சென்னை, பிப்.26 – ஆர்.நல்லகண்ணு பிறந்த ஆண்டில் தான் கம்யூனிஸ்ட் கட்சியும் பிறந்தது. அந்த கட்சியின் கொள்கையை இறுதி மூச்சு அடங்கும் வரை அவர் தொடர்ந்தார் என திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் குறிப்பிட்டார்.
நேற்று (25.2.2026) இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் ஆர்.நல்லகண்ணு அவர்கள் மறைவுற்றதைத் தொடர்ந்து, அவருடைய உடல் இராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையிலிருந்து கம்யூனிஸ்ட் தோழர்கள் புடைசூழ வாகனப் பேரணியாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்திற்கு எடுத்து வரப்பட்டு பொதுமக்களின் மரியாதைக்காக வைக்கப்பட்டது. முன்னதாகவே அங்கு சென்றுவிட்ட திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், பொதுவுடைமைத் தலைவர் நல்லகண்ணு அவர்களின் உடலுக்கு மலர்மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினார்.
பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அப்பேட்டியின் விவரம் வருமாறு:
பொதுவுடைமைக் கட்சியும் – தன்னுடைய வாழ்க்கையும் பிரிக்க முடியாத ஒன்று என்ற அளவில், தன்னுடைய இளமைக்காலத்திலிருந்து தன்னை அந்தக் கொள்கைக்கு ஒப்படைத்துக் கொண்ட அருமைத் தோழர், எளிமையின் சின்னம், தியாகத்தின் உருவம், தொண்டறத்தின் தோழரான நல்லகண்ணு அவர்கள் மறைந்தார் என்று சொல்வதைவிட, மக்கள் நெஞ்சங்களில் நிறைந்தார்.
அவரைப் போற்றாதவர்கள் தமிழ்நாட்டில் கிடையாது. காரணம், அவருடைய கொள்கையை ஏற்காதவர்கள்கூட, அவருடைய பண்பாலும், அவருடைய தன்னல மறுப்பாலும் ஈர்க்கப்பட்டவர்கள்.
அவருடைய வாழ்வு என்பது, சமரசம் இல்லாத ஒரு போராளியினுடைய வாழ்வாகும்.
எப்படி ஒரு போராளி, எந்தவிதமான பலன்களையும் எதிர்பார்க்காமல், அடக்குமுறை அம்புகளையெல்லாம் தியாகத் தழும்புகளாக ஏற்றுக்கொண்டு, ஒரு புதிய வரலாற்றினுடைய பொன்னேடாக திகழ்வார் என்பதற்கு அவர் ஓர் அடையாளம்.
அவர் பிறந்த ஆண்டில்தான், கம்யூனிஸ்ட் கட்சியும் பிறந்தது இந்தியாவில்‘ அப்படிப்பட்ட அவர், கம்யூனிசம் இங்கு காலூன்றியபோது, அதற்காக எவ்வளவு பணி செய்யவேண்டுமோ, அதைத் தன்னுடைய வாழ்க்கைத் தொண்டாக, இறுதிமூச்சு அடங்குகின்ற வரையில் தொடர்ந்தார், தொண்டாற்றினார்.
அவருடைய வாழ்க்கை முடியவில்லை, வரலாறாக மாறியிருக்கிறார்.
எனவே, அவர் விட்டப் பணியைத் தொடருவதும், அவர் கண்ட ஜனநாயகழும், மக்களுக்கு எளிமையான ஓர் ஆட்சியும், தெளிவான ஒரு மீட்சியும் கிடைக்கவேண்டும்.
‘எல்லோருக்கும் எல்லாம்‘, ‘அனைவருக்கும் அனைத்தும்’ என்ற தத்துவத்திற்காக உழைக்கின்ற அந்த மார்க்சியப் பார்வை அவருக்கு மூச்சுக் காற்றாக இருந்தது. அந்த வகையில்தான், அவர் எல்லோருக்கும் நண்பர் என்றாலும், கொள்கையில் விடாப்பிடியாக இருந்து, வழிகாட்டிய ஒரு மாவீரர்.
அவருடைய நினைவு என்பது வரலாற்றின் வைர வரிகளாக என்றைக்கும் மின்னிக் கொண்டே இருக்கும்!
வாழ்க ஆர்.என்.கே.!
செய்தியாளர்: தமிழ்நாடு அரசு, அவருக்கு அரசு மரியாதை கொடுத்திருக்கிறதே?
தமிழர் தலைவர்: இப்படிப்பட்ட தலைவர்களின் மறைவிற்கு அரசு மரியாதை கொடுத்து அங்கீகரிப்பதுதான் தமிழ்நாடு ‘திராவிட மாடல்’ அரசினுடைய தனித்தன்மையாகும்.
அந்த ஆட்சியின் ஒப்பற்ற முதலமைச்சராக இருக்கக்கூடிய நம்முடைய முதலமைச்சர் அவர்கள், நம்முடைய நல்லகண்ணு அவர்களுடைய தொண்டை அடையாளங்கண்டு, சங்கரய்யா அவர்களுக்கு அடுத்தபடியாக, அவருக்குத் ‘தகைசால் தமிழர்’ என்ற சிறப்பை அன்றைக்கு செய்தார்கள். இன்றைக்கும் ‘‘நல்லகண்ணு அவர்களின் உடல் அரசு மரியாதையோடு அடக்கம் செய்யப்படும்’’ என்று உடனடியாக ஓர் அறிவிப்பைச் செய்திருக்கிறார்.
எனவே, அத்தகைய அறிஞர்களை, புலவர்களை, தொண்டூழியம் செய்யக்கூடியவர்களை, உடல் உறுப்புக் கொடையளிப்பவர்களுக்கெல்லாம் அடையாளம் காட்டுகின்ற ஓர் நல்ல அரசாக ‘திராவிட மாடல்’ அரசு அமைந்திருக்கிறது.
அரசு மரியாதைக்கு உரியவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதைவிட, அந்த மரியாதையைக் கொடுக்கக் கூடியவர்களும் எப்படிப்பட்ட மனிதாபிமானிகள் என்பதை இந்த நிகழ்வு மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக அமையும்.
இந்தியாவிலேயே, இப்படித் தலைவர்களையும், தொண்டர்களையும், தோழர்களையும் அடையாளம் கண்டு செய்கின்ற ஓர் அரசின்கீழ் அவர் இருந்தார் என்பதுதான், அவருக்கும் பெருமை, அரசுக்கும் பெருமை, மக்களுக்கும் பெருமை!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.
