை அண்ணா அறிவாலயம் முன்பு ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் பெருமளவில் திரண்டு அவருக்குத் தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.
