சென்னை, பிப். 27- மாநகர போக்குவரத்து கழகத்துக்கு, குளிர்சாதன வசதி கொண்ட 100 பேருந்துகள் உட்பட 194 புதிய பேருந்துகளின் சேவையை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில், உலக வங்கி மற்றும் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் பங்களிப்புடன், சென்னை பெருநகர கூட்டாண்மை திட்டத்தின் கீழ் புதிய மின்சார பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதன்படி, சென்னையில் 4ஆவது கட்டமாக, ரூ.52 கோடி மதிப்பில், பல்லவன் மத்திய பணிமனையில் மின்சாரப் பேருந்து பணிமனை மற்றும் ரூ.248.25 கோடி மதிப்பில் 100 குளிர்சாதன வசதி கொண்ட மின்சார பேருந்துகள், 45 புதிய தாழ்தள மின்சாரப் பேருந்துகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இதுபோல, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்துக்கு, ரூ.30.50 கோடி மதிப்பிலான இருக்கை மற்றும் படுக்கை வசதியுடன் கூடிய 49 அதிநவீன சொகுசு பேருந்துகளின் இயக்கத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.
இதில், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர்
பி.கே.சேகர்பாபு, போக்குவரத்துத் துறை செயலர் சுன்சோங்கம்ஜடக் சிரு உட்பட பலர் பங்கேற்றனர்.
வீரர்களுக்கு நிதியுதவி
தேசிய அளவில் நடைபெற்ற டேக்வாண்டோ, தடகளம், நீச்சல் மற்றும் கால்பந்து போட்டிகளில் பதக்கம் வென்ற மாற்றுத் திறனாளிகளான 29 வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.24 லட்ச நிதியுதவிக்கான காசோலையை, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
